இந்த வலைப்பூவில் இடது பக்கம் மேலே இருக்கும் ஒலி பட்டியை இயக்கி ''ஓம் நமசிவாய'' என்னும் பஞ்சாக்கர உச்சாடனத்தைக் கேட்டுக் கொண்டே இந்தப் பதிவைப் படிக்க அழைக்கிறேன்.
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.
பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)
பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)
பாகம் இரண்டு - பகுதி 2: அமர்நாத் புனித யாத்திரை (காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது)
பயணம் தொடர்கிறது....
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். அமர்நாத் புனித யாத்திரை..
நாள்:10, ஜூலை, 2010 (அதிகாலை) (Srinagar to Baltal basecamp)
பகுதி-4: பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.
ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நிறுத்தப்பட்ட பஸ்களில் நாங்கள் மெய்ம்மறந்து தூங்கிக் கொண்டிருந்த போது, (அதிகாலை இரண்டரை மணி வேளையில் ராணுவம் எங்களது பஸ்களை இயக்க அனுமதித்ததால்) எங்கள் பஸ்கள் மேலும் கொஞ்ச தூரம் பயணித்து அவந்திபோரா என்னும் இடத்திற்கு சென்று சேர்ந்தது.
அவந்திபோரா என்று அழைக்கப்படும் இந்த பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இந்த இடத்தின் பழைய பெயர் அவந்திபூர். இப்போது அவந்திபுரா எனவும் அவந்திபோரா எனவும் மருவி அழைக்கப்படுகிறது. ராஜா அவந்திவர்மனால் (AD855-883) நிர்மாணிக்கப்பட்ட நகரம். இங்கே அவந்தீஸவரர் என அழைக்கப்படும் சிவன் கோவிலை மன்னன் அவந்திவர்மன் கட்டியதாகவும், பின்னாளில் தொடர் இஸ்லாமிய படையெடுப்புகளில் இந்த கோவிலும், நகரமும் பலமுறை சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. எங்கள் பயணம் ஏற்கனவே பலமுறை தாமதிக்கப்பட்ட பயணமாக இருப்பதால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைக் காண இயலாமல் போய்விட்டது.
அவந்திபோராவில் இதற்கு முன்னர் வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதிகாலை நாலு மணிக்கு நாங்கள் அங்கு சென்று சேர்ந்தோம். பஸ்கள் ஓரிரு மணிநேரம் இங்கு நிற்கும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே இந்த பகுதிகளில் பலத்த கோடை மழை பெய்திருந்ததால் பயங்கர குளிர் நிலவியது.
எங்களது டூர் ஆர்கனைசர் எங்களை காலைக் கடன்களை கழித்துவிட்டு காபி சாப்பிட்டு தயாரானால் மீண்டும் பயணத்தைத் தொடரலாம் என்று அறிவிப்புத் தந்தார். பஸ்ஸில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தோம். வெடவெடக்கும் குளிர் எங்களுக்கு நடுக்கத்தைத் தந்து கொண்டிருக்க, அனைவரும் நடுங்கிக் கொண்டே ஆளாளுக்கு கையில் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள் சகிதமாக இருட்டுப் புறங்களில் ஒதுங்க ஆரம்பித்தோம். எங்களுடன் யாத்திரைக்கு வந்த பெண்மணிகளும் ஒரு விதத்தயக்கத்துடனும் பயத்துடனும் வேறு ஒரு புறமாக இருட்டுக்குள் சென்றார்கள்.
இந்தப் பகுதியில் கழிவறை வசதி இல்லை. இருந்திருந்தால் பெண்களையாவது அங்கே அனுப்பியிருக்கலாம். தங்கு தடையற்ற பயணமாக இருந்திருந்தால் அனைவரும் பால்டால் முகாமுக்கு போயிருந்திருப்போம். இப்போதைய சூழ்நிலையில் இராணுவம் எங்களை எங்கே நிறுத்த அனுமதிக்கிறதோ அங்கேதான் இறங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஏற்பட்ட தர்மசங்கடம் இது. அடுத்த நிறுத்தம் எங்கே? எப்போது? அங்கே என்ன வசதிகள் கிடைக்குமோ? என்ற ஐயத்தில் இங்கு இருட்டுப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வது உசிதமானது என்று எங்கள் டூர் ஆர்கனைசர் நினைத்திருக்கலாம்.
மிகவும் அருகாமையில் ஒரு ஓடை பெருத்த சப்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. இருளில் இறங்கி காலை வைக்க எங்களுக்கு பயமாக இருந்தது. கோடைக் காலத்தில் இமயத்தில் இருந்து பனி உருகுவதால் பெருகி வரும் நீருடன், கோடை மழையும் சேர்ந்து கொண்டிருப்பதால் சிற்றோடைகளில் புதைசேறு அதிகம் இருக்கும், எனவே யாரும் இது போன்ற இடங்களில் எவரும் தேவையற்ற ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே எங்களுக்கு சொல்லப்பட்டிருந்ததால் அந்த விஷப்பரீட்சையில் நாங்கள் யாரும் ஈடுபடவில்லை.
ஒரு விதமான அசௌகரியத்தொடு தான் நாங்கள் காலைக் கடன்களை கழிக்க முடிந்தது. பஸ் நிறுத்தத்தில் ஓரிரு குழாய்களில் நிறைய தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எல்லோரும் அங்கே சென்று ஒவ்வொருவராக பல் துலக்குதல், முகம், கைகால் கழுவுதல் போன்ற அலுவல்களை முடித்தோம். அதிகாலையில் எங்களுக்கு குளிக்கத்தான் ஆசை. ஆனால் தண்ணீரோ மிகவும் சில்லென்று இருந்தது. எனவே காக்கைக் (கால்+கை) குளியலை எடுத்துக் கொண்டோம்!
என்ன செய்வது?
குளிரில் நடுங்கிக் கொண்டே வந்த எங்களுக்கு காசி சூடான காப்பியைத் தயாரித்துத் தர அதை எனைவரும் ஆவலுடன் வாங்கிப் பருகினோம். பயணம் செல்லும் வழியில் எங்களுக்குக் காலை எட்டுமணிக்குத் தரவேண்டிய காலைச் சிற்றுண்டியை சமையல் குழுவினர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த அதிகாலையிலும் அங்கே சிறு கடைகள் இருந்தன. அமர்நாத் சீசன் என்பதினால் இந்த இடங்களில் இந்த இரண்டு மாதங்களில் ஏதாவது வியாபாரம் செய்து காசு பார்த்தால் தான் உண்டு என்கிற அளவில் தான் கடைகளை வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் முன்னரே திட்டமிட்டபடி ஸ்ரீநகர் ஷாப்பிங் செல்வது தடைப்பட்டதால் இந்தக் கடைகளில் கம்பளிக் கையுறைகள், மஃப்ளர், சால்வைகள், உல்லன் சாக்ஸ் போன்றவற்றை வாங்கினோம். கொஞ்சம் விலை அதிகம் தான். அடுத்து பால்டால் முகாம்தான். அங்கே என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பது தெரியாத சூழலில் கிடைத்தவரை பொருட்களை வாங்கிக் கொண்டோம். பயணம் என்று வந்து விட்ட பின்னர் இவை போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
காலை சுமார் ஆறு மணிக்கு, நாங்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாக திரு ராஜராஜன் அறிவிக்க, இதற்குள் காசி குழுவினர் காலை சிற்றுண்டியை தயார் செய்து வண்டியில் ஏற்றி விட்டிருந்தனர். மீண்டும் பஸ் பயணம் தொடர்ந்தது.
இருமருங்கிலும் அருமையான இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகின. கண்ணுக்கு எட்டிய வரையில் நிமிர்ந்து நிற்கும் இமய மலைச் சிகரங்கள், ஓங்கி உயர்ந்த சினார் மரங்கள், பூத்துக் குலுங்கும் தாவரங்கள் என்று காலைச் சூரியனின் பொற்கிரணங்களில் மீண்டும் இயற்கை எழில் வண்ணங்களை கண்டு கொண்டே வந்தோம்.
சுமார் எட்டு மணியளவில் மேலும் ஒரு இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இங்கு ஒரு வைஷ்ணோ தாபாவில் நாங்கள் அமர்ந்து, காசி தயாரித்து வைத்திருந்த சூடான சுவையான வெண்பொங்கலை, சட்னியுடன் வழங்கினார். காலைக் குளிருக்கு இதமாக அனைவரும் பொங்கலை ருசித்து சாப்பிட்டனர். பின்னர் தாபாவிலிருந்து அனைவருக்கும் டீ வாங்கித் தரப்பட்டது.
இத்துணைப் பயண அலுப்பையும் தாங்கி கொள்ளும் வல்லமையை எங்கள் அனைவருக்கும் தந்து கொண்டே வந்தது, காசி விஸ்வநாதன் குழுவினரின் அருமையான உணவும், அன்பான விருந்துபசரிப்பும் தான். அவரோடு வந்த பப்லூ, ராஜூ மற்றும் பைய்யா என்று அழைக்கப்படும் இன்னொருவர்.
அவர்கள் மூவருக்கும் தமிழ் தெரியாது. இருந்தாலும் காசி பேசும் தமிழைக் கேட்டு ஓரிரு வார்த்தைகளை அவர்கள் எங்களுடன் பேசி எங்களுக்கு உணவு பரிமாறினார்கள். ''நல்ல இருக்க?'' என்று அவர்கள் மழலையில் எங்களை பந்தி விசாரித்த போது எங்கள் களைப்பையும், சொந்த ஊரை விட்டு நீண்ட தூரம் வந்திருக்கும் கவலைகளையும் மறந்து சிரித்து விட்டோம்.
சாதாரண காலங்களில் காத்ராவில் இருந்து எட்டு மணி நேர பயணத்தில் ஸ்ரீநகர் சென்று விடலாம். ஸ்ரீநகரில் இருந்து பால்டால் முகாம் இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. ஜூலை பத்தாம் தேதி அன்று நாங்கள் ஸ்ரீநகருக்கும், பால்டாலுக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு அமர்நாத் யாத்திரிகளைக் குறி வைத்து இருப்பது இராணுவ உளவுத்துறையின் கவனத்துக்கு சென்றதில் எங்களது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஜூலை பத்தாம் தேதி (இன்று காலையில் இருந்து) பால்டால் முகாமில் இருந்து அமர்நாத் குகைக்கு செல்ல ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லையாம்.
அதனால் நாங்கள் செல்லும் வழியில் ஓவ்வொரு கட்டத்திலும் வேறு வழியின்றி பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இந்த கணத்தில் இருந்து எங்கள் பயணத்தில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது.
(தொடரும்)