Monday, December 20, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - கண்டேன் அவர் திருப்பாதம்...

வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித பயண அனுபவங்கள்.

பாகம் இரண்டு:

அமர்நாத் புனித யாத்திரை.

முந்தைய  பகுதிகளைக் காண கீழே சொடுக்குங்கள்:

பகுதி 12.- 2. சங்கம் டாப் (மரண பயத்தை கடக்க வைக்கும் பாதை)


அமர்நாத் புனித பயணம்

பகுதி 4.  கண்டேன் அவர்  திருப்பாதம்; கண்டறியாதன கண்டேன்.

இதோ !  இதோ ! அமரநாதன் காட்சி அளிக்கிறார்

சுமார் பன்னிரண்டு முதல் பதினாலு அடி உயரமுள்ள பனி லிங்கம் எங்கள் விழிகளை நிறைக்கிறது. அமர்நாத்ஜி, அமரநாதன், அமரேஸ்வரர், போலேநாத் என்றெல்லாம் உலகெங்கிலும் உள்ள சிவனடியார்கள் போற்றிப் பரவும் அமரநாதர் காட்சிக்கு எளியனாய் எங்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்

உள்ளம் கவர் கள்வன்
அப்போது மணி நண்பகல் பன்னிரண்டரை இருக்கும். ''சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்'' என்று திருமூலர் கூறிய வரிகள் நினைவுக்கு வர நெஞ்சம் நெகிழ, நாத் தழுதழுக்க, ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்'' எனத் துவங்கும் பெரிய புராண ஆரம்ப பாடலை உச்சரித்து இறையவனை, எம்பிரானை, அகில புவன நாயகனை, பரமனைப் பாடிப் பரவினேன். ''வானாகி மண்ணாகி'' பாடலை பாடி நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வேண்டிக் கொண்டேன்.

இறையவன் தரிசனம் சில வினாடிகளே வாய்த்தது. எனினும் இத்துணை நாட்கள் பயணம் செய்து மணிக்கணக்கில் காத்திருந்து, சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து தன்னைக் காண வரும் அடியவர்களுக்கு எல்லையில்லா அருளை வாரி வழங்க வல்ல அன்பே சிவ மயமாக விளங்கும் இறையவனைக் கண்டதும் கண்கள் பனித்தன. மனம் நிறைந்து மகிழ்ச்சி பொங்கியது.

வையகத்தொரெல்லாம்  நன்றாக வாழவைக்க அருள் புரியும்படி அமரனாதனை வேண்டிக் கொண்டு பின்னால் ஆர்வத்துடன் காத்திருக்கும் எம்போன்ற அடியவர்களுக்கு வழிவிட்டு நகர்ந்து சென்றோம். சென்னையில் இருந்து புறப்படும்போது அன்பர்கள் என்னிடம் தந்திருந்த காணிக்கைகளோடு எனது காணிக்கையையும் சேர்த்து அங்கிருந்த உண்டியலில் செலுத்தினேன்.

தரிசனம் முடித்துத் திரும்பி வரும் அடியவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாய் வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். நான் இறையவனின் திருவுருவம் கண்ணில் படும்படியாக ஒரு இடத்தில் ஓரமாக நின்று கொண்டு அமரதத்துவத்தை விளக்கும் மந்திரமான 'மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை' உரக்க உச்சரித்தேன். நூற்றெட்டு முறை உச்சரித்தேன். அமரநாதனைக் காண வரும் அடியவர்களுக்கு மரணத்தை வெல்லும் உபாயத்தை அருளும்படி மனமுருக வேண்டினேன்

பக்தர்களை விரைந்து வெளியேறச் சொல்லும் பாதுகாப்பு அதிகாரி என்னிடம் வரும்போது மட்டும் கண்களை மூடிக் கொண்டு மந்திர ஜெபத்தில் ஈடுபட அவர் என்னை விட்டு விட்டு மற்றவர்களை வெளியேற்றிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் வந்து என் தோளில் தட்டி சீக்கிரமாக வெளியேறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

குகையில் இருந்து கீழிறங்கும் போது வழியில் காத்திருந்த திரு.பாண்டியன் தம்பதியருடன், நானும் நண்பர் கோவிந்த் மனோஹரும் இணைந்து கொண்டோம்

அருகாமையில் இருந்த ஒரு லங்கருக்குள் நுழைந்தோம். பசிப் பிணியை போக்க உதவும் லங்கரில் சூடான உணவு வகைகள் காத்திருந்தன. மனம் நிறைந்திருந்ததால் அவ்வளவாக பசி இல்லை எனினும், திரும்பி பால்டால் முகாமுக்கு செல்ல இரவு ஆறு அல்லது ஏழு மணி ஆகிவிடும் என்பதாலும், வழியில் தேநீர் தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதாலும் ரொட்டி, சப்ஜி, கொஞ்சம் அரிசி சோறு+தால் வகைகளை சாப்பிட்டோம்.

உடலில் களைப்பு மிகுதியாக இருக்க நாங்கள் திரும்பி மெதுவாக நடந்தோம். அப்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. சின்னஞ்சிறு பனிக் கட்டிகள் மழையாய் வர்ஷித்த போது இறையவனின் அருள் மழையாய் பெய்ததாய் நான் எண்ணிக் கொண்டேன். ஆனால் இந்த பனித்துண்டுகள் உடம்பில் ஊசியாய் குத்துவதால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பக்கத்தில் இருந்த கடைகளில் ஒதுங்கிக் கொண்டோம்.

அங்கிருந்த கடைக்காரர்கள், இந்த பனி மழை பெய்தால் மேலும் குளிர் அதிகரிக்கும் என்று பேசி கொண்டிருந்தார்கள். இதைப் போல் ஆலங்கட்டி மழை பொழிவது இந்த சீசனில் இதுவே முதல் முறை என்றும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் பனி மழை நின்றதும், நாங்கள் மேலும் நடந்து கடையில் வைத்திருந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு குதிரைகளை வாடகைக்குப் பேசச் சென்றோம்.

(யாத்திரை தொடரும்)

4 comments:

ஷைலஜா said...

நன்றாக எழுதி இருக்கிறிர்கள் ஜீ..பரவசம் படிக்க.

Ashwinji said...

பாராட்டுக்கு இதய நன்றி ஷைலஜாஜி.
தங்களைப் போன்ற சீனியர் பதிவர்களின் ஊக்கங்கள் எனக்கு பக்க பலமாக அமையும்.

Unknown said...

Sir, Please give your contact / mobile number. or call me 9380660840.

Unknown said...

sir,
please give your contact / mobile number. or call me 9380660840.