Sunday, November 21, 2010

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)

பாகம் இரண்டு - பகுதி 2:  அமர்நாத் புனித யாத்திரை (காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது)

பயணம் தொடர்கிறது....

 திருச்சிற்றம்பலம்.
கிஞ்சுகவாய் அஞ்சுகமே! கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவு மலைபகராய் - நெஞ்சத்து
இருள் அகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளும் மலை என்பதுகாண் ஆய்ந்து. (ஸ்ரீ மாணிக்கவாசகர் - திருக்கயிலைமலை மலை பற்றிப் பாடியருளியது)

பகுதி: 3
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். அமர்நாத் புனித யாத்திரை..
 
3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:

ஒரு வழியாக அனைவரும் உணவு உண்ணும் போது இரவு மணி எட்டு ஆகிவிட்டிருந்தது. அன்பர் காசி விஸ்வநாதன் தனது குழுவோடு சேர்ந்து எங்களுக்கு சாதம், பொரியல், கூட்டு, ரசம், அப்பளம், மோர் என்று எளிமையாக நமது இல்லங்களில் சமைத்த உணவைப் போல சாப்பாடு தயாரித்திருந்தார். 

காலையில் சிற்றுண்டி அருந்திய பிறகு நீண்ட பயணம், வழி நெடுகிலும் உணவு கிடைக்காத தொடர் ஏமாற்றம் போன்ற சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொண்டு ஏங்கிப் போயிருந்த யாத்திரிக அன்பர்களுக்கு இங்கே கிடைத்த உணவு தேவாமிர்தமாக இருந்தது. அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்களில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒரு மணி நேர பயணத்துக்குப் பின்னர் இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு ஸ்ரீநகருக்கு வெளியே ஒரு பை-பாஸ் ரோடு அருகே (அதுதான் ஸ்ரீநகர்-கார்கில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை)எங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.இரவு நேரத்தில் ஸ்ரீநகருக்குள் செல்ல அனுமதியில்லை. மற்றும் வண்டிகளை இரவு நேரத்தில் இயக்குவது பாதுகாப்பானதாக இல்லை என்று சொல்லி எங்கள் வண்டிகளை அங்கே இருந்த ஒரு மைதானத்தில் நிறுத்தினார்கள்.

வாகனங்களின் கண்ணாடி ஜன்னல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதுபோல எங்களது வண்டிகளுக்குப் பின்னால் வந்த எல்லா வண்டிகளும் நிறுத்தப்பட்டன. காற்றோட்டம் இல்லாமல் ஒவ்வொரு பஸ்சிலும் நாங்கள் முப்பத்து ஐந்து பேர்களுக்கு குறையாமல் இருந்தோம். சுவாசக் காற்று வெளியில் செல்லவில்லை என்றால் மூச்சு திணறல்  ஏற்படும் என்ற சூழ்நிலையில் காற்று வருவதற்காக கண்ணாடி ஜன்னல்களை முழுதும் மூடாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு மூடி வைத்திருந்தோம்.

சற்று நேரத்தில் பேய்க்காற்றுடன், மின்னல் வெட்டி, இடி இடித்து புழுதிக்காற்று சுழன்று சுழன்று வரலாயிற்று. புழுதி உள்ளே வராமல் இருக்க நாங்கள் அனைவரும் ஜன்னல் கதவுகளை இறுக்கமாக மூடிக் கொண்டோம்.

பின்னர் பயங்கரமாக மழை ''ஜோ''வென்று  கொட்டித் தீர்த்தது. இரவு முழுதும் பஸ்சுக்குள் உட்கார்ந்தபடியே இருந்த நாங்கள் எப்போது தூங்கினோம் என்று எங்களையும் அறியாமல் ஒரு காலகட்டத்தில் அனைவரையும் தூக்கம் இழுத்துக் கொண்டு போயிருந்தது.

(தொடரும்)

No comments: