இறை அடியார்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
சுவாமி சிவானந்தா(ரிஷிகேஷ்)ஜியின் ''இமயம் முதல் இலங்கை வரை'' என்னும் அற்புத நூலை படிக்கும் வாய்ப்பு பெற்று இருக்கிறேன்.
9.9.1950 முதல் 8.11.1950 வரை சுவாமி சிவானந்தர் ரிஷிகேஷில் துவங்கி கொழும்பு வரை யாத்திரை செய்த போது நிகழ்த்திய ஆன்மீகப் பேருரைகள் இந்நூல் வடிவில் அழகு தமிழில் இராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெளியிட்டிருக்கிறது.
எத்துணை முறை படித்தாலும் திகட்டாத ஆன்மீகப் பேரின்பத் தேன் சுவையை சுவாமி சிவானந்தர் இந்த உரைகளில் நமக்காக அளித்திருக்கிறார். அது இறைவனின் கருணை என்று அவரே கூறுகிறார்.
அறுபது ஆண்டுகள் கடந்த பின்னர் நாம் படிக்கும் போது இன்றைய காலகட்டத்தில் கூட இவை நமக்கு இன்றியமையாத ஆன்மீகக் கருத்துக்களை போதிக்கின்றன. இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கும் இந்த போதனைகள் நிலைபெறும் தன்மை வாய்ந்தன என்பதை கருத்தூன்றிப் படிக்கும் போது தெள்ளிதின் உணரலாம்.
இந்நூலில் இருந்து ஒரு சில பகுதிகளை இங்கே பதிவிட திருவருள் கூட்டி இருக்கிறது.
இதனைப் படிக்கும் இறையடியார்கள் சுவாமி சிவானந்தரின் பரமானந்தத் தேன்துளிகளை சுவைத்து இன்புறுவார்கள் என்று நம்புகிறேன்.
அனைத்து இறையடியார்களின் திருவடி பணிந்து வணங்குகிறேன்.
நூலின் துவக்கத்தில் வெளியான சுவாமி சிவானந்தரின் கவிதையை வெளியிட்டு அவர்தம் ஆசியுடன் இந்த இழையைத் துவங்குகிறேன்.
இமய ஜோதி சுவாமி சிவானந்த சரஸ்வதி.
உள்ளிருந் தொருகுரல்
உரைத்தது கேட்டேன் !
''தெள்ளிய அமுதைத்
தேனைத் தருவேன்.
அள்ளியே அதனை
அனைவர்க்கு மளிப்பாய்.
உள்ளத்தில் உறுதிஞானம்
உனக்கு நான் தருவேன் ! "
அந்த ஆணையை
அகத்தினில் கொண்டு
இந்த நாட்டிடை
எங்கும் சென்று
நொந்த மாந்தர்
நொடித்தொர்க் கெல்லாம்
தந்தேன் அமுதை,
தன்யன் ஆனேன்.
-சிவானந்தர்.
(பரமானந்தம் தொடர்ந்து பிரவகிக்கும்)
இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஈசன் திருவருளை போற்றிப் பணிகிறேன்.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?