Saturday, November 20, 2010

சிவனருள் பொலிக.... இடுகைகள் நூறைக் கடந்து...

ஹர ஹர மகாதேவ்

இறையருளால் 
இந்த வலைப்பூ, 
நூறு இடுகைகளைக் 
கடந்து 
வந்திருக்கிறது.

அன்பர்களின் ஆதரவும், 
என் சிவனின் ஆசிகளும் 
என்னை வழி நடத்தும் 
என்று நம்பி 
மேலும் தொடருகிறேன்.

ஓம் நமசிவய.

Wednesday, November 17, 2010

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை. அமர்நாத் குகைக்கு... அத்தியாயம் 2. காத்திருத்தல் ஒரு தொடர்கதை ஆனது....


வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)

பயணம் தொடர்கிறது....

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.

பாகம் 2-அமர்நாத் புனித யாத்திரை.
 
அத்தியாயம் 2. காத்திருத்தல் ஒரு தொடர்கதை ஆனது.... 

சாதாரணமாக ஜம்முவில் இருந்து சாலை வழியாக Patnitop, Batote, Ramban, Banihalபோன்ற ஊர்கள் வழியாக ஸ்ரீநகர் செல்ல எட்டு மணி நேரம் ஆகும். 

தங்குதடையின்றி பயணம் செய்ய ஏற்ற வகையில் தேசீய நெடுஞ்சாலை நெம்பர்-1 அமைந்திருந்தும், எங்களது பயணம் ஒரே இடத்தில் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது. எங்களுடன் வந்த பெண் யாத்ரிகள் கழிப்பிடம் செல்ல வேண்டிய தேவை உண்டானதால் அதைப் பற்றி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்ததும் எங்களது பஸ்களில் இருந்த பெண்கள் கீழே இறங்க அனுமதிக்கப் பட்டனர்.
 
அருகாமையில் இருந்த ஒரு வீட்டில் இருந்த ஒரு இஸ்லாமியப் பெரியவருடன் எங்களோடு பயணிப்பவர்களில் ஹிந்தி தெரிந்த நண்பர்கள் பெண்களின் அசௌகரியத்தைப் பற்றிக் கூறியதும், உடனே அவர் வீட்டுப் பெண்மணிகளிடம் கூற அவர்களும் எதிர் கொண்டு வந்து அழைத்துப் போய் வேண்டிய கழிப்பிட வசதிகளை காட்டினர்.

அவர்கள் நிம்மதியுடன் வெளிவந்ததும் அவர்களுக்கும் எங்களுக்கும் பருக குடிநீர்தந்தார்கள். குடிநீர் அறுந்து சாக்கில் வண்டிகளில் இருந்து இறங்கி அங்கே இருந்தமரத்தடியில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் தான் பஸ்சிலேயே அமர்ந்து கொண்டிருப்பது? சிறுவர்கள் பிளாஸ்டிக் பைகளில் பெர்ரி பழங்களை கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். எங்களில் சிலர் அவற்றை வாங்கிக் கொண்டோம். சற்று நேரம் சென்ற பின்னர் எதிர்சாரியில் வண்டிகள் வரத்துவங்கின. எங்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படும் சமயம் அது என்பதை உணர்ந்து டிரைவர் பஸ்ஸில் அவரது இருக்கையில் அமர்வதைக் கண்ட நாங்கள் அனைவரும் பஸ்களில் ஏறிக்கொண்டோம். இதனை அடுத்து எதிர்சாரி வண்டிகள் வருவது நின்றன. பின்னர் எங்களது வாகனங்கள் புறப்பட்டு செல்லலாயின. மதியம் மணி ஒன்றாகிறது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. 

பசி எல்லோரையும் வண்டி எங்கே நிற்கும், எப்போது நிற்கும் என்று கேட்க வைத்து விட்டது. ஆனால் வண்டிகளை நிறுத்தி உணவு தயாரித்து அருந்தும் வகையிலான இடங்களில் நாங்கள் நிறுத்த முயன்ற போது எங்களது வாகனங்களை நிறுத்த ராணுவம் அனுமதிக்கவில்லை. மேலும் இரண்டு மணி நேரம் இதே நிலை தொடர்ந்தது.
 
யாத்திரிகள் தாங்கள் ஏற்கனவே வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த உணவுப்பண்டங்களையும்,  பாட்டில் பானங்களையும்,  தண்ணீரையும்  தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பசியின்  தீவிரத்தை  ஓரளவு  குறைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தார்கள்.
 
ஒரு வழியாக பிற்பகல் மூன்றரை மணி அளவில் ஒரு இடத்தில் நிறைய வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டோம். அங்கே எங்கள் பஸ்களும் நிறுத்தப்பட்டன. எங்கள் உணவு தயாரிப்பாளர் திரு.காசி விஸ்வநாதன் அவரது உதவியாளர்களுடன் உணவு தயாரிப்பதில் மும்முரமானார். அங்கே பல மாநிலங்களில் இருந்து யாத்திரிகள் அமர்நாத் சென்று திரும்பி வந்திருந்தார்கள். அவர்களும் அங்கே இருந்த தாபாவில் (வடமாநிலங்களில் சாலை ஓரக் கடைகளை தாபா என்று அழைக்கிறார்கள்) உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
 
இந்த பகுதிகளில்  தாபாக்களில் வைஷ்ணோ தாபாக்கள் என்று பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் வைஷ்ணோ தாபாக்களில் மட்டுமே சைவ உணவுகள் கிடைக்குமாம். நம்ப ஊரில் சைவ உணவு (வெஜிடேரியன்) என்று சொல்கிற பொருளில் வைஷ்ணோ என்கிற பதம் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அதே போல ஜம்முவில் இருந்து காஷ்மீர் பகுதிகளை நெருங்க நெருங்க ஹிந்து ஹோட்டல்கள் என்றும் முஸ்லிம் ஹோட்டல்கள் என்றும் பெயர்ப் பலகையில் தவறாமல் குறிப்பிட்டு விடுகிறார்கள்.

குஜராத்தை சேர்ந்த யாத்திரிகள் அங்கே  கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனிகளை தங்களுக்குள்ளே விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவினருக்கு பசி தாங்கவில்லை. ஒரு சில அன்பர்கள் அங்கே போய் நின்று கொண்டு அவர்களை ஏக்கத்துடன் பார்க்க, நிலைமையை புரிந்து கொண்ட குஜராத் அன்பர் ஒருவர் தாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பு, கார வகை நொறுக்குகளை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள, ஆசையும், பசியும் வெட்கம் அறியாது என்பது நிரூபணம் ஆயிற்று.

நம் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொண்டமைக்கு காரணம் குஜராத் யாத்ரிகளில் ஒருவர் தமிழர். நம் அன்பர்கள் பட்டினியோடு உணவு பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அவர் உதவி செய்திருக்கிறார். அவர் சென்று எங்கள் நிலைமையை அவர்களது டூர் ஆர்கனைசரிடம் கூறிய பின்னர் கிட்டத்தட்ட எங்கள்  அனைவருக்கும் குஜராத்திய வகை நொறுக்குத் தீனிகள் விநியோகிக்கப்பட்டன. அந்தத் குஜராத்தை சேர்ந்த தமிழ் நண்பர் எங்களோடு நிறைய பேசினார். அமர்நாத் சென்று திரும்பியது பற்றி பேசினார். ஸ்ரீநகர்,  மற்றும் அனந்தநாக் போன்ற பகுதிகளில் கலவரம் அதிகமாகி விட்டதால், பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறது என்றும், அதன் காரணமாகவே சாலை போக்குவரத்தில் கெடுபிடிகள் அதிகமாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் சாலையில் இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் கால தாமதம் இனிமேல் தொடரும் என்பதையும் அவருடன் பேசியபோது எங்கள் வண்டிகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பதையும்,  இனிமேல் இந்த வகையிலான சங்கடங்கள் அடிக்கடி நேரும் என்பதையும் புரிந்து கொண்டோம். 

அரைமணி நேரத்துக்குள் உணவு தயாரிப்பு வேலைகள் முடிந்து விடும் என்றுஆவலோடு எதிர்பார்த்த எங்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ராணுவ ஜீப்பில் அங்கே வந்த பாதுகாப்பு அதிகாரிகள் எல்லா வண்டிகளையும் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எங்கள் ஆர்கனைசர் அவர்களுடன் பேசினார்.
 
இருப்பினும் சமையலை முடிக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புபிரச்சினைகள் காரணமாக நாங்கள் அனைவரும் அங்கிருந்து சென்றாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டோம்.
 
இதனால் சமையல் இடையிலேயே  நிறுத்தப்பட்டு  அப்படியே வெந்தது,  வேகாதது என்று பாதி  சமைக்கப்பட்ட உணவுகளுடன்  பாத்திரங்கள்  அனைத்தும் பஸ்களில் ஏற்றப்பட்டன. எதுவும் புரியாமல் ஏன்,  எதற்கு,  என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த போது,  நாங்கள் கடக்கவிருக்கும் பகுதிகளை அந்திப் பொழுது நேரத்துக்குள் கடந்தால்தான் பயணிகளுக்கு ஆபத்து இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் விளக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்த பின்னர்அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதும் நாங்கள் விரும்பும் இடத்தில் சமைத்து உணவருந்தலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எங்கள் ஆர்கனைசரிடமும், பஸ் டிரைவரிடமும், எங்கள் சமையல்காரர் காசி விஸ்வநாதனிடமும் கூறினார்கள்.

நண்பகல் உணவு திட்டத்தை பிற்பகல் உணவுத் திட்டமாக  செயல்படுத்தமுடியாமல் போனதினால் டூர் ஆர்கனைசர் எங்கள் அனைவருக்கும் தாபாவில் இருந்து தேநீர் ஏற்பாடு செய்தார். சிலர் அங்கே எண்ணையில் பொறிக்கப்பட்டு விற்கப்பட்ட பஜ்ஜி போன்ற வகைகளை வாங்கி அவசரமாகச் சாப்பிட்டார்கள். சமைக்க ஆரம்பித்தது  கைக்கும் எட்டாமல், வாய்க்கும் எட்டாமல்  நொந்தபடி எல்லோரும் அவரவர்  பஸ்களில் ஏறி தமது இருக்கைகளில் அமர்ந்து  பயணத்தைத் தொடர்ந்தோம். போகும் வழியில் வேறு ஒரு ஊரில் இறங்கி மீண்டும் சமைத்துக் கொள்ளலாம் என்பதாக முடிவாயிற்று. இவ்வாறாக எங்களது அன்றைய மதிய உணவு குஜராத்திகள் மனமுவந்து அளித்த நொறுக்குத் தீனியிலும், தாபாவில் குடித்த டீயிலும் முடிந்தது.
 
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹால் (Banihal) என்னும் இடத்தை கடந்து செல்லும் போது அனைவரும் ஆர்வத்துடன் ஜவஹர் டன்னல் (Jawahar Tunnel) என்று அழைக்கப்படும், மலையைக் குடைந்து ஜம்மு-காஷ்மீரை இணைக்கும் மலைகுகைப் பாதையைக் கண்டோம். சுமார் இரண்டரை கி.மீ தூரம் உள்ள இந்த குகை ஆசியாவிலேயே மிக நீளமான மலையை குடைந்து அமைக்கப்பட்ட தரை வழி குகைப் பாதை ஆகும். பனிஹால் கணவாய் (Banihal Pass) பீர்-பாஞ்சால் மலைத் தொடர்களில் அமைந்துள்ளது. இந்த ஜவஹர் டன்னல் நாட்டுப் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவ பங்காற்றுகிறது என்பதினால் இந்த குகைப் பாதை இராணுவத்தின் இருபத்திநான்கு மணிநேரக் கண்காணிப்பில் உள்ளது.
 
மேலும் இந்த குகைப் பாதைக்குள் செல்லும் வண்டிகள் ஒரே வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன. குகைக்குள் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடியோ அல்லது புகைப்படங்கள் எடுக்க தடை செய்யப்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்  இது.

அடுத்து இரண்டு மணிநேரப் பயணம் ஆன பின்னர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துஎங்கள் பஸ்கள் நிறுத்தப்பட்டது. நாங்கள் நிறுத்திய ஊரின் பெயர் கூட சரியாகதெரியவில்லை. வழியில் இருந்த ஒரு கிராமம் அது. பஸ் டிரைவரும், காசியும் அந்த ஊர்க்காரர்களிடம் பேசி விட்டு பின்னர் சமையல் பாத்திரங்களை கீழே இறக்கினார்கள்.
 
அப்போது நேரம் சுமார் மாலை ஆறு மணி இருக்கலாம். ஸ்ரீநகரில் கலவரங்கள்தொடர்வதால் இரவு நேரங்களில் எட்டு மணிக்கு பிறகு  (இந்த சமயங்களில் இந்தப் பகுதிகளில் இரவு எட்டு மணிக்கு தான் அந்தி சாயும்) ஸ்ரீநகருக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது என்றும் அந்த ஊரில் உள்ளவர்களை கேட்டு அறிந்து கொண்டோம்.

இந்த ஊரிலும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களே. .அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பக்கத்து மசூதியில் மாலை நேர தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அந்த ஊரில் ஒரு முக்கியமான முஸ்லிம் பிரமுகர் எங்களை பயம் இல்லாமல் இங்கே உணவு சமைத்து சாப்பிடலாம் என்று கூறி, சமைக்கத் தேவையான நீரை ஒரு ஹோஸ் குழாயின் மூலமாக வீட்டுக்குள் இருந்து ஏற்பாடு செய்தார். குடிக்க, முகம் கழுவவும் அந்த தண்ணீரை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். வெகு நேரம் எங்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தது எங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தது.

அதே போல பெண்கள் தனியாக தங்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளவும், அவரது வீட்டுப் பெண்கள் மூலம் வழி வகைகள் செய்து கொடுத்தார். அக்கம் பக்கம் உள்ள சிறு கடைகள் சில திறந்திருந்தன. காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் அப்போது ஊரடங்கு உத்தரவில் இருந்தததால் மாலை நேரங்களில் ஓரிரு மணி நேரங்கள் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்வதற்காக இந்த உத்தரவு தளர்த்தப்படும்.

சமையல் தயாராக ஆவதற்குள் நம் நண்பர்கள் அங்கு கிடைத்த நொறுக்குத் தீனிகளையும், எண்ணையில் தயாரித்து வைத்திருந்த சில உணவுப் பண்டங்களையும்,  குல்ஃபி வகையறாக்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜம்முவில் இருந்தே ப்ரீபெய்ட் இணைப்புகள் உள்ள கைபேசிகளை  பயன்படுத்த தடை இருந்ததால், அங்கிருந்த எஸ்.டி.டி. பூத்துக்களில் இருந்து ஊருக்கு போன் செய்து நாங்கள் எப்படியிருக்கிறோம், எங்கிருக்கிறோம் என்ற விவரங்களை எங்கள் இல்லத்தினருக்கு தெரிவித்தோம்.

என் மனைவி என்னிடம் பேசும் போது தான் பார்த்த தொலைக் காட்சி செய்திகளைப் பற்றி என்னிடம் தெரிவித்தாள். காஷ்மீர் பகுதிகளில் கலவரம் அதிகமாக இருப்பதை, கல்வீச்சு சம்பவங்களை நேரடியாக நமது டீ.வீக்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருப்பதில் இருந்து உணர முடிகிறது என்றும் அதனால் எங்களது பாதுகாப்பு குறித்து அவள் தன் கவலையைத் தெரிவித்தாள். இதைக் கேட்ட நான் நமது ராணுவத்தினர் வழியெல்லாம் எங்களுக்கு தந்து கொண்டுவரும் ஒப்பற்ற பாதுகாப்பைப் பற்றி விளக்கி அவளைத் தைரியமாக இருக்கும்படி சொன்னேன்.

சென்னையில் இருக்கும் மற்றொரு நண்பரிடம் பேசும் போது அமர்நாத் யாத்திரிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் தொலைபேசிகளில் பேசியது இந்திய ராணுவத்தினரால் இடைமறித்துக் கேட்கப்பட்டதாக தொடர்ந்து செய்தி ஒளிபரப்படுவதையும் அவர் என்னிடம் தெரிவித்தார். எங்கள் பயணத்தின் காலதாமதத்துக்கான காரணம் இப்போது எங்களுக்கு புரிந்தது.

ஏற்கனவே ஊர்க்காரர்கள் தெரிவித்தபடி ஸ்ரீநகருக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்காது என்பதும் எங்களுக்கு இப்போது புரிந்து விட்டது. எங்களுக்கு இதில் இருந்த சங்கடம் என்னவென்றால், ஆரம்பத்தில் இருந்தே அமர்நாத் பயணத்துக்கான பல பொருட்களை ஸ்ரீநகரில் வாங்கி கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்ததால் அவைகளை அமர்நாத் போவதற்கு முன்னர் வாங்க முடியுமா? என்ற ஐயம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

(யாத்திரை தொடரும்)

Monday, November 15, 2010

பாகம் இரண்டு : பகுதி 1. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.
(இதனுடன் பாகம் ஒன்று நிறைவடைகிறது)

பாகம் இரண்டு 

பகுதி ஒன்று.

அமர்நாத் பனி லிங்க தரிசனம்.

வைஷ்ணோதேவி யாத்திரையை கடந்த வாரம் நல்லபடியாக முடித்தோம். வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை துவங்கியதில் இருந்து ஒவ்வொரு யாத்திரை பற்றிய பற்றிய எனது அனுபவப் பகிர்வுகளின் பகுதியினை இங்கே வெளியிடுகிறேன். 

எல்லாம் வல்ல பரமனின் திருவருளால் எனது இந்த முயற்சியும் நல்வினை ஆகும் என்று என் சிவனை வேண்டி இடுகையை துவங்குகிறேன்.
இறை வணக்கம்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.
   - திருவாசகம்  (மணிவாசகர்)

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
 
1. அமர்நாத் யாத்திரை துவங்குகிறது.

 
இப்போது நாம் ஜம்முவிலிருந்து காஷ்மீர் போகப் போகிறோம். அதிசயங்கள் அநேகமுற்ற பகுதி ஜம்மு-காஷ்மீர். இமயமலையின் இந்த பகுதிகள் ஆன்மீக அனுபவங்களை மனிதர்க்கு உணர்த்தி அவர்களை ஞானிகளாக உயர்த்திய பகுதி. இமயமலையின் ஆச்சர்யங்களும், இரகசியங்களும் எண்ணற்றவை.
 
மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்டது என்பதை விஞ்ஞானிகளும் அறிவர். அஞ்ஞானிகள் மட்டுமே அறிய மாட்டார். சூஃபியிசம் பற்றியும், காஷ்மீர சைவம் பற்றியும் மேலும் நிறைய செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இந்த பதிவு புனித யாத்திரையை பற்றிய பதிவு என்பதால் விரிவாக எழுதவில்லை.
 
இருப்பினும் ஆன்மீக தாகம் உள்ள ஆர்வலர்களுக்கு அவற்றைப் பற்றி தொட்டுக் காட்ட முயலுதல் அவசியமாகிறது. காஷ்மீரின் வரலாற்றை நாம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இரத்தினமாலை குழுமத்தின் உரிமையாளரும், பதிவுலகின் முன்னணிப் பதிவரும் ஆன திரு.சங்கர்குமார் அவர்கள் காஷ்மீரப் பெண் ஞானி லல்லேஸ்வரி பற்றிய ஒரு அற்புதப் பதிவை இட்டு எந்த அளவிற்கு காஷ்மீரத்தில் சைவம் தழைத்தோங்கியது என்பதை பற்றி அருமையாக விளக்கி இருந்தார். மெய்ஞ்ஞானம் லல்லேஸ்வரியிடம் இருந்து துவங்கி அவரது சீடனாக ஒரு இஸ்லாமியர் அவரிடம் தீட்ஷை பெற்று நந்திரிஷி என்னும் சூபி ஞானியாக உருவாவது வரை மட்டுமின்றி, அதற்கு பின்னரும் ஒரு தொடர் ரிஷி கலாச்சாரத்தை பல ஞானிகள் காஷ்மீர் மண்ணில் இன்றளவிலும் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட காஷ்மீருக்குள் நாம் நுழையப் போகிறோம் என்று எண்ணும் போது மனசு ஆனந்தத்தில் படபடத்தது. 


வாருங்கள் பதிவுக்குள் செல்வோம்... 

9th July 2010: காத்ரா டு பால்டால் (ஸ்ரீநகர் வழியாக)
 
முதல் நாள் வைஷ்ணோதேவி மலையில் நடந்து போய் வந்த களைப்பு உடலில் மிஞ்சி இருக்க, காலையிலேயே எழுந்து, குளித்து சூடான காப்பி சாப்பிட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளை எல்லாம் வண்டியில் ஏற்றினோம். காலை சுமார் எட்டு மணியளவில் இரண்டு பஸ்கள் எங்களை ஏற்றி கொண்டு காத்ராவிலிருந்து புறப்பட்டன.

இந்த நேரத்தில் புறப்பட்டால்தான் சீக்கிரமாக ஸ்ரீநகர் போய் அங்கு ஏதாவது ஷாப்பிங் செய்ய முடியும். பிறகு ஸ்ரீநகரிலிருந்து பால்டால் (BALTAL-அமர்நாத் செல்லும் வழியில் உள்ள அடிவார முகாம்) சென்று இரவு தங்க வேண்டும் என்பதாக எங்கள் திட்டம் இருந்தது.  அதாவது இன்றே பால்டால் சென்று விட்டால், நாளை அதாவது பத்தாம் தேதி அதிகாலை புறப்பட்டு அமர்நாத் குகைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, அன்று மாலையே பால்டால் திரும்பிவிடலாம். பதினோராம் தேதி பால்டாலில் இருந்து புறப்பட்டு குல்மார்க் (Gulmarg) போகலாம் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. குல்மார்கில் பனிமலைகளை காண கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரம்மியமான இயற்கைக் காட்சிகளுக்கும், பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கும் புகழ் பெற்ற இடம் குல்மார்க்.
 
காத்ராவிலிருந்து பத்னிடாப் (Patnitop-மலைவாசஸ்தலம்) வழியாக எங்கள் பஸ் சென்று கொண்டிருந்தது. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் பாதை ஒரு மலைப் பாதை. இருமருங்கிலும் மலைகள் சூழ நடுவில் ஹைவே நம்.1 (தரத்திலும் நம்பர் 1-தான்) சென்று கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசஷன் (B.R.O)  போட்டிருக்கும் நெடுஞ்சாலை இது. காணக் காண மனம்  சந்தோஷித்தது. அற்புதமான சாலை அது. 

வழியெல்லாம் எச்சரிக்கை பலகைகள் சுவாரஸ்யமான வார்த்தைகளுடன் காட்சி அளித்தன. வேகம் விவேகம் அல்ல என்பது போன்ற வரிகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். எங்கள் சாலையின் ஒருபுறம் மலை, மறுபுறம் அழகிய ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் மலை ஏறும் பாதையை ஒட்டி அந்த ஆறு வளைந்து, நெளிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டோம். காணும் இடங்களில் எல்லாம் பச்சை பசேல் என்று மரங்களும், செடி கொடிகளும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயற்கை அன்னை ஆட்சி புரிகிறாள். நீர்வளம் நிறைந்த மாநிலம் இது. நாங்கள் சென்ற சமயம் கோடைக் காலம் என்பதால் பனிமலை உருகி வரும் தண்ணீர் காணுமிடங்களில் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன.

மழைக்காலங்களில் வானம் பொய்ப்பதில்லை என்பதினால் அப்போதும் தண்ணீர் பஞ்சம் இன்றி கிடைக்கும் பூமி ஜம்மு-காஷ்மீர். ஆகையினால் பசுமை காணும் இடம் தோறும் ஆலவட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
 
ஜம்மு-காஷ்மீர் எல்லையோர மாநிலம் என்பதினால் இந்த மாநிலத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் பிரச்சினைக்குரிய மாநிலமாக இருப்பதினால் எப்போதுமே பதட்டத்தில் உள்ள மாநிலமும் கூட. இராணுவத்தின் பாசறைகள் மாநிலம் முழுவதும் உள்ளன. பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன. தரைப்படையும், வான்படையும் இங்கே நிறைய முகாமிட்டுள்ளன. பாதைகளை பார்டர்ஸ் ரோடு ஆர்கனைசேஷன் (BRO), என்னும் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நிறுவனம் நிர்மாணிக்கிறது. எதிரில் நிறைய ராணுவ வண்டிகள் வந்து கொண்டிருந்தன.

எங்கள் பஸ்சை நிறைய ராணுவ வண்டிகள் முந்தி சென்று கொண்டிருந்தன. மலை ஏறிய களைப்பில் கண்கள் சொக்க அடிக்கடி தூங்கிப் போனோம். சுமார் எட்டரை மணி அளவில் ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கே எங்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிற்றுண்டிக்கு பின்னர் கடையில் இருந்து தயாரித்த டீ வழங்கினார்கள்.

மீண்டும் பயணம். கொஞ்ச நேரம் தூக்கம். பிறகு விழிப்பு. விழித்திருந்த நேரங்களில் இருமருங்கிலும் வஞ்சனையின்றி இயற்கை அன்னை தீட்டி இருந்த ஓவியங்களை கண்டு கொண்டே வந்தோம். நண்பர்கள் கொண்டு வந்த காமிராக்கள் இந்த காட்சிகளை தமக்குள் பதிந்து கொண்டே வந்தன.
 
கால்வாசி தூரம் வந்து கொண்டிருக்கும் போது எங்கள் பஸ்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. பின்னர் நின்று விட்டன. முன்னும் பின்னுமாக எல்லா வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தப்பித் தவறி ஓவர்டேக் செய்து வந்த வண்டிகள் கடுமையான எச்சரிக்கையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஒரு நெடிய ட்ராபிக் ஜாமில் நாங்கள் நிற்க வேண்டியதாயிற்று.
 
அப்போது மணி காலை பதினொன்று இருக்கும். என்ன ஏது என்று யாரைக் கேட்பது? ராணுவ வீரர்களின் நடமாட்டம் அங்கே அதிகமாக இருந்தது. வழியெங்கும் ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதினால் சாலைகள் வெறிச்சோடி இருக்க, மக்கள் நடமாட்டமே இல்லை.

கடைகள் மூடி இருக்கின்றன. எங்காவது யாராவது ஓரிருவர் தலைகள் தெரிகின்றன. அவர்களும் விரைவாக வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏகே‑47 துப்பாக்கிகளை ஏந்தியபடி நிறைய ராணுவ வீரர்கள் பத்து மீட்டருக்கு ஒருவர் என்று நின்று கொண்டிருந்தார்கள். உயரமான வீடுகளில் ஜன்னல்களில் இருந்து ஒரு ராணுவ வீரர்  துப்பாக்கியுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். மதில் சுவர்களில், பாறைகளில், மரங்களின் கீழே என்று எங்கே பார்த்தாலும் ராணுவம்.
 
என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பஸ்ஸில் இருந்து கீழே இறங்க வேண்டாம் என்று வேறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், பஸ்களில் அமர்ந்தபடியே எதுவுமே புரியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ராணுவ அதிகாரிகள் ஒவ்வொரு பஸ்ஸாக வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 

எங்கள் பஸ்களின் எண்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. எத்தனை பேர்கள் வருகிறோம்? எங்கிருந்து வருகிறோம்? எங்கு செல்லப் போகிறோம்? என்று கேள்விக்கணைகளுக்கு எங்கள் டூர் ஆர்கனைசர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சாலையின் எதிர்ப்புறத்திலும் எந்த வண்டிகளும் வரவில்லை. எல்லோருக்குள்ளும் ஒரு பரபரப்பும், திகிலும் தொத்திக்  கொண்டது.
 
இங்கே ஆரம்பித்த இந்த பரபரப்பும், திகிலும், நாங்கள் அனைவரும் யாத்திரை முடித்து திரும்பி ஜம்மு ரயில்வே நிலையம் வரும்வரை நீடிக்கப் போகிறது என்பதை அப்போது நாங்கள் யாரும் உணர்ந்திருக்கவில்லை.
 
(தொடரும்)

Sunday, November 14, 2010

பகுதி 12. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
முந்தைய பதிவுகளைப் படிக்க கீழ கிளிக் செய்யுங்கள்.


திருச்சிற்றம்பலம். 

சிவனருள் பொலிக....

இறையடியார்களை வணங்கி வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை பற்றிய எனது அனுபவப் பகிர்வுகளின் இடுகையை புகைப்படத் தொகுப்பாக வெளியிட்டு வைஷ்ணோதேவி புனித யாத்திரையை இந்த இடுகையில் நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவில் இருந்து அமர்நாத் பனிக் குகை பயண அனுபவங்களை துவங்குவோம்.
 

பகுதி:12  வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
 
வைஷ்ணோதேவி யாத்திரை புகைப்படத் தொகுப்பு.

 மேலே: காத்ராவின் பின்னணியில் திரிகூட மலைப் பகுதி.
மேலே: காத்ராவில் உள்ள பதிவு அலுவலகம்
மேலே: அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில்.
மேலே: நுழைவு வாயிலில் இருந்து மேலே நோக்கி..

 மேலே: குதிரையில் பயணிக்கும் யாத்திரிகள்
 மேலே: காலைக் கதிரவனின் பொற்கிரணங்கள்.
 
 மேலே: பாதுகாப்பான படிக்கட்டுகள்.
மேலே:  ஏறி இறங்குவதற்கு வசதியான படிகள்.
 மேலே: Avalanche Zone. கற்கள் சரியும் ஆபத்தான இடம்.
 மேலே: ஆபத்தான பகுதிகளில் கற்கள் யாத்திரிகளை தாக்கா வண்ணம் அமைத்த கூரைகள்.
 மேலே: அதிக்வாரி தல புராணம்.

 மேலே: அதிக்வாரியில் தேவஸ்தான நிர்வாகத்தின் மூலம் யாத்திரிகளுக்கு 
கிடைக்கும் வசதிகள் பற்றிய அறிவிப்பு பலகை. 
 மேலே: வழியில் பயணிகள் இளைப்பாற வசதியாக கழிவறைகள், 
உணவகங்கள், நொறுக்ககங்கள் மற்று ஓய்வு நிலையங்கள் உள்ளன.
 மேலே:  இரண்டாகப் பிரியும் பாதைகளை காட்டும் அறிவிப்புப் பலகை.
 மேலே: வைஷ்ணோதேவி மலையில் இருந்து காத்ரா நகரக் காட்சி.
மேலே: லங்கூர் குரங்கு கூரை மேல் அமர்ந்து கொண்டு யாத்திரிகளை வேடிக்கை பார்க்கிறது.
மேலே: லங்கூர் வகைக் குரங்குகள் முன்னிலையில் 
மற்ற குரங்குகள் யாத்திரிகளைத் தொந்தரவு செய்யாதாம்.

மேலே: சாதாரணமான குரங்குகள்.  இவை யாத்திரிகளுக்கு தொந்தரவு தராமல் 
அடங்கி இருப்பதே லங்கூர் குரங்குகள் இருப்பதால்தானாம். 
அதற்குத் தான் லங்கூர் குரங்குகளை நிர்வாகம் பாதுகாத்து வளர்த்து வருகிறது.

மேலே: ஹிமகொடி வழியாக பவனம் (தேவி அருள்பாலிக்கும் குகை) 
செல்லும் வழி. மலையை குடைந்து இந்த பாதையை புதிதாக அமைத்திருக்கிறார்கள்.

மேலே: தாயும் சேயும்.

மேலே: மிக அழகான பாதை. தேவி த்வார் என்று இந்த நுழைவாயிலை அழைக்கிறார்கள். 
இங்கிருந்து பவனம் வெகு அருகாமையில் உள்ளது.

மேலே: குடை போல கவிழ்ந்து இருக்கும் ஒரு பாறை. 
செல்லும் பாதையில் பல இடங்கள் பார்க்க ரம்மியமாய் இருக்கும். 

மேலே: இதோ பவனத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

மேலே: குறிப்பிட்ட இடத்துக்கு மேல் குதிரைகள், பல்லக்குகள் 
செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்னும் அறிவிப்புப் பலகை.

மேலே: இந்த இடத்தில் கிளோக் ரூம் வசதி உள்ளது. 
யாத்திரிகள் மேலும் ஒரு பாதுகாப்பு பரிசோதனை மேற்கொண்ட பின்னரே 
தேவி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

மேலே: தேவியைக் காண முன்பெல்லாம் இந்த சிறு குகை வழியாக அனுமதித்தார்கள். 
நாங்கள் சென்ற சமயம் இந்த வழியில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

மேலே: ஸிம்ஹ வாகினி. திரி சூலி.

மேலே: கருவறையில் பிண்டி வடிவில் அருள்பாலிக்கும் முப்பெரும் தேவியர்.

மேலே: பைரோன் நாத் சிகரத்தின் தல வரலாறு மற்றும் மலைக் குன்றின் வியூ பாய்ன்ட்

மேலே: நிர்வாகத்தின் உணவகம்.

மேலே: இரவில் ஒளிரும் பவனம்.

மேலே: இரவில் ஒளிரும் திரிகூட மலை. 
(யாத்திரிகள் வசதிக்காக பாதை முழுவதும் ஒளியூட்டப்பட்டுள்ளது)

மேலே: தூரத்தில் இருந்து இரவில் ஒளிரும் திரிகூட மலையின் காட்சி.

மேலே: பனிக்காலத்தில் மலைப்பாதை. 
(ஒரு முறை பனிக்காலத்தில் சென்றால் இந்த அழகை அனுபவிக்கலாம்)

இந்தப் பதிவுடன் வைஷ்ணோதேவி யாத்திரையை நிறைவுறுகிறது. அடுத்த பதிவில் இருந்து அமர்நாத் புனித குகைக்கு பயணம் செய்த அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

ஜெய் மாதா தி

(தொடரும்)

 
புகைப் படங்கள் தந்து உதவிய சஹ யாத்திரிகள் கோவிந்த் மனோஹர், ஜி.கே.ஸ்வாமி, உஷாஜி, கண்ணன், மகேஷ் கொண்டல், உஷாஜி, ரமேஷ்குமார் மற்றும் கூகிள் இணைய தளம் அனைவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

 
ஓம் நமசிவாய.