அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்...
பகுதி 5
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி..
போகாதென்னுள்ளத்தில் இருந்தாய் போற்றி.
(அப்பர் சுவாமிகள்)
வைஷ்நோதேவியை தரிசனம் செய்யுமுன்னதாக ஜம்மு-காஷ்மீர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகள்.
சொர்க்கத்தை பார்த்துவிட்டு வந்து நம்மிடம் சொன்னவர்கள் யாருமில்லை. அது இந்தப் பூவுலகத்தில் அதுவும் இந்தியாவில் இருக்கிறதா? என்று கேட்டால் நான், ''ஆம் அது காஷ்மீர்தான்'' என நான் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுவேன்.
“பூவுலகின் சொர்க்கம்”, ''ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து''என்றெல்லாம் பலவாறாகப் புகழப்படும் காஷ்மீர் பற்றி சில சுவையான செய்திகளை முதலில் பார்த்து விட்டு வைஷ்ணோதேவி செல்லலாம்.
கடலின் மழலைகளாய் பரந்து கிடக்கும் நீண்ட ஏரிகள், அழகான மிதக்கும் தோட்டங்களை போன்ற படகு வீடுகள், விண்ணை முட்டும் சிகரங்களை பனிபோர்த்தி இருக்கும் அழகு, வற்றாமல் குதித்தோடும் ஆறுகள், வானைத் தொடுவதில் இமயச்சிகரங்களை வெல்ல எண்ணும் தேவதாரு மற்றும் சினார் மரங்கள், நாணித் தலைகவிழும் எழில் மங்கையின் முகம் போல வண்ணப்பூக்கள் மலர்ந்து சிரிக்கும் பூங்காக்கள், வழிநெடுகிலும் மரகதப் பச்சையாய் விரிந்து கிடக்கும் புல்வெளிகள்,வயல் வெளிகள் என்று இயற்கை வஞ்சனை இல்லாமல் உயிரோவியமாக் காஷ்மீரை படைத்து வைத்திருக்கிறது.
இங்கே கொடைக்கானல் ஏரியையும் காணலாம், உதகைக் குளிர்காற்றையும் அனுபவிக்கலாம், குற்றாலத்து மலையருவியையும் காணலாம், கேரளத்தின் பசும்பொழில்களையும் காணலாம், காஷ்மீருக்கே உரித்தான படகு வீடுகளையும், மிதக்கும் பூங்காக்களையும் காணலாம். மலைவளமும், மலர்வனமும், பனியாறுகளும் மலிந்து எழில் கொஞ்சும் தோட்டமாக பாரதத்தாயின் நிலவு போன்ற குளிர் முகத்தில் உள்ள சிந்தூரத்திலகம் போல திகழ்கிறது காஷ்மீர்.
ஸ்ரீநகரின் தால் ஏரி (நன்றி: கோவிந்த் மனோகர்)
ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும் அழகிய பாதை.
வழியெல்லாம் புரண்டோடும் புனல்கள்.
(படம் நன்றி: மகேஷ் கொண்டல்)
பாதையின் இரு மருங்கிலும் பழ மரங்கள். (படம் நன்றி: கோவிந்த் மனோகர்)
(படம் நன்றி: மகேஷ் கொண்டல்)
இமயப் பெருமலையில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 5300அடி உயரத்தில் உள்ள காஷ்மீர் பகுதி, பூவுலகில் உள்ள எழில்மிகு சமவெளிகள் அனைத்தையும் விடப் பேரெழில் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.
இமயப் பெருமலையில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 5300அடி உயரத்தில் உள்ள காஷ்மீர் பகுதி, பூவுலகில் உள்ள எழில்மிகு சமவெளிகள் அனைத்தையும் விடப் பேரெழில் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.
மூன்று பகுதிகளை கொண்டதாய் ஜம்மு-காஷ்மீர் விளங்குகிறது.
· லே-லடாக், கில்சித் ஆகிய மாவட்டங்களை கொண்ட மலைவெளி;
· காஷ்மீரின் 'இன்பப் பள்ளத்தாக்கு' என்று புகழப்படும் ஜீலம் நதிப்பள்ளத்தாக்கு; மற்றும்
· ஜம்மு மாவட்டத்தின் மலைவெளி.
இந்தியத் துணைக்கண்டம், பாரதம்-பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிவினைசெய்யப்படுவதற்கு முன்னர் காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகருக்கு செல்லவிரும்புபவர்கள், முதலில் ராவல்பிண்டிக்குச் செல்வார்கள். பின்னர் அங்கிருந்து உதி, பாரமுல்லா வழியாக ஸ்ரீநகர் வந்தடைவார்கள்.
இப்போது ராவல்பிண்டி பாகிஸ்தானில் இருக்கிறது. பிரிவினைக்குப் பின் இந்தப் பாதையை பாகிஸ்தான் அரசு அடைத்து விட்டது.
பின்னர் இந்திய அரசு ராணுவத்தின் துணையுடன் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரைக்கும் அருமையான சாலை ஒன்றினை அமைத்திருக்கிறார்கள். இப்போதும் சாலைப் பாதுகாப்பு, சாலை பராமரிப்பு, சாலை போக்குவரத்தினை ஒழுங்கு செய்தல் அனைத்தும் ராணுவம்தான்.
காஷ்மீர் என்று சொல்லும் போதே ஜம்மு-காஷ்மீர் என்றுதான் சொல்கிறோம்.
குலாப்சிங் என்ற மன்னர் காலத்தில் ஜம்மு, காஷ்மீர் இரண்டு பகுதிகளும் ஒன்றிணைந்து அவரது ஆளுகைக்கு கீழே வந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மன்னர் குலாப் சிங் (1850)
நன்றி : google