Saturday, October 31, 2009

அற்புதத்தில் அற்புதம் (ஓஷோ பேசுகிறார்)

சீடன் நம்பவேண்டும். சந்தேகப்படக் கூடாது. குருவுக்கு முன்னால் கவசத்தை முற்றிலுமாக கழட்டிவிட வேண்டிவரும். பரிபூரண நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் ரகசியங்கள் வெளியாகும். அப்போதுதான் சாவிகள் உங்களுக்கு வழங்கப்படும். 


நீங்கள் உங்களை மறைத்து வைத்துக்கொண்டால் நீங்கள் குருவுடன் மோதுவதாக அர்த்தம். சரணாகதியே திறவுகோல். போராட்டமன்று.


நம்புவது என்பது இரு கண்களும் மூடிக்கொள்ளுவது. கண்கள் திறந்திருந்தபோது வெளியே நோக்கிச்செயல் படவேண்டிய ஆற்றல் கண்களை மூடிக்கொண்டதும் பின்னுக்குத் திரும்புகிறது. மாற்றம் நிகழ்கிறது. அந்தச் சக்திதான் உங்கள் மூன்றாம் விழியைத் தாக்குகிறது. மூன்றாம் விழி ஒரு பருப் பொருள் அன்று. வெளிப்பாய்ந்த சக்தி தன மூலத்தை (ஆதாரத்தை) நோக்கிப் பாய்வதுதான் அது. அதுதான் மூன்றாம் விழி. இந்த உலகத்தைப் பார்க்கும் மூன்றாவது விழி அதுதான். உடல்தான் உடலால் பிறக்கும். உள்ளார்ந்த சுயம் உடலால் தோன்றாது. அது தெய்வ அனுக்கிரகத்தினால் பிறப்பது. அதைக் காண வேறு மாதிரியான கண்கள்/செவிகள் வேண்டும். நுட்பமான அம்சம் அது.


சந்தேக மனமே பின்னால் திரும்பிப் பார்க்கும். அப்போதும் மாற்றுத் தேடும். செய்யாமல் விடுபட்டது என்ன? செய்தது சரிதானா? என்றெல்லாம் சந்தேகம் கொள்ளும். ஆன்மீகத்தில் சந்தேகம் இருந்தால் உங்களுக்கு பதில் கொடுக்கவேண்டிய இதயத்தின் கதவுகள் மூடிக்கொள்ளும்.


தொழில் நுட்பம் வசதிகளை உருவாக்கி விட்டது. தவிரவும் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து உங்களை ஒழித்துக் கட்டியும் விட்டது. தொழில் நுட்பம் நல்ல வீடுகளை உருவாக்கியது. நல்ல மனிதரை உருவாக்கவில்லை. காரணம் நல்ல மனிதரை உருவாக்க வேறு ஒரு பரிணாமம் தேவைப் படுகிறது. அது இயந்திரவியல், தொழில் நுட்பம் சம்பந்தப் பட்டதல்ல. அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது. அறிவியலால் ஒரு புத்தரையோ, யேசுவையோ உருவாக்க முடியாது.


எப்போது ஒரு வினா களங்கமற்றதாகும்? கேட்பவரிடம் பதில் இருந்தால் அது களங்கமற்றதன்று. உதாரணமாக கடவுள் இருக்கிறாரா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், உங்களிடம் அதற்கு பதில் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக என்னைக் கேட்கிறீர்கள். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர் நீங்கள். எனக்கு தெரியுமா தெரியாதா என்று பார்க்க (சீண்டி விட) என்னை பார்த்து அப்படி கேட்கிறீர்கள். உங்களிடம் பதில் இருந்தால் உங்கள் வினா தந்திரமானது.


வினாக்கள் இரண்டு வகை: அறிந்து கேட்பது ஒருவகை. இது பயனற்றது. இதில் விவாதங்கள் பிறக்கும். உரையாடல் சாத்தியமில்லை. அறியாமல் கேட்பது இரண்டாவது வகை. விடை தெரியாது என்று தெளிவைத் தெரிந்து கேட்கும்போது நீங்கள் அந்த வினாவின் மூலம் சீடர் ஆகிவிடுகிறீர்கள்.


சீடர் என்றாலே தங்களுக்குத் தெரியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.

Sunday, October 25, 2009

உணர்ச்சிகள் - ஒரு உவமைக்கதை

''இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி, நீல பனிப்படலம் போர்த்தியிருக்கும் மலையை நான் பார்க்கிறேன். மலை எவ்வளவு அழகாக இருக்கிறது?'' -- கண்கள் தன்னை மறந்து சொல்லின.

காது அதைக் கேட்டது. கூர்மையான கவனத்துடன் சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் காது சொன்னது: ''எங்கே இருக்கு மலை? என்னால் அதைக் கேட்க முடியலயே!''

மலையை அறிந்து கொள்ளவும், தொடவும் நானும் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோசனமும் இல்லையே. மலையை என்னால் தொட முடியலே'' - சொன்னது உள்ளங்கை.

''மலையே இல்லே! என்னாலே வாசனையை உணரவே முடியல..'' -மூக்கு தன் நிலையைச் சொன்னது.

அப்போது கண்கள் மறு பக்கமாகத் திரும்பி அழகை ரசிக்க ஆரம்பித்தன. எல்லோரும் சேர்ந்து கண்களின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பலவாறு விமர்சிக்க ஆரம்பித்தார்கள். 

கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்: ''கண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை.''
(கலீல் கிப்ரானின் குட்டிக் கதை)

ஆடைகள்

ஒருநாள் அழகும் அசிங்கமும் கடற்கரையில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டன. ''நாம் ஒன்றாய்க் கடலில் குளிப்போம்'' என்று கூறி தாம் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்து விட்டு கடலில் இறங்கி நன்றாய் நீந்திக் குளித்தன. சற்று நேரம் சென்ற பின்னர் அசிங்கம் கரைக்கு வந்தது. அழகின் ஆடைகளை உடுத்திக் கொண்டு அழகிடம் சொல்லிக் கொள்ளாமல் நடையை கட்டியது. குளித்த பின்னர் அழகு கரைக்கு வந்து பார்த்த போது அதன் ஆடைகளைக் காணாமல் திகைத்தது. வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு திரும்ப நடந்தது. அதன் பிறகுதான் ஆண்களும், பெண்களும் அழகையும் அசிங்கத்தையும் தவறாக அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். ஆடையை மட்டும் பார்த்தவர்கள் அசிங்கத்துக்கு மரியாதை தந்தார்கள். அழகை உதாசீனம் செய்தார்கள். எனினும், ஆடையைப் பார்க்காமல் அழகின் முகத்தை பார்க்கிறவர்கள் சிலராவது அழகை அடையாளம் கண்டுகொண்டு அதற்குரிய அங்கீகாரத்தினை தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அசிங்கத்தின் முகத்தினைப் பார்த்து உண்மையை உணருபவர்கள் இப்போதும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
ஆடைகளால் அசிங்கத்தையோ அழகையோ ஒருபோதும் மறைத்து விட முடியாது.
(நன்றி: கலீல் கிப்ரானின் நூறு குட்டிக்கதைகள், தையல் வெளியீடு, சென்னை)