Saturday, September 26, 2009

சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா?

சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்
சுப்பு

சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா?

’நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படி செயல்படு’ என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.

‘இந்திய மொழிகளிலேலே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்.

‘பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் கூறினாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை. அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்’ என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல் (11.18.2.3).

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.

’அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)

‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.

தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.

தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.

பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.

அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்

‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’

என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘

என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.

பண்டிதமணி பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்துகொள்ள சோமலெ எழுதி இன்ப நிலையம் வெளியிட்டுள்ள புத்தகத்தைப் பார்க்கலாம்.
வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர்

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழிஅல்ல என்பதைச் சொல்லி வருகிறேன். இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளால் சமாதானம் அடையாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து கீழே வரும் பட்டியலைப் பார்க்கவும்.

மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….

இவர்களெல்லாம் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர்கள். இவர்களுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்க்ருதத் தொடர்புடையவை.

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் கொண்டவர் முன்னணியில் இருக்கிறார்.

நூற்றாண்டுகளாகத் தனித்தமிழ் இயக்கம் நடந்த பிறகும் இதுதான் நிலைமை.

தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்;

முதல் அமைச்சர் கருணாநிதியின் இருப்பிடமான கோபாலபுரமும், ஜி.கே. வாசனின் ஊரான கபிஸ்தலமும் சமஸ்க்ருதப் பெயர்களே. தொடர்கின்ற மற்ற ஊர்களையும் பாருங்களேன்.

திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது.

தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல்.

சமஸ்க்ருத வளர்ச்சி பா.ஜ.க வுக்கு உதவுமா?

இந்தியக் கலாச்சாரம், சமஸ்க்ருத வளர்ச்சி ஆகியவற்றில் பல்லாண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ‘பாரதிய வித்யா பவன்’ ஒரு காங்கிரஸ்காரரால் நிறுவப்பட்டது. அவர். கே. எம். முன்ஷி.

‘இந்தியாவின் செல்வங்களிலேயே அதிக சிறப்புடையது எது என்று என்னைக் கேட்டால் தயக்கமில்லாமல் நான் சம்ஸ்க்ருதம் தான் என்று சொல்லுவேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு.

மற்றபடி சமஸ்க்ருத வளர்ச்சி இந்தியாவின் எழுச்சிக்கு உதவும், இந்தியாவின் எழுச்சி பா.ஜ,க வுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும், குடியரசுக் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும் கூட உதவும்.

பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்ருத மொழியை ஆதரிப்பதால் பயன் உண்டா?

வாழ்க்கை நமக்கு ஒரு வரப்ரசாதம் என்கிறார் காலை நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் யோகப்பியாசம் சொல்லித்தரும் பெண்மணி. இந்த வரமும் பிரசாதமும் தமிழா, சமஸ்க்ருதமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை.

கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன.

சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது.

சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு.

டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது.

எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது.

ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை.

ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள்.

சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்

‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு’ மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.

முதல் அமைச்சரே மொழி மாற்றத்தை விரும்புகிறார் என்றால் அந்த மொழி, புழக்கத்தில் உள்ளதா, இல்லையா என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

பரிசுப் பொருட்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் பரிசு பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை - ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன். - காமராஜர்.

தமிழர் வாழ்வில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு என்ன?

தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இசைவாக, இணையாக இறைமையாகக் கருதுவது வள்ளுவர் காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் தமிழ் மரபு.

இன்னும் தமிழ்நாட்டில் கவிஞர்களின் கற்பனைச் செழுமைக்கும் எழுத்தாளர்களின் உயர்ந்த சிந்தனைக்கும் வாக்கிய வனப்புக்கும் ஊற்றுக் கண்ணாயிருக்கிறது சமஸ்கிருதம்.

‘புதுக்கவிதையில் சமஸ்க்ருத கூறுகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம்.

சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளுக்கும்; காவ்ய தரிசனங்களுக்கும், தர்க்கம், மொழியியல், மானுடவியல், தாவரையல், அகராதியியல் என்ரு ஆழ்ந்து அறிவதற்கும், கணித நுண்மைக்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும், ஒவ்வாமை, பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சோதிடத் திறமைக்கும் சம்ஸ்க்ருதப் பலகணியைத் திறக்கவேண்டும்.

தென் குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கணபதி ஸ்தபதிக்கு கட்டிடக் கலை தொடர்பான சம்ஸ்க்ருத நூல்கள் பயன்பட்டன என்று அவரே சொல்லியிருக்கிறார்.

தமிழ்ப் பற்றாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் கவிஞர் பாரதிதாசன். அவருடைய கவிதை வரி ஒன்றைப் பார்ப்போமா!

‘’ஊரின நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’

என்ற வரிகளில் ‘பத்திரிகை’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதழ், ஏடு, தாளிகை என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

வற்றாக் கருணையோடு வந்து உதித்த அருட்பிரகாச வள்ளலார் தாம் நிறுவிய பாடசாலையில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயிற்றுவித்தார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் செய்யப்படும் சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தம் கூறுகிறார்.

‘உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒலியன்கள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் நிறைந்து இருக்கின்றன. முள்ளை மலராக்கும் - கல்லைக் கனியாக்கும், காட்டை நந்தவனமாக்கும் வல்லமையை அந்த மொழி பெற்றிருப்பதால் தான் ஆண்டவனுக்கு அர்ச்சனை உரிய மொழியாக உயர்ந்து நிற்கிறது. செம்பில் சிறந்த தெய்வத்தைக் காட்டுகிறது. சீரிய காட்சியைக் காட்டிக் கண்ணீரில் நம்மை நாளும் நனைய வைக்கிறது.’’

தமிழ் என்னும் அமுதத்தால் இறைவனைக் குளிர்வித்தாலும் அது சிறப்புதான். கோயில்களிலிருந்து சம்ஸ்க்ருதம் அகற்றப்படவேண்டும் என்ற கூக்குரல் இப்போது கேட்கிறது அதற்காக சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி சொல்லவேண்டியதாயிற்று.

தமிழர் வாழ்வில் தனியாகப் பிரித்தெடுக்க முடியாதபடி சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் இருக்கிறது.

சம்ஸ்க்ருதம் பிராமணர்களுக்கான மொழி என்று ஒரு கருத்து இருக்கிறதே?

அந்தக் கருத்து தர்ம விரோதமானது என்று ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களே கூறியிருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் நடத்தும் சம்ஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன.

தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.

சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர்.

மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.
காளிதாசன்

காளிதாசன்

இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன்.

வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல.

பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சம்ஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல.

‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல.

பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேலியைச் சுருட்டி வைத்து அந்த இடத்தில் வீதி உருவாகிவிட்டது.

பொதிகை தொலைக்காட்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தும் கீதை சொற்பொழிவுக்கு எல்லாத் தரப்பிலும் நல்ல வரவேற்பிருக்கிறது.

மதுரை நகரில் சின்மயா மிஷன் நடத்தும் கீதைப் போட்டியில் எல்லா வகுப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் தலைவரே ஒரு கிறிஸ்தவர்தான் - டாக்டர். அலெக்ஸ்.

சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று சொல்கிறார்களே?

தமிழுக்கு ஆபத்து சம்ஸ்க்ருதத்தால் வராது. அது வேறு திசையிலிருந்து வருகிறது. ஆபத்தின் பெயர் ஆங்கிலம். அதன் வாகனத்தின் பெயர் சன் தொலைக்காட்சி.

யோசித்துச் சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று பேச வேண்டியவர்

‘திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ என்கிறார்.

நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ள வேண்டும்.

உச்சரிக்கும் முறையினால் ஒரு சமுதாயத்தையே காயடித்துவிடக்கூடிய திறமை தொலைக்காட்சித் தொகுப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு எதிராக ஒர் இயக்கமே நடத்த வேண்டும்.

மற்றபடி சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து இல்லை. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

தமிழ் இலக்கிய மரபில் சம்ஸ்க்ருதத்திற்கு இடமில்லை என்கிறார்களே?

தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் ‘வடமொழி இலக்கணம் நிறைந்த தொல்காப்பியர்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மாணவரான அதங்கோட்டாசிரியர் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்று அழைக்கப்படுகிறார்.

தமிழின் இலக்கண நூல்களிலே மிகத்தொன்மையானது தொல்காப்பியம்; தொல்காப்பியத்திலேயே சமஸ்க்ருதத் தொடர்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.

‘தம்பியோடு கானகம் சென்று இலங்கையை அழித்தவன் ஸ்ரீ ராமன். அவனுடைய மகிமையைக் கேளாதவர்களுக்குக் காது எதற்கு?’ என்று கேட்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள். வால்மீகி ராமாயணத்தை அவர் அறிந்திருக்கிறார்.

மணிமேகலையில் மாதவி சம்ஸ்க்ருதத்தில் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது.

’ஊன்பொதி பசுங்குடையார்’ என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலில் கிஷ்கிந்தா காண்டத்தின் காட்சி சொல்லப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை ‘வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி’ என்று வாழ்த்துகிறார்.

’வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’ என்றார் திரு.வி.க.

‘சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிறார் கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி.

தமிழ்வளத்தையும் தமிழர் நலத்தையும் விரும்புகிறவர்கள் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதில்லை.

எப்படியாவது தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று நோக்கமுடையவர்கள்தான் சம்ஸ்க்ருத எதிரிப்பாளர்கள். நல்லறிவுடையோர் இந்த மோதல் போக்கை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

தமிழர் வாழ்விலும் வழக்கிலும் சம்ஸ்க்ருதம் அன்றும் இன்றும் அழகு சேர்க்கும் அணிகலனாகத் தொடர்கிறது.

மதச்சார்பில்லாத நாட்டில் சம்ஸ்க்ருதக் கல்வி தேவையா?

சம்ஸ்க்ருதத்தை தேர்வுப் பாடமாகக் கற்பிப்பது எந்த விதத்திலும் மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாகாது’ என்கிறது 1994 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

சம்ஸ்க்ருத மொழி என்பது பிராமணர்களுக்கு மட்டும்தான் என்று யாரவது கூறினால் அதை நம்மால் ஒப்புக்கொள்ளவே முடியாது - ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் - ஜெயகாந்தன்

நன்றி: விஜயபாரதம் வார இதழ்.
தொடர்புடைய பதிவுகள்

* திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்
* வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
* மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை


குறிச்சொற்கள்: sanskrit, இந்திய வரலாறு, இந்தியா, கலாசாரம், கல்வி, கோயில், சம்ஸ்கிருதம், சாதி, தமிழகம், தமிழர், தமிழ் இலக்கியம், தேசியம், பகுத்தறிவு, பூஜை, மதச்சார்பின்மை, மொழி, ராமாயணம், ரிஷிகள், வேதம்
30 மறுமொழிகள் »

1.
அஞ்சனாசுதன்
13 July 2009 at 12:37 pm

அருமையான கட்டுரை. இக்கட்டுரையை பிரதி எடுத்து நம்மால் முடிந்த அளவு நாம் பார்ப்பவர்களிடம் எல்லாம் கொடுக்க வேண்டும்.

சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
2.
ராஜகோபாலன்
13 July 2009 at 1:06 pm

கட்டுரை மிகத் தெளிவாக சமஸ்க்ருத மொழியின் மேலுள்ள வெறுப்பு எவ்வளவு தவறு என சுட்டிக் காட்டியுள்ளது. தொடர்க இப்பணி
அன்புடன்
ராஜகோபாலன்
3.
DHEENA
13 July 2009 at 2:19 pm

தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

அந் த தங்கக் குட தின் சிறப்புதான் thamizhl pirinthu kannatam ,telungu, malayalam aaka marriyatho !!!!!!!!!!!!! .
4.
பாரதபுத்ரன்
13 July 2009 at 3:20 pm

சுப்பு அவர்களின் போகப் போகத் தெரியும் கட்டுரையின் ரசிகன் நான். எவ்வளவு அருமையாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைக்கிறார் சுப்பு அவர்கள்.

எடுத்த எடுப்பிலேயே சிக்சர்..

// நான் கூறியது யாவையும் ஆரய்ந்து
பிறகு உன் விருப்பப்படி செயல்படு’
என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. //

// அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.//

அப்படிச் செய்வதாய் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் அவர்களுக்கு மரியாதை கிடைத்திருக்குமே.. எதற்கு அவர்கள் கிட்டத்தட்ட தொழுநோயாளிகளைப்போல நடத்தப்படுகிறார்கள். இறைவன் இல்லை என்பதை நான் உனர வேண்டும்.. பகுத்தறிவு வாதிகள் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் இந்த வேடதாரிகளையும், சுயநலமிகளையும் மக்கள் நன்கறிவர்.

நமது செல்வங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன..

மெக்காலே கல்வி முறையால் நமது குழந்தைகள் இயந்திரங்கள் போல ஆக்கப்பட்டுள்ளனர்.

நமது சாஸ்திரங்களும், மறைகளும் அனைவருக்கும் பொது.. அதைப் படிக்க விடாமல் ஆரிய இனவாதம் பேசி நமது சொத்தை நமது கையினாலேயே அழிக்க வைக்கின்றனர்..
அருமையான கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்த அருமையான கட்டுரையை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.. நண்பர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

எழுதிய சுப்பு அவர்களுக்கும், வழங்கிய தமிழ் இந்துவுக்கும் நன்றி …..
5.
உதயா
13 July 2009 at 4:45 pm

தமிழும் சமச்கிருதமும் எங்கள் இரு கண்கள் போன்றவை, ஒன்று தாழ்வானது என்பது ஒரு கண்ணை குத்திக்கொன்று வாழ்வதற்கு சமம்.

கட்டுரை மிக அருமையாக உள்ளது. நீங்கள் சமச்கிருதம் என்று கூறியுள்ள சில சொற்கள் உண்மையில் தமிழே. உங்கள் பணி தொடர வேண்டும்!

அன்புடன் உதயா
6.
Haranprasanna
13 July 2009 at 5:44 pm

//தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

அந் த தங்கக் குட தின் சிறப்புதான் thamizhl pirinthu kannatam ,telungu, malayalam aaka marriyatho !!!!!!!!!!!!! .//

:-)

தமிழ் அமுதம் என்றால் சமிஸ்கிருதம் அமுதம் என்றே இருக்கட்டும். நெய்க்கு தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற சர்ச்சையெல்லாம் தேவையில்லை. சமிஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததா அல்லது தமிழே தனி மொழியா என்பது குறித்த சர்ச்சையும் விவாதமும் பல ஆண்டுகள் நிகழ்ந்துவருகின்றன. நமது முக்கிய எண்ணம், எந்த மொழியையும் வெறுக்காமல் இருப்பதே என்பதாக இருக்கவேண்டும். கன்னடம், மலையாளம் என எல்லாவற்றையும் சேர்ந்தே சொல்கிறேன்.
7.
Satish Kumar
13 July 2009 at 8:22 pm

//இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.//

A question I have been thinking for loooooong time…. how come these ‘leaders’ call themselves ’secular’? Even god cannot answer.

Wonderful article. Razor sharp pointers….people should really start thinking. One scholar, whom I met, said ‘Sanskrit was the official language of the court in earlier days, like English in todays world, and Tamil was a common language’. Very apt.

Hope this artcile opens up the eyes of the people who are made fool by the vested interests.
8.
Francis Selva
13 July 2009 at 8:53 pm

Sanskrit is a beautiful language and it is a pride and heritage of every Indian. The hatred towards Sanskrit in TN is baseless and is born out of chauvinistic propaganda in the past few decades. such hatred is not seen in any other part of India… and I can clearly see that it has robbed Tamils of their own cultural legacy.

The nuggets of facts given in this article are very good and wide ranged.. where from the author gathered all this? it is amazing!

I have been learning a lot of great wisdom from this site. Thank you again.
9.
ராம்குமரன்
13 July 2009 at 9:07 pm

இந்தியா சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடிப்பாருங்கள். பல இந்திய இதிகாச புராணங்கள், வேதங்களை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருப்பது மேல்நாட்டினரே. மோனியர் வில்லியம்ஸ்மற்றும் பலர் சமஸ்கிருத அகராதியையே உருவாக்கியுள்ளனர். அந்நியர்களே இவ்வளவு அழகாக படித்திருக்கும் பொழுது நாம் ஏன் அதை படிக்க முடியாது. நாம் வேலைக்கு ஆதாரமாக ஆங்கிலத்தைப் படிக்கிறோம் அதே போல ஆன்மீக முன்னேறத்திற்கு ஆதாரமாக சமஸ்கிருதத்தையும், பழந்தமிழையும் கற்க வேண்டும். மொழிபெயர்புகளை படிப்பதை விட நாமே மூலத்தை படித்து அறிந்துக்கொள்வது மிகுந்த ஆனந்தத்தை தரக்கூடியது. தமிழும் சமஸ்கிருதமும் நம் இரு கண்கள் போல.

நன்றி,
ராம்குமரன்
10.
C.N.Muthukumaraswamy
13 July 2009 at 10:22 pm

சுப்பு அவர்களின் கட்டுரை வடமொழியால் தமிழுக்குக் கேடில்லை. தமிழை அழித்துவிட முனைப்பாக உள்ளது சன் தொலைக்காட்சியே. முற்றிலும் உண்மை. வடமொழியை வெறுப்பவன் கலை, இலக்கியம், பண்பாட்டுத்துறைகளில் பலவற்றையும் இழப்பான். வடமொழியை அறியாதபோனாலும் வெறுக்காமல் இருந்தாலே இத்துறை இன்பங்கள் தாமே வந்து சேறும் என்பது என் அனுபவம். வடமொழி வெறுப்பும் பிராமண வெறுப்பும் கால்டுவெல் புதைத்து வைத்த ‘டைம் பாம்’. . கோ.ந.முத்துக்குமாரசுவாமி
11.
Varatharaajan. R
15 July 2009 at 6:15 am

வடமொழியால் தமிழுக்குக் கேடில்லை. தமிழை அழித்துவிட முனைப்பாக உள்ளது சன் தொலைக்காட்சியே. முற்றிலும் உண்மை. வடமொழியை வெறுப்பவன் கலை, இலக்கியம், பண்பாட்டுத்துறைகளில் பலவற்றையும் இழப்பான். வடமொழியை அறியாதபோனாலும் வெறுக்காமல் இருந்தாலே இத்துறை இன்பங்கள் தாமே வந்து சேறும்
12.
Malarmannan
18 July 2009 at 9:52 am

It is wrong to call Samscrutam as Vada Mozhi. It did did nOT belong any particular region. It ocupied the whole space of the human society irespective of regional considerations. It was the lingua franca of schlalry from different regions to exchange notes, discuss and decide. That is why all treaties were return in Samcrutam by scholars who had diferent languages as their mother tongue. This is the reason why Samscrutam was NEVER a spoken language of the people Be reminded in Kavi Kalidasa’s works, lines referring talks by commoners no Samscrutam would be used . Initially, the word Samscrutam did NOT mean the language. It adopted that name later for its perfection. Many scholarly brains went into creating Samscrutam and that is why it is very strong in Grammar, and technically far advanced.
MALARMANNAN
13.
Uthaya
21 July 2009 at 1:58 pm

I really don’t see why most people have the need to that Adhi Sankara was a south Indian instead of saying he was a Tamil. Because in 2BC or 7AD (which ever date one takes to be the time of Adhi Sankara) there was no seperate Malayalam language, and Tamil was the language spoken in Chera Nadu hence automatically Adhi Sankara becomes a Tamil.

Not only that but Adhi Sankara himself says that he is a Dravida Sisu in his works, also the great Kanchi periyavar also says that Adhi Sankara was a Tamil in his Deivathin Kural books.
14.
C.N.Muthukumaraswamy
22 July 2009 at 11:57 am

ஆதி சங்கரர் தமிழராகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் தம்முடைய நூல்களில் ஞானவழியில் நின்று இறையருள் ப்ற்றவர் ஒருவரையும் அன்புவழியாகிய பத்திநெறியில் நின்று திருவருள் பெற்றவர் ஒருவரையும் பற்றிப் பேசுகிறார். அவர்கள் இருவரும் புரான மாந்தரோ, வடநாட்டாரோ அல்லர்.இருவரும் தமிழரே. சவுந்தரியலகரியில் ‘திராவிடசிசு’ எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், சிவானந்தலகரியில் ‘பக்தி என்னதான் செய்யாது,
“அச்சோவீது அதிசயம்அன்பு என்செய்ய மாட்டாதால்
அரனார்க்கு அன்று

வைச்சேகால் வழிந்டக்கும் செருப்புகூர்ச் சப்புல்லாய்
வயங்கிற்றேவாய்
உய்ச்சேகொப் புளிநீரும் அபிடேக மாயிற்றே
உருசி பார்த்தே
மெச்சூனும் அமுதாச்சே வேட்டுவன்மெய்
அன்பரிலே மிக்கான் அன்றே.”
15.
C.N.Muthukumaraswamy
22 July 2009 at 12:00 pm

என்று திருஞானசம்பந்தரும் கண்னப்ப நாயனாரையும் ஞானத்துக்கும் பத்திக்கும் எடுத்துக் காட்டாகக் கூறுவதால் ஆதிசங்கரர் தமிழ்ராகத்தான் இருந்திருக்க வேண்டும். மேலும் அவருடைய தந்தையார் சிவகுரு எனப் பெயரினர் எனக் கூரப்படுகிரது. இப்பெயர் தமிழ்ரிடையேதான் காணப்படும்
16.
ஜடாயு
22 July 2009 at 6:54 pm

// … என்று திருஞானசம்பந்தரும் கண்னப்ப நாயனாரையும் ஞானத்துக்கும் பத்திக்கும் எடுத்துக் காட்டாகக் கூறுவதால் ஆதிசங்கரர் தமிழ்ராகத்தான் இருந்திருக்க வேண்டும். //

அன்புள்ள முத்துக்குமாரசாமி ஐயா, இது சரியான சான்றாதாரம் அல்ல. ஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தமைக்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

நாயன்மார்கள் தமிழகத்தில் தோன்றினர் தான், ஆனால் சிவானுபவச் செல்வர்களான அவர்களைத் தமிழர்கள் மட்டும்தான் போற்றியிருக்க வேண்டும் என்று இல்லையே.. அவர்கள் தமிழகத்துக்கு அப்பாலும் போற்றப் பட்டனர் என்று கொள்ளலாம் அல்லவா? ஆழ்வார்களும் இதே போல் தான்.

குறிப்பாக கண்ணப்பரது சரிதம் தென்னகம் முழுவதும் பரவியிருந்தது, அதற்கு இலக்கிய, சிற்ப ஆதாரங்கள் உள்ளன. அவர் வாழ்ந்த காளத்தி மலை இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ”பேடர கண்ணப்பா” என்று கன்னடத்தில் சொல்வார்கள். கன்னட வீரசைவ மரபில் ”பூர்வாசார்யரு” என்றே 63 நாயன்மார்களைப் போற்றுகிறார்கள். பெங்களூர் சோமேஸ்வரர் கோயில், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயில் இவற்றில் பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூர்த்தங்கள் உள்ளன - இரண்டும் கர்நாடகத்தின் புராதன கோயில்கள்.

ஆழ்வார் தமிழ்ப் பாசுரங்களை (குறிப்பாக திருப்பாவை) தெலுங்கு லிபியில் எழுதிவைத்து ஆந்திரா முழுக்கப் படிக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஆழ்வார்கள் பற்றி பல நூல்கள் உள்ளன, இவை வட இந்திய வைணவ சம்பிரதாயங்களில் கூடப் பிரபலம்.. அவர்கள் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதப் பட்டிருக்கும் - உதாரணமாக, திருப்பாணாழ்வார் “முனிவாஹனர்” ஆகி விடுவார் (அவரை முனிவர் தோளில் வைத்துத் தூக்கி வந்ததால்) ! கோதை “கோதா” (godha) ஆவார்.

ஒப்பீட்டில் ஸ்ரீவைஷ்ணவத்தின் கருத்துக்கள் பாரதம் முழுதும் பரவி, எல்லா வைணவ பக்தி இயக்கங்களிலும் (கபீர்தாசர், ராமானந்தர், வல்லபாசாரியார் இத்யாதி.. ) தாக்கம் ஏற்படுத்தியது போல, தென்னக சைவ சித்தாந்தம் பரவவில்லை என்றே கூறவேண்டும். சோழப் பேரரசின் வீழ்ச்சி உட்பட இதற்குப் பல காரணங்கள் கூறலாம்..
17.
ஜடாயு
22 July 2009 at 6:58 pm

// சவுந்தரியலகரியில் ‘திராவிடசிசு’ எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், //

“தேவி! உன் முலைப் பாலைப் பருகிய திராவிட சிசு … ” என்று தான் அந்தப் பாடலின் சொற்கள் இருக்கின்றன.. சம்பந்தருக்கு இவை அழகாகப் பொருந்துகின்றன, அவரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

சங்கரர் தன்னையே இப்படிக் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கொள்ளவும் இடமிருக்கிறது என்றும் உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அவரும் திராவிடர் தானே ! :))
18.
C.N.Muthukumaraswamy
22 July 2009 at 8:43 pm

நாயன்மார்கள் தமிழகத்துக்கு அப்பாலும் போற்றப்பட்டிருக்கலாம் அல்லவா என்றஜடாயு அவர்களின் கருத்து எனக்கு உடன்பாடே. சவுந்தரியலகரியைத் தமிழில் மொழிபெயர்த்த கவிராஜபண்டிதர் அவர்களின் கருத்து ‘திராவிடசிசு’ என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கும் என்பது.
தருணமங்கலை உனது சிந்தை தழைந்த பாலமு தூறினால்
அருண கொங்கையில் அதுபெருங்கவி அலைநெடுங் கடலாகுமே
வருணம் நன்குறு கவுணியன் சிறுமதலையம் புயல்பருகியே
பொருள்நயம்பெறு கவிதையென்றொரு புனிதமாரி பொழிந்ததே.
காஞ்சிப் பெரியவர் கருத்தும் அதுவே என்று சொல்லக் கேட்டுள்ளேன். சரியான வரலாற்றுச் சான்று அல்லவாயினும் மரபுவழிச் சொல்லப்பட்டுவருவதை நினைவுகூர்ந்தேன். மேலும் சங்கரர் தாம் உமையின் முலைப்பால் உண்டதாகக் கூறிக் கொள்ள அவருடைய வரலாற்றில் இடமில்லையே. திராவிடம் என்ற வடமொழிச்சொல் தமிழைத் தானே குறிக்கின்றது.’ திராவிடசிசு’ எனச் சங்கரர் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டார் என்ற கருத்தும் உள்ளது. நன்றி ஜடாயு.
19.
ப.இரா.ஹரன்
23 July 2009 at 12:28 am

ஆதி சங்கரர் கேரளத்தில் பிறந்தவர் தான். ஆனால் தமிழர் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெற்றோர் கும்பகோணம் அருகில் ஐந்து கிலோமீடர் தொலைவில் உள்ள சிவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆதி சங்கரர் பிறப்பதற்கு முன்னர் அங்கிருந்து கேரளம் சென்றனர் என்று சிவபுரம் ஸ்தல வரலாறு கூறுகிறது.

அடுத்த முறை கும்பகோணம் செல்கிறவர்கள் சிவபுரம் அவசியம் சென்று வாருங்கள் அழகிய அமைதியான சிறு கிராமம். அற்புதமான சிவன் கோவில். கால பைரவருக்குத் தனியாகச் சந்நிதி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் “வடக்கு” பார்த்து நின்று அருள்புரிவார். அவருக்குப் பின்னே இருக்கும் நாய் காதை நம் பக்கம் காண்பித்து தலைத் தூக்கி பைரவரை நோக்கி முகம் வைத்திருக்கும். அதாவது நம் வேண்டுதல்களை செவி சாய்த்து பைரவரிடம் நமக்காக சிபாரிசு செய்வதைப் போல். மிகவும் சக்தி கொண்டவர். பைரவர் ஸ்தலம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் நாம் கோவில் வாசலை நெருங்கும்போதே நாய்கள் வாலையாட்டியவாறு நம்மை நேரே பைரவர் சன்னதிக்குக் கூட்டிச்செல்வது விந்தை! தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷம். ஆனால் வெகு சிலருக்குத்தான் அப்படி ஒரு கோவில் இருப்பது தெரியும்.

அந்த ஊர் முழுவதுமே ஒரு அடிக்கு ஒரு லிங்கம் இருந்த ஊராம். அந்த ஊரின் நிலம் முழுவதும் லிங்கங்கள் இருந்ததால் சிவபுரம் என்று பெயர்பெற்றதாம். திருநாவுக்கரசர் நடந்து சென்றால் காலால் லிங்கங்களை மிதிக்க வேண்டிவருமே என்று ஊர் எல்லையிலிருந்து (ஐய்யவாடி-பிரத்தியங்கரா கோவில் இருக்கும் ஊர்) அங்கப் பிரதக்ஷணம் செய்தே அந்த ஆலயத்திற்குச் சென்று பாடல் பாடி சிவபெருமானின் அருள் பெற்றாராம். இதுவும் ஸ்தல வரலாறு கூறும் செய்தி.

திராவிட அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துரையின் கீழ் வருகிறது. ஆனால் துறை ஒரு பைசா கூடக் கொடுப்பது கிடையாது. பாலசக்தி குருக்கள் தான் சிரத்தையுடன் தனக்குத் தெரிந்தவர்கள் உதவியுடனும், மற்றும் சில நல்ல உள்ளங்களின் உதவியுடனும் ஆலயத்தை காத்து வருகிறார். தினமும் இரண்டு வேளை பூஜை மற்றும் நைவேத்தியம் செய்து வருகிறார். கும்பகோணம் போகின்றவர்கள் அவசியம் சென்று வாருங்கள். தாராளமாக முடிந்த அளவு நிதி அளித்து வாருங்கள்.
20.
Ramadurais
23 July 2009 at 5:36 pm

The debate Sanskrit is northern language itself is success for the Hindu drohis. All tamils should understand the difference between script and language. see the following sentence.

amma inge vaa
அம்மா இங்கே வா
अम्मा इंगे वा

When you read this sentence, you will say it is tamil. Just because the script is in roman or devanagiri, will you say this language is english or hindi?

Similarly tamils have lost the meaning of vocabulary, There is a difference between home and house.
House is veedu in tamil.
Home is agam.

Karunanidhi, Vaiko will say thayagam, kuralagam, anbagam arivagam. They do not become brahmins. But ordinary tamils if they say aathukku poren, then that becomes brahmin language.

Sanskrit is like rice (soru, saadam). You cannot eat only rice. You cannot eat without rice. So sanskrit is there in every language and not there in any language. Since you do not eat rice, but eat sambar rice, curd rice, rasam rice, pulao.

These anti hindus by asking you to join the debate and you joining the debate itself is a victory for them. For your information, all vaishnavite naalayira divya prabandham, thiruppavai are available as printed books in the scripts of kannada, telugu, tamil and hindi. So, when you read these books written in those languages, it will sound tamil and you will understand.
21.
ஜடாயு
23 July 2009 at 6:49 pm

ஹரன் சார், சிவபுரம் திருத்தலம் பற்றிய செய்திகளுக்கு நன்றி.

// ஆதி சங்கரர் கேரளத்தில் பிறந்தவர் தான். ஆனால் தமிழர் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெற்றோர் கும்பகோணம் அருகில் ஐந்து கிலோமீடர் தொலைவில் உள்ள சிவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆதி சங்கரர் பிறப்பதற்கு முன்னர் அங்கிருந்து கேரளம் சென்றனர் என்று சிவபுரம் ஸ்தல வரலாறு கூறுகிறது. //

“ஐயமில்லை” என்று சொல்லுமளவுக்கு இது ஒரு சான்றாகுமா?? பல கோவில் ஸ்தல் புராணங்களில் வியாசர், வசிஷ்டர், அத்ரி, கௌதமர் எல்லா முனிவர்களும் அந்த ஊருக்கு வந்ததாகக் கூட சொல்லப் படுகின்றன :)) சங்கரர் பிறந்ததே சிதம்பரம் அருகில் உள்ள சிற்றூரில் தான் என்றே ஒரு சங்கர விஜய நூல் எழுதப்பட்டுள்ளது! ஆனால், இவை பல்வேறு விதமான ஐதிகங்கள் மட்டுமே.

Sankara Digvijaya: The Traditional LIfe of Sankaracharya - By Swami Tapasyananda (Sri Ramakrishna Math, Chennai) என்ற நூலில் ஆசிரியர் ஸ்வாமி தபஸ்யானந்தா மிக நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்த ஐதிகங்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து, பின்னர் சங்கரது பிறப்பிடம் காலடியே, அவர் பெற்றோர்கள் நம்பூதிரி பிராமணர் வகுப்பினரே என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.

அதற்கு உறுதியான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன… ஏராளமான உள்ளூர் ஐதிகங்களும் கூட உள்ளன (உதாரணமாக, சங்கரரின் தாயை தகனம் செய்ய காலடி ஊரின் பிராமணர்கள் இடமும், அக்னியும் தராததால், தன் கையைக் கடைந்து அக்னி உண்டாக்கி வீட்டிக்கு வெளியிலேயே தகனம் செய்தார் என்று சங்கர விஜயம் சொல்கிறது.. இது ஒரு சாபமாக ஆகி, இன்றுவரை அப்பகுதி நம்பூதிரிகள் மரணித்தவர்களை தங்கள் வீட்டு வாசலிலேயே தகனம் செய்யும் பழக்கம் உள்ளது)
22.
Uthaya
24 July 2009 at 7:28 pm

Dear Jataayu,

1. It does not matter whether Sri Sankara was born in kalladi or not, the matter is that kalladi in 7/8 AD was a Tamil area that was part of the Chera Kingdom. The Malayala language had not evolve during this time and it would take another 3, 4 centuries for that to happen.

2. In the book Deivaththin Kural, Kanchi Perivayar says that the Original Nambuthirs were Tamils from the Chola Kingdom and that only after some time did priests from Telungu & Kannada were brought to be settled down there. What remained of the original Tamil Nambuthirs later assimilated into the Telungu & Kannada priests according to Kanchi Perivayar.
23.
Vijay
16 September 2009 at 11:14 pm

தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.
24.
அஞ்ஜனாசுதன்
17 September 2009 at 10:37 am

திருவாளர் விஜய் அவர்களே! தமிழ் மட்டுமல்ல, நம் பாரதத்தின் மொழிகள் அனைத்திற்குமே ஸம்ஸ்க்ருதத்தின் தொடர்பு உண்டு. உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது.

”சுமார் 210 வார்த்தைகளை வைத்து ஒரு மொழி எந்த குடும்பத்தைச் சார்ந்தது என்று கணிக்க முடியும்” என்று நீங்கள் சொல்வது சுத்த அபத்தம்.

உதாரணத்திற்கு நீங்கள் சொல்லியபடி ”திராவிட” மொழிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து வந்தவை தான் என்றோ, தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவை தான் என்றோ அம்மொழி அறிஞர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா? இல்லை நீங்கள் தான் அங்கே சென்று அவர்கள் மொழிகள் தமிழிலிருந்து வந்தவை என்று சொல்லிப் பாருங்களேன்! ()

ஆனால் அவர்கள் அனைவரும் ஸம்ஸ்க்ருதத்தின் தொடர்பை மறுத்ததில்லை என்பதே உண்மை.

ஐய்யா! கால்டுவெல்லின் கோட்பாடுகள் காற்றோடு போய் காலங்கள் பல ஆகிவிட்டன. திராவிட இன வெறியர்கள் கூப்பாடு போடுவதால் ஸம்ஸ்க்ருதத்தின் முக்கியத்துவமோ, அதற்கும் தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்போ இல்லை என்று ஆகிவிடாது.
25.
RAMGOBAL
17 September 2009 at 1:13 pm

ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.

//உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது. //

இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.
26.
RAMGOBAL
17 September 2009 at 1:17 pm

மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள். தாய் மொழியே ஒருவருக்கு சிறந்த மொழி. என் தாய் மொழி தமிழ் மொழி போன்று எம் மொழியும் இவ்வுலகில் கிடையாது ( என்னை பொறுத்த வரையில்).
27.
அஞ்ஜனாசுதன்
17 September 2009 at 3:11 pm

//இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//

உம்முடைய அறியாமை நன்றாகத் தெரிகிறது. வளர முயற்சி செய்யுங்கள்.

// மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள். தாய் மொழியே ஒருவருக்கு சிறந்த மொழி. என் தாய் மொழி தமிழ் மொழி போன்று எம் மொழியும் இவ்வுலகில் கிடையாது ( என்னை பொறுத்த வரையில்).//

உண்மையான இந்துக்கள் மொழிகளில் உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இல்லை. நீங்கள் தமிழ் உங்களுடைய தாய் மொழி என்று பற்றுடன் நினைத்தீர்களானால், மசூதியில் ஏன் அரபு மொழியில் தொழுகை நடத்துகிறீர்கள்? தமிழ் தாய் மொழி என்கிற பட்சத்தில், தாய் மதத்திற்குத் திரும்பிவந்து பயன் பெறுங்கள். பாலைவனத்திலிருந்து சோலைவனத்திற்கு வாருங்கள். (:-))
28.
அரவிந்தன் நீலகண்டன்
17 September 2009 at 9:09 pm

//உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது. //ம்ம்ம்…காலாவதியான கோட்பாடு இதுதான். மொழிகளின் பரிமாண வளர்ச்சி மிகவும் சிக்கலானது. ஒருவிஷயத்தை சொல்லலாம். சமஸ்கிருதம் எனும் மொழி உருவானது கிமு ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருக்கலாம். அதனுடம் பிராம்மி எழுத்துக்கள் இணைக்கப்பட்டது அதற்கும் பின்னால் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருக்கலாம். முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை. தமிழ் என்கிற மொழி உருவானதும் சமஸ்கிருதம் என்கிற மொழி உருவானதும் ஒரு சில நூற்றாண்டுகள் இடைவெளிகளில் இருக்கலாம். சமஸ்கிருதம் தமிழின் தாய்மொழியாக நான் அறிந்தவரை பாரத ஐதீகங்களில் இல்லை. இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது. இந்த ஐதீகத்தின் மையக்கருவில் ஒரு வரலாற்று உண்மை உள்ளது. பாரத பண்பாட்டுப்புலத்தில் இருந்த மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொதுமொழியே சமஸ்கிருதம். அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல். துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.
29.
Rajasundararajan
18 September 2009 at 12:21 pm

Sirs/ Madams (though I see no madams),

It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.

Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism. Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.

I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.

- Rajasundararajan
30.
Sathish Ramadurai G
23 September 2009 at 2:48 am

தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.

ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.

இது தமிழ் மூத்த மொழி என்ற என் கருத்துக்கான காரணம்.

உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..

பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )

சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும்.

இறுதியாக ..

௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..

தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்றோ, தாய்-மகள் என்றோ, அமுதம்-குடம் என்றோ உவமிப்பது அவரவர் விருப்பம். :)

-----------------------------------------------------------------
(தமிழ் ஹிந்து டாட் காமில் இருந்து கருத்துரைகள் உட்பட)

6 comments:

Ravi Devaraj said...

Good job. keep it up.

Ashwinji said...

Thanks for the encouragement.

kalyanam said...

All languages created by mankind for eeasy communication among them.So all languages are good and for good purpose only.All languages are unique and jealous and all translations from one language to other is like kissing your lover through a secretary.Instead of wasting our time in unfruitful arguments it is wise to take all good things from all languages and enrich our life.
M.Ragothaman.

Ashwinji said...

Dear Sir

I agree with your feedback. But there has been a concerted hatred-campaign going against Sanskrit in India and particularly in Tamil Nadu. Especially the loss is ours when we miss the great treasure sanskrit had offered to the mankind. Our broadmindedness always led us to lose heavily. Only God Shiva should save us.
Ashwinji

ANGOOR said...

மிகவும் அருமையான கட்டுரை.
சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை.
இது பற்றி எங்கள் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளை படிக்க கிழே உள்ள இணையத்தில் படிக்கலாம்
http://www.saivaneri.org/eswaramoorthypillai/sanskrit-and-tamil-and-saivism.htm

நன்றி

Ashwinji said...

நன்றி பெரு மதிப்பிற்குரிய ஆங்கூர் அவர்களே. தாங்கள் தந்த சுட்டியை அவசியம் படிக்கிறேன். ஆதரவுக்கு நன்றி. இந்த வலைப்பூவின் மற்ற பதிவுகளையும் படித்து விட்டு தங்களின் அருளாசியினை எனக்கு வழங்கும்படி பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.

இதய நன்றியுடன்,
அஷ்வின்ஜி
www.frutarians.blogspot.com
www.vedantavaibhavam.blogspot.com