Tuesday, December 14, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - 11. குதிரை(க்காரர்கள்) மகாத்மியம்

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை. 

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.

பாகம் ஒன்று: வைஷ்ணோதேவி தரிசனம்.

பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி.  (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: ஜம்மு to  பால்டால்  முகாமுக்கு

பாகம் இரண்டு - பகுதி 2:  காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது 

பாகம் இரண்டு - பகுதி 3. பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது: 

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். 

பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பாகம் இரண்டு - பகுதி 6: பால்டால் முகாமில். 

பாகம் இரண்டு. பகுதி 7. பால்டால் முகாமிலிருந்து அமர்நாத் புனித குகைக்கு 

 
பகுதி 10:  தீராத விளையாட்டுக் குதிரை. 


தொடர்கிறது....
 
பாகம் இரண்டு.
அமர்நாத் குகையை நோக்கி பயணம்...
நாள்: 11.09.2010
 
பகுதி 11. குதிரை(க்காரர்கள்) மகாத்மியம்.
 
குதிரைக்காரகளைப் பற்றி சற்று சொல்லியாக வேண்டும். பனி லிங்க தரிசனம் முடித்து நான் திரும்பி வருகையில் எனக்கு அமைந்த குதிரைக்காரன் தன்னுடைய குதிரையுடன் தன் நண்பனுடன் பேசுவது போல பேசிக் கொண்டே வந்தான்.அது ஓய்வெடுக்க நிற்கும் போது அதன் பிடரியை ஆதுரத்துடன் தடவி ''நீ சூப்பர் ராஜாடா'' என்கிறான். அது மேடு பள்ளங்களில் திணறும் போது அதனுடன் ஊக்கமாக உரையாடுகிறான். குறுகலான பாதையை சிரமப்பட்டு கடக்கும் போது அதை பாராட்டுகிறான். குதிரையும் இவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்கிறது. இவர்கள் குதிரையுடன் சம்பாஷிப்பதை கேட்டுக் கொண்டே வந்ததில் பயங்கர உயரம், மேடு பள்ளம், குண்டு குழி போன்ற இடங்களைத் தாண்டியதே தெரிவதில்லை.
 
குதிரைகள் மனிதனையும், பொருட்களையும் சுமந்து கொண்டு லாவகமாக மலை ஏறுவதைப் போல மற்ற மிருகங்களால் இயலுமா என்று புரியவில்லை. அரசர்களும், சாதாரண மனிதர்களும் நம்பிய போக்குவரத்து வாகனமான குதிரைகள் இன்னும் வழக்கொழிந்து போகவில்லை என்பதை அமர்நாத் பயணத்தில் கண்டேன். இமய மலைப் பகுதிகளில் இன்றைய நாளிலும் குதிரைகள் தான் சிறந்த போக்குவரத்து வாகனமாக விளங்குகின்றன.

செல்லும் வழியெல்லாம் குதிரைக்காரர்கள்  அவர்கள் பாஷையில் (காஷ்மீரியோ, பத்தான் பாஷையோ என்னவென்று புரியவில்லை) பேசிக் கொண்டே செல்கிறார்கள். குதிரைகள் தடுமாறும் போது விரைந்து வந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுகிறார்கள்.

சில சமயங்களில் அவர்களது பேச்சு வளர்ந்து காரசாரமான விவாதம் ஆகிறது. அப்போது  திடீர் திடீரென அடித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் கொஞ்சநேரம் கழித்து மீண்டும் சண்டை போட்ட சுவடே தெரியாமல் சிரித்துப் பேசிக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார்கள். 

என்னுடன் கூட வந்த ஒரு குதிரைக்காரனை இப்படித்தான் மற்றொரு குதிரைக்காரன் அடித்து விட அடிபட்டவன் சிறுகுழந்தை போல தேம்பி தேம்பி அழுது கொண்டே வந்ததைக் கண்டேன். நீண்ட நேரம் அழுது முடிந்ததும் அடித்தவனோடு அவன் மீண்டும் சிரித்து சகஜமாகப் பேசிக் கொண்டு வந்ததைப் பார்த்து வியந்து போனேன்.
 
உணர்ச்சிகளை நம்மை போல மறைக்கத் தெரியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். அலுப்பு தெரியாமல் இருக்க நாட்டுப் புறப்பாடல்களை பாடிக் கொண்டே வருகிறார்கள். அவர்களில் ஒருவன் இன்டர்மீடியட் வரைக்கும் கல்வி அறிவு பெற்றவன்.
 
மிக அருமையாக ஆங்கிலம் பேசுகிறான். குல்மார்கில் வெளிநாட்டவர்களிடம் குதிரை சவாரிக்கு வாடகை தரும் வணிகத்தில் ஈடுபட்டபோது அவனுக்கு இந்த ஆங்கிலப் புலமை கிடைத்ததாக என்னிடம் சொன்னான்.
 
மலைகளைத் தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு. அதுவும் இமயமலை பனிமூடிக் கிடப்பது காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருக்கயிலாய மலை பனிமலையாக இருப்பினும், சென்று வந்தவர்கள் எழுதும் அனுபவங்களைப் படிக்கும் போதும், புகைப்படங்களைக் காணும் போதும் ஒரு இனம் புரியாத அச்சம் உண்டாகிறது.
 
இந்த அழகுப் பின்னணியில் ம(உ)றைந்திருக்கும் ஆபத்துக்கள் அளப்பரியவை. அதுவும் இன்றி ஸ்விஸ்-ஆல்ப்ஸ், சிம்லா, குல்மார்க், குலு-மணாலி போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்து பனி மலைகளைப் பற்றி நாம் ஒரு கற்பனை செய்து வைத்திருப்போம். நேரில் ஒருமுறை சென்று பார்த்தால் தான் நிலைமை தெரியும்.
 
அமர்நாத் குகைக்குச் செல்லும் பால்டால் வழிப்பாதை மிகவும் கரடுமுரடானது. ஒரே நாளில் குகைக்குச் சென்று திரும்பி வர ஏதுவானது என்பதால் சமீப காலங்களில் பெருவாரியான யாத்திரிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஒவ்வொரு  ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பார்டர்ஸ் ரோடு ஆர்கனைசேஷனிடம் (Borders Road Organisation) இந்த மலைப் பாதைகளை செப்பனிடக் கேட்டுக் கொள்கிறது. அமநாத் குகை அமைந்துள்ள மலைப் பகுதிகள் காஷ்மீரின் கேண்டர்பால் மாவட்டம், கார்கில் மாவட்டம் போன்ற எல்லைப்புற மாவட்டங்கள் என்பதால் முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இந்த மலைப் பகுதிகள் வருகின்றன. ஸ்ரீநகரில் இருந்து லே-லடாக் செல்லும் பாதை திராஸ், கார்கில் வழியாக செல்லுகிறது. பால்டால் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளது. ஒரு முறை கார்கில் வழியாக பாகிஸ்தான் நாட்டு ராணுவம் ஊடுருவி கார்கில் போர் நடந்தது நினைவில் இருக்கலாம். அது போல மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதில் இந்திய அரசும், இந்திய ராணுவமும் விழிப்பாக இருக்கிறார்கள்.
 
கடும்பனிப் பொழிவுகளால் ஏற்படும் மலைச்சரிவுகளாலும், பனி உருகுவதால் ஏற்படும் நீர்வீழ்ச்சிகளாலும் ஏற்படும் மண் அரிப்புகளாலும் இப்பாதைகள் ஒவ்வொரு ஆண்டும் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன. ஆகையால் இராணுவம் இப்பாதைகளை யாத்திரிகள் அதிகம் சிரமப்படாமல் போய் வரும் வகையில் ஓரளவுக்கு செப்பனிட்டு வைக்கிறது.

பல இடங்களில் செல்லும் வழியில் கடந்த முறை போட்டிருந்த மரப்பாலம் சரிந்து விழுந்திருப்பதைக் காணலாம். இந்த முறை புதிதாக இராணுவம் அமைத்த மரப்பாலம் வழியாக நாங்கள் சென்றோம்.
 
தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைமையில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு, இங்கு நிலவும் கடுங்குளிரும், உறைபனியும் சவால்களாக அமைந்துள்ளன. தினமும் ஓரிரு முறை குளிக்கும் வழக்கம் கொண்ட நமக்கு அங்கு தண்ணீரிலேயே கை வைக்க முடியாத நிலையைப் பார்த்ததும் எப்படிக் குளிப்பது என்ற கவலையே நம்மை அரித்து தின்று விடும்.
 
ஜனவரி மாதக் குளிருக்கே சென்னை வாழ்மக்களாகிய நாம் அஞ்சும் போது, இமயமலை சூழலில் வாழும் மக்கள் அதற்கேற்ற வகையிலான கம்பளி உடைகளை அணிந்து, பல நாட்கள் குளிக்காமல் இருப்பதைக் கண்டதும் வியப்பாக இருந்தது.
 
(யாத்திரை தொடரும்)

No comments: