திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய.
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி.
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி.
நன்றி: கூகிள் இமேஜஸ்
பருகப்பருகத் திகட்டாத தித்திக்கும் சிவத்தேனை உண்ணாரமுதமாய்ப் பலவாறும்
மகிழ்ந்து பாடிப் பரவுவார் மாணிக்கவாசகர். அவனருள் இன்றி அவன் தாள் வணங்க இயலாது
என திடசித்தமாய் தனது சிவபுராணத்தில் மனமுருக உரைக்கிறார் திருவாதவூரர்.
கடந்த ஜூலை 2010இல் அமர்நாதம் சென்று அவனடி பரவும் பாக்கியம் எனக்கும்
கிட்டியது ஒன்றே சிவனின் எல்லையில்லாக் கருணைக்கு எடுத்துக்காட்டு எனலாம்.
அந்த அனுபவங்களை எல்லாம் மின்வானில் (மின்னஞ்சல் குழுமங்கள், வலைப்பூக்கள்
வாயிலாக) பகிர்ந்து கொள்ளும் ஒரு மஹாபாக்கியமும் எனக்கு கிட்டியது.
கணக்கற்ற சிவனடியார்களை எனக்கு அறிமுகம் பெற்றுத் தந்த சிவனருளை எண்ணி எண்ணி
அகமிக நெகிழ்கிறேன்.
குன்னூர் அன்பர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அமரநாதம் சென்று
வருகிறார்கள்.
கடந்த ஆண்டு குன்னூர் சென்று அவர்களை வழியனுப்பும் பாக்கியம் எனக்கு
கிட்டியது. இந்த ஆண்டும் அவர்கள் அமர்நாத் பயணம் சென்று இருக்கிறார்கள்.
எனது வலைப்பூவினை கண்ணுற்ற சென்னை குரோம்பேட் சிவனடியார்கள் முதலில்
மின்னஞ்சல் மூலமாகவும், பின்னர் அலைபேசி மூலமாகவும் என்னோடு தொடர்பு கொண்டு
அமர்நாத் செல்லும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்த ஆண்டு சார்தாம் யாத்திரை
சென்று வந்திருக்கும் இந்த அடியார்களின் ஆர்வமும் செயல்பாடும் கண்டு மகிழத்தக்கவை.
சகோதரர்கள் மூவருமே இணைபிரியாது சிவனருள் பரவி நிற்கும் பாங்கு சொல்லுதற்கு
அரியது.
பின்னர் ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களுடன் அளவளாவினேன். இறையருளால் நான்
எழுதிய அமர்நாத் பயணக் கட்டுரையை அவர்கள் கண்ணுற நேர்ந்ததையும், அந்தக்
கட்டுரையைப் படித்ததும் அமரனாதனை தரிசிக்க வேண்டும் என்ற உந்துதல்
ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியபோது சிவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தேன்.
தமிழில் ஒரு பயணக் கட்டுரை வெளியாக வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தே அந்தத் தொடரினை
எனது ’வேதாந்த வைபவம்’ வலைப்பூவில் பதிவுகளாக இட்டிருந்தேன். அந்த நோக்கம் விரைவில் ஈடேறியது
குறித்து சிவனுக்கு பலவாறு நன்றி சொன்னேன்.
இந்த முறை அன்பர்களை நேரில் சந்தித்து வழியனுப்ப இயலாமல் போனது. ஆனால் அலைபேசி
மூலம் பேசி அவர்களை வழியனுப்பி வாழ்த்தினேன்.
மற்ற எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அமர்நாத்
யாத்திரையில் ஏற்பட்டு வரும் இடர்களையும், உயிரிழப்புகளைப் பற்றியும்
படித்திருப்பீர்கள்.
நம் சிவனடியார்கள் தங்கள் பயணத்தை சிவனருளாலே வெற்றிகரமாக செயல்படுத்தி அவன்
தாள் வணங்கி திரும்பி இருக்கிறார்கள். அந்த அணியில் பன்னிரண்டு வயது சிறுவனும் இடம்
பெற்றிருப்பது எனக்கு கட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. அந்த பால சிவனை நெஞ்சார
போற்றுகிறேன். அமரநாதம சென்று திரும்பியதும் யாத்திரையின் போது எடுத்த புகைப்படங்களை
எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர விழைகிறேன்.
இந்தியாவில் உள்ள இந்து மதத் தலங்களில் மிகவும் சவாலான மலைப்பாதையைக் கொண்டது
அமர்நாத குகை அமைந்திருக்கும் இடம்.
இமயத்தின் பற்பல ஆன்மீக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் அமரநாதத்திற்கு சென்று
வந்திருக்கும் செந்தில் சகோதரர்களை பாராட்டி வணங்கி மகிழ்கிறேன்.
பயணிப்போம் வாருங்கள்.
(பயணம் தொடரும்)
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.