அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை (2010)
பயண அனுபவங்கள்...
(படம் நன்றி: கூகிள்)
பகுதி இரண்டு..
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் .
என்னிடம் செல்பேசியில் பேசிய நண்பர் கோவிந்த் மனோகர் சொன்னது இதுதான். ''அமர்நாத், வைஷ்ணோதே வி யாத்திரைக்கு நானும் என் மனைவியும் செல்கிறோம். நம் அலுவலக நண்பர்கள் பத்து பேர் உடன் வருகிறார்கள். யாத்திரைக்கான முன்பதிவு எல்லாம் திரு ராஜராஜன் (டூர் ஆர்கனைசர்) செய்து விட்டார். இது இரண்டு வார பயணம். உங்களால் வர இயலாது என்று நினைத்தே உங்களிடம் சொல்லவில்லை.''
நான், ''அடடே. என்ன இப்படி பண்ணிட்டீங்க. நான் வருகிறேனோ இல்லையோ வழக்கமாய் முன்னதாக எனக்கு சொல்வீங்களே. அதே போல இந்த முறையும் எனக்கு சொல்லியிருக்கலாமே?'' என்றேன் பதைபதைப்புடன்.
நண்பர் கொஞ்சம் நேரம் யோசனை செய்துவிட்டு சொன்னார், ''அடடே. உங்கள் ஆர்வம் தெரியாம போச்சே! நீங்க உண்மையிலிலேயே வரணும்னு விரும்பினா சொல்லுங்க, ஆர்கனைசரிடம் பேசி சான்ஸ் இருக்கான்னு பாக்கறேன்.''
''சார்! உடனே பேசுங்க!'' என்றேன் ஆர்வத்துடன்.
எல்லாம்வல்ல பிறைசூடியை வேண்டிக் கொண்டேன். ''இம்முறை எப்படியாவது என்னை அமர்நாத் யாத்திரைக்கு அழைத்துப் போ என் சிவமே'' என்று.
காத்திருந்த நிமிடங்கள் யுகங்களாய் கழிய, ஒரு மணி நேரத்துக்கு பின்னர் கோவிந்த் மனோகர் மீண்டும் என்னுடன் பேசினார். ''இப்போது ஆர்கனைசர் வேறு ஒரு குழுவுடன் வாரணாசி சென்றிருக்கிறார். வர பத்து நாட்கள் ஆகும். வந்த பிறகு பேசிக் கொள்ளலாமே'' என்றார். நான் விடுவதாக இல்லை.
திரு.ராஜராஜனின் மொபைல் எண்ணை வாங்கி கொண்டு அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க, ரோமிங் என்பதினால் அவர் முன்பின் தெரியாத எண் என்று என் அழைப்புகளை தவிர்க்க, நானும் விடாமல் தொடர்பு கொள்ள, பின்னர் ஒருவழியாய் அவராகவே என்னை எனது செல்பேசியில் அழைத்தார். பரபரப்புடன் நான் கோவிந்த் மனோகர் சொன்ன செய்தியை சொல்லி என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அமர்நாத் பயண ம் பற்றி விசாரித்தேன். அவர் மீண்டும் அழைப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
பிறகு அழைக்கிறேன் என்றவர் அன்றே அழைத்திருக்க வேண்டும். நான் மீண்டும் முயற்சிக்கும் போது அவரது தொடர்பு கிடைக்கவில்லை. மறுநாள் வரை அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. நான் கோவிந்த் மனோகரிடம் தொடர்ந்து இதைப் பற்றி நச்சரிக்க அவரும் ராஜராஜனிடம் பேச முயன்று கொண்டிருந்தார். மறுநாள் ஒரு வழியாக நான் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்து விவரங்களை சொன்னேன். எனது ஆர்வத்தை புரிந்து கொண்ட. ராஜராஜன், ‘’ச ரி சார். ஒன்று செய்யுங்கள். உங்களுக்கான பயண முன்பதிவுகளை நான் சொல்லும் ரயில்களில், தேதிகளில் செய்து விடுங்கள். முன் பதிவுகள் உங்களுக்கு உறுதியாக கிடைத்து விட்டால் எங்களுடன் யாத்திரையில் நீங்கள் கலந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை'' என்றார். அவரிடம் பயண தேதிகளையும், முன் பதிவு செய்யவேண்டிய ரயில்கள், எங்கிரு ந்து எங்கே முன்பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப் பெற்று கொண்டேன்.
கோவிந்த் மனோகரிடம் நான் பெற்ற பயண தேதிகளையும், ரயில் விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரி பார்த்து கொண்டேன்.
அலுவலத்துக்கு அவசரமாக போன் செய்து லீவு சொல்லிவிட்டு பயணத்துக்கான முன் பதிவுகளை செய்து கொள்ள விரைந்தேன். ரயில்வே முன் பதிவு அலுவலகத்தில் ஏப்ரல் மாத கடைசி என்பதால் கோடை விடுமுறை பதிவுகளை செய்துகொள்ள கூட்டம் நிரம்பி வழிந்தது.
வரிசையில் பொறுமையாக காத்திருந்து ஒவ்வொரு முன்பதிவையும் செய்தேன். ஜூலை மூன்றாம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட் டு புது தில்லி, பழைய தில்லியிலிருந்து ஜம்மு தாவி, பின்னர் யாத்திரை முடிந்த பின்னர் ஜம்முவிலிருந்து ஹரித்வார், அப்புறம் ஜூலை பதினாறு அன்று புது தில்லியிலிருந்து புறப்பட்டு பதினெட்டாம் தேதி அன்று காலை சென்னை வரும் வரைக்கும் கடவுள் அருளால் எல்லா தேதிகளுக்கும் முன் பதிவு கிடைத்து விட்டது.
மீண்டும் இறைவனுக்கு இதயநன்றிகளை பணிந்து வணங்கி சொல்லிவிட்டு ராஜராஜனிடம் பேசினேன். பதிவுகள் உறுதியாக கிடைத்தனவா என்று கேட்டு அறிந்து கொண்டு அதிகார பூர்வமாக எனது பெயரை அவர் பயணியர் பட்டியலில் குறித்துக் கொண்டார். பின்னர் எனது நண்பர் கோவிந்த் மனோகருக்கும் இந்த செய்தியை சொல்லி அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். யாத்திரையில் நானும் இணைந்து வருவதில் அவருக்கு சொல்லொணா மகிழ்ச்சி.
பின்னர் ஒரு வாரம் கழித்து திரு.ராஜராஜன் சென்னை வந்த அன்றே அவரை சந்தித்து அமர்நாத் யாத்திரைக்கான அனுமதியை அமர்நாத் யாத்திரை வாரியத்திடம் இருந்து வாங்குவதற்கான பதிவு விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கொடுத்தேன். மற்ற எண்பத்தோரு விண்ணப்பங்களுடன் எனது விண்ணப்பமும் எண்பத்து இரண்டாவது விண்ணப்பமாக சேர்க்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொண்டு அவரிடம் யாத்திரைக்கான முன் பணம் தந்தேன்.
இறைவன் அருளால் ஒரு கட்டத்தினை தாண்டி விட்டேன். அடுத்து ஒரு விஷயம், அலுவலகத்தில் இருந்து இரண்டு வாரங்கள் லீவு பெறுவது. அதுதான் அடுத்த சவால். இறைவனிடம் மீண்டும் கையேந்தினேன். கருணையுள்ள சிவம் அதற்கும் செவி மடுத்தார்.
ஜூலை மூன்றாம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கத் துவங்கினேன். இணையத்திலும், நூ லகங்களிலும் காஷ்மீர், அமர்நாத், வைஷ்ணோதேவி மற்றும் காஷ்மீர சைவம், இமயமலை பற்றிய செய்திகளை தேடிப் பிடித்து படித்தேன். சுவாமி ராமா எழுதிய '' Living with the Himalayan Masters'', சுவாமி அகண்டானந்தா எழுதிய ''இமயத்தின் மடியில்'' ஆகிய இரண்டு நூல்களும் புனித இமயம் பற்றிய என் கனவுகளுக்கு மேலும் உரம் சேர்த்தன. ஆன்மீக நம்பிக்கை உள்ள எல்லோருமே மேற்கண்ட இரண்டு புத்தகங்களையும் அவசியம் படிக்க வேண்டும். அதே போல சுவாமி சித்பவானந்தாவின் 'திருக்கயிலாய யாத்திரை'' புத்தகமும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. பரமஹம்ச யோகானந்தரின், ''ஒரு யோகியின் சுயசரிதை''யில் இமய மலையைப் பற்றிய அருமையான வர்ணனைகளை சுவாமிஜி தந்திருப்பார். முன்பே பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் அந்த பகுதிகளையெல்லாம் தேடிப் படித்தேன்.
ஏற்கனவே பலமுறை அமர்நாத்துக்கு பயணம் சென்று வந்திருந்த நண்பர் பன்னீர்செல்வம் நிறைய குறிப்புகளை தந்து உதவினார். திருமதி கீதா சாம்பசிவம் (நம்ப பதிவுலகத் தலைவி) தனி மடலில் நிறைய குறிப்புகளை தந்து உதவினார். இறைவனின் அன்பு இவர்கள் மூலமாய் எனக்கு பிரவாகமாய் வந்து சேர்ந்தது. பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை ஜரூராக செய்தேன்.
இரவு உறக்கத்தில் கூட அமர்நாத் பற்றிய நினைவுகளே எனது கனவுகளை ஆக்கிரமித்து இருந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சிம்லா சென்றிருந்தேன். அதற்கு பிறகு இமயமலை பக்கம் சென்றது பத்து ஆண்டுக்கு முன்பாக ஹரித்வார்-ரிஷிகேசுக்கு மட்டுமே பின்னர் அலுவலக பணிச் சுமை காரணமாக வடக்குப் பக்கம் புனித யாத்திரை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இமயத்துக்கு புனிதப் பயணம் செல்வது என்பது நமது பாரத்ததின் பண்டைய ஆன்மீக மரபாக இருந்து வருகிறது. இன்றைக்கும் இந்த ஆன்மீகப் பாரம்பர்யம் தொடர்கிறது என்பது பெருமை தருவதாக உள்ளது. எத்தனை நாகரீக வளர்ச்சி இருந்தாலும் அந்த வளர்ச்சிகளை புனித பயணத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் நமது பாரத மக்களை எத்தனை பாராட்டினாலும் தகும். எந்த தொலைத் தொடர்புகளும் இல்லாத, போ க்குவரத்து வசதிகளோ, இப்போது உள்ளது போன்ற சாலை வசதிகளோ இல்லாத காலங்களில் துவங்கிய இந்த இமாலயப் புனித யாத்திரை, எல்லா நவீன வசதிகளுக்கும், அரசியல்/மத இடையூறுகளுக்கும் இடையே இன்றளவிற்கும் தொடர்ந்து வருகிறது.
நமது ரிஷிகளால் துவங்கப்பட்ட இந்த புனித யாத்திரைகளை மேற்கொள்ளுவதை அரசர்கள் துவங்கி சாதாரண மக்கள் ஆண்டிகள் வரையில் அனைவரும் தமது பிறவியின் முக்கிய கடமையாகவே கருதுகிறார்கள். வாரணாசி, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், முக்திநா த், கைலாஷ்நாத் போன்ற எண்ணற்ற இடங்களுக்கான புனித யாத்திரைகள் பாரத மக்களின் ஆன்மீக இறைதேடலுக்கு நிறைய பங்களிப்புகளை தந்து வருகின்றன.
இமாலய மலைத் தொடர்கள் 1491 மைல்கள் நீண்டு விளங்குகின்றன. உலகின் உயரமான மவுண்ட் எவரஸ்ட் (29029 அடிகள்) இமயமலைத் தொடரில் நேபால், திபெத் எல்லையில் அமைந்துள்ளது. பெர்சியர்கள், பண்டைய பாரதத்தின் மகரிஷிகள், திபெத்தியர்கள் மற்றும் சீனர்கள் இமய மலையின் அழகைப்பற்றியும், புனிதம் பற்றியும், பிரம்மாண்டம் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.
சமஸ்க்ருதத்தில் ஹிமாலயம் என்ற சொல்லுக்கு (ஹிமம்=பனி ஆலயம்=உறைவிடம்) பனியின் உறைவிடம் என்று பொருள். உலகில் மற்ற பகுதிகளில் பனி படர்ந்த மலைகள் நிறைய இருக்கும் போது கூட இமய மலைக்கு என்று தனிப் பெருமை உள்ளது. தொன்று தொட்டு ஆன்மீக நம்பிக்கைகளின்/மரபுகளின் காப்பகமாக இருந்து வரும் இமயமலை இன்றளவிலும் அந்த மரபுகளை தொடர வைத்து வருகிறது. இமயத்தின் குரலைக் கேட்கவல்ல அகப்புலன் உள்ள ஞானிகளும், சாதுக்களும், பெரியவர்களும் தொடர்ந்து அங்கிருந்து ஆன்மீக சக்தியை பெற்று இன்றளவிலும் என்னைப் போன்ற சாதாரண மானிடர்களுக்கு அளித்து வருகிறார்கள்.
பாரதத்தின் தெற்கு கோடியில் வாழுகின்ற நமக்கு கோடை வெப்பமும், குளிர்காலமும் வடக்கத்திய பகுதிகளை போல தீவிரமானவை அல்ல. யாத்திரை மேற்கொள்ள நம்மை தயார் செய்து கொள்ளும்போது நாம் எந்த பகுதிக்கு செல்லவிருக்கிறோம், அதற்கான உடைகள் என்னென்ன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சாதுக்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. நான் அமர்நாத்தில் பார்த்த போது பல சாதுக்கள் பனி படர்ந்த, கரடு முரடான மலைப்பாதைகளில் வெறும் காலில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இடுப்பில் ஒரு துணி மட்டுமே கட்டியிருந்தார்கள்.கோ வணம் மட்டுமே அணிந்து கொண்டு உடலெல்லாம் வெண்ணீறு பூசி பனி மலையில் பயணித்த பல சாதுக்களைக் கண்டு வியந்து போனேன். அமர்நாத் யாத்திரை உல்லாசப் பயணம் என்று நினைத்து யாரும் சென்று விட வேண்டாம். உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் சற்றேறக் குறைய 14000 அடி உயரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும்.
எனவே நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் யாத்திரை மேற்கொள்ளுமுன்பு தக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு பின்னர் பயணம் மேற்கொள்ளுவது நல்லது.
அமர்நாத் யாத்திரையின் போது என் னவெல்லாம் கைவசம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று முன்பே பயணித்த நண்பர்களிடம் கேட்டறிந்து ஒரு பட்டியல் தயார் செய்து கொண்டேன்.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------
No comments:
Post a Comment