ஒருநாள் அழகும் அசிங்கமும் கடற்கரையில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டன. ''நாம் ஒன்றாய்க் கடலில் குளிப்போம்'' என்று கூறி தாம் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்து விட்டு கடலில் இறங்கி நன்றாய் நீந்திக் குளித்தன. சற்று நேரம் சென்ற பின்னர் அசிங்கம் கரைக்கு வந்தது. அழகின் ஆடைகளை உடுத்திக் கொண்டு அழகிடம் சொல்லிக் கொள்ளாமல் நடையை கட்டியது. குளித்த பின்னர் அழகு கரைக்கு வந்து பார்த்த போது அதன் ஆடைகளைக் காணாமல் திகைத்தது. வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு திரும்ப நடந்தது. அதன் பிறகுதான் ஆண்களும், பெண்களும் அழகையும் அசிங்கத்தையும் தவறாக அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். ஆடையை மட்டும் பார்த்தவர்கள் அசிங்கத்துக்கு மரியாதை தந்தார்கள். அழகை உதாசீனம் செய்தார்கள். எனினும், ஆடையைப் பார்க்காமல் அழகின் முகத்தை பார்க்கிறவர்கள் சிலராவது அழகை அடையாளம் கண்டுகொண்டு அதற்குரிய அங்கீகாரத்தினை தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அசிங்கத்தின் முகத்தினைப் பார்த்து உண்மையை உணருபவர்கள் இப்போதும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
ஆடைகளால் அசிங்கத்தையோ அழகையோ ஒருபோதும் மறைத்து விட முடியாது.(நன்றி: கலீல் கிப்ரானின் நூறு குட்டிக்கதைகள், தையல் வெளியீடு, சென்னை)
No comments:
Post a Comment