Showing posts with label பவானி இரவி. Show all posts
Showing posts with label பவானி இரவி. Show all posts

Tuesday, June 28, 2011

அமரநாதம் - 2011 : பகுதி நான்கு. நிறைவுப் பகுதி.


அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்


சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.



பகுதி நான்கு: 

நிறைவுப் பகுதி.

பிளாஷ் செய்தி: 


இந்தப் பகுதியை எழுதத் துவங்கிய இந்த நேரத்தில் (ஜூன் 25, 2011: 0800 Hrs.)
ஹரித்வாரில் இருந்து பவானி ரவி பேசினார். அவர்களது குழு இன்று காலை ஹரித்வார் அடைந்தது. பயணம் மிகவும் நல்லபடியாக அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். இன்று ஹரித்வாரில் உள்ள திருத்தலங்களை தரிசித்து விட்டு, இரவு ஹரித்வாரில் தங்கி, நாளைக் காலை ரிஷிகேஷ் செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத் செல்கிறார்கள். பின்னர் ஹரித்வார் வந்து அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்நோதேவி, அமர்நாத் செல்கிறார்கள். அதன் பின்னர் அலஹாபாத், காசி, கயா சென்று விட்டு சென்னை வந்து அதன் பின்னர் ராமேஸ்வரம் சென்று யாத்திரையை பூர்த்தி செய்கிறார்கள். ஒவ்வொரு திருத்தலத்தில் இருந்தும் என்னுடன் தொடர்பு கொள்வதாக கூறியிருக்கிறார். அந்த வகையில் ஹரித்வாரில் இருந்து இன்று என்னை குழுவினர் தொடர்பு கொண்டார்கள். 


வாருங்கள் மீண்டும் நாம் குன்னூர் செல்வோம்.

பவானி ரவியை வருந்த வைத்தது வேறொன்றும் இல்லை. குன்னூரில் உள்ள லாட்ஜ்கள் அனைத்தும் ஃபுல் ஆகி விட்டதால் அறைகள் கிடைக்கவில்லை என்பதே அந்த செய்தி. 

பவானி ரவி வருந்தும் போது நான் மகிழ்ந்தேன். ஏனெனில் அவர்களுக்கு செலவு வைக்காமல் இறைவன் தடுத்தது தான் காரணம். மாறாக, எனக்கு வேறொரு எண்ணம தோன்றியது. குன்னூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி ரயில்வே அதிகாரிகள் விருந்தினர் இல்லம் உள்ளது. முன்னமே அலுவலக ரீதியாக மனுச் செய்து ஒதுக்கீடு பெற்று வந்தால் அங்கு தங்கலாம். இப்போது சீசன் இல்லை என்பதினால் காலியாக தான் இருக்கும். எனவே ரவியை கவலைப் பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் சம்பந்தப்பட்ட அலுவலரை சந்திக்க சென்றேன்.  நான் நினைத்தது போலவே முன்பதிவுகள் எதுவும் இல்லாமல் ஒரு சூட் காலியாக இருந்தது. நான் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல அவர் தாராளமாக குளித்துவிட்டு உடை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பையை இங்கேயே வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். மாலை மேட்டுப்பாளையம் புறப்படும் சமயத்தில் வந்து பையை எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார். அனுமதி தந்த அந்த அதிகாரியின் பெயர் அருணாசலம். ஆஹா! இங்கும் சிவனருள் பொழிகிறது என்பதை உணர்ந்து நான் மனமுருகி இறைவன் திருநாமம் சொல்லி வணங்கினேன். 

நாம் நல்லோருடன் இருக்கும் போது நமக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்பது இங்கும் நிரூபணமானது. எனது தங்கும் அறை விஷயம் ஒரு வழியாக தீர்வுக்கு வந்ததும் ரவியும் அவர் நண்பரும் நிம்மதியானார்கள். என்னை குளித்து விட்டு ரெடியாக இருக்க சொல்லி விட்டு கோவில் ஏற்பாடுகளை கவனித்து விட்டு வந்து கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வதாக சொல்லி சென்றனர். 

பவானி ரவி அவர்களின் இல்லத்துக்கே என்னை அழைத்துச் சென்று இருந்திருக்கலாம். நான் குளிக்க மட்டும்தான் வேண்டி இருந்தது. ஆனால் அவருக்கோ இவர் சென்னையில் இருந்து வருபவர் ஆயிற்றே, வசதி க்குறைவாக எண்ணி விடுவாரோ என்று கவலை.  நான் சென்னையில் இருந்து பேசும் போதே ரூம் எதுவும் போடவேண்டாம் என்று அவரிடம் கண்டிப்பாக கூறி இருந்தேன். சொல்லியும் கேட்காமல் அவர் நான் குன்னூரை அடைவதற்கு முன்னதாகவே அறை ஏற்பாடு செய்ய முயன்று இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் ரூம் கிடைக்காமல் போய் அவரது கவலைகள் அருணாசலத்தின் உதவியால் தீர்க்கப்பட்ட சந்தோஷத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்றனர்.

நான் அறைக்குச் சென்று சுடுநீரில் குளித்து உடைமாற்றி நீறு பூசி திருவாசகமும், கோளறு பதிகமும் வாசித்தேன். 

இறைவனின் புகழை ஓதி முடியும் தருவாயில் அன்பர்கள் வந்து என்னை அழைத்துச் சென்றனர். இந்த அமர்நாத் யாத்திரை குழுவில் உள்ள ஒவ்வொரு சிவனடியாரும் ஒவ்வொரு நாயன்மாரைப் போல சிவபெருமான் மேலும், சிவனடியார்கள் மேலும் மாறாக் காதல் கொண்டவர்களாக விளங்கினார்கள். 

அவர்களைப் பற்றி ஒவ்வொருவராக விவரிக்க முயன்றால் இந்த தொடர் நீளும் என்பதால் கோவில் வைபவங்களை பற்றி மட்டுமே நான் இந்த பகுதியில் சொல்லி விட்டு முடிக்க எண்ணி இருக்கிறேன்.  வாய்ப்பு இருப்பின் அவர்களைப் பற்றியும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

எனக்கு விருந்துபசாரம் செய்து விட வேண்டிய ஆர்வத்தில் அவர்கள் இருந்தார்கள். நானோ அபிஷேகம் முடிந்த பிறகு அன்னதானத்தில் சாப்பிடுகிறேன் அதுவரை உபவாசமாக இருக்கிறேன் என்று எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை சிற்றுண்டி அருந்தச் சொல்லி என்னை நிர்பந்தித்ததின் பேரில் ஒரு பொங்கல் போதுமே என்று சொல்லியும் கேட்காமல், மேலும் ஒரு தோசை, பின்னர் காப்பி என அவர்கள் திருப்திக்காக சாப்பிட்டேன். 

பின்னர் கோவிலுக்கு சென்றோம். அங்கே ஈரோடில் இருந்து கயிலை ஈஸ்வரன் ஐயா வந்திருந்தார்கள். இவர்தான் ஆரம்பத்தில் பவானி ரவி அவர்களையும் அவரது நண்பர்களையும் அமர்நாத்துக்கு வழி நடத்தியவர். பெரியவர் கயிலை ஈஸ்வரன் ஐயாவுக்கு வயது 58 ஆகிறது. முன்னாள் ராணுவ வீரர். ஈரோட்டில் வியாபாரம் செய்கிறார். சிவனடியார்களுக்கு சேவை செய்வதை தனது வாழ்க்கை இலட்சியமாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு கயிலை மானசரோவர யாத்திரையை நிறைவேற்றி கயிலைநாதனை கண்ணாரக் கண்டு வந்து சிவபூரணமாக இருக்கிறார். 

பவானி ரவி அவர்களது இந்த பத்தாவது ஆண்டு யாத்திரையை வாழ்த்தி வழியனுப்பவும், அபிஷேக ஆராதனைகளை துவங்கி வைத்து திருமுறைகளை ஓதி முறைப்படுத்தவும், அன்னதானத்தினை துவங்கி வைக்கவும் அவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். அன்பு மயமாக இருக்கும் அந்த கயிலை புனிதரை அறிமுகப் படுத்திய போது நான் அவரது திருவடி பணிந்த போது அவரும் பதிலுக்கு பணிந்தார். அந்த அளவுக்கு சிவ மயமாக இருந்தார். 

கோவிலுக்குள் சென்று எல்லாத் தெய்வங்களையும் வணங்கினோம். சிவாசாரியார் மகேஷைக் கண்டதும், ஆரத்தி முடித்து தட்டினை காட்ட வந்த போது அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் ஆச்சரியத்தில் கண்களை விரித்தார். என்னை முன்னதாக பார்த்ததில்லை அவர். அந்த நிலையில் நான் அவரது பெயரைச் சொல்லி அழைத்தில் அவருக்கு வியப்பு தோன்றியது. நான் பிரதோஷ அன்பர் அரவங்காடு சிவனடியார் திரு.ஜோகராஜ் அவர்களின் பெயரைச் சொன்னபோது மேலும் வியந்தார். என்னைப் பொறுத்த வரையில் இந்தமுறை நான் எல்லாரையுமே முதல் முறையாகத் தான் சந்திக்கிறேன். ஆனால் பழகிய அனைவருமே பல ஜென்மங்களுக்கு முன்னரே பார்த்த மாதிரி பழகினார்கள். யாத்திரையில் இந்த முறை ஏழு பேர்கள் தான் போகிறார்கள் என்று கூறினார் பவானி ரவி. 

அந்த குழுவில் உள்ளவர்கள் பவானி ரவி, அவரது அன்னை, ரவியின் மனைவி மற்றும் திரு 'புல்லட்' குமரேசன், குமரேசனின் மனைவி திருமதி ரேவதி, ரேவதியின் சகோதரி திருமதி கலாவதி மற்றும் இவர்களுடன் சிவா என்னும் ஒரு இளைஞர். 

முதலில் பதினைந்து பேர்கள் புறப்படுவதாக இருந்த போது இந்த நான்கு பெண்மணிகளும் அந்தக் குழுவில் இல்லை. மற்றவர்கள் சில காரணங்களால் வர இயலாத நிலை ஏற்பட்ட போது பத்தாவது முறையாக செல்லும் யாத்திரை தடைபட்டுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் திரு புல்லட் குமரேசனின் மனைவியும் அவரது சகோதரியும் யாத்திரை வர விரும்பி இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரவியின் தாயாரும், மனைவியும் சேர்ந்து கொள்ள யாத்திரை குழு உருவாகி விட்டது. 

திரு பவானி ரவியும், சிவா என்கிற இளைஞரும் ஏற்கனவே தொடர்ந்து அமர்நாத் யாத்திரை செல்பவர்கள். புல்லட் குமரேசனும் மற்ற நான்கு பெண்டிரும் இப்போது தான் முதல் முறையாக அமர்நாத் யாத்திரை செல்லுகிறார்கள். 

இந்த அறிமுகங்களை செய்து கொண்டிருந்த போது மகேஷ் சிவாசாரியார் சுவாமி அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். எனது நண்பர் ஜிகேசுவாமியின் காமிராவை கொண்டு சென்று இருந்தேன். கடந்த அமர்நாத் பயணத்தின் போது மகன் ஹரீஷுடன் சுவாமி வந்திருந்தார். இந்த முறை கயிலாயகிரி செல்ல திட்டமிட்டு இறைவன் அனுமதி இல்லாததால் நாங்கள் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. குன்னூர் அன்பர்கள் அமர்நாத் செல்லும் விஷயம் கேள்விப்பட்டதும் என் அலுவலக நண்பர்களைப் போலவே ஐவரும் அன்னதானத்துக்கு நன்கொடை தந்து தனது டிஜிடல் காமிராவையும் தந்து என்னை குன்னூர் அனுப்பினார்.

கடந்த அமர்நாத் பயண புகைப்படங்களை சிறந்த முறையில் அவரது காமிரா எடுத்து தந்தது. இந்த முறை அது என்னுடன் குன்னூர் வந்தது. தனது கடமையை செவ்வனே நிறைவற்றியது. அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடந்தேறியது. பின்னர் அன்னதானமும் மிகச் சிறப்பாக செய்விக்கப்பட்டது. 


அடியார்கள் திருவமுது செய்ததும், இரண்டரை மணி அளவில் ''புல்லட்'' குமரேசன் வீட்டுக்கு என்னையும் கயிலை ஈஸ்வரனையும் அழைத்து சென்றார்கள். 

புல்லட் என்ற பெயர்க்காரணம் கேட்டேன். அவர் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக இருக்கிறார். புல்லட் பிரபலமாக இருந்த காலங்களில் அவர்தான் புல்லட் சர்வீஸ் செய்வாராம். அதனால் அவருக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது. பெரிய குடும்பம். அனவைரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். மூன்று மருமகள்கள், ஆறு பேரக் குழந்தைகள் மற்றும் குமரேசனின் தாய் என்று அந்த குடும்பம் நிறைவாழ்வு வாழ்ந்து கொன்று இருக்கிறது.  

குமரேசனைப் போலவே அவரது மனைவி ரேவதி அவர்களும் முழு ஆன்மீகத்தில் திளைத்திருக்கிறார்கள். ரேவதியின் சகோதரி கலாவதி அருமையாக பக்திப் பாடல்களை பாடுகிறார். அக்கம்பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று கோவிலை சுத்தப் படுத்துதல், அன்னதானத்தின் போது காய்கறிகளை நறுக்குதல், பாத்திரங்களை கழுவித் தருதல் என்று வசதி படைத்த வாழ்க்கையில் இருந்தாலும் ஈஸ்வர சேவைகளில் தம்மை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

ஆணவம் குறைய இந்த சேவைகள் பயன்படுவதாக மகிழ்ந்து சொல்லிக் கொள்ளுகிறார்கள். குமரேசனும் அவர்களது எல்லா சேவைகளிலும் தம்மையும் அர்ப்பணித்துக் கொள்ளுகிறார். 

அவரது இல்லத்தில் உள்ள அனைவரும் எங்களை பணிந்து வணங்கி ஆசி பெற்றதும், யாத்திரையின் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகளை கயிலை ஈஸ்வரனும் நானும் அவர்களுக்கு சொன்னோம். அரவங்காடு ஜோகராஜ் அவர்கள் என்னை போனில் தொடர்பு கொண்டு நான் வந்த நோக்கம் அனைத்தும் நலமாய் ஈடேறியது குறித்து கேட்டு மனமகிழ்ந்தார். நான் சென்னை திரும்பியதும் (அதாவது வியாழன்) காலையில் ஜோகராஜ் என்னுடன் பேசினார். ஞாயிறு அன்று சென்னை வருகிறார். அவரை எனது இல்லத்துக்கு அழைத்திருக்கிறேன். அவர் கேட்டிருந்த உதவியையும் அவர் வந்ததும் செய்ய உறுதி கூறி இருக்கிறேன். 


குமரேசன் அவர்களின் வீட்டில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு சென்றோம். நான் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று எனது உடைகளை மாற்றி பையை எடுத்துக் கொண்டு நான்கு மணி அளவில் மீண்டும் கோவிலுக்கு வந்து யாத்திரை குழுவினர் ஏற்பாடு செய்திருந்த டாடா சுமோவில் பயணித்து சுமார் ஆறரை மணி அளவில் மேட்டுப் பாளையம் ரயில்வே நிலையம் சென்று சேர்ந்தோம். 

அந்து மாலை ஏழு நாற்பத்தைந்து மணி அளவில் சென்னைக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசில் சென்னை நோக்கி பயணித்தோம். 

எங்கள் எல்லோருக்கும் ஆசி கூறி ஈரோட்டில் கயிலை ஈஸ்வரன் இறங்கி கொண்டார். 

இந்த முறை குன்னூர் பயணம் எனக்கு முற்றிலும் புதிய உறவுகளை ஏற்படுத்தி தந்தது. இறைவன் போட்டிருக்கும் முடிச்சுக்கள் எந்த வகையானவை என்பதினை உணரும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

வியாழன் அன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்ததும் எனது நண்பர் திரு.ராஜூ அவர்கள் என்னையும் யாத்திரைக் குழுவினரையும் சென்னை சென்ட்ரலில் வரவேற்றார். குழுவினர் காலைக் கடன்களை முடித்ததும் அவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் செலவினை நண்பர் ராஜூ அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

காலை ஒன்பது நாற்பதுக்கு புறப்படும் டேராடூன் எக்ஸ்ப்ரசில் அவர்களை வழியனுப்பி விட்டு பிரிய மனமின்றி இல்லம் வந்தேன். 

யாத்திரை குழுவினர் நீண்ட பயணம் மேற்கொண்டு சென்னைக்கு திரும்பும் சமயத்தில் அவர்களை வரவேற்று மதிய உணவு ஏற்பாடு செய்து அவர்களை அமுது செய்வித்த பின்னர் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் வழியனுப்ப சித்தமாய் ஆவலுடன் காத்திருக்கிறேன். 
எனது இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கும் என் சிவனை பணிந்து வணங்குகிறேன். ஆர்வத்துடன் படித்து ரசித்து வரும் இறையடியார்களை திருவடி பணிந்து வணங்கி எனது இதய நன்றியை காணிக்கையாக்குகிறேன். 

ஆங்காங்கே சில சொற்பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். பிழை பொறுத்து அருள உங்களை பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த முறை குன்னூர் சென்று வந்த பின்னர் மூன்று மாதங்களாக தடைப் பட்டிருந்த சில வேலைகள் வெற்றிகரமாக நடந்தேறின என்ற பெரும் மகிழ்வு தரும் செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது இரண்டாவது மகன் வெள்ளிக்கிழமை நேற்று எம்காமில் அட்மிஷன் ஆனார். 

எத்துணை முறை சொல்லியும் எனது வண்டியை சர்வீசுக்கு கொண்டு செல்லாமல் காலம் கடத்திய மெக்கானிக் நான் இல்லாத சமயத்தில் எனது இல்லம் தேடி வந்து என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வண்டியை எடுத்துச் சென்றார். 

இப்படி பல விஷயங்கள். படிப்பதற்கு சுவாரஸ்யமான சிலவற்றை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். 

இறையவன் இன்னருளால், எந்நாளும் சிவனருள் பொழிந்து, மனசெல்லாம் நிறைந்து எல்லாம் சிவக் கணங்களாக விளங்குகின்றன. 

இந்த தொடரை எல்லாம் வல்ல சிவனுக்கு அர்ப்பணித்து நிறைவு செய்கிறேன்.

ஓம் சிவோஹம். 


-

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Sunday, June 26, 2011

அமரநாதம் - 2011 : பகுதி மூன்று

அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்


சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.

பகுதி மூன்று.

காலையில் மேட்டுப்பாளையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். கடந்த முப்பத்தொரு வருடங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என்று பல சமயங்களில் இங்கே வந்திருக்கிறேன். அனைத்துமே இன்பச் செலவாகவே இருந்தது. ஆன்மீகக் காரணத்துக்காக நீலகிரி வருவது இதுவே முதல் முறை. 

குன்னூர் சிவனடியார் பவானி ரவி அவர்களை மொபைலில் அழைத்தேன். நான் மேட்டுப்பாளையத்துக்கு வந்து விட்டதை அவரிடம் உறுதி செய்தேன்.  மேட்டுப்பாளையத்துக்கு வந்து அழைத்துச் செல்லவா என்றார். நான் வேண்டாம் நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள். நான் குன்னூர் வந்து விடுகிறேன் என்றேன். 

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் இரயில்வே நிலையத்தில் இருந்து வெகு அருகாமையில் இருக்கிறது. ஐந்து நிமிட நடை போதும். ஆனால் டூரிஸ்ட் டாக்சிகாரர்கள் பஸ் நிலையம் சென்று சேர்வதற்குள் நம்மை மொய்த்துக் கொள்கிறார்கள், நான் அவர்களை நாசூக்காக தவிர்த்து விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு  சென்றேன். மேட்டுப்பாளயம்-ஊட்டி பஸ்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ஒரு பஸ்ஸில் அமர இடம் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறினேன். அதிலும் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். முன்புறம் படிக்கட்டுக்கு பக்கமாக டிரைவர் இருக்கைக்கு இடது புறமாக இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் அமர்வதற்காக துண்டு போட்டிருக்க காலி இடத்தில் நான் அமர்ந்தேன். 

எனக்கு முன் இருக்கையில் ஒரு அன்பர் அமர்ந்திருந்தார். நீலகிரிக்காரார் என்பது அவரது பாவனைகளில் இருந்தே தெரிந்தது.  துண்டு போட்டிருக்கிறதே இந்த சீட்டுக்கு யாராவது வருகிறார்களா என்று அவரிடம் விசாரித்தேன். அவரோ 'தெரியலை நீங்க உக்காருங்க. யாராவது வந்தா பாத்துக்கலாம்' என்று ஆதரவாக பேசினார். அவருக்கு சுமார் ஐம்பத்தெட்டு வயது இருக்கலாம். மலைவாசஸ்தலங்களில் வாழ்பவர்களுக்கு தொப்பை இருப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் நடந்தே பல இடங்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். மேலே, கீழே இதுதான் அவர்களது திசைகள். 

அந்த அன்பர் என்னைப் பார்த்து அன்பாக சிரித்தார். நானும் சஹஜ நிலைமைக்குத் திரும்பினேன். பஸ்ஸில் PP என்று போட்டிருக்கே. குன்னூரில் நிற்குமா? என்று அவரிடம் பேச்சைத் துவங்கினேன். அவர் இதற்கெனவே காத்திருந்த மாதிரி ''ஓ. கட்டாயம் நிக்கும். நீங்க எங்கிருந்து வறீங்க?' என்று கேட்டார். நான் குன்னூர் செல்லும் காரணத்தை அவரிடம் தெரிவித்தேன். ''ஓ. சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கா போகிறீர்கள் ? ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் நான் அங்கே செல்வது வழக்கம்'' என்றார் மகிழ்ச்சியுடன். 

''ஆஹா! சத்சங்கம் துவங்கி விட்டது" என்று மனம் உவகையில் துள்ளியது. 

அவரை நோக்கி என் கையை நீட்டி என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஜோகராஜ் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிவதாக சொன்னார். 

குன்னூர் திருக்கோவிலின் சிவாச்சாரியார்கள் மகேஷ் மற்றும் திருஞானசம்பந்தம் இருவரையும் நன்றாகத் தெரியும் என்று சொன்னவர் அவர்களை சந்தித்தால் அரவங்காடு ஜோகராஜ் என்று என் பெயரைச் சொல்லுங்கள் என்றார். ஓ. நிச்சயமாக என்றேன். ஜோகராஜ் படுகர் இனத்தை சேர்ந்தவர். நான் யாரிடமும் இனம், மொழி, மதம் பற்றிக் கேட்பதில்லை. அவராகவே சொன்னது. நீலகிரி மலைவாழ் மக்கள் கள்ளம கபடு இல்லாதவர்கள். அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அவரது சொந்த ஊர் இருக்கிறதாம். இரண்டு ஏக்கர் தேயிலை தோட்டம் இருக்கிறதாம். மனைவி தோட்டத்தை நிர்வகிப்பதாகவும், விடுமுறை நாட்களில் அவரும் சென்று தோட்டத்தை பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அவர் தற்சமயம் பாக்டரி குவார்டர்சில்  குடியிருக்கிறதாக கூறினார். அவரது மகள்கள் இருவரில் ஒருவர் சென்னையில் பணிபுரிவதாகவும் இப்போது தான் சென்னைக்கு சென்று வேலையில் அமர்த்தி விட்டு வருவதாகவும் சொன்னார். அம்பத்தூரில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிக்கு முன்பான நாற்பத்தைந்து நாள் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார் ஜோகராஜின் மூத்த மகள். இரண்டாவது மகள் ஐந்தாவது வகுப்பில் படிப்பதாக சொன்னார். முதல் மகளுக்கும், இரண்டாவது மகளுக்கும் இடையே நீண்ண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டதாக வெட்கத்துடன் சொன்னார்.  அமர்நாத் யாத்திரையை குன்னூர் அன்பர்கள் பத்தாவது முறையாக துவங்க இருப்பது அவருக்கு புதிய செய்தியாக இருந்தது. அமர்நாத் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். கடந்த ஆண்டு நான் சென்று வந்த பயணம் பற்றி விவரமாக கேட்டார். 

நான் வேதாந்த வைபவம் வலைப்பதிவு முகவரியை தந்து எனது அமர்நாத் வைஷ்நோதேவி பயணக் கட்டுரையை படிக்கும்படி கூறினேன். அமர்நாத் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம அவருக்கு கரை கடந்து இருந்தது. நீலகிரி மக்களுக்கு இமகிரி மேல் காதல் இருப்பது இயற்கைதான்.  இமயத்தை இந்திரநீலபர்ப்பதம் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

நாங்கள் நீண்ட நாட்கள் பழகியவர் போல பேசிக் கொண்டிருக்கையில் பஸ்சில் கண்டக்டரும், டிரைவரும் ஏறிவிட்டார்கள். பஸ் கொஞ்ச நேரத்தில் புறப்படப் போகிறது என்றார் ஜோகராஜ். 

என் பக்கத்தில் இருந்த இருக்கையில் இட்டிருந்த துண்டு பஸ் டிரைவருடையதாம். துண்டை எடுத்துத் தரச் சொல்லி என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் அந்த டிரைவர். 

என்ன அதிசயம் ? நான் பஸ்சில் ஏறி அமர இடம் போட்டு வைத்திருக்கிறதும், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு சிவநேசர் என்பதும் எவ்வளவு அருமையான நிகழ்வு என்று? இதனையெல்லாம் இறையருள் நிகழ்த்தி இருக்கிறதே என்று நன்றியுடன் வியந்தேன். 

சிவநேசர் ஜோகராஜ் நான் குன்னூர் சென்று இறங்குவதற்குள், குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற வழியை விவரமாக பலமுறை கூறிவிட்டார். எனது செல் நம்பரை வாங்கிக் கொண்ட அவர் தனது செல் நம்பரையும் கொடுத்தார். ''வாங்க அரவங்காட்டில் இறங்கி வீட்டுக்கு வந்து குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு அப்புறமாக குன்னூர் செல்லலாம்'' என்று அன்புடன் என்னை அழைக்க, நான் அடுத்த முறை வரும் போது அவசியம் அவரது இல்லத்துக்கு வருவதாக உறுதி கூறினேன். 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்ல பதின்மூன்று ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். குன்னூர் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன்னர் ஜோகராஜிடம் பிரியாவிடை பெற்றேன். திரு.ஜோகராஜின்  அறிமுகம் இறைவனின் பெரிய திட்டத்தின் ஒரு அங்கம் என்பது அவரிடம் பேசிக் கொண்டு வரும்போது எனக்குத் தெரிந்தது. சிவனடியாரின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிவனுக்கு உள்ள அக்கறை வேறு யாருக்கு வரும்? ஜோகராஜ் விஷயத்துக்கு அப்புறம் வருவோம். பயணித்த நேரம் சென்றதே தெரியாமல் காலை சுமார் எட்டு மணி அளவில் குன்னூரில் இறங்கினேன். சென்னை வெய்யிலின் தாக்கத்தில் தளர்ந்திருந்த உடலும் சூடான உள்ளமும், நீலகிரி மலையின் குளிர்காற்றில் புத்துணர்வு பெற்றன. 

என்னை வரவேற்க காத்திருப்பதாக சொன்ன அன்பர் எவரையும் காணவில்லை. பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. பவானி ரவி எங்கே போனார்? காத்திருப்பதாக கூறினாரே? என்று கவலையுடன் தேடிய என் கையறு நிலையைக் கண்ட திரு.ஜோகராஜ் கிட்டத்தட்ட பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார் என்றே சொல்லலாம். என்னை வரவேற்க யாரும் பஸ் நிறுத்தத்துக்கு வரவில்லை என்பது அவருக்கு புரிந்து விட்டது. ''பஸ்ச்சுக்குள்ளார வாங்க நாம்ப இப்போ அரவங்காடு போயிடலாம்'' என்று என்னை அழைத்தார்.  

நான் அவரது பயணத்தை தொடரும்படி வேண்டிக் கொண்டு நன்றி கூறி அவரை அனுப்பினேன். பஸ்சில் இருந்து குழந்தை போல எட்டிப் பார்த்துக் கொண்டே என்னை நோக்கி கையசைத்து கொண்டிருந்தார் ஜோகராஜ். அடுத்த வளைவில் பஸ் என்பார்வையில் இருந்து மறைந்தது. ஆனால் உள்ளத்தில் இருந்து ஜோகராஜின் நினைவுகள் மறையவில்லை. 

எனது பஸ் பயணத்திலும் ஒரு சிவநேசரை உடன் அனுப்பிவைத்த சிவனின் பேரன்பை எண்ணி வியந்தேன். திரு.ஜோகராஜூக்கு ஒரு தேவை இருக்கிறது. சென்னை சென்றவுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதும் இறைவனின் திருவுள்ளக் கிடக்கைதான். 

அங்கேயே கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு பின்னர் கோவிலுக்கு செல்வது என்று எண்ணினேன். ஐந்து நிமிடங்கள் கழித்து சாலையை கடந்து கோவிலை நோக்கி நடந்தேன். ஜோகராஜ் விளக்கிய வழி கண் முன்னே விரிய நான் முன்னே நடந்தேன். சாலை சந்திப்பில் கடந்து மணிக்கூண்டு அருகே செல்கையில் எதிரே காவி வேட்டி, வெள்ளை சட்டை, காவித் துண்டு, நெற்றி முழுதும் திருநீறு பூசிய ஒருவர் (பவானி ரவி) டென்ஷனுடன் எதிரே வந்து கொண்டிருந்தார். கடந்த ஆண்டு அவரை ஒரு முறை பால்டால் முகாமில் பார்த்தது நினைவில் இருந்தது. ஆனால் . முகம் நினைவில் இல்லை. உள்ளுணர்வு உந்த ''ரவி சார்'' என்று கையை தூக்கி அவரை அழைத்தேன். அவர் அந்த நடு ரோட்டில் ''வாங்க சாமி'' என்று கூவிக் கொண்டே நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்க நானும் பதிலுக்கு அவரை பணிந்தேன். 

''சிவசிவ என்ன இது பத்தாவது முறையாக அமர்நாத் போகிறீர்கள் நீங்கள் போய் என் காலில் விழுந்து கொண்டு?'' என்று அன்புடன் அவரை கண்டித்தேன். ரவி என்னை கடந்த ஆண்டு பால்டால் முகாமில் பார்த்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

அச்சமயம் நான் குரங்குக் குல்லாய் போட்டிருந்ததால் என் முகம் அவருக்கு தெரியவில்லை. என்னை பஸ் ஸ்டாண்டில் காக்க வைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். ''வாங்க ரூம் போட்டுடலாம்'' என்று என் பையை பிடுங்கிக் கொண்டார். 

நான் ''ரவி சார். ரூம் எதுவும் போட வேண்டாம் என்றேன். இன்று பிற்பகல் நாலு மணிக்கெல்லாம் கீழே இறங்கி விடப் போகிறோம். அது மட்டுமின்றி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்குள் ரயிலியேயே காலைக் கடன்களை நான் முடித்து விட்டேன்'' என்று கூறினேன். 

''இப்போது குளிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. ஏதேனும் ஒரு அன்பர் இல்லத்தில் குளித்து விட்டு கோவிலுக்கு போயிடலாம்'' என்றேன். 

அவர் இசைவதாக தெரியவில்லை. இந்நிலையில் எனக்காக ஏற்கனவே ரூம் போட போன ஒருவர் ஓடி வந்து என்னையும் வணங்கி ரவியின் காதில் பரபரப்புடன் ரகசியமாக ஏதோ சொல்ல இரவியின் முகம் மாறி கவலை கொண்டதைக் கண்டேன். 

(சிந்தையை குளிர்விக்கும் சிவகணங்கள் தொடரும்..)

--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Friday, June 24, 2011

அமரநாதம் - 2011 : பகுதி இரண்டு


அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்

சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.


குழும இறையடியார்களுக்கு என் பணிவன்பான வணக்கங்கள். 

கடந்த பதிவில் குன்னூர் சிவனடியார்கள் நிகழ்த்தும் பத்தாவது அமர்நாத் யாத்திரை பற்றியும், புறப்படுவதகு முன்னதாக சிவனுக்கு அவர்கள் செய்த அபிஷேக பூஜைகள், மற்றும் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பவானி ரவி (குன்னூர்) அவர்கள் பலமுறை என்னை இந்த வைபவங்களில் கலந்து கொள்ள வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டுவிட நானும் இந்த முறை நம்மால் அமர்நாத் போக இயலவில்லை. சிவனடியார்கள் நிகழ்த்தும் இந்த வைபவங்களில் கலந்து கொண்டு சிவனருள் பெறலாமே என்று புறப்பட ஏற்பாடு செய்தேன். 

ஜூன் ஒன்றாம் தேதி அன்றே ஜூன் இருபத்தோராம் தேதி பயணத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்யச் சென்றேன். காத்திருப்போர் பட்டியல் எண் ஐந்து எனனை பார்த்து சிரித்தது. 

திரும்பி வருவதற்கு இருபத்தி இரண்டாம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசிலும் இதே பிரச்சினை தான்.

எனினும், நான் பரவாயில்லை என்று சொல்லி விட்டு பயண டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டேன். இறையருள் வேண்டி நின்ற எனக்கு புறப்படும் நாளான இருபத்தோராம் தேதி அன்று வெயிட் லிஸ்ட் கிளியர் ஆகி தானாகவே கன்ஃபர்ம் ஆகி இருந்தது. இறைவனின் திருவருளால்  இது ஆயிற்று என்று எண்ணி மனமிக மகிழ்ந்து சிவனுக்கு நன்றி பாராட்டினேன். 

அது என்னவோ தெரியவில்லை. தற்போதெல்லாம் சத் சங்கங்கள் வெகு சாதாரணமாக வாய்க்கின்றன .அதுவும் இறையருளின்றி நடக்காது அல்லவா? 

ரயில் நிலையம் சென்றதும் நான் எனது பெட்டி எண்ணையும், படுக்கை எண்ணையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பெட்டிக்கு சென்றேன். எனக்கு எதிரே ஒரு சுவாமிஜி அமர்ந்திருந்தார். நல்ல உயரம், ஆஜானுபாகுவாக இருந்தார். தொப்பை எதுவும் இல்லை. முகம் அதிதேஜஸாக இருந்தது. அவருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தேன். உதகையில் உள்ள ஸ்ரீநாராயண குருகுல ஆஷ்ரமத்தின் சீனியர் ஸ்வாமிகளில் அவரும் ஒருவர். ரயில் புறப்படும் வரை சுவாரசியமான ஆன்மீக விஷயங்களை நிறைய என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் என்னைப் பற்றி அவருக்கு அறிமுகம் செய்து கொண்டேன். அவரது பூர்வீகம் கல்கத்தா ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி தான் என்றார். ஆங்கில மீடிய  பள்ளிகளில் படித்ததினால் தமிழ் பேச வராது. ஆனால் யாராவது பேசினால் தமக்கு நன்றாக புரியும் என்கிறார். அப்போது நான் ஸ்ரீநாராயண குரு எவ்வாறு தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார் என்பதையும் தமிழில் அவர் எழுதிய பாடல்களைப் பற்றியும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வள்ளலார் பற்றிய நாராயண குருவின் பார்வைகளை சுவாமிஜி மிகவும் ச்லாகித்து பேசினார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்னும் பிற உயிரை தன உயிர் போல நேசிக்கும் பாடலை தமிழில் சொல்லி அவருக்கு விளக்கிய போது மிகவும் மகிழ்ந்தார். இவ்வாறாக அருமையான சத் சங்கத்துடன் எனது குன்னூர் பயணம் துவங்கியது. வடநாட்டுப் பக்கம் தொடர் பயணங்கள் முடித்து வரும் சுவாமிஜிக்கு ஓய்வு தேவை என்பதால் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அவருக்கு படுக்க இடம் கொடுத்து விட்டு மேல் பெர்த்துக்கு சென்றேன். ஒன்பதரை மணியளவில் உறங்கச் சென்றேன். நல்லதொரு சத்சங்கத்தினை தந்த சிவனுக்கு நன்றி கூறி ஆராதித்து விட்டு படுத்தேன். அதிகாலை மேட்டுப்பாளையம் செல்லும் வரை நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை சுமார் ஆறு மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று சேர்ந்தேன். 

(தொடரும்)

அமரநாதம் - 2011 - பகுதி ஒன்று

அமர்நாத் - தொடரும் சிவகணங்கள்....


ஓம் நமசிவாய..

கடந்த ஆண்டு வைஷ்ணோதேவி, அமர்நாத் திருத்தல யாத்திரை போய் வந்த பிறகு இங்கே நான் பதிவிட்ட அனுபவங்களை தொடர்ந்து படித்து பாராட்டிய இறையடியார்களுக்கு பணிவான வணக்கங்கள். 

கடந்த ஆண்டு (2010) அமர்நாத் யாத்திரை செல்வதற்காக பால்டால் அடிவார முகாமில் தங்கியிருந்த போது குன்னூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த பதினைந்து அன்பர்களை சந்தித்தேன். இருபத்தைந்து முதல் முப்பந்தைந்து வயது கொண்ட துடிப்பான சிவனடியார்களான அவர்கள் ஒன்பதாவது முறையாக அந்த சமயம் அமர்நாத்துக்கு தொடர் யாத்திரையாக வந்திருந்தார்கள். பவானி இரவி என்னும் அன்பர் (நீலகிரி-கூனூரை சேர்ந்தவர்) அவர்களை வழிநடத்தி வந்திருந்தார். அவர்களது அன்பும், ஆர்வமும், துடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களுடன் அளவளாவிய சமயம் அவரது முகவரி செல்பேசி எண்ணைக கேட்டு வாங்கினேன். ஆனால் மிகச் சிறிய துண்டு காகிதத்தில் எழுதி வாங்கியதால் சென்னை வந்த பின்னர் என்னால் அதனைக் கண்டு பிடிக்க இயலாமல் போய் விட்டது. 

எனது முகவரியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் என்னையோ அல்லது நான் அவர்களையோ தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனை ஒரு துர்பாக்கியமாகவே கருதினேன். 

தொடர்பு கிட்டாமல் போனதால் அவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைக்காமல் போனது. அதனால் அவர்களைச் சந்தித்த அந்த இனிய கணங்களை எனது யாத்திரை பயண அனுபவத் தொடரில் குறிப்பிட இயலாமல் போய்விட்டது.

ஆனால் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வேறு ஏதோ புத்தகத்தை தேட எதை எதையோ குடைந்த போது சிறிய துண்டுக் காகிதம் கண்ணில் தென்பட பவானி இரவி (அமர்நாத் பாத யாத்திரைக் குழு) என்ற அந்தப் பெயர் என் நினைவுப் பகுதியை தூண்டி விட ''ஆஹா. கிடைத்து விட்டதே என மகிழ்ந்து பவானி இரவியை செல்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினேன்.'' 

கிட்டத்தட்ட 340 நாட்கள் கழித்து பேசியும் இரவி என்னை நினைவில் வைத்திருந்தார். இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த அணியினர் நேபாளம் சென்று பசுபதிநாதரையும், முக்தினாதரையும் தரிசனம் செய்து விட்டு வந்ததை தெரிவித்தார். 

இந்த ஆண்டு பத்தாவது முறையாக அவர்கள் ஜூன் இருபத்து மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரசில் பதிவு செய்திருந்த செய்தியைத் தெரிவித்தார். என்னையும் அவர்களுடன் கலந்து கொள்ள அழைத்தார். ஜூன் இருபது (அதாவது நான் பதிவிடும் இந்த நாள்) வரை எனது எம்.எஸ்சி. (யோகா) தீசிஸ் சப்மிஷன், வைவா போன்ற கமிட்மெண்ட்கள் இருப்பதினால் என்னால் அவர்களுடன் யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பதினை அவருக்கு தெரிவித்தேன். அ(சி)வன் அழைக்காமல் எப்படி செல்லமுடியும்?

இருப்பினும் பவானி இரவி என்னை இருபத்தி இரண்டாம் தேதி அன்று குன்னூரில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் பூஜை மற்றும் அதற்கு பின்னர் நிகழ உள்ள அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அதனை சிவனின் அழைப்பாக ஏற்றுக் கொண்டு உடனே நீலகிரி விரைவு ரயிலில் 21-ந்தேதி அன்று இரவு முன் பதிவு செய்தேன். 

மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழில் என் பெயரை அன்னதான வைபவத்தை துவங்கி வைப்பவர்கள் பட்டியலில் வெளியிட்டிருந்தார். எனது பெயரை குறிப்பிட்டு, அதனைத் தொடர்ந்து சிவனடிமை, சென்னை என்று வெளியிட்டிருந்த விதம் என்னை நெகிழச் செய்தது. 

கடந்த முறை என்னுடன் அமர்நாத் பயணித்த அன்பர்களோடு இந்த விவரங்களை பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூலித்து அதனை அவருக்கு மணி ஆர்டர் அனுப்பினேன். மிகவும் மகிழ்ந்து போன அவர்கள் நான் கண்டிப்பாக குன்னூருக்கு வந்தே ஆக வேண்டும் என்று அடிக்கடி போன் செய்து அழைத்தார். இன்று கூட என்னை நினைவு படுத்தினார். சிவனருளால் இன்று எனது தீசிஸ் மற்றும் ப்ராஜெக்ட்களை யூனிவர்சிட்டியில் சேர்த்து விட்டேன் (இருபது ஜூன் தான் அதற்கான கடைசி நாள்). எனது தீசிசை கடந்த சனியன்று (18.06.2011) ICF Colony சத்சங்கத்தில் நிகழ்ந்த திருமந்திர வகுப்பின் போது, சிவனுக்கு அர்ப்பணித்து பூசைகள் செய்து எடுத்துக் கொண்டேன். 

எனது தீசிசின் டெடிகேஷன் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருந்தேன்:

DEDICATED
TO LORD SHIVA-THE YOGISHWAR, 
MAHARISHI PATHANJALI,
SAINT THIRUMOOLAR, ALL YOGINS, YOGINIS, MY PARENTS,
BELOVED FAMILY MEMBERS
&
TO MY YOGA ASAN
YOGI DR.T.A.KRISHNAN, THIRUMOOLAR YOGA &NATURAL DIET RESEARCH CENTRE, CHENNAI

சிவனருளால் அனைத்தும் நல்ல படியாக நடந்து வருகிறது. ஆகவே, 21.6.2011 இரவு சிவனடியார்கள் நடத்தும் சிவபூசை, மற்றும் அன்னதான நிழச்சியில் கலந்து கொள்ள குன்னூர் சென்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் குழும அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த முறை பவானி இரவி குழுவினர் பத்ரிநாத், கேதார்நாத் சென்று பின்னர் அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்ணோதேவி (கத்ரா) யாத்திரை மேற்கொண்டு அதன் பின்னர் அமர்நாத் குகைக்கு பயணிக்கிறார்கள். 

நான் அவர்களது குன்னூர் வைபவங்களில் கலந்து கொண்டு விட்டு பின்னர் அவர்களுடனே புறப்பட்டு சென்னை வந்து அவர்களை புனித யாத்திரைக்கு வழியனுப்ப இருக்கிறேன். 

இந்த முறை அமர்நாத் செல்ல இரண்டரை லட்சம் பக்தர்கள் பதிவு செய்திருப்பதாக சமீபத்தில் வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

எண்ணமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சிவன் என்னை அவரது அடியார்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருப்பதை என்னவென்று சொல்வேன்? எல்லாம் சிவனருள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. அடுத்த ஆண்டு அவர்களது அணியில் என்னையும் இடம் பெறச் சொல்லி குன்னூர் சிவனடியார்கள் எனக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அதனை இறைவன் எனக்கு இட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

குன்னூர் சென்று வந்த அந்த நிறை இறை அனுபவங்களை உங்களுடன் படங்களுடன் காணொளிகள் எண்ணப் பதிவுகள் என்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை போன்ற இறையன்பர்களுடன் அளவளாவ மீண்டும் ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கும் இறையருளை பணிகிறேன். 

சிவனருள் பொலிக. 


(சிவகணங்கள் தொடரும்)

-- 

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?