Monday, September 28, 2009

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி


சிவவழிபாடு நம் பாரதத் திருநாட்டின் தொன்மையானதும் பரவலானதுமாகும். இந்திய நாட்டில் உள்ள பலவகை மொழி, பண்பாடு, கலாச்சாரங்கள் முதலிய வேற்றுமைகளைக் கடந்து மக்களால் சிவன் வழிபடப் பெறுகிறார். இதற்கு இமயம் முதல் குமரிவரை பரவியுள்ள சிவன் திருக்கோவில்களே சான்றாம். திருக்கயிலையின் ஏகநாதனே வடக்கே நேபாளத்தில் பசுபதிநாதனாகவும், தெற்கே இராமேசுரத்தில் இராமநாதனாகவும், மேற்கே குஜராத்தில் சோமநாதனாகவும், கிழக்கே கொல்கொத்தாவில் நகுலேசுவரனாகவும், கலிங்கத்தில் இலிங்கேசுவரனாகவும், நடுவில் காசி விசுவநாதனாகவும்  கோவில் கொண்டுள்ளார்.
jyotirlingas2சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.
சிவமே முழுமுதற்பொருள் எனக்கொள்ளும்   மெய்யியல், அறவியல், ஒழுக்கக் கோட்பாடுகளுடன் கூடிய சைவசித்தாந்தநெறியொடு புராணக்கதைகளுடன் தொடர்புடைய சிவவழிபாட்டுநெறிகள், பலவகையில் வேறுபடும்.
சிவனை, சைவசித்தாந்தநெறி, உலகத்துக்கு “நிமித்தகாரணனாக’க் கூறும். பானையை உருவாக்க மண் முதற்காரணம். முதற்காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும். மண், சட்டியைவிட்டுப் பிரிவதில்லை. குயவன் நிமித்தகாரணம் அல்லது கருத்தாகாரணம். தண்டசக்கரம் துணைக்காரணம். சிவம் நிமித்தகாரணனாக, சிவசத்தியைத் துணைக்காரணமாகக் கொண்டு, மாயையாகிய முதற்காரணத்திலிருந்து பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது எனச் சித்தாந்த சைவநெறி கூறும். எப்படி மண்ணிலிருந்து சட்டி உருவாகியதோ அப்படியே மாயை என்ற முதற்காரணத்திலிருந்து உடல் உடலிலுள்ள கருவிகள் உலகம் உலகபோக விடயங்கள் இறைவனால் படைக்கப்பட்டன. சட்டியைவிட்டு மண்ணைத் தனியாகப் பிரிக்க முடியாதவாறு போல மாயையாகிய முதற்காரணத்தை விட்டுப் பிரபஞ்சத்தைத் தனியாகப் பிரிக்க முடியாது.
சிவத்தை முதற்காரணமாகவும் துணைக்காரணமாகவும் கொள்ளும் கொள்கைகளும் உண்டு. சிவனை வழிபடுவோருக்குள் சமய ஆசாரம், ஒழுக்கம், உணவு சிவத்தின் வியாபகம், உலகு கடந்தநிலை, மெய்யறிதல், முத்திநிலை ஆகியன பற்றிய கருத்து வேறுபாடுகளும்  உண்டு.
கொள்கை வேறுபாடுகளைப் போலச் சிவனடியார்களின் திருவேடத்திலும் வேறுபாடுகள் உண்டு.
தம்முடைய திருவாரூர்த் திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், திருவாரூர்த் திருவீதிகள் எண்வகைக் கணத்தாரால் பொலிவு பெற்றதாகப் பாடியருளினார். எண்வகையாவார்: (1) அருளிப்பாடியர். (2) உரிமையிற்றொழுவார் (3) உருத்திர பல்கணத்தார். (4) விரிசடை விரதிகள் (5) அந்தணர் (6) சைவர் (7) பாசுபதர் (8) காபாலிகள். இவர்கள் அனைவரும் கொள்கையாலும் திருவேடத்தாலும் தம்முள் மாறுபட்டவர். ஆயினும் சிவத்தை வழிபடும் நெறியில் ஒற்றுமையுடையவர்.
1. அருளிப்பாடியர் என்பவர் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். 2.உரிமையில் தொழுவார் – ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர்கள். முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் உரிமையுடையோர். 3. உருத்திர பல்கணத்தார்- சைவத்தினுள் பலவகை அகப்புறச்சமயத்தவர்கள். விரிசடை விரதிகள் – மாவிரதிகள் என்னும் பிரிவினர். இவர்களை மற்றொரு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், “வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்” என்றர். தம் அடையாளமாகத் தலைமாலை, எலும்புமாலை முதலியன அணிதலால் ‘வித்தகக் கோல விரதிகள்’ என்றார். இறைவர், மானக்கஞ்சாற நாயனாருக்கு அருள்புரியவந்த திருக்கோலம் ‘மாவிரதிகள்’ திருக்கோலம். இவர்கள் எலும்புமாலையோடு, நீண்டதலமுடியைத் திரித்துப் பூணூலாக அணிவர்.(மானக்கஞ்சாற நாயனார் புராணம்21 -23,”மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்’”) 5. அந்தணர் – முனிவர்,வேதப்பிராமணர், ஆதிசைவர் முதலியோர். 6. சைவர்- சைவவாதி எனப்படுவோர், 7. பாசுபதர்- பாசுபதவிரதிகள், சைவத்தின் அகப்புறச் சமயத்தின் ஒருசாரார். 8. காபாலியர் – பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாள்தோறும் மனைதோறும் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர்.
வேதவழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடுதலால் சைவர் எனப்படுவர். மாவிரதிகள்,பாசுபதர், காபாலியர் முதலியோர் வேதநெறியினர் அல்லர். இவர்களுடைய சமய ஒழுக்கமும் ஆசாரமும் எத்தகையதாயினும் சிவனை வழிபடுவோர் ஆனதால் இவர்களும் சைவர்களே எனத் திருமுறைகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
திருஞானசம்பந்தர், “காதலாற் சைவர் பாசுபதர்களும் வணங்கும் சண்பைநகர்” என்கிறார்.(சண்பை நகர் – சீகாழி)  சிவனுக்குச் சைவன் என்பதொரு பெயர் உண்டு. காபாலிகள் சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக் கொண்டு ஒழுகுவர். மத்தவிலாசத்தில் வரும் காபாலி திருக்கச்சியேகம்பத்தை இடமாகக் கொண்டவன். திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயில் கபாலீச்சரம் எனப்படும். கபாலிகள் அங்கு வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். அங்கு ‘உருத்திர பல்கணத்தார்க்கு உணவு அட்டிடும்’ மாகேசுர பூசையைத் திருஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியுள்ளார். மாவிரதிகள், “தீக்கைபெற்று எலும்பு மாலையணிதல் முதலிய சரியை மேற்கொண்டொழுகுபவர்” இவர்கள் இருவரிடத்தும் சைவக்கோலம் சிறந்து விளங்குதல் பற்றித் திருஞான சம்பந்தர் சைவர் என்னும் சொல்லால் குறிப்பிட்டார்.
திருஞானசம்பந்தர் திருக்காளத்தி வழிபடச் சென்றபோது, அங்கு,
“பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவாரப் பதியில் உள்ளோர்
உடன்விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார்”
என்று தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். நெருங்கிய சடாமுடி தரித்த தவமுனிவர்களும் கபாலத்தைக் கையில் ஏந்திய கபாலியரும் இன்னும் பலவிதமான சிவக்கோலம் பூண்ட சைவர்களும் வேடர்கூட்டமும் பிள்ளையாரைத் திருக்காளத்தியில் வரவேற்றனராம்  .
வைதிக சைவத்தினராகிய திருஞானசம்பந்தருடைய திருமணத்திற்கு வந்த கூட்டத்தினரை இன்னார் இன்னார் எனக் கூறிவந்த சேக்கிழார் பெருமான்,
“அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்
நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர்
— — — குழாம் குழாம் ஆகி ஏக”    என்றார்.
அறுவகையாக விளங்கும் சைவத்தினராவார்: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். வைதிகப் புறத்தரான இவர்களும் உரிமையுடன் வைதிகத் தலைவரின் திருமணத்தில் திரள் திரளாகக் கலந்து கொண்டனரென்றால், திருஞானசம்பந்தர் இவர்களைத் தழுவிக்கொண்ட சிறப்பையும் இவர்கள் அவரைத் தலைவராகக் கொண்ட சிறப்பையும் உணர்தல் வேண்டும்.
shiva-devoteeதிருத்தொண்டர் புராணம் இவர்களுடைய திருவேடப் பொலிவை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சேக்கிழார் சிவபெருமானுடைய மாவிரதக் கோலத்தை மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், கபால பயிரவக்கோலத்தைச் சிறுத்தொண்டநாயனார் புராணத்திலும் சேக்கிழார் விரித்தோதினார். அத்துடன் இச்சமயநெறி வடநாட்டில் உள்ளது எனவும் விதந்தோதினார். இவர்கள் குழுக்களாக, இல்லறத்தாரை விட்டு விலகித் தனியாக வாழ்பவர்கள் என்பதும் பெரியபுராணத்திலிருந்து தெரிகின்றது.
திருமுறைகளில் சிவத்தை வருணிக்கும் பல தொடர்கள் இந்த அவைதிக சைவநெறியாளர்களின் தோற்றத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. “காடுடைய சுடலைப் பொடிபூசி”.; ”ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதி ரத்தினை ஏற்றுத், தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன்”( தோள்மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை உடையவன். களேபரம், கங்காளம் – எலும்புக்கூடு), “நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவ்வடி மார்பன்” (நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவன். பஞ்சவடி – மயிரினால் ஆன பூணூல்)
மயிரையும் எலும்பையும் அறியாமல் தீண்டிவிட்டாலே தீட்டாகிவிடும், தீட்டினை நீக்க உடனே நீராட வேண்டும் என்பது வைதிகநெறி. ஆனால் பரமேசுவரனே தீண்டத்தகாத சாம்பலையும், மயிரையும் எலும்பினையும் அணிந்துள்ளான் என்று திருமுறைகள் துதிக்கின்றன.
வைதிகமதம் தன்னுள் நாட்டார் வழிபாடுகளையும் பாமரவழிபாட்டையும் பழங்குடியினர் வழிபாட்டினையும்  உள்வாங்கித் தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. இவ்வாறு வைதிகமதத்தில் கலந்துவிட்டவர்கள் தங்களுடன் தாங்கள் இதுவரை வழிபட்டுவந்த வழிபாட்டுச் சின்னங்களையும் வைதிக வழிபாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவர். அவை புராணக் கதைகளாலும் வேறு மரபுகளாலும் வைதிகத் தன்மை பெற்றுவிடும். மாரியம்மன் மாகாளி முதலியசத்திவழிபாடு, ஐயப்ப சாத்த வழிபாடு, முனியப்பன் கருப்பராயன் வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு, மூத்தோர் முதலியன ஒருதெய்வ வைதிக வழிபாடாக மாற்றம் எய்திவிடும்.
சிலப்பதிகாரத்தில் மாசாத்தன் ஒருசிறுதெய்வம். கந்தபுராணம், மாசாத்தப்படலத்தில் சாத்தனைச் சிவனின் மகனாகப் படைத்து வைதிக தெய்வமாக உயர்த்துவிட்டது. அதற்கு வழிகோலியது, “சாத்தனை மகனாக் கொண்டாய்” என்னும் அப்பர்பெருமான் வாக்கு.
மாரியம்மன் என்று பாமரமக்கள் வழிபடும் பரசுராமனின் தாய் இரேணுகா தேவி , ‘ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ, தாதைதாய் இமவரைத் தைய லகுமால்” என்று சிவபெருமான் அருள் செய்து, வைதிகக் கடவுளின் நிலைக்கு உயர்த்தியருளினான். பரசுராமரால் உயிரெழுப்பப்பட்ட இரேணுகை கணவனை யிழந்தமையால் வருந்தி, பரசுராமர் சொல்லால் காஞ்சியை அடைந்து ஒரு இலிங்கம் தாபித்துப் பூசித்து, சிவனருளால், தான் உலகத்தில் சில தாழ்ந்த மக்களால் வழிபடும் தெய்வமாக இருந்து, அவர்கள் வேண்டியவற்றைக் கொடுக்கவும், தான் பூசித்த இலிங்கத்தில் அம்மையப்பர் எழுந்தருளியிருந்து யாவர்க்கும் போகமும் வீடும் அருளும் வரங்களைப் பெற்றும் வைதிகக் கடவுளானாள். இது காஞ்சிப்புராணத்தில் இரேணுகேச்சரப் படலத்தில் உள்ள செய்தி.
திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களும் பவுத்தர்களும் திருநீறணிந்து சைவர்கள் ஆயினர். அவர்களோடு அவர்கள் வழிபட்ட தீர்த்தங்கரர் வடிவங்களும் தியானபுத்த வடிவங்களும் சைவத்துக்கு வந்துவிட்டன. திருமுறைகளில் பிச்சாடனக் கோலம் பல இடங்களில் சுவையாகப் பாடப்பட்டுள்ளது. தேவாரத்தில்தான் முதன்முதல் பிச்சாடனக் கோலம் பாடப்பட்டுள்ளது. இது திகம்பரசமணர்கள் சைவசமயத்தைத் தழுவியதன் பயன்போலும். கிராமங்களில் முனியப்பன் என்றும் தன்னாசியப்பன் என்றும் வழிபடப்படும் உருவங்கள் பவுத்தர்கள் வைதிக மதத்தைத் தழுவியதால் வழிபாடு போலும்.
பழைமையான சிவன் கோவில்களூக்குச் சென்று பார்த்தோமானால், பிரகாரங்கள் தோறும் சிறுசிறு கோவில்கள் இருக்கும். சூரியன் ,சந்திரன், துர்க்கை, காளி, பைரவர், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் முதலிய வெவ்வேறு தெய்வங்களின் சிறு கோஷ்டங்கள் பிரகாரங்களில் அமைந்திருக்கும்.  பெரிய கோவில்களில் வழிபடும்போது பிரகாரத்தில் உள்ள கோட்டங்களில் வழிபட்ட பின்னரே மூலத்தானத்திற்குச் சென்று வழிபட வேண்டும் என்றொரு முறை உள்ளது. இது பலதெய்வ வழிபாடு அன்று. இது மூலத்தானத்தில் உள்ள பரம்பொருளின் பெருமையை உணர்த்துவது.
இசுலாமிய மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஒருவர் உங்கள் கோவில்களில் என்ன இத்தனை உட்கோவில்களும், தெய்வங்களும்? எனக் கேலியாக வினவினார். அதற்கு நான் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. குடிசையில் வாழ்பவனைக் குடிசைக் கதவைத் திறந்தவுடன் பார்த்துவிட முடியும். எங்கள் சுவாமி மகாராஜன், தியாகராஜன், பிரபஞ்சத்திற்கு ஏக சக்கிரவர்த்தி. அவனுடைய பரிபாலனத்துக்கேற்ற பரிவாரங்களும் மிகுதி. கூப்பிட்ட குரலுக்கு வந்து பணி கேட்க எங்கள் பெருமானுடைய திருமாளிகையில் அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். பெருமானுடைய ஊழியர்களின் அனுமதி பெற்றுப் பெருமானை தரிசிப்பதுதான் முறை.நாம் நினைத்தவுடன் அவரைச் சென்று கண்டுவிட முடியாது.   நவாபுகளின் அரண்மனைகள் ஏன் இவ்வளவு பெரியனவாக உள்ளன? நவாபுக்கு ஒரு அறை போதுமே அல்லவா? எனக் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்து விட்டு ஒன்றும் பேசவில்லை.
shivaperuman17சிறுதெய்வ வழிபாட்டினரை பண்பாட்டுயர்வு நிலைக்கு வைதிகம் இவ்வாறு அழைத்துச் செல்லுகின்றது. இது வைதிக நெறியின் பண்பு.  நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல்  அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்.
கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் வைதிகப் புறத்ததான பவுத்த, சமண மதங்களின் கடுந்தாக்கத்தை எதிர்கொள்ள சிவபரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் பல்வேறு சிவவழிபாட்டுநெறிகளையும் ஒன்று திரட்டி அவற்றுள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இன்றியமையாமை  இருந்தது. வழிபாட்டுநெறிமுறைகள், கொள்கை வேறுபாடுகள், சிவசின்னம் முதலியவற்றில் தோற்ற வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால் அனைத்து நெறிகளுக்கும் பொதுவாக இருந்த சிவபத்தி ஒன்றே  வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவற்றையும் வலுவுடன் ஒருங்கு பிணைத்தது. “எவரேனுந் தாமாக விலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உகந்தடிமைத் திறம்பேணி” எனும் அப்பர் பெருமான் வாக்கு, இவ்வாறு வழிபாட்டுப் பேதங்களைக் கடந்து அணைத்துக் கொள்ளும் போக்கினுக்குச் சான்று பகர்கின்றது. தலைமகனாகி வந்த தமிழ்ஞானசம்பந்தப் பிள்ளையார், திருத்தொண்டின் நெறிவாழ வந்த திருநாவுக்கரசு நாயனார் ஆகியோரின் அருந்தொண்டால் சைவம்  நிலைகொண்டபின், தமிழகம் சிவத்தை வழிபடும் அனைத்து நெறியாளர்களுக்கும் புகலிடமாக மாறியது. திருவாரூர் சிவராஜதானி ஆயிற்று. அதனை அப்பர் பெருமானின் திருவாரூர்த் திருப்பதிகங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வைதிக சைவம் – ஒற்றுமையில் வேற்றுமை

தென்னாட்டுக்குரிய சைவநெறி பாரம்பரிய சிந்தனை வளர்ச்சியில் தோன்றியது; தமிழ் இலக்கண இலக்கிய மொழிப்பண்பின் வலிமையுடையது. வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவும் தமிழகத்தில் மையம் கொண்டமையால் எது உண்மைச் சைவநெறி என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அறிஞர்கள் சிலர் வேதப் புறமான காபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம் ஆகிய நெறிகளே சைவம் எனக் கருதத் தலைப்பட்டனர். சடைமுடி தரித்தலும், சாம்பல் மெய் பூசுதலும் அக்கமணி அணிதலுமே சைவம் எனச்சிலர் கருதினர். சிலர் புலாலுண்ணாமை மட்டுமே சைவம் என்றனர். மற்றும் சிலர் சைவம் எந்தத் தத்துவ அடைப்படையுமில்லாத பெளராணிக மதம் எனக் குறுகிய பொருளில் புரிந்து கொண்டனர்.
சங்கரருடைய பிரம்மசூத்திர பாடியத்தில்தான் வடமொழி தத்துவ நூல்களில் முதன்முதலில் சைவத்தைப் பற்றிய குறிப்பு வருகின்றதென்றும் (பிரம்மசூத்திரம் II.2.37),  அதில் சைவர்கள் ‘ஈசுவர காரணர்கள்’ எனக் குறிக்கப்படுகின்றார்களென்றும் கூறப்படுகின்றது.
இராமாநுஜர் , தம்முடைய பாடியத்தில் காபாலிகம், காளாமுகம் முதலிய வேதப்புறச்சமயங்களே  சைவம் என்று கூறுகின்றது.
சங்கரரின் வரலாறு எழுதிய ஆனந்தகிரி என்பவர் சைவர்களின் பல பிரிவுகளையும் அவர்களின் ஆடை முதலிய புறத்தோற்றங்களின் வேறுபாடுகளையும் குறிப்பிடுவதோடு, காபாலிகர்களில் பிராமணக் காபாலிகர்கள், பிராமணரல்லாத காபாலிகள் என இரண்டு வகை உண்டு என்றும் கூறுகிறார்.
அதர்வண வேதம் உருத்திரனை வழிபடும் ‘விராட்டியர்’ எனப்படும் ஒருவகையினரைக் குறிப்பிடுகின்றது என்றும் அவர்களே சைவர்கள் என்றும் அவர்கள் சாதிப் பிரிவினைகளை அனுசரிக்காதவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இராமானுஜர், சைவர் என்போர் மயானத்தில் வசிப்பவர்கள் என்றும் மசான சாம்பலை மெய் முழுவதும் பூசிக் கொள்பவர்கள் என்றும் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்ணும் மாவிரதத்தை உடையோராதலின் ‘மாவிரதிகள்’ எனப்படுவர் என்றும் கூறுகிறார்.
வடமொழிப் பாடியங்களைப் பெரிதும் நம்பிய ஒருசார்புடை மேனாட்டறிஞர்கள் சிலர் சைவத்தைப் பண்பாடற்ற பழங்குடியினரின் வழிபாட்டு நெறி என்றும் ஆண்குறி வழிபாட்டு நெறி என்றும் காட்டத் தொடங்கினர். ஃபிரேசர் என்னும் அறிஞர் தம்முடைய ‘சமயங்கள் மற்றும் அறவியல் கலைக்களஞ்சிய’த்தில் தென்னாட்டில் சில புகழ்பெற்ற பழமையான சிவன்கோவில்களில் இரத்தப் பலியும் கட்குடிக்களியாட்டமும் ஆண்டுதோறும் அனுமதிக்கப் பெற்றன என்றும், அது பழங்குடியினரின் கோவில்களைப் பிராமணர்கள் பற்றிக் கொண்டபோது பிராமணருக்கும் பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி நிகழ்வது என்றும் பிராமணருக்கு உள்நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பு இருந்தது என்றும், அதற்கு நன்றியாகப் பிராமணர்கள் அந்தத் தலைவர்களுக்குச் சத்திரியத் தகுதியும் போலிச்சத்திரிய வம்சாவளியும் அளித்தனர் என்றும் எழுதினார்.  ஃபிரேசர், மேலும் , பிராமணர் அல்லாதவர்களும் சாதியில் விலக்கப் பெற்றவர்களும் சிவனை வழிபட்டார்களென்றும் சிவனுக்கு நரபலியிட்டார்களென்றும்  அத்தகைய வழிபாடு ஸ்ரீசைலத்தில் ( திருமுறைகளில் போற்றப்படும் திருப்பருப்பதம்) நடைபெற்றது என்றும் தெரிவிக்கின்றார். ஷ்ரீசைலம் காபாலிகசைவர்களின் தலைமையிடமாகக் கூறப்பட்டது.
புகழ்பெற்ற சிவபத்தர்களாகிய ஹரதத்தர், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர் முதலியோர் சமஸ்கிருத மூலங்களின் அடைப்படையில், குறிப்பாகப் பிரம்மசூத்திர விளக்கத்தின் வழி ஒருவகைச் சைவ சித்தாந்தத்தைப் படைத்தனர். இந்தச் சைவம் ஏகான்மவாதச் சாயை உடையதாகவே இருந்தது.
ஹரதத்தர் கி.பி. 879ல் வாழ்ந்தார். அவர் ஹரிஹரதாரதம்மியம், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகம் முதலிய நூல்களைச் சிவபரமாகச் செய்தார். இவை மாதவச் சிவஞான முனிவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தம்முடைய சிவஞான மாபாடியத்தில் மேற்கோளாகவும் காட்டப்படுகின்றன.
ஷ்ரீகண்டர் எனப்படும் நீலகண்ட சிவாச்சாரியார் கி.பி. 11 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபரமாக பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வரைந்தார். அது நீலகண்டபாடியம் என வழங்கப்படுவதாயிற்று. சங்கரர் இராமானுஜர் நிம்பர்கர் முதலியோருடைய கொள்கைகளை நீலகண்டர் தம்முடைய பாடியத்தில் கடுமையாகக் கண்டிக்கின்றார்.  சங்கரருடைய ஏகான்மவாத மாயாவாதக் கொள்கைகளால் அறிவு மயங்கிய மக்களை உண்மைச் சிவபத்தியின் மூலம் அறிவு தெளிவிக்கச் சிவனே நீலகண்டரை மண்ணுலகுக்கு அனுப்பியதாகவும் இவருடைய பாடியமே சுருதிகளுக்கு உண்மையான வியாக்கியானம் அளிக்கின்றதென்றும் கூறப்பட்டது. சுருதிகளின் அடிப்படையில் இவருடைய சித்தாந்தம் அமைந்ததால் இது ஸ்ரெளத சைவ சித்தாந்தம் எனப்பட்டது. இதற்கு சிவாத்துவித சைவம் என்றும் ஒரு பெயர் உண்டு.
ஏனோ நீலகண்டபாடியம் ஏனைய பாடியங்களான சங்கரபாடியம், இராமானுஜ பாடியம், மத்துவ பாடியம் போலப் பிரபலமடையவில்லை. சிவஞானபோதத்துக்குத் தமிழில் மாபாடியம் இயற்றியருளிய மாதவச் சிவஞானமுனிவர் நீலகண்டபாடியத்தின் சிலகருத்துக்களைத் தழுவிக்கொள்ளுகின்றார்.
மெய்கண்டதேவநாயனார் நீலகண்டருக்குச் சற்றுப்பின் பிறந்தவர். இவர் திருக்கயிலாய பரம்பரை புறச்சந்தானத்தின் முதல் ஆசாரியர். இவர் தம்முடைய சிவஞானபோதத்தில் சைவசித்தாந்தத்தை நிறுவினார். மெய்கண்டார் தம்முடைய கொள்கைகளை நிறுவும்போதே வேதத்திற்குப் புறமான உலகாயதம், நால்வகைப் பவுத்தம், சமணம், சாங்கியம் நையாயிகம் மீமாம்சை முதலியனவற்றையும் வேதமதங்களான மாயாவாதம் , ஏகான்மவாதம், பாஞ்சராத்திரம் முதலியனவற்றையும் பிரம்மசூத்திர வியாக்கியானங்களால் விளைந்த  தத்துவக்  குழப்பங்களையும் களைந்தார். பாடியக்காரர்களின் பேத, அபேத, பேதாபேத கொள்கைகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தார். அத்துவிதம் என்பதற்கு உண்மையான பொருள் இன்னதென்று உறுதிப்பட நிறுவினார். இந்திய தத்துவஞானத்திற்கு மெய்கண்டார் செய்த பேருதவி இது என்று போற்றப்படுகின்றது.
santhana-kuravar
சம்பிரதாயமாகச் சிவஞானபோதத்தை மெய்கண்டார் இரெளரவ ஆகமத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்று கூறப்பட்டாலும் உண்மை காணலுறுவாருக்கு அது மெய்கண்டாரின் மூலப்படைப்பே எனத் தெரியவரும். மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பட்டாலும், உயிர் உலகு இறை பற்றித் தமிழ் மக்களின் சிந்தனை முதிர்ச்சி, தமிழ்மொழி இலக்கண அமைப்பு, திருமுறைகள் முதலியன மூலங்களாக அமைந்தன. தமிழ் மூலங்களே சிவஞானபோதத்திற்கு அடைப்படையாக அமைந்ததால், இது நிறுவிய சைவசித்தாந்தம் , தென்னாட்டுச் சைவசித்தாந்தம் எனப்படுவதாயிற்று.
தென்னாட்டுச் சைவசித்தாந்தத்தின் மூலநூல்கள் தமிழிலேயே இருப்பதாலும் இந்நூல்கள் வடமொழியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படாததாலும், இச்சைவசித்தாந்தம் தமிழகத்திற்கு வெளியே அதிகம் அறியப்படாததாக உள்ளது.
தமிழ்மொழி அறிந்த மேனாட்டறிஞர்கள் சிலர் தமிழ் மூலநூல்களின் வழியே இச்சித்தாந்தத்தை அறிந்து , சைவசித்தாந்தம் தமிழ்ச்சிந்தனையின் அற்புதமான படைப்பு என்றனர்.(Choisest product of Tamil intellect)
டாக்டர்.ஜி.யூ போப்பு, ஹொய்சிங்டன், ஸ்கோமெரஸ் , டாக்டர் கார்டன் மேத்யூஸ் போன்ற மேனாட்டு அறிஞர்களும் திரு ஜே.எம்.நல்லுசாமிபிள்ளை, டாக்டர் வி.ஏ.தேவசேனாபதி, டாக்டர் கே சிவராமன், திரு நல்.முருகேசமுதலியார் முதலிய சான்றோர்கள் மேனாட்டு அறிஞர்கள் மற்றும் இந்தியத் தத்துவ அறிஞர்களின் கவனத்தைத்  தென்னாட்டுச் சைவசித்தாந்ததின் மீது ஈர்த்தனர்.
மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை மேனாட்டிற்கும் ஆங்கிலம் கற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும் பணியில் மேனாட்டு அறிஞர்களின் தொண்டு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும், பல குறைகளையும் கொண்டிருந்தது. அவர்கள் ஐரோப்பியர்களாகவும் கிறித்துவர்களாகவும் இருந்தமையால் சைவசம்பிரதாயத்துக்குள் நுழைய இயலாதவர்களாகவும் அவற்றை அறியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் எழுதிய நூல்களில் பிழைகளும் இருந்தன.
எடுத்துக்காட்டாக, ஜி.யூ.போப் தம்முடைய திருவாசக மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில், ‘சத்தி நிபாதம்’ என்பதை, ‘சத்தியின் நிறுத்தம்’(cessation of energy) என மொழிபெயர்த்தார். இது எத்தகைய பிழை என சித்தாந்தம் அறிந்தோர் அறிவர்.
இந்திய தத்துவ அறிஞர்களும் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை அறிவதற்குப் போதுமான கவனம் செலுத்தவில்லை.
டாக்டர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா அவர்கள் இந்தியத் தத்துவ வரலாறு பற்றி ஐந்து தொகுதிகள், ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், மெய்கண்டாரைப் பற்றியும் உமாபதிசிவத்தைக் குறித்தும் ஈரொரு பக்கங்களே காணப்படுகின்றன. உமாபதிசிவத்தின் பவுஷ்கராகம பாடியத்தைப் பற்றிய குறிப்பே இல்லை. வடமொழிப் பவுஷ்கர ஆகமத்தைப் பற்றிக் கூறும் இடத்தில் கூட உமாபதிசிவத்தைக் குறிப்பிட்டவில்லை. மாதவச் சிவஞானசுவாமிகளைப் பற்றியோ, சிவஞான மாபாடியத்தைப் பற்றியோ ஒரு குறிப்பும் கூட இல்லை. சிவஞான மாபாடியத்தைப் படிக்காமல் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தந்தைப் பற்றி ஒருவர் எப்படிப் பேச முடியும்?
தாஸ்குப்தாவின் புத்தகம் உலகம் முழுவதும் இந்தியத் தத்துவஞான வரலாற்றுக்குரிய பாடப் புத்தகமாகப் படிக்கப்படுகிறது. அவர் போப், ஸ்கொமெரஸ் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளிலிருந்து சைவத்தைக் குறித்துத் தம் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளார். தாஸ்குப்தாவின் இந்த நூல் தென்னகசைவத்தைப் பொறுத்த அளவில் பல குறைகளை உடையதாக எனக்குத் தெரிகின்றது. இவர்,  போப்  தம் மனம்போன போக்கில் பெரிதும் மிகைப்படுத்திச் சைவத்தைப் புகழ்ந்து விட்டார் என்றும் சைவம் ஏகான்மவாதம் சாங்கியம் நியாயம் ஆகியவற்றின் கலப்பு என்றும் போப் சைவத்தைப் பற்றிக் கூறிய மதிப்பீடுகள் மறுத்தற்குரியன என்றும் திருவாசகம் முதலியன வெறும் போற்றிப் பாடல்களே என்றும் மெய்ப்பொருட்குரிய கருத்துக்கள் புதியனவாக இந்தப் பத்தி நூல்களில் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துப்படி, சைவசமய ஆசாரியர்கள், சந்தான ஆசாரியர்கள், தமிழிலுள்ள அவர்களுடைய நூல்கள் அனைத்தும் பொருட்படுத்தத் தக்கன அல்ல. அதற்கு இவர் கூறும் காரணம் விந்தையானது. 14ஆம் நூற்றாண்டில் உமாபதிசிவத்திற்குச் சம காலத்தவரான, மாதவரின் ‘சர்வ தரிசன சங்கிரகம்’ போஜ அரசனின் ‘தத்துவப் பிரகாசம்’ எனும் நூல்களில் தமிழ்ச் சைவ மெய்கண்ட நூல்கள் கூறப்படவில்லையாம்.
12ஆம் நூற்றாண்டில் மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனைத் தத்துவ வரலாற்றாசிரியர்கள் கண்டு அதற்குரிய இடத்தை அளிக்கத் தவறினர்.
சங்கரர், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியோர் ‘பிரஸ்தானத் திரயம்’ எனப்படும் பிரமசூத்திரம், உபநிடதம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் கொள்கையை நிறுவினர். அவர்களைப் போல அல்லாமல், மெய்கண்டார், சம்பிரயமாக சைவசித்தாந்ததிற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பெற்றாலும்,    திருமுறைகள், தமிழிலக்கணம், பாரம்பரியத் தமிழ்ச்சிந்தனை ஆகியவற்றைப் பிரமாணமாகக் கொண்டு முதல் நூலாகச் சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். இந்நூல் மெய்கண்டாரின் சொந்தப் படைப்பே அன்றி மொழிபெயர்ப்பு அன்று.
பிரஸ்தானத் திரயத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்பன ஏற்கெனவே வழக்கில் உள்ளமையால்  வேதோபநிடதங்களிலும் பிற பாடியங்களிலும் உள்ள கலைச்சொற்களைத் தம்முடைய நூலில் ஆண்டு, தம்முடைய கோட்பாட்டினை இந்தியத் தத்துவ உலகில் விவாதிக்கத் தக்க களத்தை உருவாக்கினார். 1.திதி. 2.அந்தம். 3.ஆதி. 4.மாயா. 5.இயந்திரம். 6.தநு. 7.ஆன்மா. 8.அந்தக்கரணம்.9.சகசம். 10.அவத்தை. 11.காந்தம். 12.பசாசம் 13.சிவசத்து.14. சூனியம். 15. சத்து. 16.அசத்து. 17. குரு. 18. அரன். 19.பாசம் 20.பதி. 21.ஞானம். 22. ஏகன் முதலியன அத்தகைய சொற்கள்.
திரிசூலத்தில் அர்த்தநாரீஸ்வரர்: சோழர் கால பஞ்சலோக சிலை
திரிசூலத்தில் அர்த்தநாரீஸ்வரர்: சோழர் கால பஞ்சலோக சிலை
பிற அத்துவிதங்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும்வகையில் மெய்கண்டாரின் கோட்பாடு ‘ சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என அழைக்கப்படலாயிற்று. வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார்.
தாயுமானவ சுவாமிகள், மெய்கண்டாரே சுத்தமான அத்துவிதத்தைக் கண்டு கூறினார், பிறரெல்லாம் கூறிய அத்துவிதம் மலசம்பந்தமான அத்துவிதம்  என்னும் பொருளில்.
“பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ”
எனப் போற்றினார்.
‘அத்துவிதம்’ என்னும் வடசொல்லுக்கு நிகராகத் திருமுறைகள் ‘உடனாதல்’ என்னும் பதத்தைப் பயன்படுத்தின. மலத்தால் கட்டுண்ட ‘பெத்தநிலை’யாயினும், மலத்தினின்றும் விடுபட்ட ‘முத்திநிலை’யாயினும் எந்த நிலையிலும் ஆன்மா முதல்வனை விட்டு நீங்குவதில்ல. முதல்வன் எந்நிலையிலும் ஆன்மாவின் ’உடனாகவே’ இருக்கிறான். பெத்தநிலயில் உடனாதலைப் ‘பெத்தாத்துவிதம்’ என்றும் , முத்திநிலையில் உடனாதலைச் ‘சுத்தாத்துவிதம்’ என்றும் சைவசித்தாந்த நூல்கள் கூறும்.
உயிரின் இயல்பினை மணிவாசகர் ‘இரண்டுமிலித் தனியன்’ என்று கூறுவார். “இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்னும், சிவஞானபோதம். ஆன்மாவின் இவ்வியல்பினைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்றும் கூறுவர். கேவலநிலையில் மலத்தைச் சார்ந்து மலத்தின் வண்ணமாக ஆன்மா இருக்கும். சகலநிலையில் ஆன்மா கருவிகளோடு சார்ந்து கருவிகள் வண்ணமாக இருக்கும். சுத்தநிலையில் சிவத்தைச் சார்ந்து சிவத்தின் வண்ணமாக இருக்கும்.
கேவலம் சகலம் ஆகிய பெத்த நிலைகளில் சிவம் உயிருடன் கூடி நின்றே அவற்றை உய்விக்கின்றது. “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, ‘மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க’’ ‘யானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்’ முதலிய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டார் குறிக்கும்  முதல்வனின் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் ஆகியவற்றிற்குப் பிரமாணம் ஆகின்றன. இத்தகைய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்திற்கும் திருமுறைகளுக்கும் உள்ள அழுத்தமான உறவுகளைக் காட்டுவன.
திருஞானசம்பந்தர் காலத்தில் வேதநெறி , இந்திய வழிபாட்டு நெறிகளுக்கிடையே (Cults) வேற்றுமையில் ஒற்றுமை கண்டது. இது பத்திநெறியின் பயன்பாடு. மெய்கண்டார் தத்துவத்துறையில் எல்லா நெறிகளும் குழம்பிய நிலையில் உண்மையான வைதிக சைவநெறி இன்னதெனத் தெளிவு காண ஒற்றுமையில் நுண்ணிய வேற்றுமைகளைக் கண்டார். இது அறிவு நூலின் பயன்பாடு.
=================================
நன்றி: தமிழ் ஹிந்து டாட் காம் 
=================================

5 comments:

Srikanth said...

Dear Sir,
I saw your comment in my blog (Manoranjitam). I have stopped blogging for a while and just by chance came across and saw your comment. I am reading your articles in tamilhindu. I am much pleased that you came to my blog. Thank you. Please do write more on saivism - Your article in Tamilhindu was just crisp and fantastic. My best wishes to you.
Cheers,
Srikanth.

Ashwinji said...

Dear Shrikanth,

Thanks for the compliments on the article saiva sidhdhanta. In fact, its not my article in TamilHindu dot com. Its by Dr.K.N.Muthukumaraswamy an authority in Saiva Sidhdhantam. The entire credit goes to him. Please continue reading my blog and why don't you write on your blog? Please visit TamilHindu dot com. It has more interesting articles. You are bound to love them.
Thanks again.

hamaragana said...

dear adiyare vanakkam
you did a wonderful job for the followers of saivasm
i expect your next article..
cheers.
s.n.ganapathi. sankarankovil.

Ashwinji said...

வாருங்கள் திரு கணபதி. வணக்கம்.
நேரம் கிடைக்கும் போது www.tamilhindu.com வலைத்தளத்தினை தொடர்ந்து நோட்டமிடுங்கள். சைவம் மற்றும் சனாதன தர்மம் பற்றிய பல விழிப்புணர்வு கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் எனது வலைப்பூவில் வெளியான சைவம் பற்றிய செய்தியும் அதிலிருந்து தான் எடுத்தது. எனவே பாராட்டு பெற எனக்கு தகுதி இல்லை.
நன்றி.

Balu said...

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே. -திருமூலர்

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454