Friday, November 5, 2010

தீபாவளி -2010- வாழ்த்துக்கள்


இங்கு வருகை 
தரும் அன்பு நெஞ்சங்களுக்கு 
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Wednesday, November 3, 2010

பகுதி 10. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை


பகுதி: 1 

பகுதி: 2

பகுதி: 3 

பகுதி: 4 

பகுதி: 5 

பகுதி: 6 

பகுதி: 7

பகுதி: 8

பகுதி: 9

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

பகுதி 10
 
அத்தியாயம்  2.  வைஷ்ணோதேவியை தரிசனம்  செய்தோம்.
 

 படம்: காத்ரா நகரின் பின்னணியின் வைஷ்ணோதேவி மலைப் பகுதி.

 
 வைஷ்ணோதேவி மலையேறுமுன் முன்பதிவு செய்ய வேண்டும்.

காத்ராவில் உள்ள யாத்ரா பதிவு அலுவலகம்.
 
வைஷ்ணோதேவியை தரிசனம் செய்ய விரும்பும் யாத்திரிகள் காத்ரா பேருந்து நிலையத்தில் உள்ள கோவில் நிர்வாக அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும். எங்கள் அமைப்பாளர் காலையிலேயே சென்று எங்கள் அனைவருக்கும் பதிவு செய்து பதிவுச்சீட்டை வாங்கி வந்துவிட்டார்.
 
அடிவாரத்தில் இருந்து வைஷ்ணோதேவி மலைப்பாதை   13 கி.மீ நீளம் உடையது.
 மலை அடிவாரம்.
கீழிருந்து அம்பிகை வீற்றிருக்கும் குகை வரை சராசரியான  உடல் நலம் உள்ளவர்கள் சுலபமாக நடந்து செல்லலாம். யாத்திரிகள் செல்லும் வழியெல்லாம் பாதைகளை செப்பனிட்டு, அடிக்கடி கூட்டி, சுத்தமாக வைத்திருக்கிறார்கள். கழிப்பறை வசதிகளும் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் தனித்தனியே போதிய தண்ணீர் வசதியுடன் செய்யப்பட்டிருக்கிறது.

படிகள் வழியாகவும் ஏறி செல்லலாம். படிகளில் ஏற முடியாதவர்கள் பாதை வழியாகவும் ஏறிச் செல்லலாம். மலைப்பாதை செங்குத்தாக இல்லாமல், சாய்தளமாகவும், அகலமாகவும், மேடுபள்ளங்களில்லாமல் சிமெண்டு சாலையாகவும் அமைந்திருக்கிறது. பாதை ஓரங்களில் கம்பியால் ஆன தடுப்புகளை வழி நெடுகிலும் அமைத்துள்ளார்கள்.

 மேலும் இங்கே அடிக்கடி பாறைகள் மேலிருந்து உருண்டு விழும். அடிக்கடி பாறைகள் விழும் பகுதிகளில் அறிவிப்புப் பலகைகளைக் வைத்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். பல இடங்களில் மேற்கூரைகளை அமைத்திருக்கிறார்கள். நடந்து செல்லும் போதே கற்கள் உருண்டு  பெருத்த சப்தம் செய்து கொண்டே மேற்கூரைகளில் விழுவதை நாங்கள் கண்டோம். 

லங்கூர் வகைக் குரங்குகளும், நம் ஊர்ப்பக்கம் இருக்கும் சாதாரண வகை குரங்குகளையும் வழியில் நிறைய தென்படுகின்றன. ஆனால் யாத்ரிகளை அவைகள் தொந்தரவு செய்வதில்லை. யாத்ரிகள் கொடுக்கும் அல்லது விட்டுச் செல்லும் உணவுப் பண்டங்களை சாப்பிடுகின்றன. ஆனால் யாத்ரிகள் தான் அவற்றிடம் நிறைய சேட்டை செய்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் திருப்பி தொந்தரவு செய்யாமல் விட்டு விடுகின்றன. தொல்லைகள் அளவுக்கு மீறிப் போகும் போது பற்களைக் காட்டி சீறுகின்றன.
 
அடிவாரத்தில் இருந்து அம்பிகையை தரிசனம் செய்ய நடக்க இயலாதவர்கள், வாடகைக்கு அமர்த்திக் கொள்ள குதிரைகளும் உள்ளன. 


அதே போல பல்கி என்று அழைக்கப்படும் டோலி (பல்லக்கு) வசதிகளும் உள்ளன. வைஷ்ணோதேவி கோவில் நிர்வாகம் வாடகையை நிர்ணயித்து அங்கங்கே அறிவிப்புப் பலகைகளை வைத்திருக்கிறார்கள். 


குதிரைக்காரர்களும்,டோலிக்காரர்களும் நம்மூர் ஆட்டோக்காரர்கள் போல் யாத்திரிகளிடம் அதிகமாக பணம் கேட்பதில்லை. முன்னரே பேசிக்கொண்டு இருதரப்பும் ஒப்புக் கொண்ட பணத்தை முகம் சுளிக்காமல் பெற்றுக் கொள்கிறார்கள். சிரித்த முகத்துடன் அவர்கள் செய்யும் சேவைக்கு திரும்பி வருபவர்கள் தாங்களாகவே மனமுவந்து ஐம்பது நூறு என்று பக்சீஷ் (அதாங்க டிப்ஸ்) தந்து விடுகிறார்கள். செல்லும் வழியில் ஓரிரு இடங்களில் ஓய்வுக்காக நிறுத்தும் போது அவர்களுக்கு டீ வாங்கித் தரவேண்டும்.  வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், நடந்து பழக்கம் இல்லாதவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் பல்லக்கில் செல்கிறார்கள். வசதி படைத்தவர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.
 
ஹெலிபேட். இங்கிருந்து கீழே இரண்டு கி.மீ இறங்கி வந்து அம்பிகை வீற்றிருக்கும் குகையை அடையலாம்.
 
பக்தர்களின் பொருட்களை சுமக்கவும், குழந்தைகளை சுமக்கவும் அதிகம் தாடி வைத்த முகமதியர்கள் உதவுகிறார்கள், ஒரு இந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் முகமதியர்களை பார்க்க முடிந்தது. குதிரைகளை நடத்திச் செல்வது, பல்லக்கு சுமப்பது என்று பலவிதங்களில் யாத்திரிகளுக்கு இவர்களின் பங்களிப்பு இருக்கிறது.
 (ஒரு யாத்ரி பல்லக்கில் புறப்படுகிறார்)
(குழந்தைகளை சுமந்து செல்லும் வாடகை உதவியாளர்கள் (pithoos) )

அதுவும் இன்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள், பக்தர்களுக்குத் தேவையான நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், காபி, டீ, ஐஸ்க்ரீம்கள் போன்றவைகளை விற்கும் கியோஸ்குகள் கட்டப்பட்டுள்ளன. விலைப்பட்டியல்களை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தெளிவாக எழுதியுள்ளார்கள். எஸ்.டி.டி. செய்வதற்கு வசதியாக டெலிபோன் பூத்துக்களும் உள்ளன. வைஷ்ணோதேவி கோவில் நிர்வாகம் அமைத்திருக்கும் இலவச மருத்துவ மனைகளும் வழியில் உள்ளன.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையில் நடந்து சென்று அம்பிகையை தரிசனம் செய்ய மலைப்பாதை அவ்வளவு வசதியாக இல்லையாம். இப்போது மலைப்பாதை  எல்லா நவீன வசதிகளும் செய்யப்பட்டு, பாதைகள், இரவு முழுதும் ஒளிரும் விளக்குகள், வழிதோறும் கழிப்பறைகள், உணவு விடுதிகள் என்று பக்தர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா சவுகரியங்களும் செய்யப்பட்டு உள்ளன.

எங்கள் குழுவில் உள்ள அறுபத்தி இரண்டு பேர்களும் அவரவர் வசதிகேற்ப குதிரைகள், பல்லக்குகள், கால்நடையாகப் போவது என்று சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கொண்டார்கள். யாத்திரை முடிந்து அன்றிரவு எட்டு மணி வாக்கில் தங்கிருக்கும் விடுதிக்கு திரும்பி வந்து விடவேண்டும் என்ற ஏற்பாட்டுடன் அனைவரும் யாத்திரையை துவங்கினோம். நானும் என் நண்பர்கள் கண்ணன், மகேஷ் கொண்டல், சிவகுமார் நடந்து சென்றோம்.

மலை அடிவாரத்தில்  உள்ள நுழைவாயிலில் செக்யூரிட்டி செக் நடைபெறுகிறது. சாதாரண செல்போன்கள், கைக்கடக்கமான காமிராக்களை அனுமதிக்கிறார்கள், வீடியோ காமிராவை மேலே கொண்டு செல்ல அனுமதி இல்லை. நாம் கொண்டு போகும் பைகளை ஸ்கானர்களைக் கொண்டு பரிசோதனை செய்வதால் நாம் கொண்டு போகும் பொருட்களை கண்டு பிடித்து விடுகிறார்கள். முழு உடலையும் காவலர்கள் சோதனை செய்த பிறகே விடுகிறார்கள்.

பெண்களுக்கு பெண் காவலர்கள் தனி அறையில் சோதனை செய்கிறார்கள்.  அப்படி எதுவும் தப்பித் தவறி தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றை க்ளோக் ரூமில் டெபாசிட் செய்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டு  தரிசனம் முடிந்து திரும்ப வரும்போது வாங்கிக் கொள்ளலாம். எப்படியாவது (!) மேலே கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி எங்கள் ஆர்கனைசர் கொண்டு வந்த வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த அளவு கெடுபிடி இல்லை என்று வழியெல்லாம் அவர் புலம்பிக் கொண்டு வந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லையோர மாநிலம் என்பதாலும் அடிக்கடி தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டு தாக்குதல்கள் நடைபெறுவதாலும் சி.ஆர்.பி.எப் வீரர்களும், ராணுவமும் எல்லா இடங்களிலும் விழிப்புடன் பணியாற்றுகிறார்கள்.

கீழிருந்து ஒரு கிலோ மீட்டர் மேல் சென்றதும் வழியில் பாணகங்கை எனும் நீரூற்று வருகிறது. சிற்றருவியாக மேலிருந்து கீழே விழுந்து ஓடும் அழகிய சிற்றோடை என்றுகூட கூறலாம். அதில் குளிக்க விரும்புபவர்கள் குளிக்கலாம். மிக அழகாக நீர் மேலே இருந்து குதித்து ஓடி வந்து கொண்டிருந்தது, காண ரம்மியமாக இருந்தது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் இந்தப் பகுதியில் கோடைக் காலமாம். அருவித் தண்ணீர் தொட்டாலே ஐஸ் போல சில்லிட்டது. தலையில் தெளித்துக் கொண்டு மேற்கொண்டு புறப்பட்டோம்.

அம்பிகையைத் தரிசனம் செய்ய செல்லும் வழியில் நிறைய இடங்களில் இது போன்ற கண்காட்சிகளை அமைத்துள்ளார்கள். லங்கர்கள் (அன்னதானக் கூடங்கள்) என்று அழைக்கப்படும் இந்த இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

குகைக்குள் இருக்கும் பிண்டி வடிவத்தின் மாதிரியைப் போன்றே பல இடங்களில் போட்டோ ஸ்டூடியோக்காரர்கள் அமைத்து பக்தர்களை பூஜை செய்கிற மாதிரி அருகில் அமர வைத்து புகைப்படம் எடுத்து தருகிறார்கள்.
 
(இந்தப் பகுதியின் இடுகை மேலும் தொடரும்)