Sunday, November 7, 2010

பகுதி 11. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை


வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழ கிளிக் செய்யுங்கள்.




திருச்சிற்றம்பலம்.

சிவனருள் பொலிக....

இறையடியார்களை வணங்கி வைஷ்ணோதேவி-அமர்நாத் புனிதயாத்திரை பற்றிய எனது அனுபவப் பகிர்வுகளின் அடுத்த பகுதியை வெளியிடுகிறேன்.

இந்தப் பதிவுடன் வைஷ்ணோதேவி யாத்திரையை நிறைவுறுகிறது. அடுத்த பதிவில் இருந்து அமர்நாத் புனித குகைக்கு பயணம் செய்த அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

பகுதி 11
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

காலை ஒன்பது மணிக்கு துவங்கிய நடைப் பயணம் அம்பிகை வீற்றிருக்கும் குகைக்குள் சென்று தரிசனம் செய்த போது மதியம் ஒரு மணி ஆகி இருந்தது. பாதிவழியில் உள்ள அதிக்வாரியில் அம்பிகை தவம் செய்த குகையை கூட்டம் அதிகம் இருந்ததால் நானும் என் நண்பர்களும் தரிசிக்க முடியவில்லை. அங்கிருந்து குகைக்குச் செல்லும் பழைய பாதையை தவிர்த்து, ஹிமகோடி வழியாக அமைக்கப் பட்டிருக்கும் புதிய பாதையில் நடந்து சென்று சாஞ்சிசாட் வழியாக அம்பிகையின் பவனம் அடைந்தோம்.

அம்பிகையைத் தரிசனம் செய்வதற்கு முன்பாக அங்கும் ஒரு செக்யூரிட்டி செக்அப் நடந்தது. ரீஃபில் பேனாக்கள் கூட அனுமதிக்கப் படவில்லை. தோலால் ஆன பெல்ட்களோ, கைப்பைகளோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. யாத்திரை துவங்கும் போது அடிவார நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்ட கைக்கடக்கமான காமிராக்களையும், செல்போன்களையும் க்ளோக்ரூமில் உள்ள லாக்கரில் வைத்து விடவேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொன்னார்கள்.

இந்தப் பொருட்களை லாக்கரில் வைக்க சிறிய கட்டணம் வசூலிக்கிறார்கள். இவையெல்லாம் செய்து முடிந்த பின்னரே நாங்கள் அம்பிகையை தரிசனம் செய்யும் வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

ஜெய் மாத்தா தி என்னும் கோஷங்களுடன் வரிசை முன்னேறிக் கொண்டிருந்தது.

நல்ல வேலையாக நாங்கள் க்யூவரிசையில் அதிக நேரம் காக்க வைக்கப்படவில்லை. முன்பெல்லாம் அம்பிகையை குகைக்குள் தவழ்ந்து சென்று தரிசனம் செய்ய வேண்டும். சீசன் சமயங்களில் இந்த குறுகலான குகைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. ஒருநாளைக்கு எட்டாயிரம் பக்தர்களுக்குக் குறைவாக வரும் சமயத்தில் மட்டுமே இந்த பாதையில் செல்ல அனுமதி உண்டு என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சொன்னார்.

காரணம் கேட்டபோது, "கூட்டம் அதிகமாக இருக்கும் போது இந்த பாதையில் அனுமதித்தால் காலதாமதம் ஆவதினால் இந்த ஏற்பாடு" என்றார்.

எங்களுக்கு குகைக்குள் தவழ்ந்து சென்று அம்பிகையை தரிசிக்கும் ஆவலும் எதிர்பார்ப்பும்  நிறைய  இருந்தது. அது நிறைவேறாததில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். சீசனில் செல்லும் போது இது போன்ற சங்கடங்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது.

இதுவே நம்மூர்ப் பக்க கோவில்களில் அதற்கொரு சிறப்புக் கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பார்கள். இங்கெல்லாம் அப்படி இல்லை. அம்பிகையை தரிசிக்க வரிசையில் செல்லும் போது க்ளோஸ்சர்க்யூட் டெலிவிஷன் திரையில் கருவறையை க்ளோஸப்பில் காண்பிக்கிறார்கள். நாங்கள் எத்தனையாவது குழு(batch) என்று அதில் காண்பிக்கப்படுகிறது. தரிசனம் செய்ய தோராயமாக எவவளவும் நேரம் தேவைப்படும் என்கிற கவுன்ட்டவுனும் அதில் தெரிகிறது.

அம்பிகையின் திருவுருவம் மூன்று பிண்டிகள் வடிவத்தில் உள்ளதை திரையில் எங்களால் நன்கு பார்க்க முடிந்தது. குகைக்குச் செல்லும் பல பக்தர்களுக்கு எதைத் தரிசிக்க வேண்டும் என்பது அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில்/நொடிகளில் புரிவதில்லை.
பின்னர் வெளியில் வந்து மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று பின்னர் வருந்தாமல் இருக்க இந்த முன்னேற்பாடாம் இது.
அது மட்டும் இன்றி வரிசை செல்லும் வழியில் சுவர்களிலும் அம்பிகை கருவறையில் பிண்டி வடிவில் அருள்பாலிக்கிறாள் என்று ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் எல்லாருக்கும் புரியும்படி கண்ணுக்கு படும் அளவில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நமது பக்க கோவில்களில் கருவறையை இது போல காண்பிப்பதில் ஆகமவிதிகள் அனுமதிப்பதில்லை என்பதை இங்கே நினைத்துக் கொண்டேன். கருவறை இருக்கும் அந்தக் குகைக்குள் நுழைவதற்கு முன்னதாக நாங்கள் செல்லும் வரிசையில் எல்லாத் தெய்வங்களின்  படங்களும் வைக்கப்பட்டிருந்தன. எங்களது க்யூவரிசை குகையை நெருங்கும் போது பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாங்கள் அப்போது பழைய குகையின் நுழைவாசலை கண்டோம். அதன் அருகாமையில் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
காண்போர் மனம் கவரும் அளவிருக்கு அழகாக சிங்கவாகனத்தில் வீற்றிருக்கும் வைஷ்ணோதேவியின் திருவுருவச் சிலை  குகைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தது.

வலப்புறத்தில் பத்து அடி உயரத்தில் வேறொரு குகைப் பாதை இருந்தது. அதன் வழியாகவே நாங்கள் அம்பிகையை தரிசிக்க செல்லவேண்டும். ஒரு குழு வெளியே வந்த பின்னரே மற்ற குழு அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டிப்புடனும் அதே நேரத்தில் கனிவுடன் செயல்படுகிறார்கள்.

உள்ளே செல்லும் குகைப் பாதையை வெள்ளைப் பளிங்குக் கற்களால் இழைத்திருக்கிறார்கள். குகையின்  மேற்புறத்தில் இருந்து குளிர்ந்த தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் அவை கொஞ்சம் உறைந்திருப்பதையும் கண்டோம். பக்தர்கள் அந்த தண்ணீரை கையில் எடுத்து பயபக்தியுடன் தலையில் தெளித்துக் கொள்கிறார்கள்.
நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து இதோ அம்பிகையின் கருவறையை நெருங்கி விட்டோம்.
பல நாட்களாய் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஏங்கி, பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து, மலை அடிவாரத்தில் இருந்து சற்றேறக் குறைய பதினைந்து கி.மீ. தூரம் நடந்து வந்த பக்தர்களுக்கு அம்பிகை இதோ மூன்று பிண்டிகள் (லக்ஷ்மி, சரஸ்வதி, பராசக்தி) வடிவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

முப்பெருந்தேவியரான மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதி பிண்டி வடிவில்.

பக்தர்கள் தாங்கள் கொண்டு சென்ற பிரசாதங்களை அம்பிகைக்கு படைக்கிறார்கள்.
அவற்றை அம்பிகைக்கு காட்டிவிட்டு அவர்களிடமே திருப்பித் தருகிறார்கள். அங்கே அமர்ந்திருந்த தலைமைப் பூசாரி எங்கள் முதுகில் தட்டுகிறார். சிலருக்கு காசுகளை அவர் தருகிறார். இங்கே இது ஒரு வழக்கமாக செயல்படுத்தப்படுகிறது என்கிறார்கள். காரணம் தெரியவில்லை.

அம்பிகையை சில வினாடிகள் கண்ணாரக் கண்டு தரிசித்தேன். அகில புவநங்களையும், படைத்துக் காக்கும் அன்னை ஆதிபராசக்தி நம் எல்லோரையும் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். திரும்பி வரும் போது கூட திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தோம். வெளியில் வரும்போது மனசு நிறைந்திருந்தது. ஒரு இனம் புரியாத அமைதி எண்ணத்தில் குடி கொண்டது. எங்களைப் போலவே ஆர்வத்துடன் காத்திருந்த பக்தர்களுக்கு வழிவிட்டுக் கொண்டே பிரிய மனமில்லாமல் வெளியே வந்தோம்.

அம்பிகையின் திருப்பாதங்களை வருடி வரும் நீரூற்று சரணகங்கையாக ஓடி கீழே அம்ருத் குண்ட் என்னும் குளத்தில் சேருகிறது. வெளியே வரும் பக்தர்கள் அதை தீர்த்தமாக சேகரித்துச்செல்லுகிறார்கள்.
திரும்பி வரும் வழியில் கொஞ்சம் கீழே படிகளில் இறங்கிச் சென்றால் அங்கே ஒரு சிறிய குகை இருக்கிறது, அதில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்திருக்கிறார்கள். இந்த குகைக்குள்ளும் கொஞ்சம் வளைந்து நெளிந்து தான் மேலே ஏற வேண்டும். 

வைஷ்நோதேவிக்கு வந்தபின்னர் குனியாமல் நெளியாமல் அம்பிகையை தரிசனம் செய்ததில் சற்றே மன வாட்டமுற்றிருந்த நாங்கள் இந்த குகைக்குள் குறுகலான பாறை இடுக்குகளில் வளைந்து, நெளிந்து ஏறிச் சென்று சிவபெருமானை கண்குளிரத் தரிசனம் செய்தோம்.

துஷ்ட மந்திரவாதி பைரோன் நாத்தை அம்பிகை வதம் செய்த போது அவன் தலை சென்று விழுந்த பைரோன்நாத் சிகரத்தை காண மற்ற நண்பர்கள் சென்றார்கள். அவர்கள் இந்த யாத்திரையை குதிரைகள், டோலிகள்  மூலமாக செய்திருந்ததால் தெம்புடன் அங்கே ஏறிச் செல்ல முடிந்தது.  அந்த சிகரத்துக்கு மீண்டும் நடந்தே செல்ல என்னாலும், என்னுடன் வந்த நண்பர்களாலும் இயலவில்லை. எனவே அந்த முயற்சியையும் கைவிட்டோம்.
பின்னர் கோவில் நிர்வாகத்தின் உணவகத்தில் மதிய உணவை உண்டோம். நாங்கள் உணவருந்தும் போது மணி மூன்று ஆகிவிட்டது. அரிசி சாதம், ரொட்டி, பருப்பு இவைகள்தான் மதிய உணவாக அளிக்கப்படுகிறது. எங்களுக்க் அதிருஷ்டவசமாக உணவு கிடைத்தது. நாங்கள் உணவருந்தியவுடன் உணவகம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் நடந்து கீழே இறங்கி எங்கள் அறைக்கு திரும்பும் போது இருட்டி விட்டது. அறையை சென்று சேர்ந்த போது இரவு எட்டு மணி ஆகிவிட்டது. கால்களில் வலியும், உடல் முழுதும், அசதியும், களைப்பும் இருந்தன. நாங்கள் குளித்து விட்டு வரும் போது எங்களுக்கான இரவு உணவாக சாதம், சாம்பார், வற்றக் குழம்பு,  ரசம், அப்பளம், கூட்டு-பொறியல், தயிர் என்று காசி விஸ்வநாதன் (எங்கள் யாத்திரைக் குழுவின் ஆஸ்தான சமையல்காரர்) மிகப் பிரமாதமாய் தயாரித்திருந்தார்.

எல்லோருமே மிகுந்த களைப்பில் இருந்த போதிலும் தமிழ்நாட்டு உணவை வெகு ஆர்வமாய் ரசித்து, ருசித்து சாப்பிட்டோம். காலை ஏழு மணிக்கே புறப்பட்டு அமர்நாத் செல்லவேண்டும்.

காலை காப்பி புறப்படுமுன்னர் தரப்படும் என்றும் காலையில் தயாரித்து கையோடு எடுத்துச் செல்லப்படும் சிற்றுண்டியை வழியில் அருந்தலாம் என்றும் பயண ஏற்பாட்டாளர் திரு.ராஜராஜன் எங்களுக்கு சொன்னார். உண்ட களிப்பில் அமர்நாத் பயணக் கனவுகளோடு வைஷ்ணோதேவி பயணக் களைப்பை மறந்து உறங்கச் சென்றோம்.


(வைஷ்ணோதேவி புனித யாத்திரை படத் தொகுப்பு அடுத்த இடுகையில் வெளி வரும்.) 

அடுத்த பகுதி. பகுதி 12 வைஷ்ணோதேவி புனித யாத்திரை படத் தொகுப்பு

2 comments:

Anonymous said...

ஆஹா..நேரில் நாங்களே தரிசனம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது உங்கள் எழுத்து

Ashwinji said...

கருத்தூன்றிப் படித்து ஆர்வத்துடன் பின்னூட்டம் எழுதும் தங்களுக்கு என் வணக்கங்கள். நன்றி.