Wednesday, December 15, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - 12. அமர்நாத் பயணம்

வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித பயண அனுபவங்கள்.


பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு.
பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது  

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு  

பாகம் இரண்டு பகுதி 8 & 9: வாடகைக்கு குதிரை பேசப் போனோம்.

பகுதி 10:  தீராத விளையாட்டுக் குதிரை.   
பகுதி 11. குதிரை(க்காரர்கள்) மகாத்மியம்.

பயணம் தொடர்கிறது....

அமர்நாத் குகையை நோக்கி.......
நாள்: 11.09.2010


பகுதி 12
1. இறையருளால் பாதி தூரம் வந்து விட்டோம்.

காஷ்மீரின் இமய மலைப் பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஜோஜிலா(Joji la Pass) கணவாயில் அமைந்திருக்கும் அழகிய சிறு பள்ளத்தாக்கான  பால்டாலில்  இருந்து அதிகாலை புறப்பட்ட நாங்கள் அடிவாரத்தை நோக்கி மூன்று கி.மீ சென்று, பின்னர் மலைமேல் மேலும் இரண்டு கி.மீ பயணித்து டோமெய்ல் (Domail) என்ற இடத்தில் முதல் தேநீர் அருந்திய பின்னர் தொடர்ந்து மேலும் ஆறு கி.மீ சென்றதும் பராரிமார்க் (Brarimarg) என்னும் இடம் வந்தது.

இங்கு நாங்கள் குதிரைக்காரர்களுடனும், பல்லக்குத் தூக்கிகளுடனும், நடந்து வரும் யாத்திரிகளுடனும் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு தேநீர் அருந்திய பின் பயணத்தைத் தொடரலானோம். மேலே செல்லச் செல்ல குளிர் அதிகமாகிறது. வெயில் அடிப்பதே தெரியவில்லை. மூச்சுக் காற்று நீராவியாக வெளிப்பட்டு போவது கண்ணுக்கு புகை புகையாய்த்  தெரிகிறது மூக்குக் கண்ணாடி போட்டிருப்பவர்களின் கண்களை மூச்சுக் காற்றின் நீராவி பனிப் படலமாக மறைக்கிறது.

ஒரு அசௌகரியமான அமர்தலில் குதிரையின் அசைவுகள் என்னை வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ சரிக்க முயல நான் ஒவ்வொரு முறையும் சுவாதீனமாக என்னுடைய இருக்கைக்கு சரியாக என்னை அமர வைக்க முயன்று கொண்டே வந்தேன்.

குதிரைக்காரர்கள் ஏதேதோ பேசிக் கொண்டே வர திடீரென கண்ணயர்ந்தது போல இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இந்த குதிரையின் அசைவுகள் தாலாட்டு போல உடம்புக்கு தோன்றியதோ என்னவோ கண்ணுக்குள் ஒரு குட்டி தூக்கம் எட்டிப் பார்த்தது.

எனது குதிரைக்காரன் மிகவும் உஷாரானவன். என்னை மெதுவாக சீண்டி ''தூங்காதீங்க. கீழே சரிஞ்சு அந்தப் பக்கமா குதிரையோடு சேர்ந்து விழுந்துடுவீங்க,'' என்று காஷ்மீரி கலந்த ஹிந்தியில் சிரித்துக் கொண்டே சைகைகளுடன் கைகளை ஆட்டி ஆட்டிக் கூறுவதை கண்டு நான் திகைப்புற்று அரைத் தூக்க நிலையில் இருந்து பிரக்ஞைக்கு திரும்ப வருகிறேன்.

இதென்ன வேடிக்கை!  நடந்து செல்லும் குதிரையில் உறங்க நான் என்ன பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியனா? அதுவும் நெப்போலியன் கூட இந்த மாதிரியான ஆபத்துகள் நிறைந்த மலை முகடுகளில் குதிரையில் அமர்ந்து கொண்டு மலை ஏறுகின்ற தருணங்களில் தூங்குவானா என்ன? எனக்குள்ளே என்னைப் பற்றிய ஒரு கிண்டல் உருவாக எனக்கு நானே சிரித்துக் கொண்டேன். முன்னிரவின் பனியின் ஈரத்தில் உறைந்து கிடந்த மண், தொடர்ந்து செல்லும் குதிரைகளின் காலடிக் குளம்புகள் பட்டதாலும், சூரிய வெப்பத்தாலும் தூசாக கிளம்புகின்றன.

மூக்குக் கவசம் அணியாதவர்களுக்கு நாசிக்குள் எல்லா தூசும் சென்று விடக் கூடிய அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்க்க குறைந்தது கர்சீப்பையாவது மூக்கை மறைக்கும் படியாக கட்டிக் கொள்ளவேண்டும்.

ஒரு புறத்தில் சில ஆயிரம் அடி ஆழத்தில் ஒரு காட்டாறு ஓடிக் கொண்டிருக்கிறது. பனிப்பாளங்கள் வெய்யிலில் உருகி ஆங்காங்கே பெரிய சிறிய  நீரோடைகள் மேலிருந்து கீழே ஓடிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் பனிப் பாளங்களே பாலங்கள் போல ஒரு பாதை அமைத்திருக்க அந்த பனிப்பாளங்களின் கீழே நீர் உருகி ஓட அதன் மேல் குதிரைகள் மிகவும் கவனமாக நடக்கின்றன.

நடந்து போவோர்கள் குச்சியால் கவனமாக ஊன்றி நடக்காவிட்டால் வழுக்கி விழ நேரிடும். இங்கெல்லாம் வழுக்கி விழுந்தால் அதே இடத்தில் விழ முடியாது. அப்படியே சறுக்கிக் கொண்டே அதல பாதாளம் தான். அப்புறம் அதோகதிதான். எனவே யாத்ரிகள் மிகக் கவனமாக நடக்க வேண்டியிருக்கிறது.

ஒரு சில இடங்களில் பாதைகள் குறுகலாகவும், மிக நெட்டுக் குத்தாகவும் இருக்கும் சமயங்களில் எங்களை குதிரையில் இருந்து இறங்கி நடந்து வரச் சொல்கிறார்கள். இங்கே தான் சோதனைகள் அதிகம். நடப்பதை தவிர்க்கத் தானே குதிரைப் பயணத்தை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பிரச்சினை நிறைந்த பகுதிகளில் நம்மை நடக்கச் சொல்கிறார்களே என்று குதிரைக்காரர்கள் மீது நமக்கு ஒரே கோபம் கோபமாக வரும் ஆனால் வேறு வழி?  எல்லாரும் எதுவும் சொல்லாமல் இறங்கி என்ன செய்வது என்று புரியாமல் நடக்கத் துவங்குகிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க தட்டுத் தடுமாறி கீழே கைகளை ஊன்றி, சில இடங்களில் தவழ்ந்தெல்லாம் நடக்க வேண்டி இருக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் எல்லோரும் இறைவனை வேண்டிக் கொண்டு 'பம் பம் போலே' என்று இடை விடாமல் சொல்லிக் கொண்டே நடந்தோம்.

அபாயகரமான அந்த செங்குத்துப் பாதையைக் கடந்த பின்னர் மீண்டும் குதிரைகளில் ஏறி பயணித்தோம். ஒரு வளைவில் நாங்கள் போய்க் கொண்டிருந்த போது எல்லோரும் ஒரு இடத்தில் நின்று கொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டு மேலே நடந்து சென்றார்கள்.

ஏதோ சரியில்லை என்று மட்டும் என் உள்ளுணர்வு சொன்னது. மொழி புரியாததினால் என்னவென்று குதிரைக்காரனை நான் கேட்பது? ஆனால் ஒரு சில வினாடிகளில் நான் அந்த இடத்தைக் கடந்த போதுதான் முன்னர் சென்றவர்கள் எதனை அப்படிப் பார்த்தார்கள் என்று புரிய வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் இந்த இடத்தில் ஒரு பெண்மணி குதிரையில் இருந்து கீழே விழுந்து இறந்து போன விஷயம் அப்போது எனக்குத் தெரிய வந்தது. அந்தப் பெண்மணியைச் சுமந்து சென்ற குதிரையும் விழுந்து இறந்து போனதாம்.

அமரநாதரை காண வந்த ஒரு யாத்திரி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அமரரான செய்தியைக் கேட்க மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த யாத்திரியின் ஆன்மா சாந்தியடைய இறையவனை மனதுக்குள் வேண்டிக் கொண்டு எங்கள் பயணத்தை மேலும் தொடர்ந்தோம்.

நண்பர் கோவிந்த் மனோகர் பேசுகையில் அமர்நாத் பயணம் பற்றி வேடிக்கையாகச் சொல்வார், ''ஒண்ணு நாம்ப சாமியைப் பாத்துட்டு திரும்பறோம். இல்லேன்னா அவர்கிட்டேயே போயிடறோம். இரண்டில் ஒண்ணு தான் இங்கே சாத்தியம்!'' இப்போது நாங்கள் இரண்டில் ஒரு  சாத்தியத்தை சத்தியமாக தரிசித்துக் கொண்டிருந்தோம்.

செல்லும் வழியில் சில இடங்களில் பல்லக்கில் செல்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். பல்லக்கில் செல்லும் யாத்திரிகள் பெரும்பான்மையானவர்கள் மிகவும் வயதானவர்கள். அதுவும் இன்றி நான் கண்ட பல்லக்கு பயணிகள் பலர் அநியாயத்துக்கும் குண்டாக இருந்தனர். இந்த மாதிரியான உடல் வாகு இருந்தும் அமரநாதனை காண அவர்கள் உயிரையும் பணயம் வைத்து வருகிறார்கள்.

அமர்நாத்துக்கு வரும் வட இந்திய யாத்திரிகள் சிறிய குழந்தைகளை கூட தங்களுடன் தைரியமாக அழைத்து வருகிறார்கள். பயணம் செய்வதற்கு முன்னதான எச்சரிக்கைகளில் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பயணிக்க வேண்டும் என்று இருந்தும் பலர் தங்களோடு கைக்குழந்தைகளையும், சிறுவர் சிறுமிகளையும் அழைத்து வந்திருந்ததைக் கண்டேன்.

நடக்க முடியாத குழந்தைகளை முதுகில் சுமந்து கொண்டும், மற்ற சிறுவர்/சிறுமியர்களை நடத்தியே அழைத்துச் செல்வதையும் கண்டேன். பெரும்பாலான இந்த வகையைச் சேர்ந்த யாத்திரிகள் காலில் செருப்பு கூட அணியாமல் பயணித்ததை பார்த்து வியந்தேன். இறைவன் மேல் இருக்கும் நம்பிக்கையால் இவர்கள் செயல்படுவது கண்டு இந்த மாதிரி மனோபலமும், உடல்பலமும் நமக்கு அமையவில்லையே என்று வருந்தினேன்.

இந்தக் கட்டத்தில் இருந்து நாங்கள் தொடர்ந்த பயணம் எல்லோருக்கும் களைப்பை உண்டாக்கும் பயணமாக இருந்தது. குதிரைகளும் அவ்வப்போது திணற ஆரம்பித்தன. பாதைகள் ஒத்துழைப்பதாக இல்லை. சில இடங்களில் பாதை மிகவும் குறுகலாக இருந்தது. மேலும் பல இடங்களில் பாறைகள் நீட்டிக் கொண்டு குறுகலான பாதையை மேலும் அபாயகரமான பாதையாக மாற்றின.

குதிரை அதன் நீள அகல உயரத்துக்கு வழி கிடைத்தால் அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறது. சமயம் பார்த்து நாம் குனிந்து கொள்ளாவிட்டால் தலைக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் பாறையில் தலை இடித்துக் கொள்ள நேரிடும். சில சமயம் ஒரு குதிரை மற்றொரு குதிரையை முந்த நேரிடும் போது நமது காலின் முட்டி, ஏடாகூடமாக துருத்திக் கொண்டிருக்கும் பாறையிலோ அல்லது நம்மை குதிரையில் முந்தும் சஹயாத்ரியின் முட்டியிலோ முட்டிக் கொள்ள நேரிடும். ஒரு சில முறை அந்த மாதிரி மோதல்களில் என் காலின் வலப்புற முட்டி பலமுறை பதம் பார்க்கப்பட்டதென்னவோ உண்மைதான்.

மற்றும் இந்த மட்டக் குதிரைகள் மீது தான் கேஸ் சிலிண்டர்களும் மற்ற மளிகைப் பொருட்களும் அமர்நாத் குகைப் பகுதியில் உள்ள லங்கர்களுக்கு செல்லுகின்றன. மேலே உள்ள கடைகளுக்கான பொருட்களும், இராணுவத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் குதிரைகள் தான் சுமந்து செல்கின்றன.

ஒரு கேஸ் சிலிண்டர் என் முட்டியை 'நங்' என்று இடித்து நன்றாகவே பதம் பார்த்தது. முட்டிக் கவசம் (knee cap) வாங்கி அணியாத தவறுக்கு தண்டனை அடிக்கடி கிடைத்தது. சிவன் என்னை நன்றாகவே முட்டிக்கு முட்டி தட்டாமல் ஒரே முட்டியில் தட்டினார். என்மேல் அவருக்கு என்ன கோபமோ? அமர்நாத் பயணப் பொருட்கள் பட்டியலில் நினைவோடு எழுதி வைத்திருந்தும் முட்டிகவசம் விஷயத்தில் பெரும்பாலானோர் கோட்டை விட்டு விடுகிறார்கள். ஜம்முவில் இருந்து வந்த நாங்கள் ஸ்ரீநகருக்குள் நுழைய முடியாது போனதால் எங்களால் இது போன்ற நிறைய பொருட்களை வாங்க முடியாமல் போனது. சில சமயங்களில் பல்லக்கு தூக்கிகளின் பல்லக்கு தடிகளின் முனைகள் உங்கள் தலையை (அ) முதுகை பின்புறமாகவோ அல்லது முன்புறமாகவோ தாக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே  உள்ளன. நாம் மிகவும் விழிப்புடன் இல்லாவிட்டால் நம்மை முந்தும் பல்லக்குகள் நம்மை குதிரையில் இருந்து கிண்டி எடுத்து கீழே தள்ளி விடக் கூடிய சாத்தியங்களும் நிறைய உள்ளன. திடீர் வளைவுகளில் பல்லக்குத் தூக்கிகளுக்கு வசதியாகத் திரும்ப நிறைய கிளியரன்ஸ் (clearance) தேவை. அந்த பாதையில் நாம் குறுக்கிட்டால் அவை நம்மை குதிரையில் இருந்து அகற்றி (clear) செய்து விடும் அபாயமும் உள்ளது.

ஆகவே யாத்ரிகளுக்கு கவனம் நிறையத் தேவை. நடந்து செல்வோரும் மிகவும் கவனமாக நடந்து செல்லாவிடில் குதிரைகளும், பல்லக்குத் தூக்கிகளும் யாத்திரிகளை இடித்து தள்ளி விடுவார்கள். எனவே நடந்து செல்வோர் எப்போதும் மலைப்பக்கமாகவே செல்ல வேண்டும். சரிவுப் பக்கத்தில் ஒரு போதும் செல்லவே கூடாது. குதிரையில் இருந்து இறங்கி சில இடங்களில் நடக்க வேண்டி வந்தபோது இந்த அனுபவத்தையும் நான் நேரடியாக பெற்றேன்.

மேலும் குதிரை கீழே இறங்கும் போது பின் பக்கமாக சாய்ந்து கொள்ள வேண்டும். அது போல மேலே ஏறும் போது முன் பக்கமாக சாய்ந்து கொள்ள வேண்டும். இது குதிரையின் பாலன்சுக்கு உதவுமாம். குதிரைக்காரர்கள் குதிரை செங்குத்தான பாதைகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஆகே(முன்னே), பீச்சே(பின்னே) என்று எங்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் செல்ல செல்ல சுவாதீனமாகவே நாங்கள் முன்னே, பின்னே சாய்ந்து கொண்டு குதிரைக்கு சரியான பேலன்ஸ் கிடைக்க உதவினோம்.

பயணம் தொடர்கிறது....


அடுத்து வருவது: அமர்நாத்தை நெருங்கு முன் யாத்திரிகள் சந்திக்கும் ஒரு சவால்

No comments: