Sunday, November 28, 2010

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை. பகுதி 5 - இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

அன்பு இறையடியார்களுக்கு இதய வணக்கம்.
இந்த வலைப்பூவில் இடது பக்கம் மேலே இருக்கும் ஒலி பட்டியை இயக்கி ''ஓம் நமசிவாய'' என்னும் பஞ்சாக்கர உச்சாடனத்தைக் கேட்டுக் கொண்டே இந்தப் பதிவைப் படிக்க அழைக்கிறேன். 

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)

பாகம் இரண்டு - பகுதி 2:  அமர்நாத் புனித யாத்திரை (காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது)

பாகம் இரண்டு - பகுதி 3. அமர்நாத் புனித யாத்திரை: பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:
 
பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். (நாள்:10, ஜூலை, 2010 -அதிகாலை- Srinagar to Baltal basecamp)  
 
பயணம் தொடர்கிறது....

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு: அமர்நாத் புனித யாத்திரை..
 
5. இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பயண நாள்: 10, ஜூலை, 2010 (நண்பகல் மணி பன்னிரண்டு) 

பால்டால் முகாமை நோக்கி நாங்கள் பயணிக்கும் போது, இடையில் வந்த சோனாமார்க் (Sonamarg) ஒரு சிறந்த சுற்றுலா தலம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனி மூடிக் கிடக்கும் சோனாமார்கைக் காணக் கண் கோடி வேண்டும் என்கிறார்கள். இப்போதும் அங்கே அழகு கொட்டிக் கிடந்ததைக் கண்டோம். சோனாமார்கில் நிறைய பயணியர் தங்குமிடங்கள் உள்ளன.

முற்பகல் சுமார் பதினொரு மணியளவில் பால்டால் முகாமுக்கு போய் விடலாம் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நேற்று காலையில் காத்ராவில் இருந்து புறப்பட்டது முதல் எல்லோரும் சோர்வாக இருந்தோம்.

அனைவரும் குளித்தாக வேண்டும். அதற்கான வசதி பால்டாலில் உள்ள முகாமில் தான் கிடைக்கும். ஆனால் நாங்கள் பால்டால் முகாமுக்குள் செல்லும் நேரம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. வழிதோறும் நாங்கள் செல்லும் வண்டிகள் காக்க வைக்கப்பட்டன.

எதிர்சாரி வண்டிகள் போன பிறகே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். அவந்திபோராவில் இருந்து புறப்படும் சமயம் மதிய உணவுக்கு பால்டாலில் உள்ள லங்கர்களில் (இங்கே அமர்நாத் யாத்ரிகளுக்கு இலவசமாக உணவு கிடைக்கும்) உணவருந்திக் கொள்ளலாம் என்று கணக்கிட்டிருந்த எங்களுக்கு பால்டால் சென்று சேரும் நேரம் கணக்கின்றி நீண்டு கொண்டே போனது.

இப்படியே மாலை ஐந்து மணிவரை பால்டால் எங்கள் கண்ணுக்கு தென்படவே இல்லை. வைஷ்ணோதேவி அனுபவங்களைப் போல அமர்நாத் பயண அனுபவம் அமையாது என்பது அப்போதுதான் எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. ஆக பத்து மணி நேரத்தில் முகாமுக்கு வந்து குளித்து, உணவுண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் யாத்திரைக்குப் புறப்படலாம் என்று திட்டமிட்ட எங்கள் பயணம் முப்பது மணி நேரம்எடுத்துக் கொண்டது.

நீண்ட நேரம் பஸ்ஸில் அமர்ந்து கொண்டு வந்ததில் கால்கள் வீங்கி இருந்தன. ஏற்கனவே வைஷ்ணோதேவி மலையில் ஏறி இறங்கியதில் கால்கள் கொஞ்சம் ஸ்டிஃப்பாக (stiff) இருந்தன. இதோடு பஸ் பயணம் நெடும்பயணம் ஆனதும சேர்ந்து கொண்டது.

இனிமேல் திட்டமிடுதலும், செயல்படுத்துதலும் எங்கள் கையில் இல்லை என்பதை உணர்ந்தோம். ஆன்மீக சாதனைகளில் அர்ப்பணிப்பு மனப்பான்மையைப் பற்றி தானே ஞானிகள் சிலாக்கியமாக பேசுகிறார்கள்? சிவன் எங்களுக்கு நாங்கள் அறியாமலேயே அந்த பயிற்சியை அன்போடு அளித்துக் கொண்டிருந்தார். இன்றைய தினம் நமது நம்பிக்கையில் உள்ளது. நாளை நடப்பதோ நாம் நம்பும் இறைவனிடம் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

(தொடரும்)

No comments: