பாகம் இரண்டு:
அமர்நாத் புனித யாத்திரை.
முந்தைய பகுதிகளைக் காண கீழே சொடுக்குங்கள்:
பகுதி 12.- 2. சங்கம் டாப் (மரண பயத்தை கடக்க வைக்கும் பாதை)
அமர்நாத் புனித பயணம்
3. காலை மணி 9.30 அமர்நாத் குகைப் பகுதி.
சங்கம் டாப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ ஏற்ற இறக்கங்களைக் கடந்து ஒருவழியாக சமவெளிக்கு வந்தபின்னர் தான் மனசுக்கும் உடம்புக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
சௌகர்யமான வாழ்க்கை சூழ்நிலையில் (comfort zone) பல ஆண்டுகள் வாழ்ந்து பழகிய எனக்கு இந்த சூழ்நிலை மிகவும் புதிய அனுபவத்தைத் தந்தது. எப்போதுமே வாழ்க்கை மலர்ப் படுக்கையாக இருக்கப் போவதில்லை என்கிற அநித்ய உணர்வு மேலோங்கியது. இந்த மாதிரிப் பயணங்களில் தான் நமக்கு இந்த மாதிரி அசவுகரியங்களைத் தாங்கிக் கொள்ளும் மனநிலை இருக்கும். உண்மையில் யாத்திரை என்பது உல்லாசப் பயணம் அல்ல.
நானும் கோவிந்த் மனோஹரும் சென்னையில் இருந்து ஜம்முவுக்கு ரயிலில் வரும் போது பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
நான்: ''அமர்நாத் பயணம் ஒரு உல்லாசப் பயணமா இருக்க முடியாது.''*
கோவிந்த் மனோகர்: ''ஆமாம். இது உல்லாசப் பயணம் அல்ல. இந்த யாத்திரை ஒரு டிஸ்கவரி''
*நான்: ஆமாம். டிஸ்கவரி மற்றும் அல்ல; இந்த யாத்திரை ஒரு எக்ஸ்பெடிஷனும் கூட. அகமுகமாக நாம் யார் என்பதை இந்த யாத்திரையின் போது கண்டுபிடிக்க உதவும். இந்த யாத்திரை ஒரு அகமுகப் பயணம்.''
இருவருமே இந்த விஷயத்தை ஒரே கோணத்தில் பார்த்துப் பேசியதை இப்போது நினைத்துப் பார்த்தேன். இப்போது அனுபவத்தில் இது சரிதான் என்று உணர்ந்து கொண்டேன்.
சமவெளிக்கு வந்த பின்னர் மனசும் சமநிலைக்கு வந்தது போல உணர்ந்தேன். இருபுறமும் உயர்ந்த பனி படர்ந்த மலைப்பகுதிகளுக்கு இடையே ஒரு பாதை போல சமவெளி விரிகிறது.
பெஹல்காமில் இருந்து துவங்கும் லிட்டர் பள்ளத்தாக்கின் (Liddar valley) இறுதிப் பகுதி இந்த அமர்நாத் குகைப் பகுதி. இருபுறத்திலும் பனி உருகி சிற்றருவிகளாக வழிந்து கொண்டிருக்கின்றன. இங்கே மரம் செடி, கொடிகளைக் காணவில்லை. இங்கே இமயத்தின் இந்தப் பகுதியில் நான் இயற்கையின் வேறொரு பரிணாமத்தை கண்டேன்.
கடல் மட்டத்தில் இருந்து 13880 அடி உயரத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம். பால்டாலில் இருந்து மலை ஏறி வந்த போது நாங்கள் வழியில் கண்ட கொஞ்ச நஞ்ச பசுமை கூட இங்கே காணப்படவில்லை. யாத்திரை சீசன் என்பதால் மனித நடமாட்டம் இருக்கிறது. மற்ற படி ஒரு காக்கை, குருவி கூட இங்கே காணோம்.(இந்த உயரத்தில் அவைகளால் பறக்க இயலாது என்பதால் அவைகள் இங்கே வசிப்பதில்லை.)
வழிந்தோடும் நீர் ஒரு சிற்றாறாக ஓடிக் கொண்டிருக்க, காற்று சில்லென்று வீசிக் கொண்டிருக்கிறது. காலை வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் அதன் உஷ்ணம் கொஞ்சம் கூடத் தெரியவில்லை. கொஞ்சம் சூரிய வெப்பம் இருந்தால் குளிருக்கு இதமாக இருக்கும் போல தோன்றியது. எங்கள் வலது இடது புறமிருந்த மலைகள் கொஞ்சமாக விலகுவது போல எங்கள் எதிரே சமவெளி இன்னும் கொஞ்சம் அகலமாக தெரிந்தது.
அங்கே ஒரு இடத்தில் அனைத்து யாத்திரிகளும் குதிரை மற்றும் பல்லக்கில் இருந்து இறக்கி விடப்படுகிறார்கள். பனிப்பாறைகள் எங்கும் குதிரைகள் நின்று கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. பல்லக்குகளைத் தூக்கி வந்தவர்களும் ஓய்வாக அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வெள்ளைப் பனிப்பாறையில் நிறுத்தியதும், குதிரையில் இருந்து நான் கீழிறங்க கைலாகு கொடுத்து குதிரைக்காரன் உதவ, நான் கீழிறங்கினேன். உடனே குதிரைக்காரன் என்னிடம் பணம் கேட்க நான் ''இரு மத்தவங்களும் வந்திடட்டும். பணம் என்னிடம் இல்லை'' என்றேன். அவனது அடையாள அட்டையைக் கேட்டபோது, பணம் தரும்போது தருவதாகச் சொல்ல, சற்று ஏமாற்றத்துடன் காத்திருந்தான்.
என்னைத் தொடர்ந்து சில நிமிடங்களில் என்னுடன் புறப்பட்ட திரு.பாண்டியன் அவரது மனைவியுடன் வந்து சேர்ந்தார். பின்னாடியே திரு.கோவிந்த் மனோகர் வந்திறங்கினார்.
நால்வரும் சேர்ந்து முதல் வேலையாக குதிரைக்காரர்களுக்கு பணம் செட்டில் செய்தோம். அவர்களது அடையாள அட்டைகளைத் திருப்பித் தரும் போது ஒவ்வொரு குதிரைக்காரனுக்கும் பேசிய பணத்துக்கு மேலே ரூபாய் ஐம்பது டிப்சாகத் தந்ததும், அவர்கள் முகம் மேலும் மலர்ந்தது. நண்பர் கோவிந்த் மனோகர் குதிரைக்காரர்களை வீடியோ படம் எடுத்தார்.
எங்களிடம் குதிரைக்காரர்கள் தரிசனம் முடிந்து திரும்பி வரும் வரை காத்திருப்பதாகக் கூறவும், நாங்கள் வேண்டாமென மறுத்தோம். ''பரவாயில்லை, காத்திருக்க வேண்டாம். வேறு சவாரி கிடைத்தால் நீங்கள் புறப்படுங்கள்'' என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட போது அவர்கள் ''பம் பம் போலே'' சொல்லி எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்.
பிறகு நாங்கள் கொஞ்ச நேரம் நின்று கொண்டு எதிரே செல்லும் பாதையைக் கவனித்தோம். பெரிய பனிப்பாறை கீழே பிளந்திருக்க அதற்குள்ளிருந்து நீர் பொங்கிப் பிரவாகமாக வெளிப்பட்டு ஒரு ஆற்று போல ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் வரும் வழியில் பார்த்த ஆற்றின் ஊற்றுக் கண் இதுதான் என்று புரிந்தது. அமர்கங்கா என்று அழைக்கப்படும் நதியின் முகத்துவாரத்தில் நாங்கள் இப்போது நின்று கொண்டிருந்தோம். ஒரு சில வட இந்தியர்கள் சந்தோஷமாக அந்த நீரில் வெற்றுடம்புடன் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் குளிக்க ஆசை இருந்தாலும், அந்த குளிருக்குப் பயந்து கொண்டு குளிக்கும் ஆசையை நிறுத்திக் கொண்டோம். அமர கங்கை நீரை ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொண்டு, கொஞ்சம் நீரை பயபக்தியுடன் தலையில் தெளித்துக் கொண்டு மேலே நடந்தோம்.
எதிரே மேலும் இரண்டு கி.மீ நடந்தால் இடது புறத்தில் உயர்ந்த மலைப் பகுதியில் அமர்நாத் புனிதக் குகை இருக்கிறது.
இங்கிருந்து பார்க்கும் போதே பனி மூட்டத்தில் குகை நன்றாகத் தெரிகிறது. நிறைய யாத்ரிகள் படிகளில் ஏறி தரிசனம் செய்யக் காத்துக் கொண்டிருப்பது புள்ளிகளாகத் தெரிந்தன.
முந்தைய நாள் பெஹல்காமில் இருந்தும், பால்டாலில் இருந்தும் யாத்ரிகள் இங்கு வர தடை செய்யப்பட்டிருந்ததால் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. காக்க வைக்கப்பட்ட யாத்ரிகள் இன்று அமரநாதனைத் தரிசித்துச் செல்ல மேலும் மேலும் வந்து குழுமிக் கொண்டே இருக்கிறார்கள்.
கடைக்காரகள் யாத்ரிகளை கூவிக்கூவி அமர்நாத்ஜிக்கான பிரசாதங்களை வாங்கி செல்லும்படி அழைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாக் கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்க, நாங்கள் நிலவரங்களை அவதானித்தோம்.
நம்ம ஊர் திருவிழாவின் போது கடைகள் அமைத்திருப்பதைப் போல இருமருங்கிலும் வரிசையாக டெண்டுகளை அமைத்திருந்தார்கள். பனிப்பாறையை மேடை போல அமைத்து அதன் மேல் பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன் மேல் கயிற்றுப் பாய்களை விரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கடையிலும், சுவாமிக்கு பூஜைப் பிரசாதங்களை வைத்து விற்கிறார்கள். கடைகளின் எண், கடைக்காரரின் பெயர் போன்றவை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு கடை வைத்திருக்கும் எல்லோருமே இஸ்லாமியர்கள்தாம். ஆனால் அவர்கள் ''பம் பம் போலே'' என்று சொல்லி யாத்ரிகளை தமது கடைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் இன்று அமாவாசை என்பது எங்களுக்கு சொல்லொணா மகிழ்ச்சி அளித்தது. பல மணி நேரங்கள் காத்திருந்து காலதாமதம் ஆனது இதற்குத் தானோ என்று எண்ணி இறையவனுக்கு மானசீகமாக நன்றி சொல்லிக் கொண்டேன். நமக்கு வேண்டிய அனைத்தும் எப்போது, எப்படித் தரவேண்டும் என்று அவனல்லவோ அறிவான்?
அடுத்து, தரிசனம் செய்யுமுன்பாக எங்கள் பொருட்களை எங்காவது பத்திரமாக வைக்க வேண்டும். இங்கே உள்ள கடைகளில் இந்த சேவை இலவசமாக தரப்படுகிறது. நமது உடைமைகளை (காமிரா, செல்போன் உள்பட) இந்தக் கடைகளில் வைத்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டு தரிசனம் முடிந்தபின்னர் திரும்பி வருகையில் ரசீதைக் கொடுத்து விட்டு நமது உடைமைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படியும் மீறி பொருட்களுடன் தரிசனம் செய்யச் சென்றால் பாதுகாப்பு அதிகாரிகள் பொருட்களை எங்காவது வைத்து விட்டு வரச் சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதால், பொருட்களை அருகாமையில் இருந்த ஒரு கடையில் வைத்து ரசீது பெற்றுக் கொண்டோம்.
எல்லா உடைமைகளையும் கடையில் வைத்தாலும் எனது மொத்தப் பணம், அமர்நாத் யாத்திரை அனுமதி சீட்டு, மற்றும் சென்னை திரும்புவதற்கான ரயில் ரிசர்வேஷன் டிக்கட்டுகளை மட்டும் எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொண்டேன். எனது ஹிப் பௌச் (HIP POUCH) துணியால் ஆனது என்பதினால் வைஷ்ணோதேவி யாத்திரை உள்பட எல்லா இடங்களிலும் பாதுகாப்பு பரிசோதனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆகையினால் இந்த ஹிப் பௌச் எனது உடலின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. கோவிந்த் மனோகர் கூட தனது பணத்தையும் என்னிடம் தந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொன்னார்.
ஒவ்வொரு கடையும் பின்புறத்தில் தங்குமிடம் கொண்ட டெண்ட்டாக அமைத்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் பணம் தந்து அங்கே தங்கலாம். கம்பளிப் போர்வைகள், ராஜாயிகள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்கிறார்கள். மேலும் பகல் பொழுதில் ஓரிரு மணி நேரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் எனில் இலவசமாக அனுமதிக்கிறார்கள். நாங்கள் வந்த பயண அலுப்பில் கொஞ்ச நேரம் அந்தக் கடையில் அமர்ந்திருந்தோம். அதிகாலை துவங்கி வரும் வழியில் இரு முறை தேநீர் குடித்தது தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை. உடம்பு முழுமையும் வலி அங்கிங்கெனாதபடி வியாபித்திருக்கிறது. கொஞ்சம் நேரம் விட்டால் கடையிலேயே படுத்துக்கொள்ளலாம் போலிருந்தது. முன்னிரவில் முதுகு வலியால் அவதிப்பட்ட கோவிந்த் மனோகர் சற்று நேரம் சிரமபரிகாரம் செய்து கொண்டார்.
நான் கொண்டு சென்றிருந்த அக்ரூட், உலர்திராட்சை வகைகளை என்னுடன் வந்தவர்களுக்குப் பகிர்ந்து தந்தேன். அவர்களும் ஆர்வத்துடன் அதை சாப்பிட்டு தங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அந்த நேரத்துக்கு இந்த உணவுகள் எங்களுக்கு கொஞ்சம் தெம்பையும், சக்தியையும் மீட்டுத் தர பெருமளவு உதவின. கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின்னர் அந்தக் கடையில் கொஞ்சம் பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு தரிசனம் செய்ய புறப்பட்டோம்.
செல்லும் வழியில் திருமதி கோவிந்த் மனோஹரை அவருடன் சென்ற பெண்மணிகளுடன் சந்தித்தோம். பல்லக்குகளில் புறப்பட்ட அவர்கள் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிகவும் களைப்பாக இருந்தார்கள். நிறைவான தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியால் அவர்கள் முகங்கள் மலர்ந்திருந்தன. மீண்டும் பல்லக்குகளை நியமித்துக் கொண்டு திரும்பிச் செல்ல அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பால்டால் முகாமில் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவர்களை வழியனுப்பினோம்.
இங்கும் லங்கர்கள் (இலவச உணவுக் கூடங்கள்) அமைந்திருந்தன. பசி இருந்தும் தரிசனம் முடித்துக் கொண்டு சாப்பிடலாம் என்று முடிவு செய்து கொண்டோம். லேசான தலைவலி இருந்தது. இந்த உயரத்தில் ஆக்சிஜனின் அடர்வு குறைத்திருப்பதால், இந்த தலைவலி வருகிறது. இதை சரி செய்யவேண்டுமெனில், மூச்சுக் காற்றை நன்றாக அடிவயிறு வரை இழுத்து பின்னர் வெளியே விடவேண்டும். இழுக்கும் மூச்சுக்காற்று முழுமையாக நுரையீரல்களை நிரப்ப வேண்டும். பின்னர் காற்றை மெதுவாக முழுமையாக வெளியேற்ற வேண்டும் (deep breathing technique) இதே போன்று பத்து இருபது முறை செய்ய, தேவையான ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கும். தலைவலி குறையும். நடக்கும் போதே கொஞ்ச நேரம் ஆழ்ந்த மூச்சு பிராணாயாமம் செய்தேன்.
குகைக்குச் செல்லும் பாதை பனிப் பாறையால் அமைந்தது என்பதால், குச்சியை நன்றாக ஊன்றி கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. காலைச் சூரிய ஒளியில் இந்த பாறைகள் உருகுவதால், நமது கால்களுக்கு பிடிமானம் குறைந்து வழுக்கும் தன்மை கொண்டவை ஆனால் சமவெளி என்பதால் இங்கே வழுக்கி விழுந்தால் ஒன்றும் பயமில்லை.
கடைகளைத் தாண்டி சென்றதும் இடது புறமாக செல்லும் பாதையில் சென்றால் குகையின் நுழைவாயில் வருகிறது. படிக்கட்டுகள் தொடங்கும் இடமாகும் இது. இங்கே மெடல் டிடெக்டர் வைத்து எல்லா யாத்திரிகளையும் சோதனை செய்கிறார்கள். பின்னர் படி ஏறிச் செல்கையில் மற்றும் ஒருமுறை ஃபுல் பாடி செக் அப் செய்த பின்னரே மேல செல்ல அனுமதிக்கிறார்கள். அமர்நாத் குகை வட்டாரமே கடுமையான இராணுவப் பாதுகாப்பில் இருக்கிறது. மூன்று அடுக்கு இராணுவ பாதுகாப்பில் இந்த பகுதி அமைந்திருக்கிறது.
சிவபெருமான், பார்வதிக்கு இந்தக் குகையில் தான் வாழ்க்கையின் அமரத்துவம் பற்றிய ரகசியங்களை போதித்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது இரண்டு தேவர்கள் இந்த இரகசியத்தை ஒட்டுக் கேட்டதைக் கண்ட சிவபெருமான் இவர்களை புறாக்களாக மாற சபித்ததாகவும், அமரஜீவிதம் பெற்ற இப்புறாக்கள் இன்று இங்கே வாழ்வதாகவும் அமர்நாத் பற்றிய கதைகள் கூறுகின்றன.
நாங்கள் சென்றிருந்த நாள் எங்கள் அதிர்ஷ்டம் மூன்று புறாக்களை நாங்கள் அங்கே கண்டோம். அவை குகையின் மேல்புறக் கூரையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்ததை கண்ட யாத்திரிகள் பரவசத்துடன் 'ஹர ஹர மகாதேவ்' என்றும் ''பம் பம் போலே'' என்றும் கூவினார்கள். அந்தப் புறாக்கள் வெகு நேரம் தரிசனத்துக்காக காத்திருந்த எங்களுக்கு அடிக்கடி பறந்து காட்சி தந்து கொண்டிருந்தன. மரம், செடி கொடிகள் இல்லாத இந்த உயரத்தில் இந்தப் புறாக்கள் இருப்பது மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது.
நாங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தோம். பல மொழி பேசும் மக்கள் திரளாய் வரிசையில் காத்துக் கொண்டிருக்க, இராணுவத்தினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஐம்பது பேர் கொண்ட குழுவாக யாத்திரிகளை தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். தரிசனம் முடிந்து யாத்திரிகள் வெளியேறியதும் அடுத்த குழுவை அனுமதிக்கிறார்கள்.
மெதுவாக நகர்ந்து நகர்ந்து எங்கள் வரிசை அமரநாதன் வீற்றிருக்கும் குகையை சமீபிக்கும் போது இதயம் படபடத்தது. இன்னும் சில நிமிடங்களில் பரமசிவனை பனி லிங்க வடிவில் தரிசனம் செய்யப் போகிறோம் என்னும் ஆனந்த எதிர்பார்ப்புடன் எல்லோரும் 'ஹர ஹர மகாதேவ்' என்று சொல்லிக் கொண்டே நகர்கிறோம்.
அமரனாதரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தரிசனம் அடுத்த இடுகையில்.
(யாத்திரை தொடரும்)