Wednesday, November 17, 2010

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை. அமர்நாத் குகைக்கு... அத்தியாயம் 2. காத்திருத்தல் ஒரு தொடர்கதை ஆனது....


வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)

பயணம் தொடர்கிறது....

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.

பாகம் 2-அமர்நாத் புனித யாத்திரை.
 
அத்தியாயம் 2. காத்திருத்தல் ஒரு தொடர்கதை ஆனது.... 

சாதாரணமாக ஜம்முவில் இருந்து சாலை வழியாக Patnitop, Batote, Ramban, Banihalபோன்ற ஊர்கள் வழியாக ஸ்ரீநகர் செல்ல எட்டு மணி நேரம் ஆகும். 

தங்குதடையின்றி பயணம் செய்ய ஏற்ற வகையில் தேசீய நெடுஞ்சாலை நெம்பர்-1 அமைந்திருந்தும், எங்களது பயணம் ஒரே இடத்தில் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது. எங்களுடன் வந்த பெண் யாத்ரிகள் கழிப்பிடம் செல்ல வேண்டிய தேவை உண்டானதால் அதைப் பற்றி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்ததும் எங்களது பஸ்களில் இருந்த பெண்கள் கீழே இறங்க அனுமதிக்கப் பட்டனர்.
 
அருகாமையில் இருந்த ஒரு வீட்டில் இருந்த ஒரு இஸ்லாமியப் பெரியவருடன் எங்களோடு பயணிப்பவர்களில் ஹிந்தி தெரிந்த நண்பர்கள் பெண்களின் அசௌகரியத்தைப் பற்றிக் கூறியதும், உடனே அவர் வீட்டுப் பெண்மணிகளிடம் கூற அவர்களும் எதிர் கொண்டு வந்து அழைத்துப் போய் வேண்டிய கழிப்பிட வசதிகளை காட்டினர்.

அவர்கள் நிம்மதியுடன் வெளிவந்ததும் அவர்களுக்கும் எங்களுக்கும் பருக குடிநீர்தந்தார்கள். குடிநீர் அறுந்து சாக்கில் வண்டிகளில் இருந்து இறங்கி அங்கே இருந்தமரத்தடியில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் தான் பஸ்சிலேயே அமர்ந்து கொண்டிருப்பது? சிறுவர்கள் பிளாஸ்டிக் பைகளில் பெர்ரி பழங்களை கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். எங்களில் சிலர் அவற்றை வாங்கிக் கொண்டோம். சற்று நேரம் சென்ற பின்னர் எதிர்சாரியில் வண்டிகள் வரத்துவங்கின. எங்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படும் சமயம் அது என்பதை உணர்ந்து டிரைவர் பஸ்ஸில் அவரது இருக்கையில் அமர்வதைக் கண்ட நாங்கள் அனைவரும் பஸ்களில் ஏறிக்கொண்டோம். இதனை அடுத்து எதிர்சாரி வண்டிகள் வருவது நின்றன. பின்னர் எங்களது வாகனங்கள் புறப்பட்டு செல்லலாயின. மதியம் மணி ஒன்றாகிறது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. 

பசி எல்லோரையும் வண்டி எங்கே நிற்கும், எப்போது நிற்கும் என்று கேட்க வைத்து விட்டது. ஆனால் வண்டிகளை நிறுத்தி உணவு தயாரித்து அருந்தும் வகையிலான இடங்களில் நாங்கள் நிறுத்த முயன்ற போது எங்களது வாகனங்களை நிறுத்த ராணுவம் அனுமதிக்கவில்லை. மேலும் இரண்டு மணி நேரம் இதே நிலை தொடர்ந்தது.
 
யாத்திரிகள் தாங்கள் ஏற்கனவே வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த உணவுப்பண்டங்களையும்,  பாட்டில் பானங்களையும்,  தண்ணீரையும்  தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பசியின்  தீவிரத்தை  ஓரளவு  குறைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தார்கள்.
 
ஒரு வழியாக பிற்பகல் மூன்றரை மணி அளவில் ஒரு இடத்தில் நிறைய வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டோம். அங்கே எங்கள் பஸ்களும் நிறுத்தப்பட்டன. எங்கள் உணவு தயாரிப்பாளர் திரு.காசி விஸ்வநாதன் அவரது உதவியாளர்களுடன் உணவு தயாரிப்பதில் மும்முரமானார். அங்கே பல மாநிலங்களில் இருந்து யாத்திரிகள் அமர்நாத் சென்று திரும்பி வந்திருந்தார்கள். அவர்களும் அங்கே இருந்த தாபாவில் (வடமாநிலங்களில் சாலை ஓரக் கடைகளை தாபா என்று அழைக்கிறார்கள்) உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
 
இந்த பகுதிகளில்  தாபாக்களில் வைஷ்ணோ தாபாக்கள் என்று பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் வைஷ்ணோ தாபாக்களில் மட்டுமே சைவ உணவுகள் கிடைக்குமாம். நம்ப ஊரில் சைவ உணவு (வெஜிடேரியன்) என்று சொல்கிற பொருளில் வைஷ்ணோ என்கிற பதம் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அதே போல ஜம்முவில் இருந்து காஷ்மீர் பகுதிகளை நெருங்க நெருங்க ஹிந்து ஹோட்டல்கள் என்றும் முஸ்லிம் ஹோட்டல்கள் என்றும் பெயர்ப் பலகையில் தவறாமல் குறிப்பிட்டு விடுகிறார்கள்.

குஜராத்தை சேர்ந்த யாத்திரிகள் அங்கே  கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனிகளை தங்களுக்குள்ளே விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவினருக்கு பசி தாங்கவில்லை. ஒரு சில அன்பர்கள் அங்கே போய் நின்று கொண்டு அவர்களை ஏக்கத்துடன் பார்க்க, நிலைமையை புரிந்து கொண்ட குஜராத் அன்பர் ஒருவர் தாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பு, கார வகை நொறுக்குகளை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள, ஆசையும், பசியும் வெட்கம் அறியாது என்பது நிரூபணம் ஆயிற்று.

நம் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொண்டமைக்கு காரணம் குஜராத் யாத்ரிகளில் ஒருவர் தமிழர். நம் அன்பர்கள் பட்டினியோடு உணவு பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அவர் உதவி செய்திருக்கிறார். அவர் சென்று எங்கள் நிலைமையை அவர்களது டூர் ஆர்கனைசரிடம் கூறிய பின்னர் கிட்டத்தட்ட எங்கள்  அனைவருக்கும் குஜராத்திய வகை நொறுக்குத் தீனிகள் விநியோகிக்கப்பட்டன. அந்தத் குஜராத்தை சேர்ந்த தமிழ் நண்பர் எங்களோடு நிறைய பேசினார். அமர்நாத் சென்று திரும்பியது பற்றி பேசினார். ஸ்ரீநகர்,  மற்றும் அனந்தநாக் போன்ற பகுதிகளில் கலவரம் அதிகமாகி விட்டதால், பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறது என்றும், அதன் காரணமாகவே சாலை போக்குவரத்தில் கெடுபிடிகள் அதிகமாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் சாலையில் இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் கால தாமதம் இனிமேல் தொடரும் என்பதையும் அவருடன் பேசியபோது எங்கள் வண்டிகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பதையும்,  இனிமேல் இந்த வகையிலான சங்கடங்கள் அடிக்கடி நேரும் என்பதையும் புரிந்து கொண்டோம். 

அரைமணி நேரத்துக்குள் உணவு தயாரிப்பு வேலைகள் முடிந்து விடும் என்றுஆவலோடு எதிர்பார்த்த எங்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ராணுவ ஜீப்பில் அங்கே வந்த பாதுகாப்பு அதிகாரிகள் எல்லா வண்டிகளையும் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எங்கள் ஆர்கனைசர் அவர்களுடன் பேசினார்.
 
இருப்பினும் சமையலை முடிக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புபிரச்சினைகள் காரணமாக நாங்கள் அனைவரும் அங்கிருந்து சென்றாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டோம்.
 
இதனால் சமையல் இடையிலேயே  நிறுத்தப்பட்டு  அப்படியே வெந்தது,  வேகாதது என்று பாதி  சமைக்கப்பட்ட உணவுகளுடன்  பாத்திரங்கள்  அனைத்தும் பஸ்களில் ஏற்றப்பட்டன. எதுவும் புரியாமல் ஏன்,  எதற்கு,  என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த போது,  நாங்கள் கடக்கவிருக்கும் பகுதிகளை அந்திப் பொழுது நேரத்துக்குள் கடந்தால்தான் பயணிகளுக்கு ஆபத்து இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் விளக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்த பின்னர்அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதும் நாங்கள் விரும்பும் இடத்தில் சமைத்து உணவருந்தலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எங்கள் ஆர்கனைசரிடமும், பஸ் டிரைவரிடமும், எங்கள் சமையல்காரர் காசி விஸ்வநாதனிடமும் கூறினார்கள்.

நண்பகல் உணவு திட்டத்தை பிற்பகல் உணவுத் திட்டமாக  செயல்படுத்தமுடியாமல் போனதினால் டூர் ஆர்கனைசர் எங்கள் அனைவருக்கும் தாபாவில் இருந்து தேநீர் ஏற்பாடு செய்தார். சிலர் அங்கே எண்ணையில் பொறிக்கப்பட்டு விற்கப்பட்ட பஜ்ஜி போன்ற வகைகளை வாங்கி அவசரமாகச் சாப்பிட்டார்கள். சமைக்க ஆரம்பித்தது  கைக்கும் எட்டாமல், வாய்க்கும் எட்டாமல்  நொந்தபடி எல்லோரும் அவரவர்  பஸ்களில் ஏறி தமது இருக்கைகளில் அமர்ந்து  பயணத்தைத் தொடர்ந்தோம். போகும் வழியில் வேறு ஒரு ஊரில் இறங்கி மீண்டும் சமைத்துக் கொள்ளலாம் என்பதாக முடிவாயிற்று. இவ்வாறாக எங்களது அன்றைய மதிய உணவு குஜராத்திகள் மனமுவந்து அளித்த நொறுக்குத் தீனியிலும், தாபாவில் குடித்த டீயிலும் முடிந்தது.
 
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹால் (Banihal) என்னும் இடத்தை கடந்து செல்லும் போது அனைவரும் ஆர்வத்துடன் ஜவஹர் டன்னல் (Jawahar Tunnel) என்று அழைக்கப்படும், மலையைக் குடைந்து ஜம்மு-காஷ்மீரை இணைக்கும் மலைகுகைப் பாதையைக் கண்டோம். சுமார் இரண்டரை கி.மீ தூரம் உள்ள இந்த குகை ஆசியாவிலேயே மிக நீளமான மலையை குடைந்து அமைக்கப்பட்ட தரை வழி குகைப் பாதை ஆகும். பனிஹால் கணவாய் (Banihal Pass) பீர்-பாஞ்சால் மலைத் தொடர்களில் அமைந்துள்ளது. இந்த ஜவஹர் டன்னல் நாட்டுப் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவ பங்காற்றுகிறது என்பதினால் இந்த குகைப் பாதை இராணுவத்தின் இருபத்திநான்கு மணிநேரக் கண்காணிப்பில் உள்ளது.
 
மேலும் இந்த குகைப் பாதைக்குள் செல்லும் வண்டிகள் ஒரே வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன. குகைக்குள் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடியோ அல்லது புகைப்படங்கள் எடுக்க தடை செய்யப்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்  இது.

அடுத்து இரண்டு மணிநேரப் பயணம் ஆன பின்னர் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துஎங்கள் பஸ்கள் நிறுத்தப்பட்டது. நாங்கள் நிறுத்திய ஊரின் பெயர் கூட சரியாகதெரியவில்லை. வழியில் இருந்த ஒரு கிராமம் அது. பஸ் டிரைவரும், காசியும் அந்த ஊர்க்காரர்களிடம் பேசி விட்டு பின்னர் சமையல் பாத்திரங்களை கீழே இறக்கினார்கள்.
 
அப்போது நேரம் சுமார் மாலை ஆறு மணி இருக்கலாம். ஸ்ரீநகரில் கலவரங்கள்தொடர்வதால் இரவு நேரங்களில் எட்டு மணிக்கு பிறகு  (இந்த சமயங்களில் இந்தப் பகுதிகளில் இரவு எட்டு மணிக்கு தான் அந்தி சாயும்) ஸ்ரீநகருக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது என்றும் அந்த ஊரில் உள்ளவர்களை கேட்டு அறிந்து கொண்டோம்.

இந்த ஊரிலும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களே. .அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பக்கத்து மசூதியில் மாலை நேர தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அந்த ஊரில் ஒரு முக்கியமான முஸ்லிம் பிரமுகர் எங்களை பயம் இல்லாமல் இங்கே உணவு சமைத்து சாப்பிடலாம் என்று கூறி, சமைக்கத் தேவையான நீரை ஒரு ஹோஸ் குழாயின் மூலமாக வீட்டுக்குள் இருந்து ஏற்பாடு செய்தார். குடிக்க, முகம் கழுவவும் அந்த தண்ணீரை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். வெகு நேரம் எங்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தது எங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தது.

அதே போல பெண்கள் தனியாக தங்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளவும், அவரது வீட்டுப் பெண்கள் மூலம் வழி வகைகள் செய்து கொடுத்தார். அக்கம் பக்கம் உள்ள சிறு கடைகள் சில திறந்திருந்தன. காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் அப்போது ஊரடங்கு உத்தரவில் இருந்தததால் மாலை நேரங்களில் ஓரிரு மணி நேரங்கள் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்வதற்காக இந்த உத்தரவு தளர்த்தப்படும்.

சமையல் தயாராக ஆவதற்குள் நம் நண்பர்கள் அங்கு கிடைத்த நொறுக்குத் தீனிகளையும், எண்ணையில் தயாரித்து வைத்திருந்த சில உணவுப் பண்டங்களையும்,  குல்ஃபி வகையறாக்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜம்முவில் இருந்தே ப்ரீபெய்ட் இணைப்புகள் உள்ள கைபேசிகளை  பயன்படுத்த தடை இருந்ததால், அங்கிருந்த எஸ்.டி.டி. பூத்துக்களில் இருந்து ஊருக்கு போன் செய்து நாங்கள் எப்படியிருக்கிறோம், எங்கிருக்கிறோம் என்ற விவரங்களை எங்கள் இல்லத்தினருக்கு தெரிவித்தோம்.

என் மனைவி என்னிடம் பேசும் போது தான் பார்த்த தொலைக் காட்சி செய்திகளைப் பற்றி என்னிடம் தெரிவித்தாள். காஷ்மீர் பகுதிகளில் கலவரம் அதிகமாக இருப்பதை, கல்வீச்சு சம்பவங்களை நேரடியாக நமது டீ.வீக்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருப்பதில் இருந்து உணர முடிகிறது என்றும் அதனால் எங்களது பாதுகாப்பு குறித்து அவள் தன் கவலையைத் தெரிவித்தாள். இதைக் கேட்ட நான் நமது ராணுவத்தினர் வழியெல்லாம் எங்களுக்கு தந்து கொண்டுவரும் ஒப்பற்ற பாதுகாப்பைப் பற்றி விளக்கி அவளைத் தைரியமாக இருக்கும்படி சொன்னேன்.

சென்னையில் இருக்கும் மற்றொரு நண்பரிடம் பேசும் போது அமர்நாத் யாத்திரிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் தொலைபேசிகளில் பேசியது இந்திய ராணுவத்தினரால் இடைமறித்துக் கேட்கப்பட்டதாக தொடர்ந்து செய்தி ஒளிபரப்படுவதையும் அவர் என்னிடம் தெரிவித்தார். எங்கள் பயணத்தின் காலதாமதத்துக்கான காரணம் இப்போது எங்களுக்கு புரிந்தது.

ஏற்கனவே ஊர்க்காரர்கள் தெரிவித்தபடி ஸ்ரீநகருக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்காது என்பதும் எங்களுக்கு இப்போது புரிந்து விட்டது. எங்களுக்கு இதில் இருந்த சங்கடம் என்னவென்றால், ஆரம்பத்தில் இருந்தே அமர்நாத் பயணத்துக்கான பல பொருட்களை ஸ்ரீநகரில் வாங்கி கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்ததால் அவைகளை அமர்நாத் போவதற்கு முன்னர் வாங்க முடியுமா? என்ற ஐயம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

(யாத்திரை தொடரும்)

No comments: