Friday, December 10, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - 10. தீராத விளையாட்டுக் குதிரை.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 


தொடர்கிறது....
பாகம் இரண்டு.
பகுதி 10:  தீராத விளையாட்டுக் குதிரை.  

குதிரை வாடகை பேசியதும் நாங்கள் நால்வரும் ஒவ்வொருவராக குதிரையில் ஏறிக் கொண்டோம்.

குதிரைகள் என்று இவற்றை சொல்ல முடியாது. கோவேறு கழுதைகள் அல்லது மட்டக் குதிரைகள் என்று அழைக்கலாம். குதிரைக்கு கடிவாளம் போட்டிருக்கிறார்கள். ஆனால் கண்களுக்கு போடும் கவசம் இல்லை. திரு.பாண்டியனும், திருமதி.பாண்டியனும் முதலில் குதிரைகளை அமர்த்திக் கொண்டார்கள். அடுத்து நண்பர் கோவிந்த் மனோகர் குதிரையில் ஏறி அமர்ந்ததும், நான் குதிரைக்காரரின் உதவியுடன் ஏறி குதிரையின் முதுகில் அமர்ந்தேன்.

குதிரையின் முதுகில் போட்டிருந்த இருக்கை (இதன் பெயர் தான் சேணமா?) ஒன்றும்  அவ்வளவு சவுகரியமாக இல்லை. குதிரையின் முதுகில் பிணைக்கப்பட்டிருந்த இருக்கை மிகக் கடினமாக இருந்தது. நிச்சயமாக இந்த பயணம் அவ்வளவு சு(மு)கமாக அமையப் போவதில்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. முன்னே பாண்டியன் தம்பதியர் புறப்பட்ட குதிரைகள் சென்று கொண்டிருக்க. அதன் பின்னர் கோவிந்த் மனோஹரின் குதிரை சென்று கொண்டிருந்தது.

நாங்கள் பயணம் துவங்கிய போது காலை மூன்றரை மணி இருக்கும். அது ஒரு அரையிருட்டு வேளை. சாலையில் விளக்கொளி இல்லை. மலையடிவாரத்தில் மலை ஏறும் முன்னர் ஒரு பரிசோதனை கட்டம் இருக்கிறதாம். அது வரை தரைச் சாலை தான். அந்தத் தரைச் சாலையும் குண்டும் குழியுமாகத் தான் இருந்தது. கொஞ்சம் தூரம் போனதும் கோவிந்த் மனோஹரின் குதிரை பின் தங்கியதைக் கண்டேன். அவரும் என்னை நிற்கச் சொன்னார். குதிரையில் இருந்து இறங்கி அவருடன் சென்று என்ன சேதி என்று விசாரித்தேன்.

அவர் உயரத்துக்கு குதிரையின் உயரம் பொருந்தவில்லை. குதிரை மிகவும் குள்ளமாக இருக்கிறது, அதனால் கால்களை வைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது என்றார். நான் அமர்ந்திருந்த குதிரை அந்தக் குதிரையை விட கொஞ்சம் உயரமாக இருந்ததால் குதிரையை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் சராசரி உயரம் உள்ளவன் என்ற காரணத்தினால் சரி என்று நாங்கள் குதிரையை மாற்றிக் கொண்டோம். நான் குதிரை மீது ஏறி அமர்ந்தவுடன் அது நடக்க ஆரம்பித்தது. இரு கைகளாலும் இருக்கையை பிடித்துக் கொள்ளவேண்டும். இருக்கையின் பிடிப்பு சரியாக அமையவில்லை. இரு கால்களையும் குதிரையின் கீழே தொங்கிக் கொண்டிருக்கிற வளையங்களில் மாட்டிக் கொண்டேன். எங்கோ சம்பந்தம் இல்லாமல் அமர்ந்து இருப்பது போல ஒரு உணர்வு என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

கோவிந்த மனோகர் என்னை முந்தி சென்று கொண்டிருந்தார். மேலும் இரண்டு கி.மீ. சென்றதும் நான் முன்னர் குறிப்பிட்ட சோதனை சாலை வந்தது. இங்கு உடமைகள், உடல் போன்ற பரிசோதனைகளை எதுவும் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களுக்கு  செய்யவில்லை. மாறாக அமர்நாத் யாத்திரை வாரியத்தினர் வழங்கிய யாத்திரை அனுமதி கடிதம் (புகைப்படம் ஒட்டியது) எங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு மேலே செல்ல அனுமதித்தார்கள்.

மலையை ஒட்டிச் சென்ற ஒரு பாதை மலைமீது ஏறத் துவங்கியது.  அதிகாலை நான்கரை மணிக்கு நாங்கள் மலை மீது ஏற ஆரம்பித்து விட்டோம். ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலை, மற்றொரு பக்கம் ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் ஒரு ஆறுஓடிக்கொண்டிருக்கிறது.  
அதிகாலை விடியலில் இருட்டு விலகாத அந்த அரைகுறை வெளிச்சத்தில் வெள்ளை வெளேரென்று பனிப் பாளங்கள் தென்பட்டன. ஐநூறு அடி உயரம் வந்திருப்போம் என்று நினைக்கிறேன். முன்னும் பின்னும் யாத்திரிகள் நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் யாத்திரை செய்ய அனுமதி கிடைக்காமல் முகாமில் காத்திருந்த யாத்திரிகள் எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தார்கள். எத்தனை விதமான மக்கள்? எல்லா வயதிலும் ஆண், பெண்கள், குழந்தைகள் என்று நடந்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே குதிரைகள் குதிரைக்காரர்களால் நிறுத்தப்பட்டு அவற்றிற்கு ஆசுவாசம் அளிக்கப்படுகிறது.

நான் ஏறி அமர்ந்த குதிரை அதுவரை ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது என்று எண்ணியது தான் தாமதம், குதிரை முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. எல்லாக் குதிரைகளும் நிறுத்தப்படும் சமயத்தில் நான் பயணித்த குதிரை மட்டும் வந்த பாதை வழியே திரும்பிச் செல்ல யத்தனித்தது. குதிரைக்காரர் சொல்வதை அது கேட்பதாக இல்லை. அதற்கு என்ன கஷ்டமோ, அது மேலும் பயணத்தைத் தொடர ஆர்வம் இன்றி முகாமுக்குத் திரும்புவதிலேயே குறியாக இருந்தது. குறுகிய பாதையில் அந்த குதிரை மட்டும் திரும்ப யத்தனித்ததால் பின்னே வரும் குதிரைகள், பல்லக்குத் தூக்கிகள், மற்றும் நடந்து வருபவர்களுக்கு இடைஞ்சலாக அந்தக் குதிரையின் நடவடிக்கைகள் இருந்தது.

இந்த இடையூறினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஹிந்தியிலும், காஷ்மீரியிலும் வசவு மாரி பொழியத் தொடங்கியது. ஏற்கனவே குதிரைப் பயணம் பழக்கமில்லாத எனக்கு இந்த நிலைமை அறத்துன்பமாக ஆகிவிட்டது. ஹிந்தி, காஷ்மீரி தெரியாத நிலையில் நான் குதிரைக்காரரிடம் எளிய ஆங்கிலத்தில் கேட்ட விஷயங்கள் அவருக்கு புரியவில்லை.  யாத்திரிகள் கூட்டம் கூட்டமாய் பயணித்த வேளையில் இப்படி ஒரு குதிரையோடு எனது புனித யாத்திரை தொடங்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சரி நம்முடன் வந்தவர்களை துணைக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் என்னுடன் வந்த மூவரையும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை காணவில்லை. கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒன்றாக புறப்பட்டு ஒன்றாக பயணிப்பது சாத்தியப் படவில்லை. மேலும் சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல நான் சண்டிக் குதிரையின் மேல் செய்த பயணம் கால தாமதத்தை விளைவிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அவர்கள் முந்திச் சென்று விட்டார்கள்.

மட்டமான குதிரையை விவரம் தெரியாமல் மனோகர் என் தலையில் கட்டி விட்டாரோ என்று அவர் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த குதிரையின் தொடர் சண்டித்தனம் எனக்கு வெறுப்பை உண்டாக்குவதாக அமைய, குதிரைக்காரரிடம் சொல்லிவிட்டு குதிரையில் இருந்து கீழே இறங்கிவிட்டேன். பின்னர் கோபத்துடன் வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனது திடீர் செய்கையால் அதிர்ச்சியுற்ற குதிரைக்காரரால் குதிரையை விட்டுவிட்டு என்னைப் பின்தொடர முடியாமல் போனது. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

எனக்கு முன்னே சென்ற பாண்டியன் தம்பதியினரையும், கோவிந்த் மனோஹரையும் தேட ஆரம்பித்தேன். எல்லோருமே மூக்கு மூடிகள், முகம் மறைக்கும் குல்லாக்கள் அணிந்து பயணித்ததால் பின்புறமாக குதிரையில் அமர்ந்து செல்பவரை எப்படி அடையாளம் காண்பது?

மேலும் குறுகிய பாதையில் திரும்பி, திரும்பி பார்த்து நண்பரைத் தேடுவதும் கடினமாக இருந்தது. கோலை ஊன்றி கவனமாக நடந்து கொண்டே சென்ற நான் ஒரு கணத்தில் கோவிந்த் மனோஹரைக் கண்டேன். நான் நடந்து வந்து அவரது குதிரையை முந்திச் செல்வதைக் கண்ட அவரும் அதிர்ந்து போனார்.

இரண்டு வளைவுகளை தாண்டி மேலே ஒரு ஓய்வு எடுக்கும் இடம் தெரிந்தது. எங்கள் பயணத்தின் முதல் தேநீர் விடுதி அது. நடந்து செல்வோர், குதிரைக்காரர்கள், பல்லக்குத் தூக்கிகள் போன்றோர் அங்கே நின்று டீ சாப்பிடுவார்கள். குதிரைகள் சற்று நேரம் ஓய்வெடுக்கும். மேலும் யாத்திரிகளும் அமர்ந்து டீ சாப்பிடலாம். நான் மனோஹரிடம், நான் மேலே இருக்குமிடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன். அங்கே வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே சென்று காத்திருந்தேன். மலைப்பாறைகளின் இடுக்கில் ஒரு சிறிய தேநீர்க்கடை இருந்தது. ஏற்கனவே சென்றிருந்த பாண்டியன் தம்பதிகள் அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். திருமதி பாண்டியனுக்கு குளிர் அதிகமாகி நடுக்கம் அதிகரித்து விட்டது.

நண்பர் கோவிந்த் மனோஹரும் குதிரையில் இருந்து இறங்கி நடந்து எங்களை நோக்கி வந்தார். குளிர் அதிகமாக இருந்ததால் அவருக்கும் நடுக்கம் அதிகமாக இருந்தது.

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே வந்தார். முகம் சிவந்திருந்தது. அவரால் முடியவில்லை. அவருக்கு நான் அமர்ந்திருந்த ஒரு சிறிய மேடையில் அமர இடம் தந்தேன். ஆசுவாசப் படுத்திக் கொண்ட அவர் ஏன் நடந்து வருகிறீர்கள் குதிரை எங்கே என்றார் அப்பாவியாக.

எனக்கு கோபமான கோபம் வந்தது. அது குதிரை இல்லை கழுதை என்றேன். நைசா கழுதையை என் தலையில் கட்டிவிட்டு நீங்கள் பாட்டு போய்விட்டால் எப்படி? என்று கேட்டு விட்டு எனது நிலைமையை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.

இதைக் கேட்ட மனோகர், ''எனக்கு எப்படி இந்த பிரச்சினை எல்லாம் தெரியும்? நான் வந்த குதிரை உயரம் கம்மி என்பதால் உங்கள் குதிரைக்கு மாறிக் கொண்டேன்'' என்று சமாதானம் சொன்னார், மூச்சிரைத்துக் கொண்டே. அவரது நிலைமை கண்டதும் எனக்கு பரிதாபமாகப் போய் விட்டது.

இதற்கிடையே குதிரைக்காரரின் அடையாள அட்டையை நான் வைத்திருந்ததால் பதறி போன எனது குதிரைக்காரர் அலறி அடித்துக் கொண்டு என்னைத் தேடி வந்தார். அடையாள அட்டை குதிரைக்காரர்களின் வாழ்வாதாரம். எனவே மற்ற குதிரைக்காரர்கள் அவருக்கு பரிந்து பேச எங்களிடம் வந்தார்கள். நான் தெளிவாக சொல்லிவிட்டேன். இப்போது நான் வரும் குதிரையில் தொடர்ந்து பயணம் செய்ய என்னால் முடியாது. வேறு ஒரு நல்ல குதிரையை ஏற்பாடு செய்து தந்தால் தான் அடையாள அட்டையை தருவேன். இல்லாவிட்டால் அமர்நாத் புனித யாத்திரை நிர்வாகத்திடம் புகார் செய்வேன் என்றேன்.

நண்பர் பாண்டியன் எனது சார்பில் குதிரைக்காரரிடம் எனது தரப்பு வாதத்தை இந்தியில் விளக்கினார்.  நல்ல வெளியாக எங்களது நான்கு குதிரைக்காரர்களில் ஒருவருக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. அவர் என் தரப்பு வாதத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து குதிரைக்காரரிடம் பேசினார். பதினைந்து நிமிடங்கள் காரசாரமாக காஷ்மீரியில் அவர்களுக்குள் விவாதித்த பின்னர், இப்போதைக்கு சவாரி இல்லாத குதிரை எதுவும் கிடைக்காது என்பதால் நான் வந்த அதே (சண்டிக்)குதிரையில் நான் பயணித்தாக வேண்டும் என்றும், மீண்டும் குதிரை சண்டித்தனம் செய்தால் வேறு குதிரை (வழியில் ஒரு வேளை கிடைத்தால்) ஏற்பாடு செய்து தருவதாகவும், எனது குதிரைக்காரர் சொன்னார்.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட நான் (வேறு வழி?) எந்தக் காரணத்தைக் கொண்டும் குகைக்குச் செல்லுமுன்பாக அடையாள அட்டையைத் தரமாட்டேன் என்று உறுதிபடக் கூறிவிட்டேன்.

ஒருவழியாக சுமுகமாகி எல்லோரும் டீ சாப்பிட்ட பின்னர், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. அதுவரை ஆறு கி.மீ கடந்திருப்போம் என்று நினைக்கிறேன். குதிரைகளை வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவது சிவனுக்கு கைவந்த கலை ஆயிற்றே. உருகி உருகி திருவாசகம் பாடிய மணிவாசகரை குதிரைகளை கொண்டே சோதித்த சிவனுக்கு நான் ஒரு சுண்டைக்காய் அல்லவா? எனது ஆணவ மலம் அகல ஒருவேளை சிவன் குதிரையைக் கொண்டு இந்த சோதனையை செய்திருப்பாரோ என்று எண்ணினேன். சிவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டேன். ஆனால் சிவன் அன்பு மிகுந்தவர் என்பது போகப் போக புலனாயிற்று. எனது குதிரை ஒழுங்காக நடந்து செல்ல ஆரம்பித்து விட்டது.

விடாக் கண்டன், கொடாக் கண்டன் கதையாக வேறு வழியில்லாமல் குதிரையும் நானும் ஒத்துப் போனோம். எப்படியோ பனி படர்ந்த இமய மலை மேல் மலை போல வந்த சோதனை ஆதவனைக் கண்ட பனி போல மறைந்து போனது.

ஆனாலும் இந்த சந்தடியில் எனக்கு பயணத்தின் சந்தோஷம் ஒரு மாற்று குறைந்து போனது என்னவோ உண்மைதான்.

எங்களைச் சுமந்து சென்ற குதிரை பக்தரை மாற்றுக் குதிரையா, இல்லை பத்தரை மாற்றுக் குதிரையா? 

ஓம் நமசிவாய.

(தொடரும்)

Wednesday, December 8, 2010

பாகம் 2: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 8. வாடகைக்கு குதிரை பேசப் போனோம்.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 

நாள்: 11, ஜூலை, 2010 (அதிகாலை)

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.


8. வாடகைக்கு குதிரை பேசப் போனோம்.
நான் கோவிந்த் மனோஹருடன் புறப்பட்ட போது  எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றொரு நண்பரான பாண்டியனும் அவரது துணைவியாரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

குதிரைகளை வாடகைக்கு பேச புறப்பட்டோம்.  நாங்கள் முகாமை விட்டு வெளியே வரும் போது நேரம் அதிகாலை மூன்று மணி. பொழுது புலராமல் இருட்டு இன்னும் கவ்விக் கொண்டிருக்க பால்டால் முகாம் சுறுப்பாக இயங்கத் தொடங்கி இருந்தது.

குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். அமர்நாத் நிர்வாகம் குதிரை பயணத்துக்கான கட்டணங்களை நிர்ணயித்து இருந்தாலும், குதிரைக்காரர்கள் கட்டணத்தை உயர்த்திக் கேட்கிறார்கள்.  நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட உயர்த்திக் கேட்டால் அவர்களிடம் நாம் தான் சாமர்த்தியமாக பேசி கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். 

பேரம் படிந்ததும் குதிரையில் ஏறிக் கொள்ள நமக்கு உதவி செய்கிறார்கள். பேரம் படிந்த பின்னர் மேலே போட்டுக் கொடுக்கச் சொல்லி அவர்கள் நம்பூர் ஆட்டோக்காரகளைப் போல் தொந்தரவே செய்வதில்லை. வாடகை பேசி முடிந்ததும் குதிரையில் நீங்கள் ஏறிக்கொண்ட பின்னர் அவர்கள் குதிரையை வழிநடத்திச் செல்கிறார்கள்.

பால்டாலில் இருந்து மேலே குகைவரை செல்ல ஒரு குதிரைக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய் என்று பேசி முடித்தோம். குதிரைக்காரர்களின் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டோம். மேலே போனதும் பணத்தை கொடுக்கும் போது அடையாள அட்டையை அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக பேசிக் கொண்டோம். 

அடையாள அட்டையை ஒவ்வொரு யாத்திரியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய காரணம் இருக்கிறது.

ஏனெனில் குதிரைகளை அமர்த்திக் கொள்ளும்போது யாத்திரிகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் சிலவற்றைக் கீழே காண்போம்:
1. வாடகையை சரியாக, தெளிவாக, ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு பேசிக் கொள்ளுங்கள். ஹிந்தி தெரிந்திருத்தல் அவசியம். எனினும் உடைந்த ஆங்கிலத்தில் குதிரைக்காரர்கள் உங்களுடன் பேசுவார்கள். அதை வைத்துக் கொண்டு வாடகை பேசி விடலாம். நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மிக நன்றாக புரிகிறது.

2. உங்களுடைய குதிரைக்காரரின் அடையாள அட்டையை வாங்கி உங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் திருப்திகரமாக முடிந்த பின்னர் பணம் தந்து அவர் வாங்கிக் கொண்டு எல்லாம் திருப்தியாக நிறைவானதும், அவரது அடையாள அட்டையை அவரிடம் திரும்பக் கொடுங்கள்.

3. போய்த் திரும்பி வர வாடகை பேசாதீர்கள். இவர்கள் எல்லோருடைய பெயரும், முகமும் குழப்பும் வகையும் ஒரே மாதிரியாக இருக்கும். அவர்கள் உங்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் எனினும், இங்கிருந்து மேலே செல்ல மட்டும் பேசிக் கொள்ளுங்கள். மேலிருந்து கீழே திரும்பி வரும்போது குதிரை தேவை எனில் குகை அருகிலேயே குதிரைக்காரர்கள் பலர் இருப்பார்கள். அவர்களிடம் கட்டணம் பேசி குதிரைகளை அமர்த்திக் கொள்ளலாம்.  கால தாமதமாகி ஒரு வேளை நீங்கள் கீழே இறங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் குதிரைக்காரர்களைக் கண்டு பிடித்து பணத்தை திரும்ப வாங்குவதில் சிரமங்கள் உள்ளன.


4.  பேசிய முழு பணத்தையும் குறிப்பிட்ட இடத்தைச் சேருவதற்கு முன்னதாக எக்காரணத்தைக் கொண்டும் கொடுத்து விடாதீர்கள். அதே போல உங்கள் பைகளை சுமந்து வர உதவியாளரை வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் குதிரைக் காரரிடமும் உங்கள் உடமைகளைக் கொடுக்காதீர்கள். யாத்திரை அடையாள அனுமதிச் சீட்டை பத்திரமாக உங்களிடமே வைத்திருங்கள். குதிரைக்காராரிடம் ஒருபோதும் தரவேண்டாம்.


5. சில சமயங்களில் குதிரை புறப்பட்ட பிறகு கொஞ்ச தூரம் சென்றதும் சிறுவர்கள் யாராவது உங்களுக்கு உதவியாளராக (pithoos)வருவதாகச் சொன்னால் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாதீர்கள். குதிரைக்குப் பின் சும்மா நடந்து வருவதற்கு உங்களிடம் தனியாகப் பணம் கேட்டு தகராறு செய்வார்கள். பிரச்சினை ஏதும் பின்னர் வந்தால் குதிரைக்காரர்கள் இவர்கள் விஷயத்தில் உங்களுக்கு எந்த உதவிக்கும் வரமாட்டார்கள்.

6. இடைவழிகளில் ஓய்வுக்கு நிறுத்துகையில், குதிரைக்காரரின் டீ செலவு உங்களுடையது. டீ ஒன்றுக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். டீ அப்படி ஒன்றும் ரசித்து, ருசித்துச் சாப்பிடும்படியாக இருக்காது. ஆனால் அடிக்கிற குளிரும், குதிரையில் உட்கார்ந்து செல்வதால் ஏற்படும் உடல் வலியும் வேறு வழியில்லாமல் அந்தத் டீயைக் குடிக்க வைத்து விடும்.

7. நீங்களாக மனமுவந்து தரும் டிப்ஸ்களை அவர்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். குதிரைக்குத் தரும் வாடகை மிக அதிகம் என்று எண்ணுபவர் கூட மலையேறிச் செல்லும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளையும்,நம்மை அழைத்துச் செல்ல குதிரையும், குதிரைக்காரரும் படும்பாடுகளையும் பார்த்தபின் தாராளமாக டிப்ஸ் தந்து விடுவார்.இந்தக் குறிப்புகள் பல்லக்குத் தூக்கிகளுக்கும் பொருந்தும்.


9. குதிரை அமைவதெல்லாம் .. 

எனக்கு குதிரை சவாரி செய்து பழக்கமில்லை. சிறிய வயதில் சென்னை பீச்சில் கூட குதிரை மீது ஏறி விளையாட்டுச் சவாரி (joyride) கூட சென்றதில்லை. எனினும் சிரமம் பார்க்காமல் எப்படியாவது குதிரையில் போய் அமரநாதனைத் தரிசனம் செய்துவிட்டு வந்து விடுவோம் என்று எண்ணியிருந்த எனக்கு ஒரு சோதனை கொஞ்ச நேரத்தில் ஒரு குதிரை வடிவில் வந்து சேர்ந்தது.

(தொடரும்)

Monday, December 6, 2010

தாய்லாந்தில் தொடரும் இந்திய பாரம்பரியம்

83-வது பிறந்தநாள் ‌கொண்டாடினார் உலகின் நீண்ட கால மன்னர் .

தாய்லாந்து அரசர் பூமிபால் அதுல்யதேஜ்  தனது 83-வது பிறந்த நாளை மருத்துவமனையில் இருந்தபடியே எளிமையாகக் கொண்டாடினார்.  பூமிபால் தற்போது நுரையீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   60 ஆண்டுக்கு மேலாக அரச பதவியில் இருந்து வரும் பூமிபால், உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியில் இருக்கும் பெருமையைப் பெற்றவராவார். இந்நிலையில் அவரது 83-வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தனது பிறந்த நாளை அங்கிருந்தபடியே எளிமையாகக் கொண்டாடினார். அவர் விடுத்த பிறந்த நாள் செய்தியில், "கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் அவ்வப்போது வன்முறையும், அமைதியற்ற சூழலும் ஏற்படுகிறது. மக்கள் ஒற்றுமையுடன் இருந்து  நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். நாட்டில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்' என்று கூறியுள்ளார். மருத்துவமனை முன் கூடிய பொதுமக்கள் பலர் பூமிபாலுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

தாய்லாந்தின் இந்திய பாரம்பரியம்.
தாய்லாந்தின் அரசர்கள் ராமா என்று அழைக்கப் படுகிறார்கள். தற்போதைய அரசரின் பெயர் பூமிபால் அதுல்ய தேஜ் ராமா IX. இவரும், இளவரசர் மகாசக்ரியும் சமஸ்கிருதத்தில் கவிதை புனையும் திறமை கைவரப் பெற்றவர்கள்.

ராமகீர்த்தி, தாய்லாந்தின் ராமாயணம் பதினேழாம் நூற்றாண்டில் உருவானது. இது எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய இராமாயண சுவற்றோவியங்களை பாங்காக்கில் உள்ள அரண்மனையில் உள்ள எமெரால்ட் புத்தர் கோவிலில் காணலாம்.

சமீபகாலமாக ஒலிம்பிக்ஸில் அறிமுகமாகியுள்ள தாய் பாக்சிங் (Thai Boxing)என்று அழைக்கப் படும் மல்யுத்தம் ஹனுமான்,  அங்கதன், வாலி, சுக்ரீவன் ஆகியோரின் மல்யுத்தத் திறமைகளின் அடிப்படியில் அமைந்தது என்று இப்போதும் தாய்லாந்து மக்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசிய, மலேஷியா போன்ற நாடுகளின் தெருக்களின் பெயர்கள் சமஸ்க்ரிதத்தினால் ஆனவை. எல்லா ஆறுகளும் Mae என்று பெயர்த் துவக்கத்தில் கொண்டுள்ளன. மே என்பது மா (அன்னை) என்று பொருள்படும். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் ஓடும் நதி மே சாவ்ப்றாயா என்று அழைக்கப்படுகிறது. இமாலயமலையில் உற்பத்தி ஆகி பர்மா, சீனா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் பாயும் நதியின் பெயர் மா கங்கா ஆகும். இந்த பகுதிகளை ஆண்ட பிரஞ்சுகாரர்கள் இதன் பெயரை மே காங் என்று உச்சரித்து இப்போது மே காங் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த எழுபது ஆண்டுகளில் தாய்லாந்து இருபது ராணுவப் புரட்சிகள், இருபது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டில் மரண தண்டனை இல்லை. ரத்தக் களரிகளோ, பழி வாங்கும் போக்கோ இல்லை.

இந்த நல்ல பண்பாடுகள் அன்னை இந்தியாவின் கொடை என்கிறார்கள் தாய் மக்கள் நன்றிப் பெருக்குடன். அவர்கள் தாய்மொழியில் தாய்லாந்தை சயாம் தேஷ் என்கிறார்கள். இதற்கு ஸ்ரீ விஷ்ணுவின் (ஷ்யாமா) பூமி என்று பொருளாம்.

இதற்காகவே நாம் பாரதத்தில்  பிறந்திருப்பதற்காக  பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

Sunday, December 5, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். அமர்நாத் புனித யாத்திரை. 7. பால்டால் முகாமுக்கு வெளியே

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

 முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  
(பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:


பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 
பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

யாத்திரை தொடர்கிறது..... 

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.
(திருமூலரின் திருமந்திரம்)

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 

நாள்: 11, ஜூலை, 2010 (அதிகாலை)

அதிகாலை ஒன்றரை மணி இருக்கும் போது, பல்லக்குத் தூக்கிகள் முகாமுக்குள் வந்து முன்னிரவில் வரச் சொல்லிய யாத்திரிகளின் டெண்ட்டுகளுக்கு வெளியில் நின்று கொண்டு எல்லோரையும் துயில் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த சப்தம் கேட்டதும், உறங்கிக் கொண்டிருந்த யாத்திரிகள் அனைவரும் விழித்துக் கொள்ள, முகாமில் சுறுசுறுப்பும், பரபரப்பும் அனைவரையும் தொற்றிக் கொண்டது. 

மொத்த பால்டால் முகாமுமே விழித்து கொண்ட சூழ்நிலையில் அதிகாலை இரண்டு மணியளவில் முகாமில் இருந்து நாங்கள் வெளியே வந்தோம். குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. இந்த சமயம் அங்கு கோடைக் காலமாம்.  எனினும் நாங்கள் மட்டும் எஸ்கிமோக்கள் போல எங்கள் உடலை முழுமையாக மறைத்திருக்கும்படி உடைகளை அணிந்திருக்க, வடநாட்டுக்காரர்களும், காஷ்மீரிகளும் மிகவும் காசுவலாக உடை அணிந்திருந்தார்கள்.  பாரதத்தின் வடக்குப் பகுதிகளில் தட்ப வெப்ப நிலைமைகள் மிகவும் எக்ஸ்ட்ரீமாக இருக்கும். எனவே அவர்களுக்கு இந்த கோடைக்காலக் குளிர் தாங்கக் கூடியதாக இருந்தது.
 
பல்லக்கில் ஏறி புறப்படுபவர்களுக்கு பயணம் இனிமையாக அமைய வாழ்த்து சொல்லி விடை தந்தோம். கோவிந்த் மனோஹரின் துணைவியாரும் மற்ற பெண்களும் பல்லக்கில் ஏறி புறப்பட்ட பிறகு, மனோகர் என்னிடம், ''வாங்க நாமும் அமர்நாத் குகைக்குப் போயிட்டு வந்துடலாம். இங்கேயிருந்து குதிரையில் போயிடலாம். அங்கே போன பிறகு திரும்பி நடந்து வரலாமா அல்லது குதிரையா என்று பாத்துக்கலாம்'' என்றார்.
 
எனக்கு நேற்றைய இரவு சரியான உறக்கம் இல்லாததினால், இந்தப் பயணத்தை தவிர்த்து விடலாமா ? என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் ஏதோ ஒரு உந்து சக்தியால் நான் ஆட்கொள்ளப்பட்டது போல கோவிந்த் மனோஹருடன் புறப்பட்டு விட்டேன். 

நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இருமுறை முகவாதத்தினால் (Bell's Palsi) பாதிக்கப்பட்டவன் என்பதால் குளிர் காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக முகத்தையும், கழுத்துப் பகுதிகள், மார்பு, காதுகள், கை, கால்களை உல்லன் மப்ளர், கையுறைகள், சாக்ஸ், ஜெர்கின்ஸ் என்று கிடைத்ததைஎல்லாம் தேடி எடுத்து பாதுகாப்பாக மூடி வைத்துக் கொண்டேன். யாத்திரை செல்லும் அனைவரும் முதுகுப்புறம் தயாராக கொண்டு வந்திருந்த பையை மாட்டிக் கொண்டோம். (அந்தப் பையில் என்னென்ன எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை இந்தத் தொடரின் ஆரம்ப பதிவுகளில் விரிவாக சொல்லியிருக்கிறேன். மீண்டும் படிக்க விரும்புபவர்கள் இங்கிருந்தே பகுதி 2 & 3 என்கிற இணைப்பிற்குச் செல்லலாம்).
 
பல்லக்குத் தூக்கிகளைப் பின் தொடர்ந்து நடைப்பயணமாக செல்பவர்கள் கையில் குச்சிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். எனது அலுவலக நண்பர் சுதர்ஷன் பிரசாத், ஒரு கையால் மட்டுமே செயல்படுபவர்.(மாற்றுத் திறனாளி) மற்றொரு கை சூம்பி இருக்கும். அவரது நிலைமை இப்படி இருப்பினும் மலை ஏறும் பயணங்களை (ட்ரெக்கிங்) அடிக்கடி ஆர்வத்துடன் மேற்கொள்பவர். சுதர்ஷன் பிரசாத் அவரது சகோதரர் சூரஜ் பிரசாத், மற்றும் அவரது சகோதரி ரூபாவுடன் நடைப் பயணம் மேற்கொண்டார்.
 

 அமர்நாத் குகைக்கு புறப்படுகிறார்கள். 
சுதர்ஷன் பிரசாத் (வலது) தன சகோதரர் சூரஜ் பிரசாத்துடன்.

 சூரஜ் பிரசாத் முகாமிற்கு வெளியே மற்றவர்களுக்காக காத்திருக்கிறார்.. 

அதிகாலை மணி இரண்டு:- சகோதரி ரூபாவுடன் சுதர்ஷன் பிரசாத் - 
அமர்நாத் குகைக்கு நடைப் பயணம் துவங்குகிறது.  
இந்த பயணத்தின் போது கையில் குச்சி இல்லாமல் மலையேறுவது மிகவும் சிரமம்.ஒருகையில் குச்சியை ஊன்றிக் கொண்டு ஏறும் போது மற்றொரு கையால் சில சமயங்களில் பாதையில் எதிர்ப்படுபவர்களை விலக்கிச் செல்ல வேண்டிவரும். பாறைகளை கையில் பற்றி ஏற வேண்டி வரும். இரு கைகள் உள்ளவர்களுக்கே இந்தமாதிரி மலையேற்றம் செய்வது கடினமாக இருக்கும். ஆனால் சுதர்ஷன் பிரசாத் இவற்றை பற்றியெல்லாம் யோசனை செய்யவே மாட்டார். அவரைக் கண்டதும் எனது மன உறுதி அதிகமானது.

மலைப்பாதை, குண்டும் குழியுமாக, செங்குத்தாக, ஏற்றஇறக்கத்துடனும், குறுகலாகவும் இருக்கும். அந்த பாதை வழியாகவே மேல் இருந்து வருபவர்களுக்கும் வழி விட்டு நடக்க வேண்டும். குதிரைகள் மீது வருபவர்களுக்கும், பல்லக்கில் வருபவர்களுக்கும், கீழிருந்தும், மேலிருந்தும் வரப் போக வழிவிட வேண்டும். கவனமாக நடக்கவில்லை என்றால் பேராபத்தில் முடியும். பனிப் பாறைகளில் நடக்க வேண்டி இருக்கும் போது வழுக்கி விடாமல் இருக்க குச்சிகள் பயனுள்ளதாக இருக்கும். 

பத்து ரூபாய்க்கு குச்சிகளை விற்கிறார்கள். கீழே கிரிக்கெட் ஸ்டம்பு போல கூர்மையான முனையில் இரும்புத் தகட்டை அடித்திருக்கிறார்கள். முகாமுக்கு திரும்புகையில் அந்தக் குச்சியை தந்து ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.

(தொடரும்)