நேபாளப் பயணக் கட்டுரை- பத்தர் பரசும் பசுபதிநாதம்
ஓம் நமசிவாய.
எந்தையும் தாயுமாய் இருந்தாய் போற்றி.
சிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.
பசுபதிநாதனே போற்றி போற்றி.
இடுகை: ஐந்து
நேபாளப் பயணம் துவங்குகிறது.
14.09.2011: சென்னையில் இருந்து கோரக்பூருக்கு (ரயில் பயணமாக).
எங்கள் பயணத் திட்டப் படி செப்டம்பர், 2011 பதினான்காம் தேதி அன்று ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் (திருவனந்தபுரம்-கோரக்பூர்) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு பதினொன்று இருபதுக்கு புறப்படவேண்டும். ஆனாலோ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில் அன்று சென்டிரல் வருவதற்கு தாமதாமாகிக் கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய தினம் (13.09.2011 அன்று) அரக்கோணம் அருகே ஏற்பட்ட மின்தொடர் வண்டி மற்றொரு ரயிலின் மேல் மோதியதால் ஏற்பட்ட துயர விபத்தின் காரணமாக சென்னைக்கு வரும் ரயில்களின் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே பல இரயில்கள் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தன.
பலமணிநேர காலதாமதம் தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. அன்று முழுவதும் அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு அரக்கோணம்-சென்னை பாதை சீரமைக்கப் பட்டு விட்டதா? இரயில்கள் போக்குவரத்து சீராகி விட்டதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தோம். தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணி புரியும் எனது நண்பர்கள் எங்களுக்காக இந்த தகவல்களை அடிக்கடி சேகரித்து சரிபார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அன்று மாலை இல்லம் வந்து பயண ஏற்பாடுகளை கவனித்தேன். என் மனைவி பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நிறைய சப்பாத்திகள், தொட்டுக் கொள்ள வெங்காயம்-தக்காளி தொக்கு மற்றும் புளிசாதம் போன்றவற்றை தயாரித்து வைத்திருந்தாள். அவற்றை பேக் செய்து எடுத்துக் கொண்டேன். இறையடியார் சேகர்ஜி என்னுடன் போனில் பேசினார். அவர் சென்டிரலில் வந்து எங்களை வழியனுப்ப ஆர்வமாக இருந்தார். அவருடன் மழலையும் சேர்ந்து வர திட்டமிருந்ததாம்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறைய பயணிகள் கூட்டம் இருந்ததால், நிற்க இடமில்லாமல் இருந்தது முதல் நாள் இரவில் இருந்து பயணிகள் தாங்கள் புறப்படவேண்டிய இரயிலுக்காக காத்திருந்தார்கள். அந்த சந்தடியில் இறையடியார்கள் வந்தால் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதினால் அன்பர சேகர்ஜியை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் பயணம் வெற்றியடைய வாழ்த்துக் கூறினார். சற்று நேரம் கழித்து மழலையும் என்னுடன் பேசியது. சாதுவாக பயணத்தை முடித்து வரச் சொல்லி வாழ்த்தியது மழலை. எனது துணைவியார் இல்லாமல் தனியாகச் செல்வதை சாதுவாகப் (சாமியார் மாதிரி) போய் வாருங்கள் என்று (நகைச்)சுவையாக குறிப்பிட்டார் மழலை.
இரத்தினமாலை குழும இறையடியார்கள் ஒவ்வொருவரும் எனது பயண வெற்றிக்கு மின்மடல் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்கள். மின் தமிழ் மடலாடற்குழும ஆன்றோர்களும் மின்மடல் மூலமாக வாழ்த்து சொல்லி எனது பயணத்தினை வளமாக்கினார்கள். மறவன்புலவு ஐயா, இன்னம்பூரார் போன்ற மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் போனில் அழைத்து வாழ்த்திட நான் என்ன புண்ணியம் செய்திருப்பேன்? என்று எண்ணி எண்ணி இறுமாந்தேன். இந்த பெரியோர்களின் அன்பும், ஆசியும் எங்களுக்கு பயண முழுமையும் ஆதரவாகவும், பக்க பலமாகவும் அமைய உதவியது.
இரவு எட்டு மணிக்கெல்லாம் சென்டிரல் இரயில நிலையம் சென்று விட்டேன். பின்னர் சக யாத்திரிகள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். இரவு ஒன்பதரை அளவில் அனைவரும் ஒரு இடத்தில் குழுமினோம். நிற்கக் கூட இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரமாக இரயில்கள் வந்து சேர்தல், புறப்படுதலில் நிச்சயமற்ற தன்மை நிலவியதால் அனைவரும் எரிச்சலுடனும், சலிப்புடனும் காணப்பட்டார்கள். அந்த மன நிலையில் அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். காரணம் எங்களுக்கு தெரியவந்த சேதி தான். அதாவது முந்தைய நாளிரவில் கேரளாவில் இருந்து வரும் ரயில்கள் அரக்கோணத்துக்கு முன்னதாக திருப்பி விடப்பட்டு ரேணிகுண்டா அல்லது கூடூர் இரயில நிலையத்தில் இருந்து புறப்பட்டனவாம். அந்த வண்டிகளில் முன்பதிவு சென்னைப் பயணிகள் சென்னையில் இருந்து வேறொரு ரயிலில் பயணித்து கூடூர்/ரேணிகுண்டா போய் அங்கு காத்திருந்த தத்தம் இரயில்களில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதுபோல நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எங்களை கவ்விக் கொண்டன. இந்த மாதிரி நேரங்களில் முறையான அறிவிப்புகளை செய்யாமல் காத்திருக்கும் பயணிகளை சலிப்படையச் செய்வதில் இருந்து இரயில்வே நிர்வாகம் இன்னும் விடுபடவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பரபரப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிர்வாகம் இன்னமும் மக்கள்தொடர்பில் சரியாக முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. எந்த பிளாட்பாரத்தில் எந்த இரயில புறப்படும் என்று அறிவிக்கும் டிஸ்ப்ளே பலகையில் உள்ள செய்தியும், CCTVயில் அறிவிக்கப்படும் செய்திகளும் பொருந்தவே இல்லை.
இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்னவென்றால் டிஸ்ப்ளே பலகையில் பார்த்துவிட்டு ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் நாங்கள் காத்திருக்க, நீண்ட நேரம் கழித்து CCTVயில் அறிவிக்கப்பட்ட பிளாட்பாரம் எண் வேறாக இருந்தது. இதனால் ஒன்றாம் எண் நடை மேடையில் இருந்து எட்டாம் எண் நடைமேடைக்கு பயணிகள் கூட்டத்தில் நீந்தி தவித்து வர வேண்டியதாயிற்று. ஏனெனில் எனது சகபயணிகள் ஏழு பேரில் ஒருவர் மாற்றுத் திறனாளி. ஒரு செயற்கைக் காலில் நடந்தாக வேண்டும். மற்ற இருவர் வயதானவர்கள். மற்ற நால்வரில் ஒரு இளைஞி தவிர மற்ற எல்லாருமே ஐம்பது வயதினைக் கடந்த ஆண் பெண்கள். பத்து நாள் பயணம் என்பதால் பெட்டிகள் நிறைய வந்திருந்தன. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவம் காரணமாக எனது லக்கேஜ்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்தேன். சாப்பாட்டு பை ரயிலில் தீர்ந்து விடும். மற்ற பெட்டி/பைகள் சமாளிக்கக் கூடிய எடையுடன் அமைத்துக் கொண்டிருந்தேன். பிறர் உதவியின்றி இழுத்து/தூக்கிச் செல்லக்கூடியவிதமாக அவைகள் இருந்தன.
எது எப்படி இருப்பினும் நீண்ட நேர காத்திருத்தல், சலிப்பு, தூக்கம் இவற்றை எல்லாம் தாண்டி நள்ளிரவு/அதிகாலை பன்னிரண்டரை மணிக்கு ஒருவழியாக நாங்கள் பயணிக்க வேண்டிய ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் சென்டிரல் வந்து சேர்ந்தது. எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இரயிலில் எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாலை ஒன்றரை மணிக்கு சென்டிரலில் இருந்து எங்களது வண்டி புறப்பட்டது. அவரவர் இல்லங்களுக்கு போன் செய்து விவரங்களைத் தெரிவித்து விட்டு, நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பசுபதிநாதரையும், அன்னை பராசக்தியையும் வேண்டிக்கொண்டு உறங்கச் சென்றோம்.
(பகிர்வுகள் தொடரும்)
அஷ்வின்ஜி.