அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்...
பகுதி நான்கு.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்…
காஷ்மீரமும், ஜம்முவும் இப்போதைய ஆபத்தான சூழ்நிலையிலும் பல லட்சக் கணக்கான இன்பச்சுற்றுலா பயணிகளையும், ஆன்மீக அன்பர்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அந்த பூமிக்கு ஏதோ ஒரு மகிமை இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
வழி நெடுகிலும் எப்போதும் நடமாடிக் கொண்டிருக்கும் ராணுவம், அடைந்து கிடக்கும் வீடுகள், கடைகள், அடிக்கொரு தடவை பஸ்களை நிறுத்தி ராணுவத்தினர் நடத்தும் சோதனைகள் என்று ஒரு இறுக்கமான சூழ்நிலையை ஜம்மு தவி ரயில் நிலைய வாசலில் இருந்தே காணமுடிகிறது.
(நமது ராணுவம்: எங்கும் விழிப்புடன்-எப்போதும். படம் உதவி:- மகேஷ் கொண்டல்)
ஆனாலும் கூட ஜம்முவிலும் சரி, பதட்டங்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியாகிலும் சரி, போகும் வழி நெடுகிலும் நாங்கள் சந்தித்த மக்கள் (மாலை நேரங்களில் மட்டும் சில மணி நேரங்கள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் போது வெளிவருகிறார்கள்) எங்களிடம் பேசிய போது அன்பாய் பழகினார்கள்,
வழி எங்கிலும் சமைக்க இடம் தந்ததும், தண்ணீர், மின் விளக்கு வசதி, உணவருந்த இடம், எங்களுடன் பயணித்த பெண்களுக்கு தமது வீட்டில் உள்ள கழிப்பறை வசதிகளை செய்து தந்தவர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
“எங்கள் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும்” என்பதே அவர்களின் ஆதங்கமாக இருந்தது. கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் வாழ்வில் அமைதியின்மை, கலவரம், தொழில் நசிப்பு, பல சொல்லொணாத் துன்பங்கள், உடமை இழப்புகள், சொந்த பந்தங்களின் இழப்புக்கள் என்று பல தாக்கங்கள், தேக்கங்களுக்கும் இடையில் அவர்கள் அமர்நாத் யாத்ரிகளிடம் காட்டிய அன்பும் பரிவும் என்னால் மறக்கவே இயலாது.
(யாத்ரா செல்லும் வழியில் காஷ்மீர் சிறுவர்கள். படம் உதவி:- மகேஷ் கொண்டல்)
யாத்திரை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று டாக்டர் சங்கர்ஜி என்னை கேட்ட போதெல்லாம் நான் இதைத் தான் முக்கிய அனுபவமாக பகிர விரும்பினேன்.
ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அரசு நிர்வாகத்துக்கும், ராணுவத்துக்கும் யாத்ரிகளை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டுமே என்கிற கவலை இருக்கிறது. எங்களிடம் பழகிய பொது மக்களும், தேவஸ்தான அதிகாரிகளும், ராணுவ வீரர்களும், எல்லாருமே மரியாதையுடன் தான் பழகினார்கள். எங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் மரியாதையுடன் எங்களிடம் கேட்டுக் கொள்ளும் போதெல்லாம் என் இதயம் நெகிழ்ந்தது.
சிவமும் சக்தியும் நிறைந்து அருள் பாலிக்கும் பூமி ஜம்மு-காஷ்மீர்.
பஞ்சபூதங்களும் மாசின்றி (elements in their purest form) அங்கே இருப்பதினால் மக்களிடம் அன்பு மனப்பான்மை இருக்கிறது. அசுரர்கள் ஆட்சி செய்யும் போது தேவர்களும், ரிஷிகளும் இருந்த மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று என் இதயத்தால் உணர முடிந்தது. நமக்கெல்லாம் இவ்வளவு துன்பங்கள் இருந்தால் விருந்தினரிடம் எப்படி நடந்து கொள்வோம் என்று எண்ணியபோது வெட்கத்தால் குறுகிப் போனேன்.
இன்றை சூழ்நிலையில் கூட அன்பை மட்டுமே செலுத்த தெரிந்த மக்கள் நிறைந்த இந்த ஜம்மு‑காஷ்மீர் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம். பின்னர் யாத்திரையில் பயணிப்போம்.
(யாத்திரை தொடரும்)
No comments:
Post a Comment