Saturday, October 30, 2010

பகுதி 9: வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

இந்த வலைப்பூவில் தொடர்ந்து எனது யாத்திரை அனுபவங்களை படித்து வரும் அன்பர்களுக்கு வணக்கம். 
கடந்த சில வாரங்களாக என்னால் இடுகைகளைத் தொடர இயலாமல் போய் விட்டது. மன்னியுங்கள். என்னோடு யாத்திரைக்கு வந்த சஹ-யாத்திரிகளையும் ஆர்வத்தோடு காக்க வைத்து விட்டேன். தங்களின் அசாத்திய பொறுமைக்கு நன்றியுடன் பணிந்து வணங்கி எனது இடுகைகளை வெளியிடுகிறேன். இனி இந்த கால தாமதங்கள் இருக்காது. ஞாயிறு அன்றும் புதன் அன்றும் காலை நீங்கள் தொடர் இடுகைகளை படிக்கலாம். 
திருச்சிற்றம்பலம்.
  
பகுதி: 1 

பகுதி: 2

பகுதி: 3 

பகுதி: 4 

பகுதி: 5 

பகுதி: 6 

பகுதி: 7

பகுதி: 8



வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
 
அம்பிகையின் வரலாறுக்கு பின்னர் தொடரும் யாத்திரை.
பகுதி 9
(07-07-2010)

2. அம்பிகை வைஷ்ணோதேவியை தரிசனம்  செய்தோம்.

 சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
    நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
         தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை..... (திருப்புகழ் 503)

 1700 மீ. உயரமுள்ள திரிகுட மலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகை ஆலயம் மாதா வைஷ்ணோதேவியின் உறைவிடமாகும்.

 காத்ரா-வைஷ்ணோதேவி மலைஅடிவாரத்தில் இருந்து 
அம்பிகை வீற்று இருக்கும் குகைக்கு செல்லும் மலைப்பாதை.
(படம்: நன்றி கூகிளார்)
ஜம்முவிலிருந்து 48 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.

ஜம்முவினுடைய திரிகூட மலைத்தொடரிலுள்ள குகையில் வைஷ்ணோதேவி கோயில் இடம் பெற்றுள்ளது. அடர்ந்த காடு, பனி மூடிய மலைத்தொடர்களுக்கு நடுவே வைஷ்ணோதேவி கோயில் அமைந்துள்ளது. இந்த குகையின் முடிவில் அன்னையின் மூன்று வடிவங்களுக்கும் (மகாகாளி, மகாலட்சுமி,  மகாசரஸ்வதி) கோவில் எழுப்பப்பட்டுள்ளது.





 குகைக்ககுள் பிண்டி வடிவில் அருள்பாலிக்கும் முப்பெரும் தேவியர் (நன்றி:கூகிள்)

காத்ரா வைஷ்ணோதேவியின் மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிற்றூர்.  வருடம் முழுதும் வைஷ்ணோதேவிக்கு யாத்ரிகள் வருவதால், காத்ராவில் தங்கி வைஷ்ணோதேவியை மலையில் ஏறி தரிசனம் செய்ய வசதியாக பொருளாதார ரீதியில் எல்லாத்தரப்பினரும் தங்கும்படியாக விடுதிகள் காத்ராவில் நிறைய உள்ளன. வைஷ்ணோதேவி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகளை காத்ராவிலும், மலை ஏறி வைஷ்ணோதேவி கோவிலுக்கு போகும் வழியில் அதக்வாரி, சஞ்சிசாட் போன்ற இடங்களில் விடுதிகளை அமைத்து உள்ளது. டார்மிட்டரி முதல் சிங்கிள், டபுள் மற்றும் டீலக்ஸ் வசதியுடன் கூடிய  தனி அறை வரை எல்லா விதமான தங்கும் வசதிகளையும் நியாயமான கட்டணங்களுடன் அமைத்துள்ளார்கள். அறைகள், கட்டில் பெட் ஸ்ப்ரெட் முதல் கழிப்பறை வரை  அனைத்தும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

இங்கே அருள்பாலிக்கும் அம்பிகை வைஷ்ணோதேவி திரிகூடமலையில் ஒரு குகையில் விஷ்ணுவை நோக்கி தவம் செய்ததாகவும், அப்போது அவளது தவத்திற்கு தொடர்ந்து தொல்லைகள் தந்த பைரோன்நாத் என்கிற துஷ்ட அரக்கனை வதம் செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

இந்த அம்பிகை வட இந்தியர்களின் மனம் கவர்ந்த அம்பிகை ஆவாள். அவள் அழைத்தால் ஒழிய அவளை யாரும் தரிசனம் செய்து விட முடியாது என்று இங்குள்ளோர் நம்புகிறார்கள். நம் திருமலை-திருப்பதி வேங்கடாசலபதியைப் பற்றி கூட அப்படித் தான் சொல்லுகிறார்கள். நான் கூட ஒரு முறை குடும்பத்துடன் திருப்பதி சென்றும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பாலாஜியைத் தரிசனம் செய்ய முடியாமல் போய்  வெறுமே திரும்பி இருக்கிறேன்.

திருமணம் ஆகவேண்டும் என்று கன்னிப் பெண்கள் வைஷ்நோதேவியை வேண்டி கொண்டு திருமணம் முடிந்ததும் தம்பதியர்களாக அம்பிகையை தரிசனம் செய்து காணிக்கை செலுத்துகிறார்கள். மலைப்பாதை மேலே நடந்து போகவே சிரமமாக இருக்கும்போது அங்கப்பிரதட்சிணமாக பதின்மூன்று கி.மீ தூரத்துக்கு சென்று அம்பிகைக்கு  நேர்த்திக் கடனை நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை திரும்பி வரும் வழியில் கண்டேன்.இந்த அங்கப் பிரதட்சிணம் வித்தியாசமாக இருந்தது. நமது பகுதியில் உருளுபிரதட்சிணம் செய்வார்கள்.

இந்த இளைஞரோ முதலில் நிமிர்ந்து தேவி இருக்கும் திசை நோக்கி கைதூக்கி வணங்குகிறார். பின்பு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரிக்கிறார். பின்னர் நடுவிரலால் ஒரு கோடு போடப்படுகிறது. மீண்டும் முஷ்டிகளை ஊன்றி எழுகிறார். பின்னர் நின்ற நிலையில் கைதூக்கி வணக்கம். கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம். பின்னர் ஒரு கோடு. முஷ்டியை ஊன்றி எழுதல் என்று, பதின்மூன்று கிலோமீட்டரும் இப்படி செல்வாராம். அதைப் பார்த்த எனக்கு மெய் சிலிர்த்தது. கைலாய யாத்திரை சென்றிந்தபோது திருக்கயிலை மலையை திபெத்தியர்கள் (புத்தமதத்தை சார்ந்தவர்கள்) அங்கப்பிரதட்சிணம் செய்தததைக் கண்டதாக சுவாமி சித்பவானந்தா தனது "திருக்கயிலாய யாத்திரை" புத்தகத்தில் குறிப்பிடுகிறார். திருக்கயிலாய மலையை இவ்வாறு காலை சூரிய உதயம் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை தொடர்ந்து அங்கப் பிரதட்சிணம் செய்தவாறு ஒரு முறை பரிக்ரமா செய்ய இருபத்தி ஏழு நாட்கள் பிடிக்குமாம்!

வடஇந்திய தாய்க்குலங்களின் ஃபேவரிட் தெய்வமாக மாவைஷ்ணோதேவி இந்தப் பகுதியில் விளங்குகிறாள் பெண் குழந்தைகள் பலர் 'ஜெய் மாதா தி’ என்று கோஷம் எழுப்பிக் கொண்டே மலையில் நடந்து செல்கிறார்கள். கேட்டவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் தாயாக அம்பிகை இங்கே அருள் பாலிக்கிறாள்.  நவராத்திரியின் போது கோலாகலமாக இருக்கும் என்று சொன்னார்கள். அப்போது கூட்டமும் நிறைய இருக்குமாம்.


(மேலே) கர்ப்ப ஜூன் என்று அழைக்கப்படும் இந்த குகை வழி வைஷ்ணோதேவி செல்லும் வழியில் அதக்வாரி என்னும் இடத்தில் உள்ளது. இந்தக் குகையில் தான் வைஷ்ணோதேவி ஆண்டுக் கணக்கில் தவம் செய்ததாகக் கூறுகிறார்கள்.

 
 (மேலே) அம்பிகையின் கருவறை அமைந்திருக்கும் பவனம். பவன் என்று அழைக்கிறார்கள். இடது கோடியில் காவிக் கொடி தெரியும் இடத்தில் தான் அம்பிகையின் கருவறைக் குகை அமைந்துள்ளது.


(மேலே: அம்பிகையின் கருவறைக்கு செல்லும் குகை வழி. இந்த வழி தற்போது மூடப்பட்டு விட்டது)
  
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் வைஷ்ணோதேவிக்கு குடும்பத்துடன்  வருவதை நிறைய பேர்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். நாங்கள் மலையில் நடந்து சென்ற போது கர்நாடகா, கேரளா, ஆந்த்ராவைச் சேர்ந்த பலர் குழுவாக மலை மேல் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சம்பாஷணையில் இருந்து எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

(மேலும் தொடரும்) 

அடுத்து வரும் பதிவுக்கு: -  

பகுதி 10 

No comments: