Sunday, February 20, 2011

பாகம் மூன்று: பகுதி எட்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை எட்டு: தேடலின் இனிமை 

நாங்கள் மிகவும் அசதியாக உணர்ந்ததினால் அப்படிப்பட்ட ஒரு கடை கம் டென்டடில் இடம் பிடித்து சிறிது அமர்ந்தோம். அஷ்வின், தான் கொண்டு வந்த அக்ரூட் மற்றும் பாதாம் பருப்புகளையும் பேரீச்சம் பழங்களையும் எங்களுடன் அன்புடன் பகிர்ந்து கொண்டார். 

அதை உட்கொண்டவுடன் தண்ணீர் பருகியதும் மிகவும் தெம்பாக உணர்ந்தோம். கூடவே சேர்ந்து கொண்ட ஓய்வும் எங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. நல்ல நிலையிலிருந்து உற்சாக நிலைக்கு செல்லவில்லை. மிகவும் தொய்ந்திருந்த நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மேம்பட்டோம். 

அந்த கடைக்காரனின் உபசரிப்பில் நெகிழ்ந்து அவனிடமே (மிகவும் வயதில் இளையவனாக இருந்ததால்{"ன்"}) பூஜைப் பொருட்களை வாங்க முடிவு செய்தோம் அப்படியே எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு வெறும் தடி மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது கடைக்காரன் தோலினாலான எந்த பொருளையும் குகைக்கருகே அனுமதிக்க மாட்டார்கள் என்றுரைத்தான். 

அப்போது நாங்கள் எங்களிடம் உள்ள தோல் பொருட்களை தேட ஆரம்பித்தோம். மணிபர்ஸிலிருந்து பெல்ட் வரை செல்போன் கவர் முதல் காமிரா பவுச் வரை எல்லாவற்றையும் களைந்து எங்கள் பைகளில் வைத்து பின் கிட்டதட்ட நிராயுதபாணியாக நின்றோம். 

எவ்வளவு பொருட்கள்? 

ஞானம் பெறும் வழி துறப்பதிலா? 

அல்லது அடைவதிலா? 

கோடி பெறும் கேள்வி !

இருப்பதை இழப்பதே ஞானம்.அதாவது உடமைகளை, அதாவது மனதில் உள்ள உடமைகளை. ஆசை, கோபம், காமம், பொறாமை இன்னும் என்னென்னமோ அத்தனையையும் புத்திசாலித்தனமென்ற போர்வையில் வாழவேண்டும் --அதுவும் இப்படித்தான் வாழவேண்டும்--என்ற அவாவில் சேர்த்துக் கொண்ட இயல்புகள். தேவையற்ற இயல்புகள். பிறக்கும் போது இல்லா இயல்புகள். வாழும் போது வழியில் கிடைத்த இயல்புகள்.  எல்லாவற்றையும் சேர்த்து சேர்த்து, எப்போதாவது பயன்படும் என்ற எண்ணத்தில் எப்போதுமே பயன் படாத இயல்புகள். 

எப்படிக் கரைசேர்வது? கரையேற கனம் தடையல்லவா? 

கனம் குறைக்கும் மார்கமே ஞான மார்கம். 

பொருட்களை இறக்கி வைக்கும் போது உடல் கனம் குறைந்தது. மனகனம் அதிகரித்தது. 

ஆம் ! இந்த பொருட்களின் மேலுள்ள ஆசை, ஆகர்ஷணம்.! 

சமவெளி சிந்தனைகளின் பிரதிநிதியான எங்களுக்கு இந்த பொருட்கள் பத்திரமாக திரும்பி வரும் வரை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது நியாயம் தானே? ஆனால் வெண்மை தோலில் மட்டுமில்லை அவர் தம் மனதும் வெள்ளையென்று மற்றுமொரு முறை அங்கு நிரூபித்தான் அந்த இளைஞன். 

ஆம்! விட்டு சென்ற நிலையிலேயே எங்கள் பொருட்கள் அங்கிருந்தன, திரும்பி வந்த போது. நான் செய்த மிகப் பெரிய தவறு என்னுடைய ஹேன்டிகேம் கேமிராவை அங்கு வைத்து விட்டு போனது. 

இல்லை.. இல்லை.. நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் அது இன்னமும் என்னிடம் பத்திரமாக உள்ளது. கண்கொள்ளா காட்சிகள் கொட்டிக்கிடக்கும் அந்த மலைச்சரிவுகள், உடல் வேதனையை இரண்டாம் பட்சமாக கருதிய வயதான யாத்ரீகர்கள், உடல் ஊனமுற்ற மற்ற மாநிலத்து சகோதர சகோதரிகள், சில குழந்தைகள், கைக குழந்தையுடன் வந்திருந்த இளம் தாய்கள், கடுங்குளிரில் வெற்றுடம்புடன் அங்காங்கே அமர்ந்திருந்த சிவயோகிகள், இவர்களனைவருக்கும் இலவச உணவு தயரித்துக் கொடுக்கும் லங்கர்களில் பணிசெய்யும் செல்வந்தர்கள், இவர்களூடே தனியாக தெரிந்தாலும் நமக்கு பூஜைப் பொருட்களையும் மற்ற சேவைகளையும் நம்மை கசக்காமல் பரிமாறும் காஷ்மீரிய சகோதரர்கள் என்று பதிவு செய்ய வேண்டிய ஏராளமான விஷயங்களுக்காக நான் அதை என்னுடன் சிரமம் பார்க்காமல் எடுத்து சென்று விட்டிருக்க வேண்டும். நான் அந்த விஷயங்களை எவ்வளவு தான் ரம்மியமாக ஸ்லாகித்து எழுதினாலும் அதைக் காட்சியாக காணுங்கால்.... அடடா.... 

ஊனம் மனத்தில் இல்லை. 
(நன்றி: கூகிள் இமெஜஸ்)


சங்கம் டாப். ஒரு மலை முகட்டில் 
இருந்து மற்றொரு முகட்டிற்கு...

 இறையருள் நாடி.. மனிதரில் எத்தனை நிறங்கள்.?

 குகைப் பகுதி. குதிரைகள் நம்மை இறக்கி விடும் இடம்.
இங்கிருந்து மூன்று கி.மீ. முன்னே நடந்தால் குகையை அடையலாம்.

உறைந்திருக்கும் பனிப்பாறை(தை)

வழியில் இளைப்பாறும் குதிரைகள்...
  

  குகைப் பகுதியில் இருந்து பிரவகிக்கும் அமர கங்கை 

(நன்றி: அனைத்துப் படங்களும் கூகிள் இமெஜஸ்)
இதற்காகவாவது என்னை படைத்த சக்தியே! எனக்கு இன்னொரு முறை அங்கு செல்ல திருவுளம் கொள்ள வேண்டும். ஆம். அப்படிப்பட்ட அந்த காட்சிகளை என் மனக்கண்ணும் அகக் கண்ணும் கண்டு களித்தது. ஆனால் அதை பதிவு செய்ய என்னிடம் கேமிரா இல்லை. 

இதுவும் சிவனருளோ. தெளிவாக குழப்பும் சித்தனாக தெரிந்தான் சிவன் எனக்கு. நீங்கள் நாத்திகராக இருந்தாலும் ஆத்திகராக இருந்தாலும் அமர்நாத் யாத்திரை அல்லது பயணம் நீங்கள் விரும்பும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் ஒன்றும் பெரிய பக்தனில்லை. 

ஆனால் ஒரு தேடல் எப்போதும் என்னிடம் இருந்திருக்கிறது. அந்த தேடல் ஒரு சுகானுபவம். அதை மறுமடியும் அனுபவிக்கும் முகமாகவே இந்த பயணக்கட்டுரை எனக்கு தெரிகிறது. 

அந்த கணங்களை மறுபடியும் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

எழுதுகோல் எனது, எழுதும் மை எனது, எழுத்து எனது, எண்ணம் எனது.

ஆனால், எழுதுவது நானா(?)வென்ற வினோதமான வினா என்னுள் எழுகிறது. ஏனெனில் பிரயாணக்கட்டுரை எழுதுவது எனக்கு இது முதலனுபவம். ஆனால் தங்கு தடையின்றி அங்கு பார்த்ததை, அனுபவித்ததை தொடர்ந்து எழுத வருகிறது. எப்படி? 

இனிது இனிது..

தேடல் இனிது..

தேடல் தேனினும் இனிது..

தேடும் பொருளினிது..

தேடும் களமினிது..

தேடும் காலமினிது...

(இனிமை தொடரும்...)

No comments: