Tuesday, October 5, 2010

8 அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரை

திருச்சிற்றம்பலம்.
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..



திருச்சிற்றம்பலம்.

இறையன்பர்களின் திருவடி பணிந்து வணங்கி வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்களின் இடுகையை இங்கே வெளியிடுகிறேன். 


இந்தத் தொடரைத் படித்து கருத்துக்களையும், ஊக்கங்களையும், அளித்து வரும் இறையடியார்களுக்கு  எனது பணிவான இதய நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம். நமசிவாய.

முந்தைய இடுகைகளுக்கான இணைப்புகள்:

பகுதி: 1 

பகுதி: 2

பகுதி: 3 

பகுதி: 4 

பகுதி: 5 

பகுதி: 6 

பகுதி: 7


வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

பகுதி 8





வைஷ்ணோதேவியை தரிசனம்  செய்தோம்.

அம்பிகையின் வரலாறு பலவகைகளில் சொல்லப் பட்டாலும் பெருவாரியாகச் சொல்லப்படும் கதை இதுதான். 
ஸ்ரீ லக்ஷ்மி தேவி விஷ்ணுவை அடைவதற்காக மனித வடிவம் எடுக்க பூவுலகம் வந்து, ரத்னாகர் என்ற பண்டிதருக்கு மகளாகப் பிறந்ததாகவும், சிறிய வயதிலேயே புத்திக் கூர்மையுடனும், சகல சாஸ்த்ரங்களில் பாண்டித்தயம் பெற்று அவளது ஆசிரியர்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் அளவுக்கு அறிவு மிக்கவளாக அவள் இருந்தாளாம்.

மகாவிஷ்ணுவின் மீது பரமபக்தி கொண்ட வைஷ்ணோதேவி திருமணம், குடும்பம் அனைத்தையும் துறந்து ஒரு துறவி போல வாழ்ந்தாள். நாளடைவில் அந்தப் பெண்ணுக்கு, தன்னை தனக்குள்ளே தேடுவதற்கான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கேற்ற உபாயம் தியானமும், தவமுமே என்பதை உணர்ந்த அவள், உலக இன்பங்களையும், செல்வங்களையும் துறந்து திரிகூடமலைக் காடுகளுக்குள் சென்று தனிமைத் தவம் செய்ய ஆரம்பித்தாள். ஆன்மீகத்தில் அதிகமான அக்கறை செலுத்திய வைஷ்ணோதேவி பகவானைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தாள். கடைசியில் இறைவனைத் தேடி தேவி திரிகூட மலைத்தொடரை அடைந்தாள். இறைவனைத் தேடி திரிகூட மலை வழியாக செல்லும் தேவியை அந்த மலைப் பகுதியில் தங்கி இருந்த துஷ்ட மந்திரவாதி பைரோன்நாத் பார்த்தான். 
அவன் தேவியை பின்தொடர்ந்தான். வழியில் தாகத்தால் தவித்த தேவி, தனது அம்பால் பூமியை பிளந்தார். பிளந்து கொண்ட  பூமியிலிருந்து  பாணகங்கா நதியாக உருவெடுத்து தேவியின் தாகத்தை தணித்தாள். 

சற்று தொலை தூரம் சென்ற தேவி ஒரு இடத்தில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த இடத்தில் தேவியின் சரணங்கள் பதிந்து காணப்பட்டதால் இன்று மக்கள் அந்த இடத்தை சரண்பாதுகா என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

பைரோநாத் பின் தொடர்வதை அறிந்த தேவி திடீரென்று மலையிலுள்ள "அர்த்தகுவாரி" குகைக்குள்ளே மறைந்து சென்றார் . அந்த குகைக்குள்ளே நுழைந்த தேவி அதற்குள் இருந்த இன்னொரு சிறிய குகைக்குள்ளே அமர்ந்து தியானம் செய்தார். 

அந்தச் சிறிய குகை கர்ப்பகிரகத்தை போல காட்சி தந்தது. அந்தக் குகையை "கர்ப்பஜூன்" என்று அழைக்கிறார்கள். எப்படிப்பட்ட பருமனான ஆளாக இருந்தாலும் இந்த கர்ப்பஜூன் குகையில் நுழைந்து செல்லுகிறார்கள். 

கர்ப்பஜூன் குகையின் வாசலில் வீர்லங்கூர் என்ற இரண்டு காவலாளர்கள் வைஷ்ணோதேவியை காவல் புரிந்தார்கள். 

ஒரு வருடமாக தேவியைத் தேடி அலைந்த பைரோன்நாத் கடைசியில் வைஷ்ணோதேவி குகைக்குள்ளே தியானத்திலிருப்பதை அறிந்து கொண்டான். குகையை நெருங்கிய பைரோன்நாத் வீர், லங்கூர் உடன் கடுமையாக போராடினான். இதை அறிந்த தேவி குகையினுடைய பின்புறத்தை பிளந்து  கொண்டு சண்டிரூபத்தில்  பைரோன்நாத் முன் தோன்றினார். 

வைஷ்ணோதேவி பைரோன்நாத் தலையை தனியாக வெட்டி தூக்கி வீசி எறிந்தார். தேவி தன்னுடைய சரணத்தின் கீழே பைரோன்நாத்தின் தலையில்லாத உடலை வைத்துக் கொண்டார். தேவியால் தூக்கி எறியப்பட்ட பைரோன்நாத்தின் தலை திரிகூடமலை உச்சியில் விழுந்தது. 

அந்த சிகரத்தை பைரோன்நாத் சிகரம் என்று அழைக்கிறார்கள். தேவியின் சக்தியை அறிந்த பைரோன்நாத் தனது குற்றத்தை உணர்ந்து தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அவனுடைய பிரார்த்தனையை மெச்சி  தேவி அவனுக்கு விமோசனம்  கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் பைரோன்நாத்தையும் தரிசித்துவிட்டு சென்றால் முழுமையான பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தை கொடுத்தார்.

குகைக்குள் இருக்கும் கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் தேவி ஐந்தரை அடி உயரத்தில் உள்ள ஒரு கற்பாறை. இந்த பாறையில் மூன்று தலைகள் போல தனியாக காட்சி அளிக்கின்றன. அவற்றை பிண்டிகள் (பிண்டங்கள்) என்று கூறுகிறார்கள். சரஸ்வதி, லக்ஷ்மி, காளிதேவி ஆகிய மூன்று சக்திதேவிகள் மூன்று கற்கள் வடிவத்தில் காட்சி தருகிறார்கள். இந்த சக்தி தேவிகளைத்தான் "பிண்டி" என்று அழைக்கிறார்கள்.



இந்த மூன்று தேவிகளும் படைத்தல், ரட்சித்தல் அழித்தல் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கிறார்கள். மேலும் தமோ ரஜோ, சத்துவ குணங்களின் வடிவமாகவும் இவைகள் கருதப்படுகின்றன. முக்குணங்களின் சரிவிகிதத் தன்மை இருந்தால் இறைநிலையை அடையலாம் என்பதன் தத்துவ விளக்கம் என்று அங்கிருந்த சாது ஒருவர் எங்களிடம் கூறினார். 

வைஷ்ணோதேவி குறித்த மற்றும் ஒரு கதை.
புராணக் கதைகளின் படி அவள் இந்தக் காட்டில் தவமிருந்த போது வனவாசம் செய்ய வந்த ஸ்ரீ ராமரைச் சந்தித்ததாகவும், விஷ்ணுவின் அவதாரம் அவர் தாம் என்பதை உணர்ந்த வைஷ்ணோதேவி ஸ்ரீராமருடன் சேர்ந்து செல்ல விரும்பினாளாம். இராமரோ தன்னுடைய கடமைகள் இன்னமும் முடியவில்லை என்று கூறி, அவளை தவத்தில் ஈடுபடச் சொல்லி விட்டு, தக்க தருணம் வரும் போது, வைகுந்தத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினாராம். அப்படித் தவத்தில் ஈடுபடும் போது தான் பைரோன்னாத் என்னும் அரக்கனிடம் போராடி அவனை வதம் செய்ததாக முன்பு குறிப்பிட்ட வரலாறு இங்கே பொருந்துகிறது.  

இந்தப் பிரதான சந்நிதியில் தேவிகளின் பாதங்களைத் தொட்டுக் கொண்டு ஓடும் சரணகங்காவின் சலசல என்ற சப்தம் காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. இந்த குகையில் எப்போதும் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும். நவராத்திரி சமயத்தில் வைஷ்ணோதேவி கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் காணலாம். தேவியை தரிசனம் செய்த அன்னையின் அடியவர்கள் அக்ரூட் தேங்காய் என்று பிரசாதகமாக வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

(அம்பிகையின் வரலாற்றை பின்பற்றி யாத்திரை தொடருகிறது)

அடுத்த பதிவுக்கு இணைப்பு: பகுதி: 9

No comments: