வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.
பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.
(பாகம் ஒன்று நிறைவு)
பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to பால்டால் முகாமுக்கு
பாகம் இரண்டு - பகுதி 2: காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது
பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:
பாகம் இரண்டு: பகுதி-4: பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.
பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில்.
யாத்திரை தொடர்கிறது.....
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.
(திருமூலரின் திருமந்திரம்)
பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு
நாள்: 11, ஜூலை, 2010 (அதிகாலை)
அதிகாலை ஒன்றரை மணி இருக்கும் போது, பல்லக்குத் தூக்கிகள் முகாமுக்குள் வந்து முன்னிரவில் வரச் சொல்லிய யாத்திரிகளின் டெண்ட்டுகளுக்கு வெளியில் நின்று கொண்டு எல்லோரையும் துயில் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த சப்தம் கேட்டதும், உறங்கிக் கொண்டிருந்த யாத்திரிகள் அனைவரும் விழித்துக் கொள்ள, முகாமில் சுறுசுறுப்பும், பரபரப்பும் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
மொத்த பால்டால் முகாமுமே விழித்து கொண்ட சூழ்நிலையில் அதிகாலை இரண்டு மணியளவில் முகாமில் இருந்து நாங்கள் வெளியே வந்தோம். குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. இந்த சமயம் அங்கு கோடைக் காலமாம். எனினும் நாங்கள் மட்டும் எஸ்கிமோக்கள் போல எங்கள் உடலை முழுமையாக மறைத்திருக்கும்படி உடைகளை அணிந்திருக்க, வடநாட்டுக்காரர்களும், காஷ்மீரிகளும் மிகவும் காசுவலாக உடை அணிந்திருந்தார்கள். பாரதத்தின் வடக்குப் பகுதிகளில் தட்ப வெப்ப நிலைமைகள் மிகவும் எக்ஸ்ட்ரீமாக இருக்கும். எனவே அவர்களுக்கு இந்த கோடைக்காலக் குளிர் தாங்கக் கூடியதாக இருந்தது.
பல்லக்கில் ஏறி புறப்படுபவர்களுக்கு பயணம் இனிமையாக அமைய வாழ்த்து சொல்லி விடை தந்தோம். கோவிந்த் மனோஹரின் துணைவியாரும் மற்ற பெண்களும் பல்லக்கில் ஏறி புறப்பட்ட பிறகு, மனோகர் என்னிடம், ''வாங்க நாமும் அமர்நாத் குகைக்குப் போயிட்டு வந்துடலாம். இங்கேயிருந்து குதிரையில் போயிடலாம். அங்கே போன பிறகு திரும்பி நடந்து வரலாமா அல்லது குதிரையா என்று பாத்துக்கலாம்'' என்றார்.
எனக்கு நேற்றைய இரவு சரியான உறக்கம் இல்லாததினால், இந்தப் பயணத்தை தவிர்த்து விடலாமா ? என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் ஏதோ ஒரு உந்து சக்தியால் நான் ஆட்கொள்ளப்பட்டது போல கோவிந்த் மனோஹருடன் புறப்பட்டு விட்டேன்.
நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இருமுறை முகவாதத்தினால் (Bell's Palsi) பாதிக்கப்பட்டவன் என்பதால் குளிர் காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக முகத்தையும், கழுத்துப் பகுதிகள், மார்பு, காதுகள், கை, கால்களை உல்லன் மப்ளர், கையுறைகள், சாக்ஸ், ஜெர்கின்ஸ் என்று கிடைத்ததைஎல்லாம் தேடி எடுத்து பாதுகாப்பாக மூடி வைத்துக் கொண்டேன். யாத்திரை செல்லும் அனைவரும் முதுகுப்புறம் தயாராக கொண்டு வந்திருந்த பையை மாட்டிக் கொண்டோம். (அந்தப் பையில் என்னென்ன எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை இந்தத் தொடரின் ஆரம்ப பதிவுகளில் விரிவாக சொல்லியிருக்கிறேன். மீண்டும் படிக்க விரும்புபவர்கள் இங்கிருந்தே பகுதி 2 & 3 என்கிற இணைப்பிற்குச் செல்லலாம்).
பல்லக்குத் தூக்கிகளைப் பின் தொடர்ந்து நடைப்பயணமாக செல்பவர்கள் கையில் குச்சிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். எனது அலுவலக நண்பர் சுதர்ஷன் பிரசாத், ஒரு கையால் மட்டுமே செயல்படுபவர்.(மாற்றுத் திறனாளி) மற்றொரு கை சூம்பி இருக்கும். அவரது நிலைமை இப்படி இருப்பினும் மலை ஏறும் பயணங்களை (ட்ரெக்கிங்) அடிக்கடி ஆர்வத்துடன் மேற்கொள்பவர். சுதர்ஷன் பிரசாத் அவரது சகோதரர் சூரஜ் பிரசாத், மற்றும் அவரது சகோதரி ரூபாவுடன் நடைப் பயணம் மேற்கொண்டார்.
அமர்நாத் குகைக்கு புறப்படுகிறார்கள்.
சுதர்ஷன் பிரசாத் (வலது) தன சகோதரர் சூரஜ் பிரசாத்துடன்.
சூரஜ் பிரசாத் முகாமிற்கு வெளியே மற்றவர்களுக்காக காத்திருக்கிறார்..
அதிகாலை மணி இரண்டு:- சகோதரி ரூபாவுடன் சுதர்ஷன் பிரசாத் -
அமர்நாத் குகைக்கு நடைப் பயணம் துவங்குகிறது.
இந்த பயணத்தின் போது கையில் குச்சி இல்லாமல் மலையேறுவது மிகவும் சிரமம்.ஒருகையில் குச்சியை ஊன்றிக் கொண்டு ஏறும் போது மற்றொரு கையால் சில சமயங்களில் பாதையில் எதிர்ப்படுபவர்களை விலக்கிச் செல்ல வேண்டிவரும். பாறைகளை கையில் பற்றி ஏற வேண்டி வரும். இரு கைகள் உள்ளவர்களுக்கே இந்தமாதிரி மலையேற்றம் செய்வது கடினமாக இருக்கும். ஆனால் சுதர்ஷன் பிரசாத் இவற்றை பற்றியெல்லாம் யோசனை செய்யவே மாட்டார். அவரைக் கண்டதும் எனது மன உறுதி அதிகமானது.
மலைப்பாதை, குண்டும் குழியுமாக, செங்குத்தாக, ஏற்றஇறக்கத்துடனும், குறுகலாகவும் இருக்கும். அந்த பாதை வழியாகவே மேல் இருந்து வருபவர்களுக்கும் வழி விட்டு நடக்க வேண்டும். குதிரைகள் மீது வருபவர்களுக்கும், பல்லக்கில் வருபவர்களுக்கும், கீழிருந்தும், மேலிருந்தும் வரப் போக வழிவிட வேண்டும். கவனமாக நடக்கவில்லை என்றால் பேராபத்தில் முடியும். பனிப் பாறைகளில் நடக்க வேண்டி இருக்கும் போது வழுக்கி விடாமல் இருக்க குச்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
மலைப்பாதை, குண்டும் குழியுமாக, செங்குத்தாக, ஏற்றஇறக்கத்துடனும், குறுகலாகவும் இருக்கும். அந்த பாதை வழியாகவே மேல் இருந்து வருபவர்களுக்கும் வழி விட்டு நடக்க வேண்டும். குதிரைகள் மீது வருபவர்களுக்கும், பல்லக்கில் வருபவர்களுக்கும், கீழிருந்தும், மேலிருந்தும் வரப் போக வழிவிட வேண்டும். கவனமாக நடக்கவில்லை என்றால் பேராபத்தில் முடியும். பனிப் பாறைகளில் நடக்க வேண்டி இருக்கும் போது வழுக்கி விடாமல் இருக்க குச்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
பத்து ரூபாய்க்கு குச்சிகளை விற்கிறார்கள். கீழே கிரிக்கெட் ஸ்டம்பு போல கூர்மையான முனையில் இரும்புத் தகட்டை அடித்திருக்கிறார்கள். முகாமுக்கு திரும்புகையில் அந்தக் குச்சியை தந்து ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment