Thursday, December 16, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - அமர்நாத் பயணம் - சங்கம் டாப்

வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித பயண அனுபவங்கள்.

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை.

முந்தைய  பகுதிகளைக் காண கீழே சொடுக்குங்கள்:

பகுதி 12.

2. சங்கம் டாப் (மரண பயத்தை கடக்க வைக்கும் பாதை)
நாள்: 11 July 2010 - காலை மணி எட்டரை.

கண்ணுக்கெட்டிய தொலைவில் பனிமலைகள் தென்பட ஆரம்பித்தன. சங்கம் டாப் என்று அழைக்கப்படும் சிகரத்தில் இருந்து நெட்டுக்குத்தாக கீழே இறங்கி மீண்டும் அடுத்து ஒரு சிகரத்தின் மீது ஏற வேண்டிய ஒரு அபாயகரமான பாதையைக் கண்டோம்.நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஒரு செங்குத்தான மலையில் இருந்து இறங்கி மீண்டும் அதே போல ஏற்ற இறக்கங்கள் கொண்ட மற்றொரு மலையில் ஏற வேண்டி இருக்கும் ஒரு ஜங்க்ஷன் தான் இந்த சங்கம் டாப்.
 
உண்மையில் மரணபயம் அப்போது என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான யாத்ரிகள் பயங்கரமான இந்த பாதையைக் கடந்து கொண்டிருந்தார்கள். இது ஒரு மயிர்க் கூச்செறியும் அனுபவமாகவும் இப்போதும் நினைத்தாலே குலை நடுங்கக் கூடிய அனுபவமாகவும் விளங்கியது. ஒரு கணம் எல்லாவற்றையுமே மறந்து போய் உயிருடன் இல்லம் திரும்புவோமா என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடக் கூடிய கட்டம் இந்த சங்கம் டாப்பை கடப்பது. 

பால்டாலில் இருந்து அமர்நாத் குகைக்கு ஒரே நாளில் போய் வந்து விடக் கூடிய குறுக்கு வழி என்று இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தது தவறுதானோ என்று ஒரு கணம் எல்லோரையுமே சிந்திக்க வைத்த கணங்கள் சங்கம் பாதையை கடந்த அந்தக் கணங்கள். ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது. பெரிய பாதையோ, சிறிய பாதையோ சங்கம் டாப்பில் தான் அவை சங்கமிக்கின்றன என்பது தான் அந்த உண்மை. 
 
பெஹல்காம் (பெரியபாதை) வழியாக மூன்று நாள் பயணமாக வரும் யாத்திரிகள் சேஷநாக், மகாகுணாஸ் கணவாய்  மற்றும் பஞ்சீதரணி வழியாக சங்கம் டாப்பில் வந்து சேருகிறார்கள். சங்கம் டாப்பிலிருந்து சுமார் எட்டு கி.மீ தூரம் பயணித்தால் அமர்நாத் குகையை அடையலாம்.
 
பால்டாலில்(சிறிய பாதை துவங்கும் இடம்) இருந்து ஹெலிகாப்டரில் வருவோரும் பஞ்சீதரணியில் இறங்கி அங்கிருந்து நடந்தோ, குதிரை மூலமாகவோ அல்லது பல்லக்கு மூலமாகவோ சங்கம் டாப் வழியாகத் தான்  அமர்நாத் குகையை அடைந்தாக வேண்டும். சுகமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்வோருக்கு சங்கம் டாப் எதிர்பாராத அனுபவங்களைத் தரும் பயணமாக அமைவதைக் கண்டேன்.
 
இதற்கு பால்டாலில் இருந்து குதிரையிலேயோ அல்லது நடந்தோ வந்து விடலாம் என்று அவர்கள் பின்னர் புலம்புகிறார்கள். ஹெலிகாப்டரில் இருவழிப் பயணத்துக்கான பணம் வசூலிக்கப்படுவதால் இந்த யாத்திரிகள் திரும்பவும் கால்னடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மீண்டும் பஞ்சீதரணிக்குச் சென்றுதான் ஹெலிகாப்டர் மூலம் பால்டால் திரும்பவேண்டும் 

முன்பெல்லாம் அமர்நாத் குகைக்கு வெகுஅருகாமையில் இறங்குதளம் அமைத்து ஹெலிகாப்டர்கள் இறங்கினவாம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காவும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாகவும் ஹெலிகாப்டர் சேவை பஞ்சீதரணியோடு நிறுத்தப்பட்டது.  

சங்கம் டாப்பில் இருந்து குதிரையில் இருந்து நாங்கள் அனைவருமே மீண்டும் கீழே இறங்கி மறுபடியும் மற்றொரு சிகரத்தில் ஏறுகின்ற தொடர் நடத்தலை செய்தாக வேண்டும்.
 
குதிரைகளை குதிரைக்காரர்கள் வழிநடத்தி செல்ல, நாங்கள் தனித்தனியாக இறக்கங்களில் அமர்ந்தவாறே மெதுவாக கீழே தத்தி தத்தி இறங்கினோம். சில இடங்களில் கால்கள் சறுக்கிய போது முன்னே செல்பவரையும் தள்ளிக் கொண்டு போய் விழுந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட, திடீரென பக்கத்தில் வருபவர் நம்மை பிடித்துக் கொள்கிறார். அவர் என்னைக் காப்பாற்ற பிடித்துக் கொண்டாரா அல்லது தம்மை காப்பாற்ற என்னைப் பிடித்துக் கொண்டாரா என்று புரியாமல் அசடு வழிந்து கொண்டே அவரைப் பார்த்து நன்றி பெருக்குடன் சிரிக்க, அவரும் என்னைப் பார்த்து பதிலுக்கு சிரித்தார். அவர் யாரென்றே தெரியவில்லை.  

சிரித்துக் கொண்டே அவர் என்னை முந்திச் சென்று விட்டார். இறைவன் எந்த ரூபங்களில் எல்லாம் வந்து நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான் பாருங்கள்? சங்கம் டாப்பில் இருந்து கீழே வந்ததும் ஒரு சிற்றாறு ஒன்றினை கடக்க அமைத்திருந்த சிறு மரப் பாலத்தைக் கடக்கிறோம். சிற்றாறு தானே தவிர அது பேரிரைச்சலோடு ஓடிக் கொண்டிருக்கிறது. 

எதையும் ரசிக்கும் மனநிலையை இழந்த மாதிரி ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. எங்கே இருக்கிறோம்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? நம்மால் இதெல்லாம் சாத்தியமா? இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? இந்தப் பாதை எப்போது முடிவுக்கு வரும்? என்றெல்லாம் மனசில் நிறைய எண்ணங்கள் கூச்சலிடுகின்றன. ஆனால் உடல் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.

குச்சியை ஊன்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி அடுத்த சிகரத்தில் ஏறுகிறோம். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் குதிரைகளை நிறுத்தி நம்மை குதிரை மேல் ஏறி அமர உதவி செய்கிறார்கள் குதிரைக்காரர்கள். என்னுடைய குதிரைக்காரன் என்னைப் பார்த்து நட்புடன் சிரித்தான். துவக்கத்தில் குதிரை மாற்றி ஏறியதில் இருந்து குதிரை என்னை வெறுப்பேற்றியதால் எனக்கு அவன் மேல் முன்கோபம் இருந்ததால் வேண்டாவெறுப்பாக அவனைப் பார்த்து சிரித்து வைத்தேன். அவன் என் மனநிலையைப் புரிந்து கொண்டவன் போல என்னிடம் நட்பாக பேச்சு கொடுத்தான்.
 
இத்தனை தொலைவு கடந்து வந்த பின்னர் இப்போது எனக்கும் குதிரைக்காரனுக்கும் மொழி ஒரு பிரச்சினையே இல்லாமல் போய் விட்டது.ஒருவரின் உணர்வுகள் மற்றவருக்கு புரிந்து விட ஆரம்பித்தால் அங்கே மொழி ஒரு வெற்றுச் சம்பிரதாயமாகத் தான் இருக்கும் என்பதை இங்கே உணர்ந்தேன்.
 
எனக்கு புரிந்த வரையில் எங்கள் சம்பாஷணை இப்படி இருந்தது.
 
குதிரைக்காரன்: ''என்ன சாப் எப்படி இருக்கு குதிரைப் பயணம்?''
 
''ஹாங். பஹுத் அச்ச்சா ஹை''- இது நான்(வேறென்ன சொல்வது? குறைதூரமும் கடக்க வேண்டுமே!)
 
குதிரைக்காரன்:''இப்போது குதிரை தகராறு செய்யாமல் வருகிறது. பார்த்தீர்களா?''
 
நான்: ''அச்சா. பஹூத் படியா. சப் குச் டிக் ஹை'' (''ஆமாம், சூப்பர். எல்லாம்சரியாக இருக்கிறது''. இதைத் தவிர எனக்கு ஹிந்தியில் வேறு வார்த்தைகள் பேசத் தெரியாது)
 
அதற்கு அவன் சிரித்துக் கொண்டே, 'என் குதிரை அருமையான குதிரை தெரியுமா? இதைப் போய் கழுதை என்றீர்களே'' என்று என்னை வம்புக்கு இழுப்பது போல பேச, நான் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில், ''ஆரம்பத்தில் அது கழுதை போலத் தான் என்னிடம் நடந்து கொண்டது. ஆனால் இப்போது பரவாயில்லை. குதிரை போல நடக்கிறது'' என்றேன்.
 
அவனோ விடுவதாயில்லை, ''இந்தக் குதிரை மிகவும் அனுபவம் வாய்ந்த குதிரை. இங்கு இருக்கும் குதிரைகளிலேயே மிகவும் நல்ல குதிரை'' என்றெல்லாம் புகழ ஆரம்பித்து விட்டான்.

நானும் ஆங்கிலத்தில், ''யா, யா, யுவர் ஹார்ஸ் இஸ் வொண்டர்புல். ஃபண்டாஸ்டிக், க்ரேட். யூ ஆர் க்ரேட். காஷ்மீர் இஸ் வொண்டர்ஃபுல். ஆல் காஷ்மீரிஸ் ஆர் வொண்டர்ஃபுல். யூ ஆர் ஆல் க்ரேட் பீபுள். அப் கோர்ஸ் இட்ஸ் ஹார்ஸ்; இட் இஸ் நாட் எ டாங்கி. ஐ ஆம் சாரி.'' என்றெல்லாம் குதிரைகளையும், குதிரைக்காரர்களையும் வானளாவ புகழ ஆரம்பித்தேன்.
 
அவனைப் புகழ்ந்ததை விட நான் அவனது குதிரையைப் புகழ்வதைக் கேட்ட குதிரைக்காரனுக்கு சொல்லொணா சந்தோஷம். குஷியாக ஒரு நாட்டுபுறப் பாடலை பாடிக் கொண்டே வந்தான். வழி தோறும் குதிரை என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தது.
 
''என்ன? என்னைப் பத்தி தாறுமாறா பேசறியா? அப்படியே கவுத்து விட்டேன்னா தெரியும் சேதி..'' என்று என்னை பார்த்து சொல்லாமல் சொல்வது போல இருந்தது அது என்னைப் பார்க்கும் பார்வை. 

நான் அதன் கண்களைப் பார்ப்பதை தவிர்த்தேன். ஹார்ஸ் சென்ஸ் என்பார்களே அது இதுவோ? அந்தக் குதிரை அடிக்கடி என்னைப் பார்த்தபோதெல்லாம் நான் அசவுகரியமாக நெளிந்தேன். சீக்கிரம் குகைப் பகுதி வந்தால் தேவலை. முதுகு, இடுப்பு, தொடைப் பகுதிகள், அமரும் இடங்கள் எல்லாம் விண் விண் என்று ஒரே வலியாக வலித்தன. இறங்கி நின்றால் தேவலை என்கிற அளவுக்கு அசதியாக இருந்தது. இது வரை இரண்டு முறை தேநீர் மட்டுமே அருந்தி இருக்கிறோம். பசி இல்லை என்றாலும் ஒருவித களைப்பு மிஞ்சி இருந்தது.
 
அவனிடம் ''குஃபா (குகைக்கு காஷ்மீரியில் குஃபா அல்லது கோரி என்று அழைக்கிறார்கள்) இன்னும் எத்தனை தொலைவில் இருக்கிறது?'' என்று கேட்டேன்.
 
''அருகாமையில் தான்'' என்றான் அவன் சிரித்துக் கொண்டே. சங்கம் டாப் கடந்தவுடன் மீண்டும் ஒரு நெட்டுக் குத்தான மலையை ஏறிக் கடந்து வந்தால் ஒரு அழகாக பனி படர்ந்த சமவெளி கண்ணுக்கு தென்படுகிறது.காணும் இடமெல்லாம் வெள்ளைப் பனி போர்த்திருக்கிறது.
 
ஆனால் பனிப்பாளங்களின் மேல்தான் குதிரைகளும் மனிதர்களும் நடந்தாக வேண்டும். வெய்யிலில் பனி உருகி வடிந்து கொண்டிருக்க, நாங்கள் கடந்து செல்லும் பனிப்பாறை எல்லாம் மினுமினுவென எப்போது வழுக்கி விடும் என்றே தெரியாமல் காட்சி அளிக்க நடந்து செல்பவர்கள் எல்லாரும் கைத்தடியை ஊன்றி பக்குவமாக நடக்கிறார்கள்.
 
ஒரு வழியாக குகையை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. ''குஃபா இன்னும் எத்தனை தொலைவில் இருக்கிறது?'' என்று மறுபடியும் கேட்டேன்.
 
''அதோ தூரத்தில் தெரிகிறதே அந்த வளைவை தாண்டினால் இன்னும் கொஞ்சம் நேரத்தில் குகை வந்து விடும். இனி பக்கம் தான்'' என்றான் குதிரைக்காரன்.
 
(அமரநாதன் தரிசனம் அடுத்த இடுகையில்)

No comments: