Showing posts with label அமர்நாத் அனுபவங்கள். Amarnath. Show all posts
Showing posts with label அமர்நாத் அனுபவங்கள். Amarnath. Show all posts

Friday, April 8, 2011

பாகம் மூன்று: பகுதி பதினேழு :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.அமர்நாத் புனித யாத்திரை - தொடரும் நினைவலைகள்.


அமர்நாத் யாத்ரா - தொடரும் நினைவலைகள்.

கடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தலங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். அந்தப் பயண அனுபவங்களை ஒரு தொடர் கட்டுரையாக இந்த வலைப்பூவில் நான் வெளியிட்டேன். அந்தப் பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.


அதே கால கட்டத்தில் சென்னையில் இருந்து வேறொரு குழுவில் அமர்நாத் சென்று வந்த அனுபவங்களை ஒரு பெண் அமர்நாத் யாத்ரி பதிவு செய்து உள்ளார். அதனை இங்கே வெளியிட்டு மகிழ்கிறேன்.

ஓம் சிவோஹம்.


அவனருள் இன்றி அணுவும் அசையாது.

இயற்கை எழில் ஏகாந்தமாய் இன்னிசை பாடும் இமயமலையில் பனிலிங்கமாய் உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அமர்நாத் குகைக்கு சென்று ஈஸ்வரனை தரிசிக்கும் பெரும் பேறு அவ்வளவு சுலபமாய் எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அப்படி ஒரு பாக்கியத்தை அவனருளால் பெற்ற நான் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இப்பயணம் கைகூடும். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபது பேர் கொண்ட குழுவுடன் அமர்நாத் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றோம். டால் ஏரியில் மிதந்த போட் ஹவுஸில் தங்கினோம். மிதக்கும் மார்க்கெட், பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள் என டால் ஏரியின் அழகு மனதை மயக்கியது.

படகில் சுற்றி வந்த போது ஏரியின் ஒரு பகுதி நம்மூர் கூவத்தை ஞாபகப்படுத்தியது. நாங்கள் சென்ற சமயம் காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தது, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் கண்ணில் படவில்லை.

மறுநாள் அதிகாலை சோனாமார்க் என்ற ஊருக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்களில் கிளம்பினோம். அங்கு கிளேசியர் என்ற ஹோட்டலுக்கு சென்று குளிர் காக்கும் உடைகளை அணிந்து காலில் சாக்ஸ், பூட்ஸ் சகிதம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பால்தால் என்ற இடத்திற்கு சென்றோம். 

அங்கிருந்து தான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.

ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதரணி எனும் இடத்தை அடைந்தோம். 

அங்கிருந்து 5கிலோமீட்டர் தூரம் நட்தோ, டோலி அல்லது குதிரை மூலமோ தான் செல்ல வேண்டும். 

ஒத்தையடிப்பாதை, ஒருபக்கம் அதலபாதாளம். கீழே சிந்து நதி அமைதியாய் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது. வழி முழுவதும் பனி மூடிய இமயமலையின் இயற்கை அழகும், சிந்துநதியின் சிங்காரமும் கண் குளிர கண்டோம். 

இருபுறம் பனி உறைந்து இருக்க, நடுவே பள்ளத்தில் உருகி ஓடும் தண்ணீர்.

அமர்நாத் குகை, 3888 அடி உயரத்தில் இமயமலைழில் உள்ளது. முகலாய மன்னர் அக்பர், ஷாஜகான் காலங்களிலும் அமர்நாத் யாத்திரை சிறப்புடன் நடந்துள்ளது என்பதை ஜகன்நாத பண்டிதராஜ் என்பவர் எழுதிய நூலான அசிப் விலாசம் என்ற நூலில் தேவர்கள் தலைவர் இந்திரன் சிவபெருமானை வணங்க அமர்நாத் வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமர்நாத் குகைக்கு நடந்து அல்லது குதிரை, டோலி மூலம் செல்லலாம். 

இடையிடையே டென்ட்டுகளில் தங்கி 3 நாள் யாத்திரையாக செல்ல வேண்டிய வழி அது. நாங்கள் சென்றது வேறு பாதை.

150 அடி உயரமும் அகலமும் கொண்டது. அமர்நாத் குகை. 

ஈஸ்வரனை காணும் படப்படப்புடன் குதிரை மூலம் பயணித்தோம். ஓரிருவர் டோலி மூலம் சென்றார்கள். குதிரைக்கு 350 ரூபாய் வாங்குகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சென்றோம்.

பம்பம் போலோ அமர்நாத் கீ ஜெய் எனும் பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

குதிரைப் பயணம் கோடாஸ் ஸ்டாண்டில் முடிந்தது. 

அங்கிருந்து பனிக்கட்டி மீது குச்சியை ஊன்றி நடந்து சென்றோம். சிரமமாக இருந்தது. பனியின் மீது நடக்க வழுக்கலும், சறுக்கலுமாக இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் டோலிவாலாக்கள் 200 ரூபாய் வாடகை பேசி படிக்கட்டு வரை கொண்டு போய் விட்டார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரம் பனிமூடிய படிக்கட்டுகள் ஏறினோம். இவ்வளவு கடுமையான பயணத்திலும் ஈசனை தரிசிக்க தேனீக்கூட்டம் போல் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

குகைக்கு அருகில் சென்றதும், அண்ணாந்து பார்த்தால் மலையில் ஒரு புறம் விநாயகர் உருவம், இன்னொரு இடத்தில் நந்தி உருவம் தெரிகிறது.  ஒரு வழியாக குகைக்குள் சென்று கம்பி வேலிக்கு பின்னால் உருவாகியிருந்த பனி லிங்கத்தை பார்த்தபோது கண்கள் பனித்தன. 

அந்த இடம் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து அடைக்காமல் லிங்கமாக மட்டும் பனி உறைவது இறையின் அற்புதம் தான். 

நாங்கள் பார்த்தபோது பதினொரு அடி உயர பனிலிங்க தரிசனம் கிடைத்தது. இங்கு சில சமயம் இரண்டடி உயர லிங்கம் தான் இருக்குமாம். எங்களுடன் தெனாலி எனும் ஊரிலிருந்து வந்தவர், சென்ற வருடம் இவ்வளவு சிரமப்பட்டு வந்து தரிசனம் கிடைக்காமல் திரும்பினாராம். 

சிலசயம் உருவாகும் லிங்கம் சீக்கிரம் உருகி விடுகிறது என்றும் சொல்கிறார்கள். கேதார், பத்ரி போன்ற இடங்களுக்கு சிரமப்பட்டு சென்றாலும் தரிசனம் நிச்சயம். 

அமர்நாத் அப்படியல்ல. அவனருள் இருந்தால் தான் அவனை தரிசிக்க முடியும் என்பது நிதர்சனம். ஹெலிகாப்டர்கள் இயற்கை சூழல் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லாவிதத்திலும் ஈஸ்வரனருளால் எங்களுக்கு அவரை பிரமாண்டமான லிங்கமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

மனநிறைவுடன் திரும்பி டோலி, குதிரை மூலம் பஞ்சதரணியை அடைந்தோம். நாங்கள் மாலை அறரை மணியளவில் தான் திரும்ப முடிந்தது. 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர்கள் இயங்காது. எனவே அங்கு ஒரு டென்டில் தங்கினோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பால்தால் வந்து பின்னர் காரில் சோனாமார்க் வந்து சேர்ந்து ஓய்வெடுத்தோம்.

எங்கள் குழுவில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களும், அவர் மனைவி ஆண்டாளும் பெங்களூரிவிலிருந்து வந்திருந்தார்கள். இருவரும் மூத்த குடிமக்கள்.

ஆண்டாள் அம்மாவுக்கு பல ஆபரேஷன்கள் நடந்திருந்தும் மன உறுதியுடன் வந்தார்கள். மற்றுமொரு வயதான அம்மா காலில் சாக்ஸூடன் செருப்பு அணிந்து வந்து ஜில்லிப்பு தாங்காமல் அழுதார்கள். 

எங்கள் குழு காப்டன் சுனில் அதிகாரிகளிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி அவர்களை டோலி மூலம் அழைத்து வந்து தரிசனம் செய்வித்தார்கள்.

கடுமையான பயணத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எங்கும் ராணுவ வீரர்கள் காவலாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். மறுநாள் ஸ்ரீநகர் திரும்பினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனவே ஸ்ரீநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன்களை பார்த்தோம்.  சாலிமார் கார்டன் மிக அழகு. பரிமகல் கார்டனில் மெடிகேட்டட் வாட்டர் வந்தது. நேருவுக்கு அந்த தண்ணீர் அனுப்பப்பட்டதாக சொன்னார்கள். 

துலீப்கார்டன் மிகப் பெரியது. துலீப் மலர்கள் ஒரு சீசனில் தான் பூக்குமாம். 250 படிக்கட்டுகள் கொண்ட சங்கராச்சாரியார் கோயில் சென்றோம். ஆதிசங்கரர் அங்கு வந்து ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்ததாக சொன்னார்கள்.

மறுநாள் குல்மார்க் சென்றோம். அங்கு மிக அதிக தூரம் உயர் செல்லும் கேபிள் கார்கள் மூலம் 2 பாயிண்டுகள் சென்று பனி சூழ்ந்த மலைப்பாறை நடுவில் பனியில் அமர்ந்து சிறிது விளையாடினோம்.

இறைவனை தரிசித்த மனநிறைவோடு காஷ்மீரை காணும் பாக்கியமும் சேர்ந்தது. உற்சாகமாகவும், உன்னதமாகவும் இருந்தது. மகிழ்வுடன் நெஞ்சம் நிறைவுடன் சென்னை திரும்பினோம்.
பனி லிங்க வடிவெடுத்துபக்தர்களை உருக வைக்கும்அமர்நாத் ஈஸ்வரன்அற்புதத்தின் ஆனந்தம்மூச்சிரைக்க நடந்தும்குதிரை டோலி என குதித்தோடியும் வரும்குவலயத்து பக்தர்களின்குமுத மலர் நெஞ்சை அமுதமெனஅள்ளிப் பருகும் ஆண்டவனவன்பனிமலர் பாதம் வணங்குவோம்
-இந்திராணி அண்ணாமலை, சென்னை.

நன்றி: தினமலர் வாரமலர் : செப்டம்பர் 01,2010.

Wednesday, March 2, 2011

பாகம் மூன்று: பகுதி பதினொன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

இன்று மஹா சிவராத்திரி-2011
(மஹா பிரதோஷம்)
ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.
ஓம் சிவோஹம்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 11: நாதனை நெருங்க... வேதனை மயங்க... 

இது இப்படியிருக்க அதே சமயத்தில் நான் பின் தொடர்ந்து வருவதாக நினைத்த அஷ்வின் மெள்ள நடந்து சென்று என்னைக் கடந்து மிகவும் தள்ளிச் சென்று விட்டார். ஆதலின் இருவரும் பிரிந்து விட்டோம்! சிவனும் சாதித்து விட்டார் !! 

பாண்டியனும் அவர் மனைவியும் எப்போதோ எங்களை தவறவிட்டு விட்டார்கள் (அது நிச்சயமாக தற்செயல் என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்) நட்பின் ஆயுளுக்கு இத்தகைய தற்செயல்களை புரிந்து(?) கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பது நிச்சயம். 

தனியாளானவுடன் காலில் இருந்த ஷூ தைரியமாக அதிகம் கடித்து தானிருப்பதை எனக்கு ஞாபகப்படுத்தியது. 

வலியில் வெட்கம் மறந்து எனக்கு இந்தி தெரியாதென்ற உண்மையையும் மறந்து அங்கிருந்த ஒரு ப்ரசாதக் கடையில் உட்கார்ந்து அந்த கடையின் உரிமையாள நண்பரை (ஆம் நண்பர்தான்!) உடைந்த இந்தியில் என் நிலைமையை விளக்கி அவர் ஷூவை (இரவல்) தர முடியுமாவென்று கேட்டேன். 

நான் இப்படிக் கேட்டது அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் பின் என் வலி நிறைந்த முகத்தைப் பார்த்து தன் ஷூவை தர ஒப்புக்கொண்டார். சடுதியில் அவர் ஷூவுக்குள் நுழைந்தேன். 

ஷூ மாற்றிய சற்று நேரத்தில் வலி குறைந்ததும், அவரிடம் குகைக்கு சென்று விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லையென்றால் அவர் என் உட்லன்ட்ஸ் ஷூக்களை எடுத்துக் கொள்ளலாம் என்று புரிய வைத்து விட்டு, அவர் பரோபகாரத்திற்கு (இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு இந்தியில் முயற்சித்து தோற்றேன் ! ) நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன். 

ஐஸ் பாதை முடிந்து சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பித்த இடம் கொஞ்சம் மேலேறியதும் வந்தது. வலியில் எப்போதும் பாதையையே பார்த்து சென்று கொண்டிருக்கையில் காட்சியோவியங்களை ரசிக்கும் மனமிருந்தாலும் பார்க்கும் பலமில்லாதிருந்தது.

மேலே பார்த்து ஏறவேண்டிய கட்டாயமான ஒரு இடத்தில் அதிர்ச்சியான காட்சியைக் கண்டேன். 

மொத்த பாதையையும் இரும்பு கம்பிகளாலான கதவு வைத்து மூடியிருந்தார்கள். அஙகே இரண்டு பெரிய கேட் மற்றும் ஒருவர் மட்டுமே சென்று வரக்கூடிய ஒரு சிறிய கேட்டையும் அமைந்திருந்தனர். மூடி வைத்த சிறு கேட்டுக்கருகில் எப்போது திறக்கும் என்று எல்லோரும் குழுமியிருந்தனர். 
காத்திருக்கும் அடியவர்களை ஒழுங்கு செய்யும் ராணுவத்தினர்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் பெருங்கூட்டமாகிக் கொண்டிருந்து.

அவ்வளவு பெரிய பாதைக்கு அந்த சிறிய வழி மிகவும் அபத்தமானது. 

ஏனெனில் சறுக்கு பாதையின் குறுக்கே கதவு வைக்கும் உபாயம் மிகவும அபாயமானது என்று யாருக்கும் தோன்றாமல் போனது சற்று விபரீதந்தான்!

கூட்டத்திற்குள் சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கேட்டிற்கு மிக அருகில் சென்று நின்று கொண்டேன். தீடீரென்று கதவை திறக்கவே பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டு மரணபயம் பலர் கண்களில் தெரிந்தது (என்னை நான் பார்க்கவில்லை!). ஸ்டாம்பீட் என்று பத்திரிக்கைகளில் படித்திருப்போம்! அன்று அதற்கு நான் ஆளாகி விடுவேனோ என்று பயந்து விட்டேன். அந்த பயத்தில் கைகளில் துணையாயிருந்த மரக்குச்சியை தவறவிட்டேன். ஆனால் களேபரத்தில் வேறொரு மரக்குச்சி கிடைத்தது. 

திக்கி திணறி அந்த கேட்டுக்கு அந்த பக்கம் (குகைப்பக்கம்) சென்று சற்று நிதானித்து நிமிர்ந்த போது சற்று தூரத்தில் என்னை எதிர்பார்த்து காத்திருந்த திரு அஷ்வின் கண்களில் பட்டார். எந்த நிகழ்வையும் உணர்ச்சி வசப்படாமல் ஆராயும் எங்களிருவருக்கும் அங்கு அவ்வளவு பெரிய அமளி நடந்தும் எதுவும் பேசத் தோன்றவில்லை என்பதை வைத்தே அங்கு நிகழ்ந்த கலவரத்தை அன்பர்கள் புரிந்து கொள்வார்களாக. கீழே சறுக்கி விழக்கூடிய பாதையில் மக்கள் கூட்டம் முண்டியடித்து முன்னேற முயன்ற முயற்சியில் நடுவில் சிக்கிக்கொண்ட மொழி தெரியாத இருவரின் நிலைமை...... 

அங்கிருந்து மெள்ள தூரதூரமாக அமைந்திருந்த படிகளில் ஏறி சென்றோம். நடுவில் ஓரிடத்தில் மிலிட்ரி கேம்ப் அமைத்து யாத்ரீகர்களுக்கு வெதுவெதுப்பான நீர் பருக தந்தார்கள்.

எனக்கு அது லாஜிக்காகவே படவில்லை. 

அந்த கேம்ப்பை நெருங்கும் வரை. 

ஆம். அந்த கேம்ப்பை நெருங்கிய போது ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு வெதுவெதுப்பான நீர் எத்தனை இதமாக இருந்து தெரியுமா? 

அப்போது தான் எத்தனை புரிதலோடு அங்கே அந்த வெந்நீர்ப் (!) பந்தலை அமைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

தண்ணீர் பருகியதுமே மேலே நடக்க முடிந்தது. எங்கள் ஷூக்களை வைக்க அங்கு ஓரிடம் இருந்தது. 

அங்கு செல்ல பெரிய பெரிய கயிறுகளை தாண்டவோ அல்லது குனிந்தோ செல்ல வேண்டிய அவசியம் வந்தது. 

ஷூவை கழற்றியதும் வேறு ஒரு பிரச்சனை வருமென எதிர்பார்த்தேன். அதாவது குளிர் கால்களை பதம் பார்க்குமோ என்ற ஐயம் எனக்கு உண்டாயிற்று. 

ஆனால் நல்லவேளையாக அமர(கயிலை)நாதன் குகைக்கருகே ஐஸ் பாளங்களில்லை.

மேலும் வெயில் சரியான நேரத்தில் வெதுவெதுப்பாக காய்ந்ததால் அந்த படிக்கட்டுகள் தாங்குமளவிற்கு சில்லென்றிருந்தது. 

ஆனால் மிகவும் மெள்ளமாகத்தான் ஓரொரு படிக்கட்டையும் கடக்க முடிந்தது.

மூச்சுவிட மூக்கை விட வாயையே அதிகம் உபயோகப்படுத்தினேன். ஆனால் அப்படி சுவாசித்தால் அது உங்கள் சக்தியை அதிகமாக விரயமாக்கும் என்று என் இஎன்டி டாக்டர் சென்னையிலேயே சொல்லியிருந்தார். ஆனால் அவர் சொன்னபடி நடக்க முடியவில்லை.

குகைக்கு படிகளிலேயே சுமார் முக்கால் கி.மீ. நடக்கவேண்டியிருந்தது. நடுவில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவான்கள் நின்றிருந்தார்கள். கூட்டத்தை நிறுத்தி நிறுத்தி அனுமதித்தார்கள். 

உடற்துன்பம் இன்னும் சற்று நேரத்தில் விலகி ஓடப்போகிறது என்ற நினைப்பு என்பது நிஜமா? இல்லை ஐஸ் வடிவ சிவனை பார்க்கப் போகிறோம் என்ற துடிப்பா?. 

எது என்று விளக்க ஆளில்லாமல், பலன் கிடைக்கப் போகும் தருணத்திற்காக எல்லோரும் காத்திருந்தோம். 

பலன் தர படைத்தவனுக்கல்லாமல் வேறு யாருக்கு அந்த தகுதி வந்துவிடும்?

சமவெளியில் சமமான இடைவெளிகளில் தோன்றும் சாமியார்களிடம் தம் நம்பிக்கையை மொத்தமாக ஒப்படைக்கும் சராசரி பக்தனுக்கு இந்த இடம் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்க்க அந்த நிறுத்தங்கள் தந்த தருணங்களை உபயோகப்படுத்திக் கொண்டேன்.

(அடுத்த நிறைவு இடுகையில் அமரனாதனின் தரிசனம் - கோவிந்த் மனோஹரின் பார்வையில்)

பதிவுலக அன்பர்களே. வணக்கம்.
நான் எழுதிய (இணைப்பினைச் சொடுக்குக) வைஷ்ணோதேவி-அமர்நாத் தொடர் பயணக் கட்டுரையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன். நண்பர் கோவிந்த் மனோஹரின் பயண அனுபவங்களைப் படிக்கும் போது அந்த அனுபவங்களை அவரைப் போன்று சரியாக வெளிப்படுத்த என்னால் இயலாது போனமை தான் நான் அவற்றை எழுதாமைக்கு சரியான காரணம் என புரிந்தது. அமரநாதரை தரிசித்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை படிக்க உங்களை போன்றே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

Sunday, February 27, 2011

பாகம் மூன்று: பகுதி பத்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை பத்து: உருவாக்கியவனி(ளி)ன் தோலுரிச் செயலாக்கம்.

எங்களால் முடிந்த வேகத்தில் நடந்து ஒரு மேட்டில் ஏறி அதன் திட்டில் அமைந்திருந்த லங்கரில் (கொஞ்சம் பெரிய உணவிடம்) ஏதேனும் சாப்பிடலாம் என்று நினைத்து அங்கு சென்று சற்று அமர்ந்தோம். 

கொஞ்சம் தெரிந்த முகங்களாக இருக்கவே எழுந்து தேட தீடீரென்று என் மனைவி ப்ரசன்னமாகி ஒரு குழந்தையைப்போல என்னை கட்டிக்கொண்டு கண்கலங்கினார். அவர் மனோநிலை எனக்கு சரியாக புரிந்ததால் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். காலையில் தன்னுடன் பால்தாலிலிருந்து டோலியில் கிளம்பிய தன் சகோதரி மற்றும் சிலரை தவறவிட்டு விட்டதாய் மிகவும் வருத்தபட்டவரை சமாதானப்படுத்தினேன். எல்லோரும் இந்த பயணத்தில் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை சென்னையில் என் இல்லத்தில், இரயில் பயணத்தில் பல சமயம் பேச்சினூடேயும், பால்தாலில் பேஸ் கேம்ப்பிலும் (அடிவார முகாம்) நான் சொன்னதை நினைவுறுத்தினேன். 


ஆனால் அந்த நினைவூட்டல் காலம் கடந்தது என்பதை அவர் நிலைமை எனக்கு உணர்த்தியது. அவரின் நிலைப்பாடு பெரும்பான்மையோருக்கு அதாவது வருங்காலத்தில் இது போன்ற யாத்திரையில் அல்லது பயணத்தில் ஈடுபட போகும் அன்பர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும் என்பது என் தெரிபு. 

ஆம். மொழி தெரியாததால், அங்கு நிலவும் சீதோஷ்ணம் பழகாததால், தனியே இருக்க பழக்கப்படுத்திக் கொள்ளாததால், சார்பு நிலையே நிரந்தரமானதாக கொண்ட பலரது நிலை அது தான். சமவெளியில் எல்லாம் சரியாக இருக்கும் அல்லது நம் நிலைக்கு ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படும் பக்திக்கும் முழுமையான ஒப்படைப்பு உள்ள பக்திக்கும் உள்ள வேறுபாடே இது என்பது என் கணிப்பு. 

நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது இதுதான். துச்சாதனன் துகிலுரியும் போது ஏற்பட்ட திரெளபதியின் வேறுபட்ட நிலைப்பாட்டை இங்கு பொருத்திப் பார்க்க விழைகிறேன். 

ஆம். துச்சாதனன் முதலில் துரெளபதியின் வஸ்திரத்தை உறியும் போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு எதிரே தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் ஐவரில் ஒருவராவது தன்னை காப்பாற்ற மாட்டாரோவென நினைத்து பின் அது நடவாது என்று தெரிந்து தானே தன் பலம் கொண்டு தன் மானத்தைக் காக்க போராடி பின் அந்த தீய எண்ணம் கொண்ட துச்சாதனின் உடல் பலத்தில் தோற்றுப் போய் பின் நிலைமையின் அதிதீவிரத்தை கொஞ்சம் தாமதமாக உணர்ந்து "கண்ணா எனைக் காப்பாற்று" என இருகரத்தையும் தலைக்கு மேல் கூப்பி பரந்தாமனே அபயம் என்று குளமான கண்களை மூடி தியானித்தாள். 

பிறகு நடந்ததும் காப்பியம். ஆக திரெளபதியின் மாறுபடும் நிலைப்பாடு போலவே தான் பலரது பக்தி நிலையும் உள்ளது என்பதை அன்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நான் என்கின்ற தோலை உரித்து உள்ளே உள்ள ஆன்மாவால் தன்னை வழிபட வைக்கும் கைலாய வாசனின் விளையாடலே இந்த பயணம் என்று கூற விழைகிறேன். 



தனிமையாக்கி, குளிரூட்டி, வலியூட்டி தன்னை உளமார நினைக்க வைத்து விட்டான் இந்த அமரநாதன். 

சற்று சமாதானமாகிய என் மனைவி சொன்ன ஒரு யுக்தி நன்றாகவே இருந்தது. அதாவது அங்கிருந்த எல்லா காஷ்மீரச் சகோதரர்களும் நமக்கு ஒரே மாதிரி முகமுடையவர்களாக தெரிந்ததென்னவோ உண்மை தான்.

ஆனால் அவரிடமிருந்த அடையாள அட்டையை குதிரையில் வருபவர்களாயிருந்தாலும் சரி அல்லது டோலியில் வருபவர்களாயிருந்தாலும் சரி அவர்களிடம் தந்து விடுகிறார்கள். அதைக் கொண்டு அவர்களில் நமக்கு உதவுபவர்களை (நம்முடன் வருபவர்களை) அடையாளம் கண்டு கொள்ளலாம். 

மற்றொரு யுக்தி என் மனைவி எனக்கு விளக்கியது. தன்னிடமுள்ள ஒரு மஞ்சள் நிற சால்வையை தன்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களில் ஒருவருக்கு அணிவித்து அந்த பெருங்கூட்டத்தில் அவர் குழுவை மிகச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு வந்திருக்கிறார் வழி நெடுக. 

இந்த பதிவை படிக்க நேரும் அன்பர்கள் பிற்காலத்தில் அமர்நாத் செல்லும் பாக்கியம் பெற்றால் இந்த ஒரு யுக்தியையும் பயன் படத்திக் கொள்வார்களாக. 

கணவனாவது, மனைவியாவது. உறவென்றொன்று உண்டென்றால் அது அவனுடன் மட்டுமே என்பது சிறிய அளவில் அங்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. 

ஆம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த டோலி நண்பர்கள். "ச்சலியே ஜீ" என்று என் மனைவியை அழைத்துக் கொண்டு அமரநாதனைக் காணச் செல்ல ஆயத்தமானார்கள். பின்னாளில் (எந்நாளில் அது ஏற்படும் என்பது தெரியாது என்றாலும்) ஏற்படப் போகும் பெரிய பிரிவுக்கு ஒரு சிறிய ஒத்திகையாகப் பட்டது எனக்கு. 

எதையும் தத்துவார்த்தமாக பார்கக பழகிக் கொண்டால் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சற்று தொலைவில் நிறுத்திப் பார்க்கும் மனோபலம் வாய்க்கப் பெறுவோம் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்.


(கோவிந்த் மனோஹரின் மனோபலம் கூட்டும் அனுபவங்கள் தொடரும்)


நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

Tuesday, February 22, 2011

பாகம் மூன்று: பகுதி ஒன்பது:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை ஒன்பது: முக்கண்ணனை நோக்கி முயற்சியாளர்கள்.

 அமர்நாத் குகைப் பகுதி - குதிரை டெர்மினஸ் 
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

குகைப் பகுதி. 
(நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

மெள்ள எங்கள் நால்வரணி குகை நோக்கி நடக்க தொடங்கியது. ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பால்தாலில் இருந்து புறப்பட்டு சுமார் ஐந்தரை மணி நேரமாகியும் எங்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்த 62 பேர்களில் எங்கள் நால்வரைத் தவிர ஒருவர் கூட எங்கள் கண்களில் படவில்லை. 

செல்போனும் அங்கு இயங்குவதில்லை. நாங்கள் நால்வரே நால்வருக்கும் துணை. ஜமாவாக ஜாலியாக செல்லலாம் என்று கனவு கண்டவர்களது கனவை கனவாக்கி விட்டார் எம்சிவம் (அப்பப்பா எத்தனைக் கனவு !?). 

உனக்கு நான் மட்டுமே துணை என்று சொல்லாமல் சொன்னார் முக்கண்ணன். 

''நீங்கள் நால்வரும்?'' என்ற கேள்வி என் செவிகளில் விழுகிறது அன்பர்களே. நாங்கள் என்ன விதிவிலக்கா? நானும் அஷ்வினும் பெரிய போராட்டமே நடத்தியல்லவா ஒன்று சேர்ந்தோம்!

அதுவும் பாண்டியனும் அவர் மனைவியும் எங்களிடமிருந்து பிரிந்து தரிசனத்திற்கு பிறகு தான் எங்களுடன் சேர்ந்தனர். 

ஐயா, விதிக்கு ஏதய்யா விலக்கு. ?

விதி ஒரு அனுபூதி. அதை படைத்தவனது அல்லது படைத்தவளது அனுபூதியாய் மனமாற எடுத்து கொண்டால் இன்பமும் துன்பமும் ஒன்றுதான். தனியாக காஷாயமோ கமண்டலமோ தேவையில்லை. (குகை நெருங்க நெருங்க என் எழுத்தில் காவியும் துறவும் ஒட்டிக்கொண்டதை கவனித்தீர்களா?) 
தனிமையிலே இனிமை காண முடியுமே.
குகைக்கு செல்லும் வழியில் ஒரு துறவி.
 (நன்றி: சஹயாத்திரி ஜி.கே.சுவாமி)

எங்கள் டென்ட் கடையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் என் ஷூ என்னை பாடாய்ப்படுத்தி விட்டது. 1995-அமர்நாத் பயணத்திற்கு வாங்கிய வுட்லன்ட்ஸ் 2011ல் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. 

அன்று நான் உபயோகப் படுத்திய குச்சியைக் கூட இன்னமும் பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன். உயிர் காத்த உன்னதக் கோலல்லவா அது? 

மெள்ள எங்கள் பயணம் தொடர்ந்தது. 

வெயில் சற்று ஏறியதால் நடக்கும் பாதை வெகுவாக வழுக்கியது. நன்றி கெட்ட ஷூ வேறு கடித்துக் கொண்டே இருந்தது. இந்தி பேசத் தெரிந்த பாண்டியனிடம் (அவர் பேசியது சரியான இந்தியா என்று ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனால் அவர் சிறப்பு மிகவும் வேகமாக பேசுவது. எழுதும் போது ஸ்பெலிங்க் மிஸ்டேக்கை மறைக்கும் வேகம்) ஒரு உதவி கேட்டேன். 

அவர் இந்த பயணத்தின் ஆரம்பத்தில் தான் எனக்கு தெரிந்தவரானாதால் அவரால் என்னை கோபிக்க முடியவில்லை. மேலும் அவர் நண்பர் ரமேஷ் என்னுடைய மனைவியின் சகோதரியின் கணவர் வேறு. அப்படி என்ன கேட்டு விட்டேன் என்று யோசிக்கிறீர்களா? யாராவது கடை வைத்திருப்போரிடம் கொஞ்சம் அவரது ஷீவை கடன் கேட்க முடியுமா? என்று தான் கேட்டேன். "எப்படி சார் கேட்பது" என்று ஐஸ் தரையைப்பார்த்தார். 

நான் சொன்னேன் "என்னை கைகாட்டி இதோ இவர் தான் கேட்க சொன்னார் இவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று சொல்லி விடுங்கள். அவர் எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். 

நிச்சயமாக இதற்கும் அவருக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் என் முகத்தில் தெரிந்த வலி ரேகைகள் அவர் கோபத்தை அசுவாசப்படுத்தி விட்டது. அவ்வளவு படுத்தி விட்டது அந்த ஷூ. "சரி சரி வாருங்கள் நல்லவனாக பார்த்து கேட்கலாம்" என்று முன்னே சென்றார். நடக்கும் வேகம் ஆளாளுக்கு மாறுபடுவதால் நால்வரும் ஒன்றாக செல்ல முடியவில்லை. மேலும் வழுக்கும் ஐஸ்கட்டியில் நடக்க தனிப்பயிற்சி தேவைப்பட்டது. மேலும் கவனச் சிதறல் மண்டைச் சிதறலாகி விடக் கூடிய சாத்தியக் கூறு அதிகமிருந்தது. 

இந்த பயணத்தில் நான் உணர்ந்தது இதுவும். நம் நடையின் வேகத்தை தீர்மானிப்பது, 

1. நம் எடை. 
2. நம் பார்வைக் கூர்மை. 
3. அங்குள்ள ஆக்சிஜன் அளவு. 
4. நம் கவனம். 
5. எதிரே வருபவரது கவனம் அல்லது நம்மைப் பற்றிய கருணை. 
6, ஐஸ் பாளங்களின் கனம். 
7. நம் தேக பலம் அல்லது ஆரோக்கியம். 
8, சிவனருள். 

முதல் இரண்டும் அத்தனை ஸ்லாக்கியமில்லாத நானும். முதல் குறையான எடையும் கொண்ட அஷ்வினும் நடக்கையில் பின் தள்ளப்பட்டதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை. 

இருவருக்கும் உதவியது கடைசியில் கயிலையானருளே.

நடக்கையில் ஏற்கெனவே நடந்து சென்றோரது அடிப்பொடியை தொடர்ந்து அதிலேயே காலை வைத்து பாதுகாப்பாக போகலாம் என்ற என்னுடைய கண்டுபிடிப்பு சிறிது தூரமே சிறந்ததாக இருந்தது. 

ஆம்! வெயிலுக்கு முன்னே நடந்து பதிந்த கால் தடங்கள் வெயிலில் சற்று இளகியிருந்தது. ஒரு முறை வழுக்கி ஐஸோடு ஐஸாய் அமர்ந்த பின் யுரேகாவானது என் வரை !!!

(கோவிந்த் மனோஹரின் அனு(பூதி)பவங்கள் தொடரும்)

நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

Sunday, February 13, 2011

பாகம் மூன்று: பகுதி ஆறு :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.



கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'
.

இடுகை ஆறு: மலையின் சேவையும், சமவெளியின் மதிப்பீடும் 


குதிரைகள் நிற்குமிடம்.

குதிரைக்காரர்கள் எங்களது வலியை உணர்ந்தவர்களாக மெதுவாக பிடித்து இறக்கிவிட்டார்கள். இறங்க முடியாத சிலரை அழகாக தாங்கி பிடித்து இறக்கிவிட்டார்கள். பெண்களையும் அவ்வாறே பிடித்தது இறக்கினார்கள், ஆனால் விகல்பம் ஏதும் அவர் கண்களில் தென்படவில்லை. விகல்பத்தை தேடி கண்டுபிடிக்கும் சமவெளிக்கும் மலைவெளிக்கும் உண்டான சிந்தனை வித்யாசம் இது என இப்போது புரிகிறதா? எனக்கு திரும்பி வரும் பொழுது ஜம்முவில் இரயில் பயணத்தின் போது கிடைத்த சமயத்தில் இது புரிந்து உறுத்தியது.

குதிரையில் இருந்து ஐஸ்வெளியில் இறங்கியதுமே நியாயமேயில்லாமல் நீல் ஆம்ஸ்ட்ராங் போல் உணர்ந்தேன். நிலை கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அதற்குள் குதிரைக்காரர்கள் தங்களது சன்மானத்தை கேட்டு துளைத்தனர். (அவர்கள் வயிற்று பாடு என்ன செய்வது ?). பேசிய தொகைக்கு மேல் 'பக்ஷீஸ்' கேட்டு படுத்திவிட்டனர். அவர்கள் சேவைக்கு கேட்காமலேயே கொடுக்க வேண்டும். இருந்தாலும் சற்று பிகு பண்ணி விட்டு கொடுத்தோம். 

சேவைக்கு மதிப்பீடு செய்யும் கலை நிச்சயமாக சமவெளி மனிதர்களுக்கு தெரியவில்லை. மற்றொரு கிளைக்கதையாய் போய்விடும் அபாயம் இருப்பதினால் மிக சுருக்கமாக ஒன்றை சொல்கிறேன். இந்தி தெரிந்த எங்களுடன் வந்த ஒரு பெண்மணியை அவர் சகோதரர்கள் இருவரும் குதிரை பேசி பால்தாலிலிருந்து குகைக்கு அனுப்பி விட்டனர். அவரும் தன் உடமைகளை சரியாக பார்க்காததினாலோ அல்லது சகோதரர்களும் தன்னை குதிரையில் பின் தொடருவர் என்ற நினைப்பினாலோ குதிரையிலமர்ந்து கிளம்பி விடடார். வழியில் அவர் கண்ணேதிரே ஒரு பெண்மணி குதிரையோடு பாதாளத்தில் வீழ்ந்து இறந்து போன அதிர்ச்சிக்குரிய காட்சியை கண்டு நிலை குலைந்து போனார். குகை முன்னே இறங்கிய பின் தன் சகோதரர்கள் வருகைக்கு காத்திருப்பதிலே நிறைய நேரம் செலவழிந்து அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்ய தோன்றாமல் அழுது, அழுது மனம் வெதும்பி பின் அதே குதிரைக்காரரை தன்னைத் திரும்பி பால்தால் பேஸ் கேம்புக்கே அழைத்து செல்ல வேண்டிக்கொண்டார். 

அந்த நல்ல ஆத்மா அதற்கு சம்மதித்து திரும்பவும் கொண்டு வந்து பால்தாலில் எங்கள் டென்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது. அவருக்கு சேரவேண்டிய பணத்தை நாங்கள் தரவேண்டிய சந்தர்ப்பத்தில் அவருக்கு கொஞ்சம் அதிகமாக கொடுக்கலாமா? என்று கேட்டதற்கு இல்லையில்லை வெறும் 1500 (போகவர) தந்தால் போதும் என்று அந்த அம்மணி சொன்னபோது எனக்கு ........... தோன்றியதை நான் சொல்லப்போவதில்லை. 

உண்மை இதுதான் - சேவைக்கு மதிப்பீடு செய்யும் தகுதி, திறமை, வெண்மனம் இந்திய வரைப்படம் போல மேலிருந்து கீழே குறுகி குறுகி ஒரு முனையாகி விடுகிறது. (சுய புலம்பலுக்கு, இதை வாசிக்கும் அன்பர்கள் மன்னிப்பார்களாக!) 

இச்சம்பவத்தின் முடிவை அன்பர்கள் கவனிக்க. சிவதரிசனம் 3500 கி.மி. பிரயாணித்தும் கிடைக்க பெறாதவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கு எது குறைகிறது என்பதை தனியே நாம் சிந்தித்தே ஆகவேண்டும். இந்த இடத்தில் இத்தகைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் நல்கிய நண்பர் அஷ்வினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நவில்கிறேன். 

(கோவிந்த் மனோஹரின் அமர்நாத் அனுபவங்கள் தொடரும்)

Wednesday, February 9, 2011

பாகம் மூன்று: பகுதி ஐந்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை ஐந்து: சிவம் போதித்த சமத்துவம்.

அமர்நாத் குகைக்கு இன்னும் சில கி.மீ தூரம் செல்லவேண்டும்.
(படங்கள் நன்றி: திரு சூரஜ் பிரசாத்)
மணற்பாங்கான பாதை கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கான பனிபாளங்களூடே குளுமை பெற்று வந்தது. இதற்கிடையில் தலைக்கு மேலே அடிக்கடி பெரிய சைஸ் தும்பிகள் போலே கலர் கலராக ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டேயிருந்ததுகள். அதில் செல்பவர்கள் எல்லாம் சுகவாசிகள் என்று நான் நினைத்தது பின் தவறு என்று தெரிந்தது. எனெனில் அதில் பயணிப்பவர்களை நேராக குகை வாசலில் இறக்கி விடுவார்கள் அவர்களும் சுகதரிசனம் பெறுவார்கள் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் சிவன் மேல் கோபம் கூட வந்தது. 'இருப்பவர்களை இன்னல்களிலிருந்து காக்கும் செயலை எல்லோர்க்கும் பொதுவானவர் செய்யலாமா?' என்ற கேள்வியுடன். 



ஆனால் எங்களை குதிரைக்காரர்கள் இறக்கி விட்ட இடத்தில் கிடைத்த தகவல் சிவன் மேல் வந்த கோபத்தை துடைத்து விட்டது. ஆம் ஹெலிகாப்டரில் வருபவர்கள் பஞ்சதரணி (Panchitarani) என்ற இடத்தில் இறக்கி விடப்படுகிறார்கள். இது முன்னர் நான் குறிப்பிட்ட பெஹல்காம் என்ற இடத்திலிருந்து அமர்நாத் குகைக்கு செல்லும் வழியின் கடைசி தங்குமிடமாகும். 

அங்கிருந்து குகைக்கு நடந்தோ அல்லது குதிரையிலோ வரவேண்டும் அதுவும் குதிரையில் வருபவர்கள் நாங்கள் இறக்கிவிடப்பட்ட இடத்திலேயே இறக்கி விடப்படுவார்கள். ஆக யாராக இருந்தாலும் - (பால்தால் வழியாக வந்தவர்களாக இருந்தாலும், பெஹல்காம் வழியாக வந்தவர்களாக இருந்தாலும்) வசதி படைத்தவர்களானாலும், மற்றவர்களானாலும் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்து நடந்து தான் குகைக்கு செல்லவேண்டும். 

எல்லோரும் சமமில்லாமல் வாழும் சமவெளி(?) பிரதேசத்தைச் சேர்ந்த என்னை போன்றோருக்கு இது பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆம், கடவுள் எல்லோருக்கும் பொது, அவரிடத்தில் எல்லோரும் சமம் என்ற உண்மை அங்கு நடத்திக்காட்டப்பட்டது, 

கடவுள் என்ற நினைப்பில் நான் கட்டி வைத்திருக்கின்ற ஒரு பிம்பத்திற்கு உரிய தகுதி அங்கு சரிபார்க்கப்பட்டதாக எனக்கு தோன்றியது. நாம் எழுப்பியுள்ள மனக்கோயில் சரியான கட்டுமானத்திலிருப்பதாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த உணர்வு அங்கு நிலவிய அசாதாரணமான குளிரை குறைத்தது என்பது என் வரைக்கும் நிஜம்.

இருபுறமும் மலைகளும் நடுவில் உறைந்த பனியிலான பள்ளத்தாக்கில் குதிரையின் மேல் வலியுடன் சென்ற எங்கள் ஐவரையும் ஓரிடத்தே இறக்கி விட்டனர் குதிரைக்காரர்கள். 

அங்கு நிறைய குதிரைகள் பனியில்லா புல்தரைகளைத்தேடி மலை முகடுவரை சென்று புல்மேய்ந்ததை பார்கக பயமாகவும் ரம்மியமாகவும் இருந்தது. என் குதிரைக்கு முன்னேயே அஷ்வினின் குதிரை அங்கு வந்து விட்டிருந்தது. அவர் இறங்கி நின்றிருந்தார். முகத்தில் ஒளியில்லை. (என் முகத்தைப்பார்த்து அவரும் இதையே சொல்வார் என்று தோன்றியது).

(பயணம் தொடரும்)

Sunday, January 30, 2011

பாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை இரண்டு:-

கோவிந்த் மனோகர் (லங்கரில் கையில் தண்ணீர் பாட்டில்களுடன்)

அதிகாலை 2 மணியளவில் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பரபரப்பாய் இயங்கும் ஒரு இடத்தின் இரைச்சலில் எழுப்பப்பட்டோம் அன்று. முன்னிரவில் கடைசியாக சிந்தடிக் கழிவரை சென்று திரும்பும் போது ஏற்பட்ட நடுக்கம் ஞாபகத்திலிருந்து மறையும் முன்பே மறுபடியும் நடுங்கும் குளிரில் அமர்நாத் குகைக்கு செல்லவேண்டிய தருணம் வந்து விட்டதில் எந்த சென்னைவாசிக்குமே ஓவ்வாமை ஏற்படும்தான்.

முந்தைய நாளில் 'முடியவில்லையென்றால் நாம் குகைக்கு செல்ல வேண்டாம்' என்று தெளிவாக பேசிக் கொண்ட நானும் அஷ்வினும் மனம் மாறாமலேயே படுக்கையை விட்டு எழுந்தோம்.

எங்களை மதிக்காமல், அதாவது நாங்கள் வருவோமா மாட்டோமா என்ற கேள்வி எழுப்பாமல், என் மனைவியும் அவர் சகோதரியும் மற்ற சில பெண்களும் (பெண்களுக்கு திட சிந்தனை ஆண்களைவிட அதிகம் என்ற ஞானமும் எனக்கேற்பட்டது அப்போது) டோலியில் ஏறி குகைக்கு முன்னேறிவிட்டனர். (ஒரு டோலிக்கு ரூ.6500 குகை சென்றுவர). 

எங்களுள் சிலர் நடந்து போக போவதாக கூறினர் அதில் திருமதி உஷாராணியும் (எங்கள் அலுவலக நண்பி) அடக்கம். 

நடந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகள் எனக்கு சுமாராக தெரியுமாதலால் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னேன். விதி வலியதில்லையா? யாருமே நான் சொன்னதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஆனால் அன்று மாலையே குதிரையில் திரும்பி வந்து என்னை போற்றினர்). 

வலிமையான விதிக்கு நாங்கள் மட்டும் விலக்கா? குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா? அதுவும் இது பால்டால் வழி 

1995ல் நாங்கள் சென்றதோ வேறு ஒரு வழி பெஹல்காம்சந்தன்வாரி பாதை. ஆகையால் புது அனுபவத்தை இழக்க மனம் குளிரிலும் விரும்பவில்லை. உடனே அஷ்வினிடம் 'சார் குதிரையில் செல்லலாம் வாருங்கள்' என்றேன். 

அவர் எட்டப்பனை பார்த்த கட்டபொம்மனாக என்னை பார்த்தார். சுமாரான வெளிச்சத்தில் வெளிறிய அவர் முகம் தெரிந்தது. 'என்ன போலாம்கிறீங்களா?' என்றார் பரிதாமாக. 

அவர் முகத்தை பார்க்காமல் 'வாங்க குதிரை ரேட் கேட்கலாம்' என்று டென்டை விட்டு வெளியே வந்தேன். வெளியே திருவிழா கோலமாக இருந்தது. என் முடிவை வெளியிலிருந்த அத்தனை பேரும் ஆமோதித்தது போல் இருந்தது. 

ஒரு குதிரைக்காரன் நேரே என்னிடம் வந்து 'கோடா ச்சாயே' என்று கேட்டான்(ர்). அதற்குள் எங்கள் குழுவிலிருந்த பாண்டியன் ஹிந்தியில் அவனுடன் பேரம் பேசி நான்கு குதிரைகள் (அவர்அவர் மனைவி,  நான் மற்றும் அஷ்வின் ஆகிய நால்வருக்கு) வேண்டுமென்றும் ஒருவருக்கு ரூ750 என்றும் பேசி முடித்தார்.
(அனுபவங்கள் தொடரும்)

இந்த இடுகையை திரு.கோவிந்த் மனோஹரிடம் 
இருந்து பெற்று வேதாந்த வைபவம் வலைப்பூவில் 
வெளியிடுவது: 'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.