Tuesday, January 25, 2011

பாகம் மூன்று: பகுதி ஒன்று -வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர் எழுதுகிறார்.

எனதன்பின் இனிய வலைப்பூ நண்பர்களுக்கு, ஆத்மார்த்த வணக்கங்கள்.

அமர்நாத் யாத்திரை பற்றிய எனது சஹயாத்ரிகளின் பகிர்வுகளை வெளியிடுவதாக கடந்த மாதம் இங்கே குறிப்பிட்டிருந்தேன் நண்பர்களிடம் இருந்து பதிவுகள் கிடைப்பதில் சற்றே காலதாமதம் ஆனது. உங்கள் பொறுமையை சோதித்ததிற்கு மன்னியுங்கள். எனது அன்பின் நண்பர் கோவிந்த் மனோகர் தனது கவித்துவமான பார்வையில் அமர நினைவுகளை அசை போடுகிறார் எத்துணை தடவை போய் வந்தாலும் திகட்டாத நினைவுகளைத் தரும் அந்த அமரகணங்களை அவரது வார்த்தைகளில் காண்போம் வாருங்கள். நன்றி.

-அஷ்வின்ஜி.
-----

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

வீ ஃபார் விக்டரி.  கோவிந்த் மனோகர். பால்டால் முகாமில். 

அனைவருக்கும் வணக்கம்.  அமர அனுபவங்களை அசைபோட ஒரு களம் அமைத்து கொடுத்த நண்பர் அஷ்வினுக்கு எம் நன்றி.
இடுகை: ஒன்று.
இமாலயத்திலிருக்கும் லிடர் பள்ளத்தாக்கின் முடிவில் அது குறுகுமிடத்தில் 4175மீ. உயரத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கும் குகையுள்ளது. 

இது ஸ்ரீநகரிலிருந்து 141 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பொதுவாக இந்த யாத்திரை ஸ்ரீநகரிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் நடைமுறையில் அது 96 கி.மீ. தூரத்திலுள்ள பஹல்காம் என்ற இடத்திலிருந்தோ அல்லது பால்தால் என்ற இடத்திலிருந்தோ யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். பால்தால் அமைந்திருப்பது கடல் மட்டத்திலிருந்து 2743 மீ. உயரத்தில். அங்கிருந்து அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு 15 கி.மீ தூரம் மலையில் ஏறிச் செல்ல வேண்டும். பனிலிங்கம் இருக்கும் உயரமோ 4175 மீட்டர்.

வழியில் சட்சிங் (சங்கம்)கணவாய் கடக்கும் மேல்நோக்க பாதையில் ஒரு பாலம் குகைக்கு சுமார் 3.5 கி.மீக்கு முன்னே 4115 மீட்டர் உயரத்தில் குறுக்கிடுகிறது. அங்கிருந்து பாதை கீழ்நோக்கி இறங்கி மீண்டும் மேல்நோக்கி குகைக்கு செல்லும் பாதை 4175 மீட்டர் உயரத்தில் ஆரம்பிக்கிறது. 

இம்முறை நாங்கள் அமர்நாத்துக்கு சென்றது பால்தால் மார்கம். 15 கி.மீ. தூரமுள்ள சுமார் 1400 மீ ஏற்றத்தில் (குளிருடன்)இருக்கும் பனிலிங்க குகைக்கு நடந்து செல்ல குறைந்தது 8-லிருந்து 10-மணி நேரமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் குதிரையில் சென்றால் இதில் பாதி நேரமேயாகும் என்ற செய்தியை நம்பி நாங்கள் குதிரையில் சென்று திரும்பினோம். 

இனி... பனியுடன் கூடிய..... இல்லை குளிருடன் கூடிய.... இல்லை இல்லை வலியுடன் கூடிய......... ச்சே !!!!!.... என்ன இது?  உண்மையுடன் கூடிய... அடடா.. எல்லாமுமாய் இருந்த அந்த பயண அனுபவம், இனி என் பார்வையில் உங்கள் பார்வைக்கு. இரண்டாவது முறையாக அமர்நாத் செல்லுவதற்கு அதீத பக்தியோ அல்லது திடகாத்திரமான உடலமைப்பும் ஆரோக்கியமும் வாய்க்கப் பெற்றிருப்பதோ அவசியம். ஆனால் இவை யாவும் வாய்க்க பெறாத எனக்கு அங்கு செல்ல நேர்ந்தது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு, ஒரு மறக்கமுடியாத அனுபவம். 

உடற்சிரமத்தை பாராத உள்நோக்கிய பயணத்திற்கான பிரயாண சீட்டு. மனபலத்தை சோதித்து பார்த்துக்கொள்ள மிகச்சரியான உரைகல். 

நான் 1995ல் முதன் முறை மூன்று நண்பர்களுடன் சென்றபோது பட்ட துன்பம் வெதுவெதுப்பான (அப்போது) குகைக்குள் நுழையும் போது சற்று தணிந்தது. பின் திரும்பியபோது, இரவு 9 மணிக்கு ஐஸ்கட்டியில் நடந்து வந்த அனுபவம் நம்ம ஊர் திரும்பியதும், வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை எமக்கு தந்தது. 

அந்த அனுபவம் எனக்கு உ(றை)ரைத்தது இது தான். ஞானமடைதல் என்பது உட்கார்ந்த இடத்திலேயே யோசிப்பதிலோ எழுதுவதிலோ படிப்பதிலோ பேசுவதிலோ ஏற்படுவதில்லை.

அது பிரயாணப்பட்டு உடலை வாட்டி உணர்ந்து கொள்ளுதல். அது நம்முடனேயே நாம் அதிக நேரம் இருத்தல். அப்போது வெளிச்சிந்தனைகளிலோ அல்லது பேசுவதிலோ சற்று தடைபடுகிறது. 

கவர்ச்சிகரமாக சொல்லுவதென்றால்
அது உள்நீச்சல்.. 


உட்திணறல்.. 


உள்மூச்சு.. 


உள்ளுணர்வு... 
மன்னிக்கவும், நீட்டி முழக்க வேண்டிய அவசியம் அமர்நாத் பயணத்தில் எனக்கேற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தருணத்தில் ஏற்பட்டு விடுகிறது. 

(மனோகரமான பகிர்வுகள் தொடரும்)
நன்றி:  கோவிந்த் மனோகர்
படம்: அஷ்வின்ஜியின் மொபைல் காமிரா.


--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

4 comments:

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம் அவரோட சொந்த அநுபவங்களையும் எழுத்தில் வடிக்கும் திறமை பெற்றிருக்கிறார். நல்லாஇருக்கு. வாழ்த்துகள்.

Ashwinji said...

நன்றி. கீதாஜி.
எனது அன்பு நண்பர் கோவிந்த் மனோகர் கவிஞர், சிறுகதை, நாடக எழுத்தாளர். எங்கள் அலுவலகத்தின் சிறப்பு தின விழாக்களுக்கான மேடை நாடகங்களை இயக்குபவர், நடிப்பவர் என்று பன்முகப் புலமை கொண்டவர். பொற்காலம் என்ற தலைப்பில் ஒரு குறும்படம் கூட எடுத்திருக்கிறார்.

உங்க எல்லார் மத்தியிலேயும் நாந்தான் கத்துக் குட்டி...இப்போதான் கிறுக்க ஆரம்பிச்சிருக்கேன். :))))
இவர் எனது பிளாக்கில் எழுதுவது எனக்கு கிடைச்சிருக்கிற ஒரு அங்கீகாரம்னு கூட சொல்லலாம். :))))

அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

திவாண்ணா said...

ம்ம்ம்ம் நல்லாவே ஆரம்பிச்சு இருக்கு. நடக்கட்டும்! :-))

Ashwinji said...

வாங்க திவாஜி. என் வலைப்பூவுக்கு விஜயம் செய்தமைக்கும், தங்களின் இனிய வாழ்த்துக்கும் என் இதய நன்றி.