Wednesday, February 2, 2011

பாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.



கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை மூன்று: சமவெளி மனிதனின் மலைவெளிப் பார்வை.

அதிகாலைக் கருக்கலில், நீண்ட நெடிய மலைப்பாதையில் யாத்ரிகள்.

மூன்று மணியளவில் குதிரைகள் குகை நோக்கி பயணத்தை தொடங்கின. வெகு தூரத்திற்கு அந்த பாதையில் லங்கர்கள் (இலவச உணவு மையங்கள்) வந்து கொண்டே இருந்தன. முடிவில் இருளடர்நத மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம். 


உடம்பை நன்றாக இன்சுலேட் (insulate) பண்ணியிருந்தாலும் குளிரியது. குதிரைப்பயணம் அவ்வளவு சவுகரியமாக இல்லை. இருட்டில் பள்ள மேடுகளும் உயரங்களும் சரியாக தெரியாதலால் விடியும் வரை பயம் தெரியவில்லை. விடிந்த பின் பயம் பழகிவிட்டது. 


என் குதிரையின் உயரம் என் காலை தரையில் தேய்த்துக் கொண்டே வந்ததால் நான் அஷ்வினின் உயரமான குதிரையை மாற்றிக் கொண்டேன்(அவருக்கு அதில் விருப்பமில்லை). ஆனால் வழியில் அது செய்த அட்டகாசம், மற்றவர்க்கு சிரிப்பும் அஷ்வினுக்கு கோபத்தையும் வலியையும் கொடுத்தது. 


ஒரு முறை அது திடீரென்று எதிர்ப் புறமாக திரும்பிக் கொண்டு மலையில் இருந்து கீழே நோக்கி இறங்க ஆரம்பித்து விட்டது. குதிரைக்காரன் காஷ்மீரியில் சிரித்துக் கொண்டே போராடி இழுத்து வந்தான். அதிகம் சிரித்தால் உதடு வெடித்து விடும் அபாயத்தால் நான் சிரிக்கவில்லை. (இதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). மனிதனுக்கு இன்பம் நீண்டு கொண்டே சென்றால் எந்த ஆட்சேபணையும் இருக்காது.  ஆனால் துன்பம் ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டாலும் சடுதியில் முடிந்துவிட வேண்டும், என்ற தீர்மானம் அவனுக்குக் குழந்தையிலிருந்தே தீர்ககமாக இருக்கிறது. 


ஆகவே எங்கள் குதிரைப் பயணம் சட்டென்று முடிய வேண்டும் என்ற எண்ணம் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், குளிர் ஏறத் தொடங்கியது.  ஐயா! அது மார்கழி மாத சென்னைக் குளிரில்லை. இமயமலைக் குளிர் !!!!


தங்கஒதுங்க இடமில்லா மலையோரத்து p பாதையில் உயரங்கள் பயமுறுத்தும் குளிரான குளிர்! இறங்கு முகமே தெரியவில்லை.

குளிரோ அதிகரித்துக் கொண்டே சென்றது. 


சென்னை வெயிலில் திட்டித் தீர்த்த சூரியனை வேண்ட வைத்த குளிர். 

புகைப் பழக்கமில்லாத நபரையும் புகை(போ)க்க வைத்த குளிர். 

மாநிறமான என் முகமே சிவந்து போக காரணமாகிய குளிர். 

ஆனால் எங்களை சுமந்த குதிரைகளுக்கு வியர்த்தது. உழைப்பு எந்த துன்பத்தையும் தாங்கும் என்று காட்டிய வியர்த்த குதிரைகள் ஓரிடத்தில் இயற்கை மலையில் தொங்க விட்ட சிற்றருவியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டன. தண்ணீருக்கு அவை முண்டியடிக்கும் போது சற்று நம்மை தடுமாற வைத்தது. குதிரையின் பால் எனக்கேற்பட்ட பரிதாப உணர்வை பயமாக்கியது அந்த தடுமாற்றம். 

நானும் அடங்காமல் எனது ஹேன்டிக்காமில் இந்த நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்தேன். தடுமாற்றத்தில் காமிராவை விட நானே முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. சமவெளி மனிதர்களின் சராசரி புரிதல்கள் மற்றும் திரிபுகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டிய அவசியம் அந்த மலையனுபவத்தில் எல்லோருக்கும் ஏற்படும். இதுவே இந்த பயணத்தில் நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை. 


(கோவிந்த் மனோஹரின் பயண அனுபவம்  தொடர்கிறது)


-----------------------------------------------------------------------------
கோவிந்த் மனோஹரிடம் இருந்து நன்றியுடன் இந்த பதிவுகளை வேதாந்த வைபவம் 
வலைப்பூவில் பதிவிடுபவர்: -
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------

1 comment:

geethasmbsvm6 said...

இதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). //

hehehe jolly ya irukke! :D