Monday, November 15, 2010

பாகம் இரண்டு : பகுதி 1. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.
(இதனுடன் பாகம் ஒன்று நிறைவடைகிறது)

பாகம் இரண்டு 

பகுதி ஒன்று.

அமர்நாத் பனி லிங்க தரிசனம்.

வைஷ்ணோதேவி யாத்திரையை கடந்த வாரம் நல்லபடியாக முடித்தோம். வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை துவங்கியதில் இருந்து ஒவ்வொரு யாத்திரை பற்றிய பற்றிய எனது அனுபவப் பகிர்வுகளின் பகுதியினை இங்கே வெளியிடுகிறேன். 

எல்லாம் வல்ல பரமனின் திருவருளால் எனது இந்த முயற்சியும் நல்வினை ஆகும் என்று என் சிவனை வேண்டி இடுகையை துவங்குகிறேன்.
இறை வணக்கம்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.
   - திருவாசகம்  (மணிவாசகர்)

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
 
1. அமர்நாத் யாத்திரை துவங்குகிறது.

 
இப்போது நாம் ஜம்முவிலிருந்து காஷ்மீர் போகப் போகிறோம். அதிசயங்கள் அநேகமுற்ற பகுதி ஜம்மு-காஷ்மீர். இமயமலையின் இந்த பகுதிகள் ஆன்மீக அனுபவங்களை மனிதர்க்கு உணர்த்தி அவர்களை ஞானிகளாக உயர்த்திய பகுதி. இமயமலையின் ஆச்சர்யங்களும், இரகசியங்களும் எண்ணற்றவை.
 
மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்டது என்பதை விஞ்ஞானிகளும் அறிவர். அஞ்ஞானிகள் மட்டுமே அறிய மாட்டார். சூஃபியிசம் பற்றியும், காஷ்மீர சைவம் பற்றியும் மேலும் நிறைய செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இந்த பதிவு புனித யாத்திரையை பற்றிய பதிவு என்பதால் விரிவாக எழுதவில்லை.
 
இருப்பினும் ஆன்மீக தாகம் உள்ள ஆர்வலர்களுக்கு அவற்றைப் பற்றி தொட்டுக் காட்ட முயலுதல் அவசியமாகிறது. காஷ்மீரின் வரலாற்றை நாம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இரத்தினமாலை குழுமத்தின் உரிமையாளரும், பதிவுலகின் முன்னணிப் பதிவரும் ஆன திரு.சங்கர்குமார் அவர்கள் காஷ்மீரப் பெண் ஞானி லல்லேஸ்வரி பற்றிய ஒரு அற்புதப் பதிவை இட்டு எந்த அளவிற்கு காஷ்மீரத்தில் சைவம் தழைத்தோங்கியது என்பதை பற்றி அருமையாக விளக்கி இருந்தார். மெய்ஞ்ஞானம் லல்லேஸ்வரியிடம் இருந்து துவங்கி அவரது சீடனாக ஒரு இஸ்லாமியர் அவரிடம் தீட்ஷை பெற்று நந்திரிஷி என்னும் சூபி ஞானியாக உருவாவது வரை மட்டுமின்றி, அதற்கு பின்னரும் ஒரு தொடர் ரிஷி கலாச்சாரத்தை பல ஞானிகள் காஷ்மீர் மண்ணில் இன்றளவிலும் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட காஷ்மீருக்குள் நாம் நுழையப் போகிறோம் என்று எண்ணும் போது மனசு ஆனந்தத்தில் படபடத்தது. 


வாருங்கள் பதிவுக்குள் செல்வோம்... 

9th July 2010: காத்ரா டு பால்டால் (ஸ்ரீநகர் வழியாக)
 
முதல் நாள் வைஷ்ணோதேவி மலையில் நடந்து போய் வந்த களைப்பு உடலில் மிஞ்சி இருக்க, காலையிலேயே எழுந்து, குளித்து சூடான காப்பி சாப்பிட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளை எல்லாம் வண்டியில் ஏற்றினோம். காலை சுமார் எட்டு மணியளவில் இரண்டு பஸ்கள் எங்களை ஏற்றி கொண்டு காத்ராவிலிருந்து புறப்பட்டன.

இந்த நேரத்தில் புறப்பட்டால்தான் சீக்கிரமாக ஸ்ரீநகர் போய் அங்கு ஏதாவது ஷாப்பிங் செய்ய முடியும். பிறகு ஸ்ரீநகரிலிருந்து பால்டால் (BALTAL-அமர்நாத் செல்லும் வழியில் உள்ள அடிவார முகாம்) சென்று இரவு தங்க வேண்டும் என்பதாக எங்கள் திட்டம் இருந்தது.  அதாவது இன்றே பால்டால் சென்று விட்டால், நாளை அதாவது பத்தாம் தேதி அதிகாலை புறப்பட்டு அமர்நாத் குகைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, அன்று மாலையே பால்டால் திரும்பிவிடலாம். பதினோராம் தேதி பால்டாலில் இருந்து புறப்பட்டு குல்மார்க் (Gulmarg) போகலாம் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. குல்மார்கில் பனிமலைகளை காண கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரம்மியமான இயற்கைக் காட்சிகளுக்கும், பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கும் புகழ் பெற்ற இடம் குல்மார்க்.
 
காத்ராவிலிருந்து பத்னிடாப் (Patnitop-மலைவாசஸ்தலம்) வழியாக எங்கள் பஸ் சென்று கொண்டிருந்தது. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் பாதை ஒரு மலைப் பாதை. இருமருங்கிலும் மலைகள் சூழ நடுவில் ஹைவே நம்.1 (தரத்திலும் நம்பர் 1-தான்) சென்று கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசஷன் (B.R.O)  போட்டிருக்கும் நெடுஞ்சாலை இது. காணக் காண மனம்  சந்தோஷித்தது. அற்புதமான சாலை அது. 

வழியெல்லாம் எச்சரிக்கை பலகைகள் சுவாரஸ்யமான வார்த்தைகளுடன் காட்சி அளித்தன. வேகம் விவேகம் அல்ல என்பது போன்ற வரிகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். எங்கள் சாலையின் ஒருபுறம் மலை, மறுபுறம் அழகிய ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் மலை ஏறும் பாதையை ஒட்டி அந்த ஆறு வளைந்து, நெளிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டோம். காணும் இடங்களில் எல்லாம் பச்சை பசேல் என்று மரங்களும், செடி கொடிகளும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயற்கை அன்னை ஆட்சி புரிகிறாள். நீர்வளம் நிறைந்த மாநிலம் இது. நாங்கள் சென்ற சமயம் கோடைக் காலம் என்பதால் பனிமலை உருகி வரும் தண்ணீர் காணுமிடங்களில் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன.

மழைக்காலங்களில் வானம் பொய்ப்பதில்லை என்பதினால் அப்போதும் தண்ணீர் பஞ்சம் இன்றி கிடைக்கும் பூமி ஜம்மு-காஷ்மீர். ஆகையினால் பசுமை காணும் இடம் தோறும் ஆலவட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
 
ஜம்மு-காஷ்மீர் எல்லையோர மாநிலம் என்பதினால் இந்த மாநிலத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் பிரச்சினைக்குரிய மாநிலமாக இருப்பதினால் எப்போதுமே பதட்டத்தில் உள்ள மாநிலமும் கூட. இராணுவத்தின் பாசறைகள் மாநிலம் முழுவதும் உள்ளன. பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன. தரைப்படையும், வான்படையும் இங்கே நிறைய முகாமிட்டுள்ளன. பாதைகளை பார்டர்ஸ் ரோடு ஆர்கனைசேஷன் (BRO), என்னும் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நிறுவனம் நிர்மாணிக்கிறது. எதிரில் நிறைய ராணுவ வண்டிகள் வந்து கொண்டிருந்தன.

எங்கள் பஸ்சை நிறைய ராணுவ வண்டிகள் முந்தி சென்று கொண்டிருந்தன. மலை ஏறிய களைப்பில் கண்கள் சொக்க அடிக்கடி தூங்கிப் போனோம். சுமார் எட்டரை மணி அளவில் ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கே எங்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிற்றுண்டிக்கு பின்னர் கடையில் இருந்து தயாரித்த டீ வழங்கினார்கள்.

மீண்டும் பயணம். கொஞ்ச நேரம் தூக்கம். பிறகு விழிப்பு. விழித்திருந்த நேரங்களில் இருமருங்கிலும் வஞ்சனையின்றி இயற்கை அன்னை தீட்டி இருந்த ஓவியங்களை கண்டு கொண்டே வந்தோம். நண்பர்கள் கொண்டு வந்த காமிராக்கள் இந்த காட்சிகளை தமக்குள் பதிந்து கொண்டே வந்தன.
 
கால்வாசி தூரம் வந்து கொண்டிருக்கும் போது எங்கள் பஸ்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. பின்னர் நின்று விட்டன. முன்னும் பின்னுமாக எல்லா வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தப்பித் தவறி ஓவர்டேக் செய்து வந்த வண்டிகள் கடுமையான எச்சரிக்கையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஒரு நெடிய ட்ராபிக் ஜாமில் நாங்கள் நிற்க வேண்டியதாயிற்று.
 
அப்போது மணி காலை பதினொன்று இருக்கும். என்ன ஏது என்று யாரைக் கேட்பது? ராணுவ வீரர்களின் நடமாட்டம் அங்கே அதிகமாக இருந்தது. வழியெங்கும் ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதினால் சாலைகள் வெறிச்சோடி இருக்க, மக்கள் நடமாட்டமே இல்லை.

கடைகள் மூடி இருக்கின்றன. எங்காவது யாராவது ஓரிருவர் தலைகள் தெரிகின்றன. அவர்களும் விரைவாக வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏகே‑47 துப்பாக்கிகளை ஏந்தியபடி நிறைய ராணுவ வீரர்கள் பத்து மீட்டருக்கு ஒருவர் என்று நின்று கொண்டிருந்தார்கள். உயரமான வீடுகளில் ஜன்னல்களில் இருந்து ஒரு ராணுவ வீரர்  துப்பாக்கியுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். மதில் சுவர்களில், பாறைகளில், மரங்களின் கீழே என்று எங்கே பார்த்தாலும் ராணுவம்.
 
என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பஸ்ஸில் இருந்து கீழே இறங்க வேண்டாம் என்று வேறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், பஸ்களில் அமர்ந்தபடியே எதுவுமே புரியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ராணுவ அதிகாரிகள் ஒவ்வொரு பஸ்ஸாக வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 

எங்கள் பஸ்களின் எண்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. எத்தனை பேர்கள் வருகிறோம்? எங்கிருந்து வருகிறோம்? எங்கு செல்லப் போகிறோம்? என்று கேள்விக்கணைகளுக்கு எங்கள் டூர் ஆர்கனைசர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சாலையின் எதிர்ப்புறத்திலும் எந்த வண்டிகளும் வரவில்லை. எல்லோருக்குள்ளும் ஒரு பரபரப்பும், திகிலும் தொத்திக்  கொண்டது.
 
இங்கே ஆரம்பித்த இந்த பரபரப்பும், திகிலும், நாங்கள் அனைவரும் யாத்திரை முடித்து திரும்பி ஜம்மு ரயில்வே நிலையம் வரும்வரை நீடிக்கப் போகிறது என்பதை அப்போது நாங்கள் யாரும் உணர்ந்திருக்கவில்லை.
 
(தொடரும்)

No comments: