Friday, August 27, 2010

பகுதி 6 - அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை(2010)-பயண அனுபவங்கள்...

பகுதி 6

ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் இடையில் 12000-அடி உயரமுள்ள பீர்-பாஞ்சால் மலைத்தொடர் செல்கிறது. ரவி நதிக்கரையில் தான் ஜம்மு இருக்கிறது. முன்னாள் இதை 'டூக்கர்' என்று வழங்கியிருக்கிறார்கள். அந்த பெயரை ஒட்டியே அந்த மக்கள் 'டோக்கர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் மொழி 'டோக்ரி' என அழைக்கப்படுகிறது. பஞ்சாபி மொழிக்கும், பாரசீக மொழிக்கும் பிறந்த அருமைக் குழந்தை இந்த 'டோக்ரி'. ஜம்மு-காஷ்மீரை ஆண்ட குலாப்சிங் டோக்கர்  இனத்தை சார்ந்தவர்.

ஜம்மு நகரம்கோவில்களின் நகரம்என்று அழைக்கப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ஜம்பூ லோச்சன், ஒரு முறை காட்டுக்குள் வேட்டையாட சென்றிருந்தபோது தவி நதிக்கரையில் ஒரு துறையில் வேங்கையும், மானும் அருகருகே நின்று நீரருந்திய அதிசயத்தைக் கண்டான். இந்த இடத்துக்கு ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்த மன்னன் தனது நாட்டின் தலைநகரை இங்கு தான் நிறுவ வேண்டும்; வலியோரும், மெலியோரும் இந்த நகரில் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று எண்ணி அதன்படியே  ஒரு நகரை ஸ்தாபித்தான், அதற்கு தனது பெயரான ஜம்பூ என்பதை சூட்டினான்.

நாளடைவில் அந்தப் பெயர் ஜம்மு என்று மருவியது. இன்றைக்கும் ஜம்மு நகரில் இந்துக் கோவில்களும், சீக்கியர்களின் குருத்வாராக்களும், இஸ்லாமியரின் மசூதிகளும், கிருஸ்துவரின் சர்ச்களும் நிறைய இருப்பதைக் காணலாம். ஜம்மு மக்கள் அமைதி விரும்பிகள் என்பது அவர்கள் பழகும் விதத்தில் இருந்தே தெரிகிறது. ஜம்மு நகரம் தவி நதிக்கரையில் ஒரு உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது. ரகுநாத்ஜி கோவில் அரசவம்சத்தினரால் நிர்மாணிக்கப் பெற்று இன்றும் பலரால் வழிபாடு செய்யப்படும் தலமாக உள்ளது. சிவன், விஷ்ணு இரு மூர்த்திகளும் இங்கே இருந்து அருள் பாலிக்கின்றனர். ஜம்முவைச் சுற்றிலும் வைஷ்ணோதேவி உட்பட நிறைய கோவில்கள் உள்ளன

குகைக்குள் அமைந்த சுயம்புலிங்கம் கொண்ட சிவகோடி (sivakodi) என்னும் திருத்தலம் அமர்நாத் போலவே மகா சிவராத்திரி சமயத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கும் சிவத்தலமாக திகழ்கிறது.

இடுக்கமான குகையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் குனிந்தும், தவழ்ந்தும் சென்று சிவனின் சுயம்பு வடிவத்தை தரிசிக்கலாம் என்று கூறுகிறார்கள், இந்தக் கோவிலுக்குச் சென்று வந்தவர்கள்.

இந்தத் திருத்தலத்திலிருந்து அமர்நாத் 400 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து அமர்நாத் குகைக்கு suranga வழி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் யாரும் அதை சோதித்து பார்த்ததில்லை என்றும் கூறுகிறார்கள்சிவக்கோடி எங்கள் பயணத் திட்டத்தில் இல்லாததினால் அடுத்த முறை வரும்போது சிவக்கோடிக்கும் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்

ஏறத்தாழ ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஜம்மு,  ஜம்மு-காஷ்மீரின் குளிர்காலத் தலைநகராகவும் விளங்குகிறது.

ஜம்மு-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரம் ஸ்ரீநகர்.
ஸ்ரீ என்றால் திரு (செல்வம்) என்று பொருள். ஸ்ரீநகர் சூரியநகர் என்றும் அழைக்கப்படுவதுண்டாம். ஸ்ரீநகர் இரண்டாம் ப்ரவரசேனன் என்னும் மன்னனால் கி.மு.2000 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் வந்த மௌரியப் பேரரசர் அசோகர் (245BC) ஸ்ரீநகரை மேலும் விரிவுபடுத்தினார். கடல் மட்டத்திலிருந்து 5300அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த எழில் கொஞ்சும் நகரின் மத்தியில் வளம் பொங்கும் வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான ஜீலம் நதி ஓடுகிறது. அத்வைத தத்துவத்தை பரப்புவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீநகருக்கு வந்திருக்கிறார். அவரது வருகையை நினைவுகூரும் வண்ணம் இங்குள்ள குன்றுக்கு சங்கராச்சாரியார் குன்று என்று பெயர் இடப்பட்டுள்ளது.
பாரதத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களிலேயே சமயவெறிக்கு இரையாகாமல் சமநோக்குடன் அறம் வழுவாமல் ஆண்டு ஆட்சி புரிந்தவர் பேரசர் அக்பர். காஷ்மீரின் இயற்கை அழகில் இதயத்தை பறிகொடுத்த அக்பர் கட்டியுள்ள கம்பீரமான ஹரிபர்வதக் கோட்டை ஸ்ரீ நகரில் உள்ளது.
ஆதிகுடிகள்: காஷ்மீர தேசத்தின் ஆதிகுடிகள் நாகர்களே. இன்றளவிலும் எழுநூறுக்கும் மேற்பட்ட ''நாகம்'' என்ற சொல்லோடு முடியக் கூடிய சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. காஷ்மீரில் ஆதியில் குடியேறியவர்கள் நாகர்களே என்ற குறிப்பு ''அயினி-அக்பரி'' என்ற நூலில் காணப்படுகிறது. நாகர்கள் சிந்த் சமவெளியில் குடி இருந்த திராவிட இனத்தார் என்று வாதிப்பவர்களும் உண்டு. நாகர்களுக்கு பின்னர் பைசாசர்கள் எனும் ஆரிய இனத்தவர்கள் காஷ்மீரில் குடிபுகுந்தார்கள். கல்ஹனரின் ராஜதரங்கினியின் படி ராஜதயகரணன் எனும் மன்னரே முதன் முதலாக கி.மு.2180ஆம் ஆண்டு அரசை நிலை நாட்டியவன் என்று தெரிகிறது. ஆதியில் ஜராசந்தனுக்கு சம்பந்தி முறையில் உள்ள கோநந்தன்  என்பவனும் காஷ்மீரை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
காஷ்மீரின் ஆதி சமயம்: காஷ்மீரின் ஆதி சமயம் எது என்ற கேள்விக்கு சின்னக் குழந்தை கூட சனாதன தர்மம் (இந்து சமயம்) தான் என்று பதில் கூறி விடும். காஷ்மீர் முன்னொரு காலத்தில், ஹிந்துக்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ஹிந்து பண்பாட்டின் ஒரு பீடமாக, பல அறிஞர்கள் வாழ்ந்த காரணத்தினால், “காஷ்மீர புர வாஸினிஎன்று ஒரு சுலோகம் சரஸ்வதியை வர்ணிக்கிறது. கஷ்யப முனிவர் வாழ்ந்ததால் காஷ்மீரம் என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. காஷ்மீரை உருவாக்கியவர் காஷ்யப முனிவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
புராணக் கதைகளின்படி பன்னெடுங்காலமாகவே காஷ்மீரம், கடல் போல பரந்து கிடந்த பெருந்தடாகமாகவே விளங்கியதாம். அதில் பரமசிவனின் மனைவி பார்வதி தேவி படகோட்டி விளையாடி மகிழ்வாராம். அத்தடாகத்தை ஒட்டி ஒரு அரக்கன் (ஜலோத்பவன்) பாம்பு வடிவில் வசித்து வந்தானாம். அவனுக்கு மனித வாடையே ஆகாது. அத்துடன் தடாகத்தில் பெரிய பெரிய அலைகளை எழுப்பி, தண்ணீரில் நச்சினைக் கலந்து பார்வதியின் படகுப் பயணத்துக்கு இடையூறாக இருந்தானாம். காசியப முனிவர் அந்த அரக்கனை விஷ்ணுவின் உதவியுடன் அழித்து, நீர்ப்பரப்பாக இருந்த அந்த பகுதியை தூர்த்து நிலப்பரப்பாக்கி காஷ்மீரை நிறுவினார். காஷ்மீர தேசத்துக்கு சக்தி தேசம் எனும் ஒரு பெயரும், உண்டு. அங்கிருந்த ஆரம்பகால ஏரிக்கு ''சக்தி சரஸ்'' என்று பெயர். சக்தி தேவி அங்கு உலவியதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
நீலமத புராணம் காஷ்மீரின் வரலாற்றினை விரிவாக பேசுகிறது. குரு வம்சத்தை சேர்ந்த ஜனமேஜயன், வியாச முனிவரின் மகனான வைஷம்பாயனரிடம், ''ஏன், காஷ்மீர மன்னன் மகாபாரத போரில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை?'' என்று கேட்கிறான். அதற்கு வைசம்பாயனர், இரண்டாம் கோநந்தன்  மகாபாரதப் போரின் போது சிறுவனாக இருந்ததாக பதில் கூறுகிறார்.
பிறகு ஜனமேஜெயன் வைசம்பாயனரிடம், ''சதிசார் (sakthi saagar) ஏரி எப்படி வறண்டு போனது? மக்கள் எப்படி இங்கே குடியேறினார்கள்?'' என்று கேட்கிறான்
வைசம்பாயனர் கூறுகிறார்: ''சாதிசார் ஏரி மிகப் பெரிய ஏரியாக விளங்கியது. கைலாச மலைக்கு படகில் செல்லும் அளவுக்கு பெரிய ஏரி. மலையத்துவசனின் மகள் பார்வதி இந்த ஏரியில் படகோட்டி விளையாடி வருகையில் இந்த ஏரிக்குள் இருந்த ஜலோத்பவன் என்கிற அசுரன் அவளிடம் தொல்லை தந்தது மட்டும் அல்லாமல் கரைப்புறங்களில் வாழும் அப்பாவி மக்களையும்  துன்புறுத்தி வந்ததாக அனைவரும் தமது அரசர்  நீல நாகனிடம் முறையிட, நீலநாகன் தன் தந்தையான காஷ்யபரிடம் முறையிட, அதனைக் காஷ்யபர் மகாவிஷ்ணுவிடம் முறையிட மகாவிஷ்ணுவும் அனந்தன் என்பவனை அனுப்பி வைக்கிறார். அனந்தன் தனது கலப்பை போன்ற மழுவால் தாக்கி இமயமலையின் ஒரு பகுதியை தகர்த்து ஏரியை வடிய விட்டுவிடுகிறார். காஷ்மீரின் பாரமுல்லா (வராஹா மூலா) பகுதிதான் அந்த தகர்க்கப்பட்ட இடம் என்கிறார்கள். விஷ்ணு தோன்றி ஜலோத்பவனை சக்ராயுதத்தால் கொல்கிறார். அந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த  நாகர்கள், பைசாசர்கள் போன்ற திராவிட ஆரிய இன மக்களை விஷ்ணு அங்கே குடியேறச் செய்கிறார். தவம் புரிய இடம் தேடிய அந்தணர்களை காஷ்யப முனிவர் இங்கே குடியேற்றம் செய்ததாகவும்,  ''காஷ்யபபுரம்'' என்று அழைக்கப் பட்டு பின்னர் மருவி காஷ்மீர் என்று ஆனதாம்.காஷியபரின் மகன் நீலநாகன் இந்த பகுதியை அரசாண்டு வந்ததாகவும் புராணம் பகர்கிறது. காஷ்யப முனிவரின் மகனான நீலநாகரே 'நீலமதபுராணம்' எழுதியவர். நாகவமிசத்தின் துவக்கம் நீலநாகரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய பற்பல சமயங்களின் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய்ந்தவர்கள் அனைவருமே நாக வணக்கம் மிகப் பழைமையான வழிபாடுகளின் ஒன்று என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் வாழ்ந்த மக்கள், மலைக்குன்றுகளிலும், நீரூற்று உள்ள இடங்களிலும் பெரும் நாகங்கள் உறைவதாக கருதி அவற்றினால் ஏற்படும் இடர்களை தவிர்க்க அவற்றையே தெய்வங்களாக போற்றி வழிபட்டார்களாம். காஷ்மீர் பகுதியின் பல பெயர்கள் இப்போதும், நாக்(Naag) என்றே முடிவதைக் காணலாம். உதாரணம்:அனந்தநாக், சேஷநாக், ருத்ரநாக் , கோகர் நாக்,  போன்றவை.
சைவ சமயத்தின் ஓர் அங்கமாக பெயர் பெற்றது ''காஷ்மீர சைவம்'' ஆகும்.''உள்ள பொருள் ஒன்றே'' என்று கூறுவதால் இது ஆதி சங்கரரின் அத்வைத தத்துவத்தை ஒட்டியது என்று பலர் கூறுகிறார்கள். காஷ்மீரசைவத் தத்துவத்துக்கு திரிகம், ஸ்பந்த சாஸ்திரம், பிரத்திய பிஞ்ஞா தரிசனம் என்று வேறு பெயர்களும் உண்டு. காஷ்மீரசைவ தத்துவத்துக்கு முதல் நூலை யாத்தவர் சிவபெருமான் ஆவர். வசுகுப்தர் என்னும் ஞானிக்கு 'சிவசூத்திரம்'' என்ற பெயரில் சிவனே நூலை யாத்துத் தந்தாராம். வசுகுப்தருக்கு பின்னர் பல ஞானாசிரியர்கள் தோன்றி காஷ்மீர சைவத்துக்கு வனப்பும், வளமும் தந்தனர். அவர்களுள் கல்லாடர் (தமிழகத்திலும் கல்லாடர் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் இவர்தானா என்று தெரியவில்லை) என்பவர் குறிப்பிடத்தக்கவர். கல்லாடர் சிவசூத்திரத்தை ஆராய்ந்து நுணுக்கமான விஷயங்களை ஸ்பந்த சர்வஸ்வம் என்னும் நூலில் விளக்கியுள்ளார். கி.பி.855-883 ஆண்டுகளில் கல்லாடர் அவந்தி வர்மனின் அரசவையை அணிசெய்தவர் என்று வரலாறு கூறுகிறது.
சிந்துசமவெளி நாகரிகத்தின் ஒரு அம்சமாக காஷ்மீரும் விளங்கி இருக்கிறது. அழகு தொட்டிலாக விளங்கும் காஷ்மீரின் வரலாறு மிகவும் பழமையானது. வேதங்களில் காஷ்மீரைப் பற்றி நிறையக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மத்ரம், டுக்ரம் என்றெல்லாம் வேதங்கள் குறிப்பிடுவது காஷ்மீரத்தை பற்றியே. புராணங்களில் 'த்வி கர்த்தம்' என்ற பெயர் காஷ்மீரத்துக்கு வழங்குகிறது. இந்தச் சொல்லுக்கு 'இரண்டு ஏரிகள் உள்ள பிரதேசம்' என்று பொருளாம். மானசரோவரம், சரூஈசர் என்னும் இரு பெரிய ஏரிகள் இந்தப் பகுதி எல்லைக்குள் இருப்பதே இந்த பெயருக்கு காரணமாகும். 'டுக்கரம்' என்றாலும் இதே பொருள்தான். இப்போது ஜம்மு பகுதியில் உள்ளவர்கள் டோக்கர்(டுக்கர்) இனத்தைச்  சார்ந்தவர்கள் என்பதையும், டோக்ரி மொழி பேசுகிறார்கள் என்பதையும் இந்த இழையில் முன்னமேயே பார்த்திருக்கிறோம்

கி.மு.500 முதற் கொண்டே கிரேக்க வரலாற்று பேரறிஞர்கள் ஹெகடாயிஸ், ஹெரடோடஸ், ப்டாலமி(Ptolomy) போன்றவர்கள் காஷ்மீரை அவர்களது குறிப்புகளில் காஸ்பாபைரல், காஸ்பத்ராஸ்காஸ்பீரியா என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.

வியாச  முனிவரின் மகாபாரதத்திலும், காஷ்மீர் பற்றிய செய்தி வருகிறது. வடமொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி காஷ்மீரைப் பற்றி குறிப்பிடுகிறார். பாணினியின் இலக்கணத்திற்கு உரை செய்த பதஞ்சலி முனிவர் (யோகசூத்திரம் எழதியவர்) காஷ்மீர்க்காரர் என்கிறார்கள். இவர் திருமூலர், வியாக்ரபாதர் இவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்து தில்லையில் பல காலம் தங்கி இருந்து, தமிழ் நாட்டில் சமாதியானதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பத்மமிஹிரர், ஹேலராஜா, சாவில்லகாரா, சங்குஹா, க்ஷேமேந்திரா, கல்ஹணர் போன்ற காஷ்மீரப் பண்டிதர்கள் காஷ்மீரின் வரலாற்றை எழுதி இருக்கிறார்கள்.
எனினும் கடைசியாகக் குறிப்பிட்ட கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்னும் வரலாற்று நூல் மிகவும் புகழ் வாய்ந்தது. காஷ்மீரை ஆண்ட ஹர்ஷவர்தனரின் அரசவையில் இருந்த சம்பகா எனும் அமைச்சரின் மகன் தான் இந்த கல்ஹணர் ஆவார். ராஜதரங்கிணி என்றால் அரசர்களின் ஆறு என்று பொருள்.

கல்ஹணர் ஒரு சைவசமயி. இருப்பினும், பௌத்தர்களிடம் பற்றுதலும், பெருமதிப்பும் கொண்டவர். ஒரு வரலாற்றாசிரியன் என்ற முறையில் நடுநிலை தவறாதவராக வரலாற்றினை எழுதியதால்தான் கல்ஹணரின் ''ராஜதரங்கிணி'' இன்றளவிலும் புகழ் வாய்ந்த நூலாக போற்றப்படுகிறது.

ஆற்றொழுக்கு போன்ற காவிய நடையில், உண்மைச் சம்பவங்களை எளிமை, நீதிக்கதைகள், அங்கங்கே நகைச்சுவை என்றெல்லாம் விரவித் தெளித்து இயற்றப்பட்ட அற்புதப் படைப்பு ராஜதரங்கிணி.

சமஸ்கிருத மொழிக்கு அணி செய்யும் வளம் பொருந்திய இலக்கிய மணியாகவும் ராஜதரங்கிணி விளங்குகிறது. காஷ்மீரின் ஆதிபுராணக் கதையில் இருந்து ஆரம்பித்து கி.பி.1148 வரை கல்ஹணர் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார். அதே ராஜதரங்கிணியை கி.பி.1148 முதல்  1420 வரையிலான வரலாற்றை ஜோனராஜா என்பவர் தொகுக்க 1420 முதல் 1486 வரையிலான வரலாற்று நிகழ்ச்சிகளை அவருடைய மாணவர் ஸ்ரீவரகவி என்பார் தொகுத்திருக்கிறார். அவருக்குப் பின்னர் ஆண்ட அக்பரின் வரலாற்றினை ராஜதரங்கிணியின் நீட்சியாக பிரஜா பட்டரும், சுகாவும் எழுதினார்களாம்.

ஜம்மு-காஷ்மீர் ஆன்மிகம் (அன்றும் இன்றும்):

ஜம்முவில் இந்து மதமும், காஷ்மீரில் இஸ்லாமும், லே-லடாக் பகுதியில் பௌத்தமும் பெருவாரியாக பின்பற்றப்படுகின்றன. உலகின் வேறு எங்கிலும் காண இயலாத அளவுக்கு இந்த மூன்று வேறுபட்ட மதங்களில் பின்னிப் பிணைந்த ஒரு தன்மையாக காஷ்மீரி சூஃபியிசம் இங்கே விளங்குகிறது. காஷ்மீரி சூஃபிக்கள் ரிஷி கலாச்சாரம் என்கிற துறவுக்  கலாச்சாரத்தினை இந்து மதத்தில் இருந்தும், பௌத்த மதத்தில் இருந்தும் உருவாக்கி இருக்கிறார்கள்.
  
காஷ்மீரி முஸ்லிம்கள் மட்டும் தங்கள் வேர்களை மறந்து விடாமல் இருக்க தார் (Dhar), பட்(Bhat) என்றெல்லாம் இந்து குலப் பெயர்களை தங்கள் இஸ்லாமிய பெயர்களுடன் வைத்துக் கொள்வதை இன்றளவிலும் காணலாம். மேலும் காஷ்மீரி இந்துக்கள் கிச்சடி அமாவாசை என்னும் இந்து பண்டிகையை கொண்டாடும் போது முஸ்லிம்களும் அவர்களுடன் இணைந்து தங்கள் முன்னோர்களுக்கு கிச்சடி செய்து படைக்கிறார்கள்.

இந்த செய்திகளை எல்லாம் காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் என்னிடம் விவரித்த போது என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை. காஷ்மீரி இந்துக்கள் முஸ்லிம் தர்காவுக்கு செல்வதை தங்கள் புனித செயலாகவே கருதுகிறார்கள். என்னுடன் பேசிய இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் முன்னோர்கள் இந்துக்கள் என்பதை எப்படி மறுக்கவோ, மறக்கவோ, மறைக்கவோ முடியும் என்று என்னிடம் வினவினார்கள்.

யாத்திரையின் போது குதிரைகளை வழி நடத்திய இஸ்லாமிய சகோதரர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டு "ஹர ஹர மகாதேவ், பம் பம் போலே" என்று ஆர்வத்துடன் கோஷம்  போட்டுக் கொண்டு வந்தார்கள்.

இந்துக் கோவில்களை இடித்துத் தள்ளிவரும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளைப் போல அல்லாமல் காஷ்மீர் பகுதியில் இப்போதும் நிறைய பழங்கால இந்து கோவில்கள் உள்ளன. மனிதர்கள் சாதாரணமாக நெருங்க இயலாத இடங்களான மலை உச்சி, குகைகள், அடர்ந்த காடுகளில் இருக்கும் இறை வழிபாட்டு இடங்களை இஸ்லாம் ஆட்டிடையர்கள் கண்டு அவற்றை ஊர் மக்களிடம் சொல்லி அவை மீண்டும் பூசிக்கும் தலங்களாக மாற்றிய பெருமையும் முஸ்லிம்களையே சாரும். மேலும் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பில் நிறைய முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதும் மனசுக்கு ஆறுதலும், பெருமிதம் தரும் செய்தியாகவும் இருந்தது.  

(அடுத்து வைஷ்ணோதேவி யாத்திரை தொடரும்)