கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை ஏழு: முதல் சிலிர்ப்பு.
குதிரையில் இருந்து கீழே இறங்கிய இடத்திலிருநது குகை தெரிகிறதாவென்று பார்த்தேன். தெரியவில்லை.
ஆனால் அங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் குகையிருப்பதாக குதிரையோட்டிகள் சொன்னார்கள். அதாவது 2 கி.மி. ஐஸ்கட்டியாலான பாதையிலே நடக்க வேண்டும். நல்ல வேளையாக பகல் வெளிச்சம் எனக்கு தைரியமுட்டியது.
என் முதல் பயணத்தில் (1995ல்) இரவு 9 மணிக்கு ஐஸ் கட்டியில் ஒரு குஜராத்தி நண்பருடன் (அவர் பேசியது எனக்கு புரியவில்லை, நான் பேசியது அவருக்கு புரியவில்லை) தமிழில் பேசிக்கொண்டே ஒருவர் கையை ஒருவர் கெட்டியாக பிடித்து கொண்டு குகையிலிருந்து பஞ்சீதரணிக்கு சென்றடைந்தோம்.
வழியில பலமுறை நானும் அவரும் தடுககி விழுநதோம். உணர்வுகளை பரிமாறிக் கொள்ள மொழி ஒரு அத்யாவசியம் என்ற சமவெளிச் சமன்பாடு அன்று பொய்யானது.
அவர் என்னையும நான் அவரையும் மிகவும் சரியாக புரிந்து கொண்டோம். சத்தமாக அந்த இமயமலை பிரதேசத்தில் நான் தமிழில் பேசிக்கொண்டு அன்றிரவு அவருடன் நடந்து சென்றது என் நினைவுகளில வந்து என்னை உற்சாகப்படுததியது.
இன்ஹிபிஷன் என்ற வரையறையை தாண்டி விட்டால் எல்லோரும் பெரும்பாலான பிரச்சனைகளிலிருந்து விடுபடும் மார்கம் எளிதாக கிடைத்து இன்பமாகவே இருக்க முடியும் என்பது என் தெரிபு.
ஐஸ் பள்ளத்தாக்கில் மெதுவாக நாங்கள் நால்வரும் தடியின் உதவியோடு குகை நோக்கி முன்னேறினோம். இளம் வெயிலில் ஐஸ் உருகி நடக்க சிரமமாகவும் மிகவும் வழுக்குப் பாதையாகவும் இருந்தது.
Pic Courtesy: Google images
ஐஸ் பாதை மனிதன் நடந்த அல்லது குதிரைகள் நடந்த பகுதிகளில் கருமையாக இருந்தது. பார்கக குழந்தையின் அழுக்கு கன்னம் போலிருந்தது. மலைச்சரிவில் இருந்த ஐஸ் பாளங்களில் தெரிந்த கருமை, சுற்றுச்சுழல் மாசு படிந்ததால் வந்திருப்பதாக பின்னர் ஒரு ஆர்மி ஜவான் கூறினார்.
நடந்து சென்ற பாதையின் இடையில் ஒரு ஓடை உற்சாகத்துடன் ஓடி ஐஸ் பாளத்தின் ஊடே மறைந்ததைப் பார்த்தோம். பனிப்பாளங்கள் சில இடங்களில் உருகி சிற்றோடையாக ஆனால் கிட்டிக்கும் குளிர்ந்த நீராக பாய்ந்து ஓடி உருகாத பனிப்பாளங்களூடே ஓடி மறைகிறது.
அந்த குளிர் நீரில் குளித்து களித்த ஆன்மாக்களை பார்த்து கழிவிரக்கமே வந்துவிட்டது. ஆம்! குளிக்க ஆசையிருந்தாலும் சென்னைவாசியால் அது முடியுமா? துணிந்து இறங்க மனம் ஒரு கணம் ஒத்துக்கொண்டது. ஆனால் குளிர்ந்த நீர் குளியல் என்னை மேற்கொண்டு பயணப்படாதவாறு செய்துவிட்டால் என்ன செய்வது? என்னால் பிறர்க்கும் பிரச்னை வந்துவிடுமோவென்ற கவலையில் (உண்மையில் எனக்கு பயமாக இருந்தது வேறேன்ன?) அந்த ஆசையை நிராகரித்தேன்.
உறைந்த பனிக்குக் கீழே ஓடை ஒன்று இருப்பதை உணர்ந்த போது எங்கள் நடை மேலும் நிதானப்பட்டது. சிறிது தூரம் சென்றவுடன் கலர் கலராக கூடாரங்கள் கண்ணில் பட்டன ஒரு சிறு திருப்பத்தில் பெரிய பள்ளத்தாக்கு முழுவதும் எங்கள் முன் விரிந்தது.
அது ஒரு டிஸ்கவரி சேனல் காட்சி போல் தெரிந்தது. தூரத்தே அமர்நாத் வாசம் செய்யும் குகை இடது பக்கம் சற்று பின்வாங்கி இருந்தது தெரிந்தது.
சற்று சிலிர்த்து போனேன். இதுவரை பட்ட துன்பம் வெகுவாக மறந்து போனது. மேலும் நடக்கையில் கூடாரங்கள் அடர்த்தியாக தொடர்ந்து காணப்பட்டது. அந்த கூடாரங்கள் மெள்ள மெள்ள கடைகளானது.
அந்த கடைகளை அவர்கள் அமைந்திருந்து விதம் ஸ்வாரஸ்யமானது.
உறைந்த பனியால் ஆன மேடுகளை ஒரு பத்துஅல்லது பன்னிரண்டு பேர் வசதியாக படுக்கும் அளவிற்கு சதுரமாக அல்லது செவ்வகமாக செதுக்கி அதன் மேல் பிரம்மாண்டமான பிளாஸ்டிக் ஷீட்டுகளை பரத்தி அதன் மேல் கோணி போன்றவைகளை பரப்பி, பின் நல்ல கம்பளி போர்வைகளை போர்த்தி வைக்கிறார்கள்.
கூரையாக பெரிய பெரிய பிளாஸ்டிக் ஷீட்களை கித்தான் (கேன்வாஸ்) துணிகளின் மேல் போட்டு நாலு அல்லது ஆறு கம்பிகளையோ அல்லது கட்டைகளையோ ஆதாரமாக கொண்டு ஒரு கூடாரம் அமைத்து விடுகிறார்கள்.
முக்கோண வடிவத்திலுள்ள கூடாரத்தின் நுழைவாயிலின் பாதியில் சிறிய கடை பரப்பி பூஜைப்பொருட்களை விற்கிறார்கள். பூஜைப் பொருட்களை வாங்கினால் உங்கள் உடைமைகளை கூடாரத்தின் உள்ளே வைத்து விட்டு தரிசனத்திற்கு சென்று வரலாம்.
ஒவ்வொரு கடைக்கும் இலக்கமிட்டிருக்கிறார்கள். இந்த தொடர் கடைகள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அங்கிருந்து குகையின் அடிவாரம் வரை நீண்டு இருக்கிறது. சில கூடாரங்களில் லங்கர்கள் (இலவச உணவு விடுதிகள்) இயங்கிக் கொண்டிருக்கின்றன. குகைக்கு மிக அருகே இருந்த லங்கரில் தோசை கிடைத்தது.
எல்லாம் சிவனருள்.
(அனுபவங்கள் தொடரும்)
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?