அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்
சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.
குன்னூர் அன்பர்களின்
பத்தாவது அமர்நாத் யாத்திரை
வைபவங்கள்.
குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.
குழும இறையடியார்களுக்கு என் பணிவன்பான வணக்கங்கள்.
கடந்த பதிவில் குன்னூர் சிவனடியார்கள் நிகழ்த்தும் பத்தாவது அமர்நாத் யாத்திரை பற்றியும், புறப்படுவதகு முன்னதாக சிவனுக்கு அவர்கள் செய்த அபிஷேக பூஜைகள், மற்றும் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பவானி ரவி (குன்னூர்) அவர்கள் பலமுறை என்னை இந்த வைபவங்களில் கலந்து கொள்ள வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டுவிட நானும் இந்த முறை நம்மால் அமர்நாத் போக இயலவில்லை. சிவனடியார்கள் நிகழ்த்தும் இந்த வைபவங்களில் கலந்து கொண்டு சிவனருள் பெறலாமே என்று புறப்பட ஏற்பாடு செய்தேன்.
ஜூன் ஒன்றாம் தேதி அன்றே ஜூன் இருபத்தோராம் தேதி பயணத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்யச் சென்றேன். காத்திருப்போர் பட்டியல் எண் ஐந்து எனனை பார்த்து சிரித்தது.
திரும்பி வருவதற்கு இருபத்தி இரண்டாம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசிலும் இதே பிரச்சினை தான்.
எனினும், நான் பரவாயில்லை என்று சொல்லி விட்டு பயண டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டேன். இறையருள் வேண்டி நின்ற எனக்கு புறப்படும் நாளான இருபத்தோராம் தேதி அன்று வெயிட் லிஸ்ட் கிளியர் ஆகி தானாகவே கன்ஃபர்ம் ஆகி இருந்தது. இறைவனின் திருவருளால் இது ஆயிற்று என்று எண்ணி மனமிக மகிழ்ந்து சிவனுக்கு நன்றி பாராட்டினேன்.
அது என்னவோ தெரியவில்லை. தற்போதெல்லாம் சத் சங்கங்கள் வெகு சாதாரணமாக வாய்க்கின்றன .அதுவும் இறையருளின்றி நடக்காது அல்லவா?
ரயில் நிலையம் சென்றதும் நான் எனது பெட்டி எண்ணையும், படுக்கை எண்ணையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பெட்டிக்கு சென்றேன். எனக்கு எதிரே ஒரு சுவாமிஜி அமர்ந்திருந்தார். நல்ல உயரம், ஆஜானுபாகுவாக இருந்தார். தொப்பை எதுவும் இல்லை. முகம் அதிதேஜஸாக இருந்தது. அவருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தேன். உதகையில் உள்ள ஸ்ரீநாராயண குருகுல ஆஷ்ரமத்தின் சீனியர் ஸ்வாமிகளில் அவரும் ஒருவர். ரயில் புறப்படும் வரை சுவாரசியமான ஆன்மீக விஷயங்களை நிறைய என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் என்னைப் பற்றி அவருக்கு அறிமுகம் செய்து கொண்டேன். அவரது பூர்வீகம் கல்கத்தா ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி தான் என்றார். ஆங்கில மீடிய பள்ளிகளில் படித்ததினால் தமிழ் பேச வராது. ஆனால் யாராவது பேசினால் தமக்கு நன்றாக புரியும் என்கிறார். அப்போது நான் ஸ்ரீநாராயண குரு எவ்வாறு தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார் என்பதையும் தமிழில் அவர் எழுதிய பாடல்களைப் பற்றியும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வள்ளலார் பற்றிய நாராயண குருவின் பார்வைகளை சுவாமிஜி மிகவும் ச்லாகித்து பேசினார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்னும் பிற உயிரை தன உயிர் போல நேசிக்கும் பாடலை தமிழில் சொல்லி அவருக்கு விளக்கிய போது மிகவும் மகிழ்ந்தார். இவ்வாறாக அருமையான சத் சங்கத்துடன் எனது குன்னூர் பயணம் துவங்கியது. வடநாட்டுப் பக்கம் தொடர் பயணங்கள் முடித்து வரும் சுவாமிஜிக்கு ஓய்வு தேவை என்பதால் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அவருக்கு படுக்க இடம் கொடுத்து விட்டு மேல் பெர்த்துக்கு சென்றேன். ஒன்பதரை மணியளவில் உறங்கச் சென்றேன். நல்லதொரு சத்சங்கத்தினை தந்த சிவனுக்கு நன்றி கூறி ஆராதித்து விட்டு படுத்தேன். அதிகாலை மேட்டுப்பாளையம் செல்லும் வரை நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை சுமார் ஆறு மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று சேர்ந்தேன்.
(தொடரும்)