கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை ஒன்பது: முக்கண்ணனை நோக்கி முயற்சியாளர்கள்.
அமர்நாத் குகைப் பகுதி - குதிரை டெர்மினஸ்
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)
குகைப் பகுதி.
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)
மெள்ள எங்கள் நால்வரணி குகை நோக்கி நடக்க தொடங்கியது. ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பால்தாலில் இருந்து புறப்பட்டு சுமார் ஐந்தரை மணி நேரமாகியும் எங்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்த 62 பேர்களில் எங்கள் நால்வரைத் தவிர ஒருவர் கூட எங்கள் கண்களில் படவில்லை.
செல்போனும் அங்கு இயங்குவதில்லை. நாங்கள் நால்வரே நால்வருக்கும் துணை. ஜமாவாக ஜாலியாக செல்லலாம் என்று கனவு கண்டவர்களது கனவை கனவாக்கி விட்டார் எம்சிவம் (அப்பப்பா எத்தனைக் கனவு !?).
உனக்கு நான் மட்டுமே துணை என்று சொல்லாமல் சொன்னார் முக்கண்ணன்.
''நீங்கள் நால்வரும்?'' என்ற கேள்வி என் செவிகளில் விழுகிறது அன்பர்களே. நாங்கள் என்ன விதிவிலக்கா? நானும் அஷ்வினும் பெரிய போராட்டமே நடத்தியல்லவா ஒன்று சேர்ந்தோம்!
அதுவும் பாண்டியனும் அவர் மனைவியும் எங்களிடமிருந்து பிரிந்து தரிசனத்திற்கு பிறகு தான் எங்களுடன் சேர்ந்தனர்.
ஐயா, விதிக்கு ஏதய்யா விலக்கு. ?
விதி ஒரு அனுபூதி. அதை படைத்தவனது அல்லது படைத்தவளது அனுபூதியாய் மனமாற எடுத்து கொண்டால் இன்பமும் துன்பமும் ஒன்றுதான். தனியாக காஷாயமோ கமண்டலமோ தேவையில்லை. (குகை நெருங்க நெருங்க என் எழுத்தில் காவியும் துறவும் ஒட்டிக்கொண்டதை கவனித்தீர்களா?)
எங்கள் டென்ட் கடையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் என் ஷூ என்னை பாடாய்ப்படுத்தி விட்டது. 1995-அமர்நாத் பயணத்திற்கு வாங்கிய வுட்லன்ட்ஸ் 2011ல் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை.
அன்று நான் உபயோகப் படுத்திய குச்சியைக் கூட இன்னமும் பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன். உயிர் காத்த உன்னதக் கோலல்லவா அது?
மெள்ள எங்கள் பயணம் தொடர்ந்தது.
வெயில் சற்று ஏறியதால் நடக்கும் பாதை வெகுவாக வழுக்கியது. நன்றி கெட்ட ஷூ வேறு கடித்துக் கொண்டே இருந்தது. இந்தி பேசத் தெரிந்த பாண்டியனிடம் (அவர் பேசியது சரியான இந்தியா என்று ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனால் அவர் சிறப்பு மிகவும் வேகமாக பேசுவது. எழுதும் போது ஸ்பெலிங்க் மிஸ்டேக்கை மறைக்கும் வேகம்) ஒரு உதவி கேட்டேன்.
அவர் இந்த பயணத்தின் ஆரம்பத்தில் தான் எனக்கு தெரிந்தவரானாதால் அவரால் என்னை கோபிக்க முடியவில்லை. மேலும் அவர் நண்பர் ரமேஷ் என்னுடைய மனைவியின் சகோதரியின் கணவர் வேறு. அப்படி என்ன கேட்டு விட்டேன் என்று யோசிக்கிறீர்களா? யாராவது கடை வைத்திருப்போரிடம் கொஞ்சம் அவரது ஷீவை கடன் கேட்க முடியுமா? என்று தான் கேட்டேன். "எப்படி சார் கேட்பது" என்று ஐஸ் தரையைப்பார்த்தார்.
நான் சொன்னேன் "என்னை கைகாட்டி இதோ இவர் தான் கேட்க சொன்னார் இவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று சொல்லி விடுங்கள். அவர் எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றேன்.
நிச்சயமாக இதற்கும் அவருக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் என் முகத்தில் தெரிந்த வலி ரேகைகள் அவர் கோபத்தை அசுவாசப்படுத்தி விட்டது. அவ்வளவு படுத்தி விட்டது அந்த ஷூ. "சரி சரி வாருங்கள் நல்லவனாக பார்த்து கேட்கலாம்" என்று முன்னே சென்றார். நடக்கும் வேகம் ஆளாளுக்கு மாறுபடுவதால் நால்வரும் ஒன்றாக செல்ல முடியவில்லை. மேலும் வழுக்கும் ஐஸ்கட்டியில் நடக்க தனிப்பயிற்சி தேவைப்பட்டது. மேலும் கவனச் சிதறல் மண்டைச் சிதறலாகி விடக் கூடிய சாத்தியக் கூறு அதிகமிருந்தது.
இந்த பயணத்தில் நான் உணர்ந்தது இதுவும். நம் நடையின் வேகத்தை தீர்மானிப்பது,
1. நம் எடை.
2. நம் பார்வைக் கூர்மை.
3. அங்குள்ள ஆக்சிஜன் அளவு.
4. நம் கவனம்.
5. எதிரே வருபவரது கவனம் அல்லது நம்மைப் பற்றிய கருணை.
6, ஐஸ் பாளங்களின் கனம்.
7. நம் தேக பலம் அல்லது ஆரோக்கியம்.
8, சிவனருள்.
முதல் இரண்டும் அத்தனை ஸ்லாக்கியமில்லாத நானும். முதல் குறையான எடையும் கொண்ட அஷ்வினும் நடக்கையில் பின் தள்ளப்பட்டதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை.
இருவருக்கும் உதவியது கடைசியில் கயிலையானருளே.
நடக்கையில் ஏற்கெனவே நடந்து சென்றோரது அடிப்பொடியை தொடர்ந்து அதிலேயே காலை வைத்து பாதுகாப்பாக போகலாம் என்ற என்னுடைய கண்டுபிடிப்பு சிறிது தூரமே சிறந்ததாக இருந்தது.
ஆம்! வெயிலுக்கு முன்னே நடந்து பதிந்த கால் தடங்கள் வெயிலில் சற்று இளகியிருந்தது. ஒரு முறை வழுக்கி ஐஸோடு ஐஸாய் அமர்ந்த பின் யுரேகாவானது என் வரை !!!
(கோவிந்த் மனோஹரின் அனு(பூதி)பவங்கள் தொடரும்)
நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும், தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.
நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும், தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.