- செயல் புரிபவனாகச் சிறந்து விளங்குவது எப்படி என்ற கேள்விக்கு தைத்திரீய உபநிடதத்தில் உள்ள சில மந்திரங்கள் சில குறிப்புகளைத் தருகின்றன.
ச்ரத்தா ஏவ சிர:
------------------
முதன்மையானது,அக்கறை.செய்யும் செயலை மதித்தல்;நேசித்தல்(சிர: என்றால் தலை. ச்ரத்தா என்பது ஈடுபாடு,அக்கறை). சிறப்பாகச் செயல் புரிய வேண்டுமெனில் செய்கின்ற செயலை வெறுப்புடன் செய்யக்கூடாது; தயக்கத்துடன் செய்யக் கூடாது;அரை மனதுடன் செய்யக்கூடாது.எல்லாச் செயல்களும் நாமே தேர்ந்தெடுத்துச் செய்பவை அல்ல.சில செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்கிறோம்.சில செயல்கள் நாம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு குடும்பத்தலைவனாக, ஒரு அலுவலக ஊழியனாக, ஒரு பொறுப்புள்ள குடிமகனாகப் பல செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தச்செயல் செய்தாலும் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும்;குறைந்த பட்சம் வெறுப்பாவது இல்லாமல் இருக்க வேண்டும்."என் தலையெழுத்து,என் போதாதகாலம்" என்றெல்லாம் குறை கூறிக்கொண்டே எந்தச் செயலையும் செய்யக்கூடாது. செயலை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களை விரும்பக் கற்றுக்கொண்டால், அச்செயலைச் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைத்தரும். ஒரு முறை அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு நண்பர் என் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுக் கூறினார்"நான் நினைக்கிறேன்,நீங்கள் உங்கள் வேலையை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று".நான் சொன்னேன்"ஆம்,நண்பரே, அவ்வாறு நேசிப்பதால்தான் என்னால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது".எனவே முதன்மையானது செய்யும் செயலிடம் விருப்பம்,மரியாதை,ஈடுபாடு,அக் கறை.
ருதம் தக்ஷிண:பக்ஷ:
---------------------------
அடுத்தது செய்யும் செயல் பற்றிய அறிவு.செய்ய வேண்டிய செயலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,ஏன் செய்ய வேண்டும்,எங்கு செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், 'ருதம்' என்பதற்குச் செய்கின்ற செயலைப்பற்றிய சரியான அறிவு எனப் பொருள் கொள்ளவேண்டும்."யதா சாஸ்திரம்,ததா கர்தவ்யம் ஞானம்" என்கிறார் ஆதி சங்கரர்.விதிகள் என்ன சொல்கின்றனவோ,அதை அப்படியே செய்ய வேண்டும். இரவில் ஒருவர் சுப்ரபாதம் படித்தால் அவரைப் பற்றி என்ன சொல்வது? தேர்வுக்குச் செல்லும் மாணவன் நன்கு படித்துவிட்டுச் செல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர்,இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்,இன்றும் வகுப்புக்குச் செல்லும் முன் தயார் செய்து கொண்டுதான் செல்கிறார்.(ஈடுபாடு+அறிவு).ஒரு செயலில் ஒரு தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.அதுவே செயல் முன்னேற்றத்துக்கான வழி.
செயல்கள் மட்டுமன்று.வாழ்வில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பாத்தி்ரமுமே பல விதமான செயல்பாடுகள் உடையதாகிறது.ஒருவரே,மகனாய், கணவனாய், சகோதரனாய்,தந்தையாய் பல நிலைப்பாடுகளில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் திறம்படச் செய்ய,அது பற்றி முழுமையான அறிவு தேவை.
ஸத்யம் உத்தர:பக்ஷ:
--------------------------
செய்யும் செயல் பற்றி முழுமையாக அறிந்த பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
" யதா சாஸ்திரம் ததா கர்தவ்யம் ஞானம்
யதா ஞானம் ததா அனுஷ்டானம்."
எனக்கு ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும்,ஆனால் செய்ய மாட்டேன் என்ற நிலை இருக்கக்கூடாது.அறிவுக்கும்,செ யலுக்கும் இடையே பிளவு இருக்கக் கூடாது என்பதையே ஸத்யம் என்ற சொல் உணர்த்துகிறது.ஒரு செயல் பற்றிய நம் முழுமையான அறிவைப் பயன்படுத்தி அச் செயலைச் செய்யும்போது செம்மையாகச் செய்து விட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது.எனவே மூன்றாவது,அறிந்தவற்றைச் செயல் படுத்துவது.
யோக ஆத்மா
-----------------
யோக என்பதற்கு இங்கே பொருள் ஒருமுகப்படுத்துதல்( concentration,focus).நாம் தியானத்தில் இருக்கும்போது நம் மனம் ஒருமுகப்படுகிறது. அதைப்போல, செயலைத் தியானமாகப் பாவித்துமனதை ஒரு முகப்படுத்திச் செய்யும்போது செயல் செம்மையாக முடிக்கப்படுகிறது.இயந்திரம் போல் செயலாற்றினால் செய்த செயலையே திரு்ம்பச் செய்ய நேரிடும்.அலுவலகம் சென்றால் நம் சிந்தனை அங்கு செய்கின்ற செயல்களின் மீதுதான் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, விட்டைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் செயல் எவ்வாறு செம்மையாக முடியும்?எனவே,நமது கடமைகளைச் செய்யும்போது,"கருமமே கண்ணாயினார்"என்பது போல,மனதை ஒரு முகப்படுத்திச் செய்ய வேண்டும்.
மஹ:புச்சம் ப்ரதிஷ்டா.
----------------------------
" நான் செய்யும் ஒவ்வொரு செயலுமெவ்வளவு அதிகமான மனிதர்களுக்குப் பயன் படுகிறதோ அவ்வளவு பயன் படட்டும்"என்று எண்ண வேண்டும். கென்னடி சொன்னார்"இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நான் இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கேள்"எனவே நமது பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்.நமக்குக் கிடைக்கும் பயனை விட,அச் செயலால் மற்றவர்கள் எவ்வறு பயனடைகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.
ஆக, ஐந்து விதிகளாவன:-செயலை விரும்பு,அது பற்றி முழுமையாய் அறிந்து கொள்,செயல்படுத்து,ஒருமுகமாய் செயலாற்று,பார்வையை விரிவாக்கு.
இவையே தைத்திரீய உபநிடதம் சொல்லும் செய்தி.
(ஆதாரம்:பரம பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் உரை