தேவபூமியில் சில நாட்கள்
பயண அனுபவத் தொடர்
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
-தாயுமானவர் (பராபரக்கண்ணி)
ஓம் நமசிவாய.
அடியார்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். மார்ச் முதல் வாரத்தின் போது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வருக்கு ஒரு யாத்திரையை மேற்கொள்ள இறையவன் திருவருள் கூட்டியது. அந்த பயண அனுபவங்களை உங்களிடையே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். உங்களது ஆசிகளையும், வாழ்த்துக்களையும், வழிகாட்டல்களையும் எதிர் நோக்குகிறேன்.
ஓம் ஷிவோஹம்.
எல்லாம் வல்ல சிவனருளால் ஜாகேஷ்வர் யாத்திரையை நலமுடன் பூர்த்தி செய்த மகிழ்வில் எனது யாத்திரை அனுபவங்களை குழும அன்பர்களிடையே பகிர்கிறேன்.
தேவ பூமியில் சில நாட்கள்.
(உத்தர்கண்ட்-குமாவூன் பகுதியை சேர்ந்த ஜாகேஷ்வர், விருத்த ஜாகேஷ்வர், பாதாள் புவனேஷ்வர், கங்கோலிஹாட், கோலுதேவதா திருத்தலங்கள்).
உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் ஜாகேச்வர் அமைந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தை “தேவ பூமி” என்று அழைக்கிறார்கள். பாரத நாட்டின் ஆன்மீக மரபினைச் சார்ந்த பெரும்பாலான முக்கிய தலங்கள் உத்தரகண்ட் மாநிலத்திலேயே அமைந்திருக்கிறது. (உதாரணம்:- சார் தாம் (Char Dham) என அழைக்கப்படும், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுநோத்ரி, மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்கள் அமைந்திருக்கும் பகுதி உத்தரகண்ட் மாநிலத்தின் கட்வால்(garwalGharwal) பகுதியை சேர்ந்தது. அல்மோரா, ஜாகேஷ்வர், பாகேஷ்வர், பாதாள் புவனேஸ்வர், முக்தேஷ்வர், ராமேஷ்வர் போன்ற இன்ன பிற பகுதிகள் எல்லாம் குமாவுன் பகுதியில் அமைந்துள்ளது).
பள்ளி நாட்களில் ஜிம் கார்பெட்டின் ‘குமாவூன் புலிகள்’ (Tigers of Kumaon by Jim Corbett)என்ற தமிழ்ப் புத்தகத்தை பள்ளி நூலகத்தில் பெற்றுப் படித்த போதே குமாவூம் பகுதி பற்றிய ஒரு கற்பனை வடிவம் மனதில் விழுந்து விட்டது. பத்து வயதில் படித்த நினைவுகள் கனவுகளாகி எனது ஐம்பத்தாறாவது வயதில் நனவு வடிவம் பெறுவது பற்றி எண்ணிய போது மனம் சந்தோஷத்தில் துள்ளியது. சுவாமி விவேகானந்தர் அல்மோராவில் தங்கி இருந்ததைப் பற்றி தனது ஞான தீபக் கட்டுரைகளில் குறிப்பிடுவார். அதே போன்று இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி கமலாத்மானந்தாவும், சுவாமி சித்பவானந்தாவும் திருக்கயிலாய யாத்திரை செய்த அனுபவங்களை பயண நூல்களாக எழுதியதிலும் அல்மோரா பற்றிய செய்திகள் நிறைய வரும்.
ஆதி காலத்தில் இருந்தே கயிலை-மானசரோவருக்கு பயணிப்போர் அனைவரும் காத்கோதாம் வழியாக மலைப்பாதையில் பயணித்து அல்மோரா சென்று அங்கிருந்து பயண ஏற்பாடுகளை செய்து கொண்டு திருக்கயிலைக்கு பயணிப்பார்கள். கயிலை-மானசரோவர் திபெத்தில் அமைந்திருக்கிறது. திபெத் சீனாவின் பிடியில் சென்ற பிறகு சீனாவின் அனுமதி இன்றி கயிலை யாத்திரை செல்வது கடினமாக இருந்ததது. அதன் பின்னர் 1962இல் நடந்த இந்திய சீனப் போரின் போது இந்தப் பாதை மூடப் பட்டதாகவும், பின்னர் 1987இல் இருந்துதான் மீண்டும் திருக்கயிலை யாத்திரைக்கான பாதை இந்திய சீனா ஒப்பந்தத்தின் படி திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக இரத்தினமாலை குழுமத்தில் இறையடியார் திரு.விழியன் எழுதிய ஜாகேஷ்வர் பயணக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படித்து பயணத்தின் போது எந்தெந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என குறிப்பெடுத்துக் கொண்டேன்.
அதே போன்று இறையடியார் இசைக்கவி இரமணனின் 'ஜெய் ஜாகேஷ்வர்' தொடர் திரிசக்தி மாத இதழில் வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் விழியனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது ஜாகேஷ்வரில் யார் யாரிடம் என்னென்ன உதவிகள் கிடைக்கும் என்ற செய்திகளை, பெயர், மற்றும் தொடர்பு எண்களோடு என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி ஜாகேஷ்வர் கோவிலின் பண்டிட்ஜி திரு லக்ஷ்மி தத் பட் அவர்களோடு ஒரு வாரம் முன்னதாகவே பேசினேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை ஜாகேஷ்வருக்கு வரவேற்றார். மகிழ்ச்சி ததும்பும் குரலோடு கொஞ்சம் ஆங்கிலமும், நிறைய ஹிந்தியும் பேசிய திரு.லக்ஷ்மிதத் பட் பண்டிட்ஜியின் வழிகாட்டலின் பேரில் திரு.மனோஜ் பட் அவர்கள் காத்கோதாமில் இருந்து தொடர்பு கொண்டு எங்களுடன் பேசினார். எங்களது பயணத் தேதிகளை கேட்டறிந்து கொண்ட திரு.மனோஜ் பட் எங்களை ஐந்தாம் தேதி அன்று காலை காத்கோதாம்(Kathgodam) ரயில் நிலையத்தில் சந்திப்பதாக உறுதி அளித்தார். அதன் பிரகாரம் திரு.மனோஜ் பட் எங்களை அவருடைய காரில் ஜாகேஷ்வர் அழைத்துச் செல்வதாக பேசி ஏற்பாடு செய்து கொண்டோம்.
(அனுபவப் பகிர்தல் தொடரும்)