Sunday, January 30, 2011

பாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை இரண்டு:-

கோவிந்த் மனோகர் (லங்கரில் கையில் தண்ணீர் பாட்டில்களுடன்)

அதிகாலை 2 மணியளவில் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பரபரப்பாய் இயங்கும் ஒரு இடத்தின் இரைச்சலில் எழுப்பப்பட்டோம் அன்று. முன்னிரவில் கடைசியாக சிந்தடிக் கழிவரை சென்று திரும்பும் போது ஏற்பட்ட நடுக்கம் ஞாபகத்திலிருந்து மறையும் முன்பே மறுபடியும் நடுங்கும் குளிரில் அமர்நாத் குகைக்கு செல்லவேண்டிய தருணம் வந்து விட்டதில் எந்த சென்னைவாசிக்குமே ஓவ்வாமை ஏற்படும்தான்.

முந்தைய நாளில் 'முடியவில்லையென்றால் நாம் குகைக்கு செல்ல வேண்டாம்' என்று தெளிவாக பேசிக் கொண்ட நானும் அஷ்வினும் மனம் மாறாமலேயே படுக்கையை விட்டு எழுந்தோம்.

எங்களை மதிக்காமல், அதாவது நாங்கள் வருவோமா மாட்டோமா என்ற கேள்வி எழுப்பாமல், என் மனைவியும் அவர் சகோதரியும் மற்ற சில பெண்களும் (பெண்களுக்கு திட சிந்தனை ஆண்களைவிட அதிகம் என்ற ஞானமும் எனக்கேற்பட்டது அப்போது) டோலியில் ஏறி குகைக்கு முன்னேறிவிட்டனர். (ஒரு டோலிக்கு ரூ.6500 குகை சென்றுவர). 

எங்களுள் சிலர் நடந்து போக போவதாக கூறினர் அதில் திருமதி உஷாராணியும் (எங்கள் அலுவலக நண்பி) அடக்கம். 

நடந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகள் எனக்கு சுமாராக தெரியுமாதலால் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னேன். விதி வலியதில்லையா? யாருமே நான் சொன்னதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஆனால் அன்று மாலையே குதிரையில் திரும்பி வந்து என்னை போற்றினர்). 

வலிமையான விதிக்கு நாங்கள் மட்டும் விலக்கா? குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா? அதுவும் இது பால்டால் வழி 

1995ல் நாங்கள் சென்றதோ வேறு ஒரு வழி பெஹல்காம்சந்தன்வாரி பாதை. ஆகையால் புது அனுபவத்தை இழக்க மனம் குளிரிலும் விரும்பவில்லை. உடனே அஷ்வினிடம் 'சார் குதிரையில் செல்லலாம் வாருங்கள்' என்றேன். 

அவர் எட்டப்பனை பார்த்த கட்டபொம்மனாக என்னை பார்த்தார். சுமாரான வெளிச்சத்தில் வெளிறிய அவர் முகம் தெரிந்தது. 'என்ன போலாம்கிறீங்களா?' என்றார் பரிதாமாக. 

அவர் முகத்தை பார்க்காமல் 'வாங்க குதிரை ரேட் கேட்கலாம்' என்று டென்டை விட்டு வெளியே வந்தேன். வெளியே திருவிழா கோலமாக இருந்தது. என் முடிவை வெளியிலிருந்த அத்தனை பேரும் ஆமோதித்தது போல் இருந்தது. 

ஒரு குதிரைக்காரன் நேரே என்னிடம் வந்து 'கோடா ச்சாயே' என்று கேட்டான்(ர்). அதற்குள் எங்கள் குழுவிலிருந்த பாண்டியன் ஹிந்தியில் அவனுடன் பேரம் பேசி நான்கு குதிரைகள் (அவர்அவர் மனைவி,  நான் மற்றும் அஷ்வின் ஆகிய நால்வருக்கு) வேண்டுமென்றும் ஒருவருக்கு ரூ750 என்றும் பேசி முடித்தார்.
(அனுபவங்கள் தொடரும்)

இந்த இடுகையை திரு.கோவிந்த் மனோஹரிடம் 
இருந்து பெற்று வேதாந்த வைபவம் வலைப்பூவில் 
வெளியிடுவது: 'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.

No comments: