Saturday, October 31, 2009

அற்புதத்தில் அற்புதம் (ஓஷோ பேசுகிறார்)

சீடன் நம்பவேண்டும். சந்தேகப்படக் கூடாது. குருவுக்கு முன்னால் கவசத்தை முற்றிலுமாக கழட்டிவிட வேண்டிவரும். பரிபூரண நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் ரகசியங்கள் வெளியாகும். அப்போதுதான் சாவிகள் உங்களுக்கு வழங்கப்படும். 


நீங்கள் உங்களை மறைத்து வைத்துக்கொண்டால் நீங்கள் குருவுடன் மோதுவதாக அர்த்தம். சரணாகதியே திறவுகோல். போராட்டமன்று.


நம்புவது என்பது இரு கண்களும் மூடிக்கொள்ளுவது. கண்கள் திறந்திருந்தபோது வெளியே நோக்கிச்செயல் படவேண்டிய ஆற்றல் கண்களை மூடிக்கொண்டதும் பின்னுக்குத் திரும்புகிறது. மாற்றம் நிகழ்கிறது. அந்தச் சக்திதான் உங்கள் மூன்றாம் விழியைத் தாக்குகிறது. மூன்றாம் விழி ஒரு பருப் பொருள் அன்று. வெளிப்பாய்ந்த சக்தி தன மூலத்தை (ஆதாரத்தை) நோக்கிப் பாய்வதுதான் அது. அதுதான் மூன்றாம் விழி. இந்த உலகத்தைப் பார்க்கும் மூன்றாவது விழி அதுதான். உடல்தான் உடலால் பிறக்கும். உள்ளார்ந்த சுயம் உடலால் தோன்றாது. அது தெய்வ அனுக்கிரகத்தினால் பிறப்பது. அதைக் காண வேறு மாதிரியான கண்கள்/செவிகள் வேண்டும். நுட்பமான அம்சம் அது.


சந்தேக மனமே பின்னால் திரும்பிப் பார்க்கும். அப்போதும் மாற்றுத் தேடும். செய்யாமல் விடுபட்டது என்ன? செய்தது சரிதானா? என்றெல்லாம் சந்தேகம் கொள்ளும். ஆன்மீகத்தில் சந்தேகம் இருந்தால் உங்களுக்கு பதில் கொடுக்கவேண்டிய இதயத்தின் கதவுகள் மூடிக்கொள்ளும்.


தொழில் நுட்பம் வசதிகளை உருவாக்கி விட்டது. தவிரவும் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து உங்களை ஒழித்துக் கட்டியும் விட்டது. தொழில் நுட்பம் நல்ல வீடுகளை உருவாக்கியது. நல்ல மனிதரை உருவாக்கவில்லை. காரணம் நல்ல மனிதரை உருவாக்க வேறு ஒரு பரிணாமம் தேவைப் படுகிறது. அது இயந்திரவியல், தொழில் நுட்பம் சம்பந்தப் பட்டதல்ல. அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது. அறிவியலால் ஒரு புத்தரையோ, யேசுவையோ உருவாக்க முடியாது.


எப்போது ஒரு வினா களங்கமற்றதாகும்? கேட்பவரிடம் பதில் இருந்தால் அது களங்கமற்றதன்று. உதாரணமாக கடவுள் இருக்கிறாரா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், உங்களிடம் அதற்கு பதில் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக என்னைக் கேட்கிறீர்கள். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர் நீங்கள். எனக்கு தெரியுமா தெரியாதா என்று பார்க்க (சீண்டி விட) என்னை பார்த்து அப்படி கேட்கிறீர்கள். உங்களிடம் பதில் இருந்தால் உங்கள் வினா தந்திரமானது.


வினாக்கள் இரண்டு வகை: அறிந்து கேட்பது ஒருவகை. இது பயனற்றது. இதில் விவாதங்கள் பிறக்கும். உரையாடல் சாத்தியமில்லை. அறியாமல் கேட்பது இரண்டாவது வகை. விடை தெரியாது என்று தெளிவைத் தெரிந்து கேட்கும்போது நீங்கள் அந்த வினாவின் மூலம் சீடர் ஆகிவிடுகிறீர்கள்.


சீடர் என்றாலே தங்களுக்குத் தெரியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.