Wednesday, February 9, 2011

பாகம் மூன்று: பகுதி ஐந்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை ஐந்து: சிவம் போதித்த சமத்துவம்.

அமர்நாத் குகைக்கு இன்னும் சில கி.மீ தூரம் செல்லவேண்டும்.
(படங்கள் நன்றி: திரு சூரஜ் பிரசாத்)
மணற்பாங்கான பாதை கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கான பனிபாளங்களூடே குளுமை பெற்று வந்தது. இதற்கிடையில் தலைக்கு மேலே அடிக்கடி பெரிய சைஸ் தும்பிகள் போலே கலர் கலராக ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டேயிருந்ததுகள். அதில் செல்பவர்கள் எல்லாம் சுகவாசிகள் என்று நான் நினைத்தது பின் தவறு என்று தெரிந்தது. எனெனில் அதில் பயணிப்பவர்களை நேராக குகை வாசலில் இறக்கி விடுவார்கள் அவர்களும் சுகதரிசனம் பெறுவார்கள் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் சிவன் மேல் கோபம் கூட வந்தது. 'இருப்பவர்களை இன்னல்களிலிருந்து காக்கும் செயலை எல்லோர்க்கும் பொதுவானவர் செய்யலாமா?' என்ற கேள்வியுடன். ஆனால் எங்களை குதிரைக்காரர்கள் இறக்கி விட்ட இடத்தில் கிடைத்த தகவல் சிவன் மேல் வந்த கோபத்தை துடைத்து விட்டது. ஆம் ஹெலிகாப்டரில் வருபவர்கள் பஞ்சதரணி (Panchitarani) என்ற இடத்தில் இறக்கி விடப்படுகிறார்கள். இது முன்னர் நான் குறிப்பிட்ட பெஹல்காம் என்ற இடத்திலிருந்து அமர்நாத் குகைக்கு செல்லும் வழியின் கடைசி தங்குமிடமாகும். 

அங்கிருந்து குகைக்கு நடந்தோ அல்லது குதிரையிலோ வரவேண்டும் அதுவும் குதிரையில் வருபவர்கள் நாங்கள் இறக்கிவிடப்பட்ட இடத்திலேயே இறக்கி விடப்படுவார்கள். ஆக யாராக இருந்தாலும் - (பால்தால் வழியாக வந்தவர்களாக இருந்தாலும், பெஹல்காம் வழியாக வந்தவர்களாக இருந்தாலும்) வசதி படைத்தவர்களானாலும், மற்றவர்களானாலும் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்து நடந்து தான் குகைக்கு செல்லவேண்டும். 

எல்லோரும் சமமில்லாமல் வாழும் சமவெளி(?) பிரதேசத்தைச் சேர்ந்த என்னை போன்றோருக்கு இது பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆம், கடவுள் எல்லோருக்கும் பொது, அவரிடத்தில் எல்லோரும் சமம் என்ற உண்மை அங்கு நடத்திக்காட்டப்பட்டது, 

கடவுள் என்ற நினைப்பில் நான் கட்டி வைத்திருக்கின்ற ஒரு பிம்பத்திற்கு உரிய தகுதி அங்கு சரிபார்க்கப்பட்டதாக எனக்கு தோன்றியது. நாம் எழுப்பியுள்ள மனக்கோயில் சரியான கட்டுமானத்திலிருப்பதாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த உணர்வு அங்கு நிலவிய அசாதாரணமான குளிரை குறைத்தது என்பது என் வரைக்கும் நிஜம்.

இருபுறமும் மலைகளும் நடுவில் உறைந்த பனியிலான பள்ளத்தாக்கில் குதிரையின் மேல் வலியுடன் சென்ற எங்கள் ஐவரையும் ஓரிடத்தே இறக்கி விட்டனர் குதிரைக்காரர்கள். 

அங்கு நிறைய குதிரைகள் பனியில்லா புல்தரைகளைத்தேடி மலை முகடுவரை சென்று புல்மேய்ந்ததை பார்கக பயமாகவும் ரம்மியமாகவும் இருந்தது. என் குதிரைக்கு முன்னேயே அஷ்வினின் குதிரை அங்கு வந்து விட்டிருந்தது. அவர் இறங்கி நின்றிருந்தார். முகத்தில் ஒளியில்லை. (என் முகத்தைப்பார்த்து அவரும் இதையே சொல்வார் என்று தோன்றியது).

(பயணம் தொடரும்)

2 comments:

geethasmbsvm6 said...

நாம் எழுப்பியுள்ள மனக்கோயில் சரியான கட்டுமானத்திலிருப்பதாக தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. //

sorry to say, I can't agree with this. NO ISO in Bakthi. There is no limit in worshipping. HE is above all! Who are we to certify HIM?

geethasmbsvm6 said...

to continue