Sunday, June 26, 2011

அமரநாதம் - 2011 : பகுதி மூன்று

அமரநாதம் - தொடரும் சிவகணங்கள்


சிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.

குன்னூர் அன்பர்களின் 
பத்தாவது அமர்நாத் யாத்திரை 
வைபவங்கள். 

குன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.

பகுதி மூன்று.

காலையில் மேட்டுப்பாளையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். கடந்த முப்பத்தொரு வருடங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என்று பல சமயங்களில் இங்கே வந்திருக்கிறேன். அனைத்துமே இன்பச் செலவாகவே இருந்தது. ஆன்மீகக் காரணத்துக்காக நீலகிரி வருவது இதுவே முதல் முறை. 

குன்னூர் சிவனடியார் பவானி ரவி அவர்களை மொபைலில் அழைத்தேன். நான் மேட்டுப்பாளையத்துக்கு வந்து விட்டதை அவரிடம் உறுதி செய்தேன்.  மேட்டுப்பாளையத்துக்கு வந்து அழைத்துச் செல்லவா என்றார். நான் வேண்டாம் நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள். நான் குன்னூர் வந்து விடுகிறேன் என்றேன். 

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் இரயில்வே நிலையத்தில் இருந்து வெகு அருகாமையில் இருக்கிறது. ஐந்து நிமிட நடை போதும். ஆனால் டூரிஸ்ட் டாக்சிகாரர்கள் பஸ் நிலையம் சென்று சேர்வதற்குள் நம்மை மொய்த்துக் கொள்கிறார்கள், நான் அவர்களை நாசூக்காக தவிர்த்து விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு  சென்றேன். மேட்டுப்பாளயம்-ஊட்டி பஸ்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ஒரு பஸ்ஸில் அமர இடம் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறினேன். அதிலும் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். முன்புறம் படிக்கட்டுக்கு பக்கமாக டிரைவர் இருக்கைக்கு இடது புறமாக இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் அமர்வதற்காக துண்டு போட்டிருக்க காலி இடத்தில் நான் அமர்ந்தேன். 

எனக்கு முன் இருக்கையில் ஒரு அன்பர் அமர்ந்திருந்தார். நீலகிரிக்காரார் என்பது அவரது பாவனைகளில் இருந்தே தெரிந்தது.  துண்டு போட்டிருக்கிறதே இந்த சீட்டுக்கு யாராவது வருகிறார்களா என்று அவரிடம் விசாரித்தேன். அவரோ 'தெரியலை நீங்க உக்காருங்க. யாராவது வந்தா பாத்துக்கலாம்' என்று ஆதரவாக பேசினார். அவருக்கு சுமார் ஐம்பத்தெட்டு வயது இருக்கலாம். மலைவாசஸ்தலங்களில் வாழ்பவர்களுக்கு தொப்பை இருப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் நடந்தே பல இடங்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். மேலே, கீழே இதுதான் அவர்களது திசைகள். 

அந்த அன்பர் என்னைப் பார்த்து அன்பாக சிரித்தார். நானும் சஹஜ நிலைமைக்குத் திரும்பினேன். பஸ்ஸில் PP என்று போட்டிருக்கே. குன்னூரில் நிற்குமா? என்று அவரிடம் பேச்சைத் துவங்கினேன். அவர் இதற்கெனவே காத்திருந்த மாதிரி ''ஓ. கட்டாயம் நிக்கும். நீங்க எங்கிருந்து வறீங்க?' என்று கேட்டார். நான் குன்னூர் செல்லும் காரணத்தை அவரிடம் தெரிவித்தேன். ''ஓ. சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கா போகிறீர்கள் ? ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் நான் அங்கே செல்வது வழக்கம்'' என்றார் மகிழ்ச்சியுடன். 

''ஆஹா! சத்சங்கம் துவங்கி விட்டது" என்று மனம் உவகையில் துள்ளியது. 

அவரை நோக்கி என் கையை நீட்டி என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஜோகராஜ் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிவதாக சொன்னார். 

குன்னூர் திருக்கோவிலின் சிவாச்சாரியார்கள் மகேஷ் மற்றும் திருஞானசம்பந்தம் இருவரையும் நன்றாகத் தெரியும் என்று சொன்னவர் அவர்களை சந்தித்தால் அரவங்காடு ஜோகராஜ் என்று என் பெயரைச் சொல்லுங்கள் என்றார். ஓ. நிச்சயமாக என்றேன். ஜோகராஜ் படுகர் இனத்தை சேர்ந்தவர். நான் யாரிடமும் இனம், மொழி, மதம் பற்றிக் கேட்பதில்லை. அவராகவே சொன்னது. நீலகிரி மலைவாழ் மக்கள் கள்ளம கபடு இல்லாதவர்கள். அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அவரது சொந்த ஊர் இருக்கிறதாம். இரண்டு ஏக்கர் தேயிலை தோட்டம் இருக்கிறதாம். மனைவி தோட்டத்தை நிர்வகிப்பதாகவும், விடுமுறை நாட்களில் அவரும் சென்று தோட்டத்தை பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அவர் தற்சமயம் பாக்டரி குவார்டர்சில்  குடியிருக்கிறதாக கூறினார். அவரது மகள்கள் இருவரில் ஒருவர் சென்னையில் பணிபுரிவதாகவும் இப்போது தான் சென்னைக்கு சென்று வேலையில் அமர்த்தி விட்டு வருவதாகவும் சொன்னார். அம்பத்தூரில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிக்கு முன்பான நாற்பத்தைந்து நாள் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார் ஜோகராஜின் மூத்த மகள். இரண்டாவது மகள் ஐந்தாவது வகுப்பில் படிப்பதாக சொன்னார். முதல் மகளுக்கும், இரண்டாவது மகளுக்கும் இடையே நீண்ண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டதாக வெட்கத்துடன் சொன்னார்.  அமர்நாத் யாத்திரையை குன்னூர் அன்பர்கள் பத்தாவது முறையாக துவங்க இருப்பது அவருக்கு புதிய செய்தியாக இருந்தது. அமர்நாத் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். கடந்த ஆண்டு நான் சென்று வந்த பயணம் பற்றி விவரமாக கேட்டார். 

நான் வேதாந்த வைபவம் வலைப்பதிவு முகவரியை தந்து எனது அமர்நாத் வைஷ்நோதேவி பயணக் கட்டுரையை படிக்கும்படி கூறினேன். அமர்நாத் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம அவருக்கு கரை கடந்து இருந்தது. நீலகிரி மக்களுக்கு இமகிரி மேல் காதல் இருப்பது இயற்கைதான்.  இமயத்தை இந்திரநீலபர்ப்பதம் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

நாங்கள் நீண்ட நாட்கள் பழகியவர் போல பேசிக் கொண்டிருக்கையில் பஸ்சில் கண்டக்டரும், டிரைவரும் ஏறிவிட்டார்கள். பஸ் கொஞ்ச நேரத்தில் புறப்படப் போகிறது என்றார் ஜோகராஜ். 

என் பக்கத்தில் இருந்த இருக்கையில் இட்டிருந்த துண்டு பஸ் டிரைவருடையதாம். துண்டை எடுத்துத் தரச் சொல்லி என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் அந்த டிரைவர். 

என்ன அதிசயம் ? நான் பஸ்சில் ஏறி அமர இடம் போட்டு வைத்திருக்கிறதும், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு சிவநேசர் என்பதும் எவ்வளவு அருமையான நிகழ்வு என்று? இதனையெல்லாம் இறையருள் நிகழ்த்தி இருக்கிறதே என்று நன்றியுடன் வியந்தேன். 

சிவநேசர் ஜோகராஜ் நான் குன்னூர் சென்று இறங்குவதற்குள், குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற வழியை விவரமாக பலமுறை கூறிவிட்டார். எனது செல் நம்பரை வாங்கிக் கொண்ட அவர் தனது செல் நம்பரையும் கொடுத்தார். ''வாங்க அரவங்காட்டில் இறங்கி வீட்டுக்கு வந்து குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு அப்புறமாக குன்னூர் செல்லலாம்'' என்று அன்புடன் என்னை அழைக்க, நான் அடுத்த முறை வரும் போது அவசியம் அவரது இல்லத்துக்கு வருவதாக உறுதி கூறினேன். 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்ல பதின்மூன்று ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். குன்னூர் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன்னர் ஜோகராஜிடம் பிரியாவிடை பெற்றேன். திரு.ஜோகராஜின்  அறிமுகம் இறைவனின் பெரிய திட்டத்தின் ஒரு அங்கம் என்பது அவரிடம் பேசிக் கொண்டு வரும்போது எனக்குத் தெரிந்தது. சிவனடியாரின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிவனுக்கு உள்ள அக்கறை வேறு யாருக்கு வரும்? ஜோகராஜ் விஷயத்துக்கு அப்புறம் வருவோம். பயணித்த நேரம் சென்றதே தெரியாமல் காலை சுமார் எட்டு மணி அளவில் குன்னூரில் இறங்கினேன். சென்னை வெய்யிலின் தாக்கத்தில் தளர்ந்திருந்த உடலும் சூடான உள்ளமும், நீலகிரி மலையின் குளிர்காற்றில் புத்துணர்வு பெற்றன. 

என்னை வரவேற்க காத்திருப்பதாக சொன்ன அன்பர் எவரையும் காணவில்லை. பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. பவானி ரவி எங்கே போனார்? காத்திருப்பதாக கூறினாரே? என்று கவலையுடன் தேடிய என் கையறு நிலையைக் கண்ட திரு.ஜோகராஜ் கிட்டத்தட்ட பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார் என்றே சொல்லலாம். என்னை வரவேற்க யாரும் பஸ் நிறுத்தத்துக்கு வரவில்லை என்பது அவருக்கு புரிந்து விட்டது. ''பஸ்ச்சுக்குள்ளார வாங்க நாம்ப இப்போ அரவங்காடு போயிடலாம்'' என்று என்னை அழைத்தார்.  

நான் அவரது பயணத்தை தொடரும்படி வேண்டிக் கொண்டு நன்றி கூறி அவரை அனுப்பினேன். பஸ்சில் இருந்து குழந்தை போல எட்டிப் பார்த்துக் கொண்டே என்னை நோக்கி கையசைத்து கொண்டிருந்தார் ஜோகராஜ். அடுத்த வளைவில் பஸ் என்பார்வையில் இருந்து மறைந்தது. ஆனால் உள்ளத்தில் இருந்து ஜோகராஜின் நினைவுகள் மறையவில்லை. 

எனது பஸ் பயணத்திலும் ஒரு சிவநேசரை உடன் அனுப்பிவைத்த சிவனின் பேரன்பை எண்ணி வியந்தேன். திரு.ஜோகராஜூக்கு ஒரு தேவை இருக்கிறது. சென்னை சென்றவுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதும் இறைவனின் திருவுள்ளக் கிடக்கைதான். 

அங்கேயே கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு பின்னர் கோவிலுக்கு செல்வது என்று எண்ணினேன். ஐந்து நிமிடங்கள் கழித்து சாலையை கடந்து கோவிலை நோக்கி நடந்தேன். ஜோகராஜ் விளக்கிய வழி கண் முன்னே விரிய நான் முன்னே நடந்தேன். சாலை சந்திப்பில் கடந்து மணிக்கூண்டு அருகே செல்கையில் எதிரே காவி வேட்டி, வெள்ளை சட்டை, காவித் துண்டு, நெற்றி முழுதும் திருநீறு பூசிய ஒருவர் (பவானி ரவி) டென்ஷனுடன் எதிரே வந்து கொண்டிருந்தார். கடந்த ஆண்டு அவரை ஒரு முறை பால்டால் முகாமில் பார்த்தது நினைவில் இருந்தது. ஆனால் . முகம் நினைவில் இல்லை. உள்ளுணர்வு உந்த ''ரவி சார்'' என்று கையை தூக்கி அவரை அழைத்தேன். அவர் அந்த நடு ரோட்டில் ''வாங்க சாமி'' என்று கூவிக் கொண்டே நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்க நானும் பதிலுக்கு அவரை பணிந்தேன். 

''சிவசிவ என்ன இது பத்தாவது முறையாக அமர்நாத் போகிறீர்கள் நீங்கள் போய் என் காலில் விழுந்து கொண்டு?'' என்று அன்புடன் அவரை கண்டித்தேன். ரவி என்னை கடந்த ஆண்டு பால்டால் முகாமில் பார்த்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

அச்சமயம் நான் குரங்குக் குல்லாய் போட்டிருந்ததால் என் முகம் அவருக்கு தெரியவில்லை. என்னை பஸ் ஸ்டாண்டில் காக்க வைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். ''வாங்க ரூம் போட்டுடலாம்'' என்று என் பையை பிடுங்கிக் கொண்டார். 

நான் ''ரவி சார். ரூம் எதுவும் போட வேண்டாம் என்றேன். இன்று பிற்பகல் நாலு மணிக்கெல்லாம் கீழே இறங்கி விடப் போகிறோம். அது மட்டுமின்றி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்குள் ரயிலியேயே காலைக் கடன்களை நான் முடித்து விட்டேன்'' என்று கூறினேன். 

''இப்போது குளிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. ஏதேனும் ஒரு அன்பர் இல்லத்தில் குளித்து விட்டு கோவிலுக்கு போயிடலாம்'' என்றேன். 

அவர் இசைவதாக தெரியவில்லை. இந்நிலையில் எனக்காக ஏற்கனவே ரூம் போட போன ஒருவர் ஓடி வந்து என்னையும் வணங்கி ரவியின் காதில் பரபரப்புடன் ரகசியமாக ஏதோ சொல்ல இரவியின் முகம் மாறி கவலை கொண்டதைக் கண்டேன். 

(சிந்தையை குளிர்விக்கும் சிவகணங்கள் தொடரும்..)

--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

No comments: