திருச்சிற்றம்பலம்.
முந்தைய இடுகைகளைக் காண:
பகுதி: 1
பகுதி: 2
பகுதி: 3
பகுதி: 4
பகுதி: 5
பகுதி: 6
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
பகுதி: 1
பகுதி: 2
பகுதி: 3
பகுதி: 4
பகுதி: 5
பகுதி: 6
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
இந்த பதிவிலிருந்து வைஷ்ணோதேவி யாத்திரை துவங்குகிறது.
ஒன்று கண்டேன் இவ்வுலகுக்கு ஒரு கனி
நன்று கண்டாய் அது நமச்சிவாயக் கனி
மென்று கண்டால் அது மெத்தென்று இருக்கும்
நன்று கண்டாய் அது நமச்சிவாயக் கனி
மென்று கண்டால் அது மெத்தென்று இருக்கும்
தின்று கண்டால் அது தித்திக்கும் தான் அன்றே. (திருமந்திரம்)
மா வைஷ்ணோதேவி
பகுதி 7 -
1. யாத்திரை துவங்குகிறது.
ஜூலை மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்படுவதற்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தோம். பதினான்கு நாட்கள் வெளியூரில் இருக்க வேண்டும் என்பதால் ஒருவாரமாகவே தேவையான பொருட்களைத் தேடி வாங்கி,அவைகளை பிரயாணத்திற்கான பைகளில் வைத்துக்கொண்டு இருந்தோம். அமர்நாத்தில் பெறப்போகும் த்ரில்லிங் அனுபவத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்தோம்.
வைஷ்ணோதேவி-அமர்நாத் பயணத்துக்காக ஆரம்பத்தில் எண்பத்திரண்டு பேர் சென்னையில் இருந்து புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் அறுபத்திரண்டு பேர்கள் மட்டுமே புறப்பட்டோம். பல காரணங்களால் மற்ற இருபது பேர்களால் வரஇயலவில்லை. ஜூலை மூன்றாம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ், ஐந்தாம் தேதி அதிகாலை எங்களை ஆக்ராவில் கொண்டு சேர்த்தது. ஆக்ராவில் முன்னிரவில் நல்ல மழை பெய்திருந்ததால் எங்கும் மழை நீர் தேங்கி இருந்தது. நல்ல வேளையாக நாங்கள் போய் சேர்ந்த நேரம் பார்த்து மழை பெய்யாமல் விட்டிருந்தது.
05-07-2010௦ - ஆக்ராவில்.
எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பஸ்கள் ஆக்ரா ரயில் நிலையத்தில் காத்திருந்தன. நாங்கள் அவற்றில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு லாட்ஜில் தங்க வைக்கப்பட்டோம். அலஹாபாதைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (அவருக்கு காரைக்குடி பூர்வீகமாம்) என்ற சுறுசுறுப்பான இளைஞர் எங்களுடைய மொத்த பயணத்தையும் ஆக்ராவில் இருந்து ஏற்பாடு செய்தார். அவர் சமையல்காரரும் கூட. மேலும் அவர்தான் ஆக்ரா, புதுடில்லி, வைஷ்ணோதேவி, அமர்நாத், பின்னர் ஜம்மு,ஹரித்வார், மீண்டும் தில்லி வரும் வரை உணவு, தங்கும் இருப்பிடம் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். எங்களுடன் வந்து எங்களோடு இருந்து கொண்டு எங்களுடைய எல்லா தேவைகளையும் அன்பான உபசரிப்புடன் நிறைவேற்றித் தந்தார்.
நாங்கள் தங்கி இருந்த லாட்ஜில் காசி குழுவினர் தயாரித்த காப்பி காலையில் வழங்கப்பட்டது. அனைவரும் குளித்துத் தயாரானதும், சுடசுட பொங்கல் காத்திருந்தது. காலைச் சிற்றுண்டி அருந்தியதும், அனைவரும் பஸ்ஸில் ஏறி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு மதிய உணவுக்கு லாட்ஜுக்கு திரும்பினோம். எல்லோருக்கும் மதிய சாப்பாடு தயாராக இருந்தது. அதை முடித்துக்கொண்டு அறைகளை காலி செய்து கொண்டு பின்னர் மதுரா சென்றோம் மதுரா (கிருஷ்ண ஜென்மபூமி) தரிசனம் முடித்து மதுராவில் இருந்து டெல்லி வரும் வழியில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. பிறகு புது டெல்லிக்கு சென்று அங்கு பிர்லா மந்திர் பின்புறம் இருந்த ஒரு லாட்ஜில் இரவு தங்க வைக்கப்பட்டோம்.
ஒரு நீண்ட பயணத்துக்கான ஆரம்பம் சிக்கல்கள் எதுவும் இன்றி இனிமையாகத் துவங்கியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
காலை காப்பி, சிற்றுண்டி ஆனதும், அறைகளை காலி செய்து விட்டு எல்லோரும் அவரவரது பெட்டி, பைகளை பஸ்களில் ஏற்றிக் கொண்டு புதுடெல்லியை பஸ்களில் சுற்றி பார்க்கப் போனோம். பகலில் டெல்லியிலும் மழை பெய்தது.
பழைய டெல்லி இரயில் நிலையத்தில் இருந்து ஆஜ்மீரிலிருந்து வரும் ஆஜ்மீர்-ஜம்மு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏறி ஜம்மு செல்வதற்காக எங்களுக்கு ஆறாம் தேதி அன்று இரவு பயணத்துக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கு டெல்லி ஸ்டேஷனில் இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பின்னர் ஜம்மு செல்லும் ரயிலின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். ரயில் வரும்போதே மூன்று மணிநேரம் காலதாமதமாக வந்தது. பின்னிரவில் புறப்பட்ட ரயில் காலை சேர வேண்டிய நேரத்துக்கு ஓரிரு மணிநேரம் லேட்டாக ஜம்முவுக்குச் செல்லும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு உறங்கிப் போனோம்.
காலை ஆறு மணிக்கு விழித்தெழுந்து காலை கடன்களை முடித்து விட்டு எந்த ஸ்டேஷனில் ரயில் நிற்கிறது? ஜம்மு எத்தனை மணிக்கு போய் சேரும்? என்று விசாரித்த போதுதான் தெரிந்தது, பஞ்சாபில் பெய்து கொண்டிருக்கும் பேய்மழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் ரயில் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று.
எங்கள் பயணத்தின் முதல் நெருக்கடியை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ரயில் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இந்த ரயில் வழக்கமாக செல்லும் ரயில்களை எல்லாம் முன்னே அனுப்பி விட்டு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஓடும் ரயிலில் இருக்கும் உணவக வசதி (பான்ட்ரி கார்) இந்த ரயிலில் இல்லை. அது இல்லாவிடில் பரவாயில்லை, வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என்றாலோ, வழக்கமாக அந்த பாதையில் ஓடும் மற்ற ரயில்களை அனுமதிப்பதற்காக எங்கள் ரயில் நிறுத்தப்பட்ட இடங்கள் எல்லாமே சின்ன சின்ன ரயில் நிலையங்கள். எதிர்பாராத விருந்தாளியாக மாற்றி விடப்பட்ட ரயில்கள் நிறைய வரத்துவங்கியதால் பயணிகளின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அங்கிருந்த உணவகங்கள் தவித்தன. டீ வாங்குவதற்கே போட்டா போட்டி நிலவியது.
எனது தனிப்பட்ட சங்கடத்தை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் நீண்ட நாட்களாக இயற்கை உணவு உண்ணும் நெறியை கடைப்பிடிப்பவன். திருமண விருந்துகள், பண்டிகை நாட்களில் கூட (தினசரி எனது வீட்டிலும் கூட) சமைத்த உணவை அருந்துவதில்லை. எப்போதாவது சில கட்டாயங்களின் பேரில் சமைத்த உணவை விருப்பமின்றி சாப்பிட நேரிடுவதும் உண்டு. இதனாலயே நீண்ட பயணங்களை தவிர்த்து விடுவேன். நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதையும் அப்படி சென்றால் உணவு வேளைகளில் செல்வதையும், இரவு தங்குவதையும் தவிர்த்து விடுவேன்.
இந்த யாத்திரை மேற்கொள்ளும் போது வேறு வழியின்றி எங்கள் சமையல்காரர் சமைத்த உணவில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையிலான உள்ள உணவு வகைகளை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அங்கங்கே பழங்கள், பழச்சாறுகள் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி இந்த பயணத்தில் கலந்து கொண்ட எனக்கு டெல்லி-ஜம்மு ரயில் பயணம் ஒரு சவாலாக இருந்தது. எப்படியும் காலையில் ஜம்மு போய்விடும் என்று நம்பியதால் டெல்லியில் எதுவும் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் டீ, நிறைய தண்ணீர் என்று பொழுதை போக்கினேன்.
உணவு விஷயத்தில் எனது நிலை இப்படி இருக்க, ரயில் தாமதமாக செல்வதால், திட்டமிட்டபடி, காலை சிற்றுண்டி, மதிய உணவு இரண்டும் எங்களுடன் வந்த சமையல்காரரால் செய்து வழங்கமுடியவில்லை. இதனால் எங்களால் யாத்திரை ஏற்பாட்டாளரும் தவித்து போனார். எல்லோரும் வழியில் கிடைத்த டீ, பிஸ்கட்,லேஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் மற்றும் செயற்கையாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்கி உண்டு கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பங்கள் பிற்பகல் இரண்டு மணி வரை நீடித்தது. கடைசியில் கப்பூர்த்தலா ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அங்கிருந்த காண்டீனிலிருந்து சப்பாத்தி-தால் பாக்கட்டுகளை வாங்கி அவரால் தரமுடிந்தது.
யாத்திரை செல்லும் பலருக்கு சகிப்புத் தன்மை இருப்பதில்லை. கிடைத்த உணவை இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு எதுவும் பேசாமல் நிதானமாக உண்ணும் பழக்கம் உடைய எனக்கு இவர்கள் போன்றவர்களைக் காணும் போது வருத்தம் ஏற்பட்டது. பலபேர்கள் சேர்ந்து பயணம் செல்லும் போது சில அசவுகர்யங்களை எதிர்பார்த்து அவற்றை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தால் பயண அனுபவங்கள் இன்னும் இனிமையாக இருக்கும். பயணம் செய்யும் தங்களுடன் முன் கூட்டியே தயாராக எடுத்து வரவேண்டிய பொருட்களில் இந்த மன நிலையே முதன்மையானதும், முக்கியமானதும் கூட.
டூர் ஆர்கனைசர்களும், சமையல்காரர்களும் இவர்களைப் போன்ற நிறைய பேர்களை அடிக்கடி பார்ப்பதால் இது போன்ற விமரிசனங்களைக் கண்டு கொள்வதில்லை என்று என்னிடம் சொன்னார்கள். ‘’எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் சிலரை திருப்திப்படுத்தவே முடியாது. நாங்கள் அனைவருக்காகவும் உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வதால் தனிப்பட்ட நபர்களின் விமரிசனங்களைப் பொருட்படுத்துவதில்லை’’ என்றார்கள்.
ஒருவழியாக ஜம்மு போய் சேரும்போது மாலை ஐந்தரை ஆகிவிட்டது. காலையில் சரியான நேரத்துக்கு வந்திருந்தாலோ அல்லது முற்பகலுக்குள் ஜம்முவுக்கு வந்திருந்தாலோ ஜம்முவிலேயே தங்கி காலை சிற்றுண்டி, பின்னர் ஜம்மு நகரில் ஷாப்பிங், ரகுநாத் மந்திர், ஷாப்பிங் மற்றும் மதிய உணவு முடித்துக் கொண்டு அன்றே கிளம்பி காத்ரா சென்று லாட்ஜ் பார்த்து தங்கிக் கொண்டு அன்று மாலையே வைஷ்ணோதேவிக்கு இரவு நேரத்தில் நடந்து மலை ஏறி தரிசனம் செய்ய செல்வதாக முதலில் திட்டமிட்டிருந்தோம். ரயில் மிகவும் கால தாமதமாக வந்ததால் எல்லோரும் அகோரப் பசியுடனும், மிகுந்த களைப்புடனும் இருந்தார்கள். ஜம்மு ரயில் நிலையத்துக்கு வெளியே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரு பஸ்கள் காலையில் இருந்தே எங்கள் வரவுக்காக தயாராக காத்திருந்தன. எங்களை உடனே காத்ரா அழைத்துச் சென்று அறை எடுத்துத் தங்கச் செய்தார்கள். அப்போதே இரவு ஒன்பது ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு குளியல் போட்டு விட்டு வருவதற்குள், எங்கள் சமையல்காரர் திரு.காசி எல்லோருக்கும் தமிழ்நாடு மீல்ஸ் தயார் செய்து வைத்திருந்தார். ஒரு பகல் பொழுது முழுவதும் சரியான உணவு கிடைக்காமல் காய்ந்து போயிருந்த மக்கள் எதுவும் பேசாமல் உணவை சாப்பிட்டார்கள். எனக்கு கொஞ்சம் சாதமும் ரசமும் வாங்கிக் கொண்டேன்.
காத்ராவில் நிறைய ஆப்பிள்கள் கிடைத்தன. மேலும் காத்ரா கடைத் தெருக்கள் முழுவதும் உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், முந்திரி போன்ற வகைகள் நிறைய விற்கிறார்கள். சென்னைக்கு பார்க்கையில் தரமாகவும், விலை கம்மியாகவும் இருந்தது. அமர்நாத் மலைப் பயணத்துக்கு அவைகள் அவசியம் தேவை என்பதினால் அவற்றையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.
ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைபவர்களுக்கு மற்றும் ஒரு சங்கடம் காத்து இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் இணைப்பு ப்ரீ-பெய்ட் என்றால் சேவைகள் கிடைக்காது. போஸ்ட்-பெய்ட் இணைப்பு வைத்திருப்பவர்களே அழைப்புகளைசெய்யவோ, பெறவோ முடியும். அண்டை நாட்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகளைகண்காணிப்பதில் ப்ரீபெய்ட் இணைப்புகள் தடங்கலாக இருப்பதால் தான் இந்தநிலைமை. எனவே ஜம்மு-காஷ்மீர் செல்பவர்கள் போஸ்ட்பெய்ட் இணைப்புடன்செல்லுவது உசிதமானது என்பதை பலர் அங்கு சென்ற பிறகு தான் உணர்ந்தோம்.
எங்கள் குழுவில் ஆர்கனைசர் தவிர ஓரிருவர் தான் போஸ்ட்பெய்ட் இணைப்புவைத்திருந்தார்கள். அவர்களது போனுக்கு நிறைய அழைப்புகள் வந்தன. காரணம்மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அந்த எண்களை தந்து விட்டதுதான். எங்கள்அலுவலகத்தில் இருந்து பன்னிரண்டு பேர்கள் வந்திருந்தோம். அதில் உஷாஜிமட்டுமே போஸ்ட் பெய்ட் வைத்திருந்தார். அவரது போனுக்கு எல்லா அழைப்புகளும் வந்தன. நான் மட்டும் அவருக்கு தொந்தரவாக அமையாமல் வாய்ப்பு கிடைத்த போது எஸ்.டி.டி.பூத்துகளில் வீட்டுக்கு போன் செய்து பேசிக் கொண்டேன். திரும்பி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறும் வரை இந்த வழியையே நான் கடைப்பிடித்தேன்.
அன்றிரவு எல்லோரும் உறங்கி காலையில் விழித்து காலைக் கடன்கள் முடித்து,குளித்துத் தயாரானோம். அனைவருக்கும் காலை சிற்றுண்டி, காப்பி போன்றவை வழங்கப்பட்டன. ஜூலை எட்டாம் தேதி காலை ஒன்பது மணி அளவில் எல்லோரும் வைஷ்ணோதேவியை தரிசனம் செய்ய புறப்பட்டோம்.
பகுதி ஏழின் நிறைவு இடுகை (புகைப்படங்களுடன்) நாளை இடுகிறேன்.
ஓம் நமசிவாய.
No comments:
Post a Comment