Wednesday, December 1, 2010

பாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். அமர்நாத் புனித யாத்திரை. 6. பால்டால் முகாமுக்கு வெளியே

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.



பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)


பாகம் இரண்டு - பகுதி 2:  அமர்நாத் புனித யாத்திரை (காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது)

பாகம் இரண்டு - பகுதி 3. அமர்நாத் புனித யாத்திரை: பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:

பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். (நாள்:10, ஜூலை, 2010 -அதிகாலை- Srinagar to Baltal basecamp ) 
பாகம் இரண்டு - பகுதி 5 : இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
பாகம் இரண்டு: அமர்நாத் புனித யாத்திரை.

பகுதி-6 பால்டால் முகாமுக்கு வெளியே.
(நாள்-10, ஜூலை, 2010 - மாலை மணி ஐந்து)

எங்கள் பேருந்துகள் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பால்டால் சென்று சேர்ந்துவிடும் என்று கூறப்பட்டதும அனைவரும் பரபரப்பானோம். 

பால்டால் முகாம் (Baltal camp) இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. அமர்நாத் குகைக்கு ஒரே நாளில் சென்று திரும்பி வர திட்டம் இடுவோருக்கு பால்டால் அண்மைக் காலங்களில் உருவாக்கப்பட்ட ஒரு குறுக்கு வழி. எனவே இந்த சிறிய பாதை வழியாக யாத்திரையை துவங்க பால்டால் முகாமுக்கு நிறைய பேர் வருகிறார்கள். 

பால்டால் வழி துவக்கப்படுவதற்கு முன்பு அமர்நாத் செல்லவேண்டும் எனில் ஸ்ரீநகரில் இருந்து பெஹல்காம் சென்று அங்கிருந்து சந்தன்வாரி, மகாகுனாஸ்,சீஷ்நாக், பஞ்சீதரணி, சங்கம் போன்ற கணவாய்ப் பாதைகள், மலைப் பாதைகள் வழியாக அமர்நாத் குகைக்கு செல்ல மூன்று நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். இப்போதும் இந்த பெரிய பாதை பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

கோடைக் காலங்களில் மட்டுமே பால்டால் பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இருக்கும். பனிக்காலங்களில் பால்டாலை பனி பல அடிகள் உயரத்துக்கு மூடிவிடும். சோனாமார்க் வரைதான்,  மக்கள் வாழும் குடியிருப்புகள் உள்ளன. சோனாமார்கில் இருந்து பதினைந்து கி.மீ தூரத்தில் பால்டால் இருக்கிறது. சிந்து சமவெளிப் பகுதியில் நீங்கள் இப்போது நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று தகவல் பலகை வைத்திருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீகம் பற்றிப் உயர்நிலைப் பள்ளிக்கூட பாடங்களில் படித்தது என் நினைவுக்கு வந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாக மனித நாகரீகம் தோன்றிப் புழங்கிய இடங்களில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே மனதிற்கு உற்சாகமாக இருந்தது. பால்டால் முகாமுக்கு மூன்று கி.மீ முன்னதாகவே நாங்கள் வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. எங்களுக்கு முன்பாக வந்திருந்த பஸ்களில் இருந்த அனைவரும் செய்வது போலவே நாங்கள் எங்களது எல்லா உடைமைகளையும் இறக்கி எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று பாதுகாப்புப் பரிசோதனைக்கு எங்களையும், உடைமைகளையும் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி வரிசையில் பரிசோதனை செய்தார்கள். வைஷ்ணோதேவியில் செய்தது போலவே பெட்டி படுக்கைகள் ஸ்கான் செய்யப்பட்டன. பின்னர் எங்களை தனியாக பரிசோதித்தார்கள். கத்தி போன்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுகிறார்கள்.அவைகள் பொது இடங்களில் அதுவும் அதிகமான ஜனங்கள் புழங்கும் இடங்களில்பாதுகாப்புக்கு உரித்தானவை அல்லவாம். பின்னர் எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பஸ்களில் மீண்டும் ஏறினோம்.

நாங்கள் சோதனைகளை முடித்துக் கொண்டு வருவதற்குள் நாங்கள் வந்த பஸ்களும் முழுமையாக சோதிக்கப்பட்டு விட்டன. பின்னர் மேலும் இரண்டு கி.மீ. தூரத்துக்கு சென்ற பின்னர் அனைத்து பஸ்களும் வாகனங்கள் நிறுத்தப்படும்இடத்துக்கு சென்று நின்றன.

எங்களது அமர்நாத் யாத்திரைக்கு தேவைப்படும் பொருட்கள் நிறைந்த பை, மற்றும் ஓரிரு நாள் தங்குவதற்கு முகாமுக்குத் தேவைப்படும் பொருட்கள் நிறைந்த மற்றொரு பை தவிர மற்றவற்றை நாங்கள் வந்த பஸ்சுக்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு முகாமை நோக்கி புறப்பட்டோம். முகாமை சுற்றியும் முள்வேலிகள் இட்டு, முழு ராணுவப் பாதுகாப்பு தரப் பட்டு இருந்தது. முகாமுக்குள் நுழையும் முன்பு மீண்டும் ஒருமுறை முழு உடல் மற்றும் உடைமை பரிசோதனை செய்யப்பட்டது.

நான் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு முதுகில் ஒரு பை, கையில் ஒரு பை என்று பரிசோதனை வரிசையில் போனபோது எல்லோரும் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பாதுகாப்பு அதிகாரி சிரித்துக் கொண்டே என்னை கிளியர் செய்தார். பைகள் மீண்டும் ஸ்கானர் மூலம் முழு பரிசோதனை செய்து முடிந்ததும் திரும்ப எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எங்களுக்கு என்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கி நாங்கள் நடந்தோம். இந்த கூடாரங்களுக்கு வாடகை தரவேண்டும். ஒரு நாளைக்கு, ஒரு கட்டிலுக்கு ரூபாய் நூறு வாடகை. ஒவ்வொரு ஸ்டீல் கட்டில் மேல் ஒரு பெட் போட்டு, இரண்டு தலையணைகள், ஒரு கனமான கம்பளிப் போர்வை, ஒரு ரஜாயி என்று தயாராக வைத்திருந்தார்கள். முப்பதுமணி நேரம் தொடர்ந்து பேருந்துக்குள் உட்கார்ந்த நிலையிலேயே பயணித்த எங்களுக்கு படுக்கையைப் பார்த்ததும் அதில் காலை நீட்டிப் படுக்க வேண்டும் போல ஆவலாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் குளியல் போடவேண்டும். ஏனெனில், பொழுது சாய சாய குளிர் நிறைய வீசும். எனவே எங்கள் அறுபத்தி இருவருக்கும் ஒதுக்கப்பட்ட டெண்டுகளில் போய் நாங்கள் கொண்டுவந்த பைகளை வைத்துவிட்டு, குளிக்கச் சென்றோம். முகாமுக்கு உள்ளே கதகதப்பாக இருந்தது. வெளியே வந்ததும் நல்ல குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. இந்த முகாம்கள் தற்காலிகமாக அமர்நாத் யாத்திரிகளுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் சாதாரண டெண்டுகள், டீலக்ஸ் டெண்டுகள், செமி-டீலக்ஸ் டெண்டுகள் என்று வகைவகையாக இருக்கின்றன. வசதி படைத்தோருக்காக ஃபைபர்-க்ளாசினால் (Fibre glass) நிர்மாணிக்கப்பட்ட பாத்ரூம், கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் இருவர் தங்கக்கூடிய குடியிருப்புகள் இருக்கின்றன.

பொது உபயோகிப்புக்கான குளியல் அறைகளும் பிளாஸ்டிக் தடுப்புகளால் கட்டப்பட்டிருக்கின்றன. சுடுநீர் வேண்டும் என்றால் ஒரு வாளிக்கு முப்பது ரூபாய் தந்தால் தருகிறார்கள். என்னதான் கொதிக்க கொதிக்க நீர் தந்தாலும் குளித்து முடிக்கு முன்னர் ஆறிப் போய் விடுகிறது. எனினும் நாங்களும் குளித்தோம் பேர்வழி என்று குளித்து விட்டு வந்தோம். கழிப்பறை வசதிகள் இதேபோல ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி இடங்களில் உள்ளன. கழிப்பறை வசதிகள் இலவசம். ஆனால் குழாயில் வரும் குளிர் நீரை கழுவப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு சுடுநீர் வேண்டுமானால் ஒரு குவளை (Mug) க்கு ஐந்து ரூபாய் நாம் தரவேண்டும்.

குளித்த உடன் அனைவரும் இரவு உணவு தேடி லங்கர்களுக்கு சென்றோம். ஏனெனில் டெண்டுகள் உள்ள பகுதிகளில் யாத்திரிகள் சமைக்க அனுமதி கிடையாது. ஆனால் எங்களைப் போன்ற யாத்திரிகளுக்காக இலவச உணவு மையங்கள் (Langar) பதினான்கு உள்ளன. இந்த மையங்களில் காலை மூன்று மணியில் இருந்து இரவு பதினொரு மணிவரை யாத்திரிகளுக்கு பலவிதமான உணவுகளை கண்ணெதிரே சமைத்து சுடச் சுட வழங்குகிறார்கள். இதற்கென்றே பல அமைப்புகள் நாடெங்கிலும் இருந்து இங்கே வந்து நிறைய சமூகப் பணியாளர்களுடன் தங்கி அமர்நாத் வரும் யாத்திரிகளுக்கு இலவசமாக சேவை செய்கிறார்கள். இந்த லங்கர்களைப் பற்றி விவரித்தால் அதற்கென தனி ஒரு பதிவே போட வேண்டி வரும் என்பதால் ஓரளவுக்கு சுருக்கமாகச் சொல்லி விட்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது இவைகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.

ஏனெனில் இரவு உறங்கி அதிகாலை எழுந்து பொழுது புலருவதற்குள் நாங்கள் இங்கிருந்து புறப்பட வேண்டும். முன்னிரவிலேயே அதற்கான பயண ஏற்பாடுகளை செய்து கொண்டு உறங்கச் செல்ல வேண்டும். நாம் முன்னதாக திட்டமிட்டால்தான், காலை ஒன்றரை மணிக்கே பல்லக்கு தூக்குபவர்கள் வந்து விடுவார்கள். பல்லக்கில் செல்ல யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஏற்பாடுகளை காசி செய்தார். நடந்து செல்பவர்கள் இரண்டு மணிக்கு புறப்பட வேண்டும். குதிரைகளில் செல்பவர்கள் இரண்டரை மணிக்கு புறப்பட வேண்டும். குறைந்த பட்சம் அதிகாலை மூன்று மணிக்குள் புறப்பட்டால் தான் அன்றிரவுக்குள் முகாமுக்கு திரும்பிவிட முடியும். 

பால்டாலில் இருந்த லங்கர்கள் புண்ணியத்தில் அமர்நாத் பயணம் முடித்து மீண்டும் பால்டாலில் இருந்து புறப்படும் வரை காசி அண்டு டீமுக்கு ஓய்வு. அதனால் அதிகாலை எங்களோடு அவர்களும் அமர்நாத் பயணம் வருகிறார்கள்.

நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்த அனுபவங்களுக்கு காரணகர்த்தராகிய நண்பர் கோவிந்த் மனோகர் தனது மனைவியோடு எனது கூடாரத்துக்கு எதிர்கூடாரத்தில் முகாமிட்டு இருந்தார். பல்லக்கு தூக்கிகளுடன் பேசி, அவரது மனைவியும், மற்ற பெண்களும் பல்லக்கில் செல்வது என்று ஏற்பாடு ஆயிற்று. மனோஹருக்கு வைஷ்ணோதேவி மலை ஏறியதில் முதுகு வலியும், கால் வலியும் இருந்தது. இவர் ஸ்பான்டிலைடிஸ் காரணமாக முன்பொரு முறை முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். மூக்குக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருபவர். 

அவர் என்னிடம் பேசும் போது, ''இப்போது எனக்கு இருக்கும் நிலையில் என்னால் காலையில் அமர்நாத் குகைக்கு உங்களுடன் வரமுடியுமா என்று தெரியவில்லை. எனவே நீங்கள் மற்ற நண்பர்களுடன் அமர்நாத் குகைக்கு போய்வாருங்கள். நான் முகாமில் இருந்து விடுகிறேன்,'' என்றார். எனக்கும் கால்கள் வலித்ததால் அமர்நாத் போகலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. கோவிந்த் மனோகர் இவ்வாறு சொன்னபோது, நானும் அவருக்குத் துணையாக முகாமிலேயே தங்கிவிடலாம் என்றுதான் எண்ணினேன். 

''சரி, நானும் உங்களோடு முகாமிலேயே இருந்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.

''என்ன சொல்றீங்க? நீங்கள் எவ்வளவு பிரயாசைப்பட்டு இந்த யாத்திரைக்கு வந்திருக்கிறீர்கள்? நானாவது ஏற்கனவே அமர்நாத் போயிருக்கிறேன். நீங்கள் கட்டாயம் போய் வாருங்கள்'' என்றார்.

வைஷ்ணோதேவியில் இருந்து பஸ்ஸில் வரும்போது, நானும் கோவிந்த மனோஹரும், கீழிருந்து மேலே  நடந்தே போய் திரும்பியும் நடந்தே வரலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். இப்போது போவதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்து விட்டது. உறங்குவதற்கு விடை பெறும் முன்னதாக, மனோகர் என்னிடம், ''சரி, இப்போ நாம்ப தூங்க போவோம். அதிகாலை எழுந்ததும் நிலைமைகளை அனுசரித்து விட்டு முடிவு செய்வோம். காலையிலும் களைப்பாக இருக்கும் பட்சத்தில், கீழிருந்து மேலே செல்ல குதிரையை பயன்படுத்துவோம். திரும்பி கீழே வருவதற்கு வேண்டுமானால் நடந்து வந்து விடுவோம் என்று சொன்னார்.  

இவ்வாறாக நாளைய பயண ஏற்பாடுகளை செய்து கொண்டு அவரவர் டெண்டுகளுக்குள் நாங்கள் படுக்கச் சென்ற போது மணி பத்தரை ஆகி விட்டது. புதிய இடம். கடுங்குளிர் நள்ளிரவில் தாக்கத் தொடங்கியது. இருக்கிற உல்லன் ஐட்டம்களை எல்லாம் அணிந்து கொண்ட பின்னர், கம்பளிபோர்வை, ரஜாயி என்று கையில் கிடைத்ததெல்லாம் போர்த்திக் கொண்டு படுத்தும் குளிர் கொஞ்சமும் குறைவதாகத் தெரியவில்லை. நான் இருந்த கூடாரத்துக்குள் என்னைச் சேர்ர்த்து நான்கு பேர் இருந்தோம். 

ஆனால் மற்ற நண்பர்கள் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க நான் மட்டும் நள்ளிரவில் ஆந்தை போல வி(மு)ழித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் இருக்கும் போது, சாதாரண சூழ்நிலைகளிலேயே எனக்கு இரவு உறக்கம் எளிதில் வந்து விடாது. புத்தகங்கள் படிப்பது, இணையத்தில் உலாவுவது என்று இரவு நேரங்களில் ஏதாவது செய்து கொண்டிருப்பேன். டெண்டில் இருந்த இரவு விளக்கொளி மங்கலாக இருந்தது. இல்லையெனில், ஸ்வாமி ராமா எழுதிய, Living with Himalayan Masters, புத்தகத்தைப் படித்திருப்பேன். ஏற்கனவே பல முறை படித்த புத்தகம் தான். ஆனால் திரும்ப திரும்ப படித்தாலும் அலுக்காத புத்தகம் இது. சென்னையில் இருந்து ரயிலில் டெல்லிக்கு வரும் போது தான் இந்தப் புத்தகத்தை என்னால் படிக்க முடிந்தது. அதற்கு பிறகு சரியான சமயம் வாய்க்கவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த நான் கொஞ்ச நேரத்தில் உறங்கிப் போனனேன். மீண்டும் நள்ளிரவில் மூச்சுத் திணறியதால் உறக்கம் கலைந்து விழித்து விட்டேன். 

பால்டால் கடல் மட்டத்தில் இருந்து ஒன்பதாயிரம் அடி உயரத்தில் உள்ள மலை அடிவாரம். காற்றில் பிராண வாயுவின் அடர்த்தி குறைந்திருக்கும். இந்த சமயங்களில் எனக்கு நேர்ந்தது போன்ற மூச்சு திணறல்கள் ஏற்படலாம் என அமர்நாத் பற்றிய அதிகாரபூர்வ இணைய தளத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு முன்பு படித்தது நினைவுக்கு வந்தது. எனது யோகா மாஸ்டரிடம் இது பற்றி கேட்ட போது, சில பிராணாயாம உத்திகளை சொல்லி அவற்றை கடைப்பிடியுங்கள் என்று சொல்லியமை நினைவுக்கு வந்தது.

படுக்கையிலேயே எழுந்து அமர்ந்து கொண்டேன். இறுக்கமாக அணிந்திருந்த உடைகள் அனைத்தையும் கழற்றி விட்டு, தொடர்ந்து அரை மணி நேரம் பிராணாயாமங்கள் செய்தேன். ஓரளவுக்கு திணறல் குறைந்த மாதிரி உணர்ந்தேன். மீண்டும் படுத்துக் கொண்டு உறங்க முயற்சி செய்தேன்.

கோவிந்த் மனோஹருக்கு ஏற்கனவே மூச்சு குழல் பிரச்சினை உண்டாயிற்றே. அவருக்கு என்ன நேர்ந்திருக்கும்? நாளை காலையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் காண போக போகிறோமா இல்லையா? இவ்வளவு தூரம் வந்து விட்டு சுவாமி தரிசனம் காணாமல் திரும்பிப் போவது எப்படி? அப்படியும் ஐந்தாயிரம் அடிகள் உயரே சென்று ஒருவேளை திணறல் ஏற்பட்டால் என்ன ஆகும்? என்றெல்லாம் பலவிதமான எண்ணங்கள் என் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தன. சரி. காலையில் கோவிந்த் மனோகர் புறப்படத் தயாராக இருந்தாலும் கூட(நள்ளிரவில் எனக்கு மூச்சுத் திணறிய நிலைமையை பார்க்கும் போது, அவர் புறப்படுவாரா என்பது சந்தேகமே) நீங்கள் போய் வாருங்கள், நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

எண்ணங்களின் சுழலில் கண்களை மூடிக் கொண்டு பொழுது விடிவதற்காக காத்திருந்தேன்.
(தொடரும்)

Sunday, November 28, 2010

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை. பகுதி 5 - இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி

பாகம் 2: - வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

அன்பு இறையடியார்களுக்கு இதய வணக்கம்.
இந்த வலைப்பூவில் இடது பக்கம் மேலே இருக்கும் ஒலி பட்டியை இயக்கி ''ஓம் நமசிவாய'' என்னும் பஞ்சாக்கர உச்சாடனத்தைக் கேட்டுக் கொண்டே இந்தப் பதிவைப் படிக்க அழைக்கிறேன். 

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..

முந்தைய பதிவுகளைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்.


பகுதி 12 வைஷ்ணோதேவி யாத்திரையின் நிறைவுப் பகுதி. (பாகம் ஒன்று நிறைவு)

பாகம் இரண்டு : பகுதி 1: அமர்நாத் புனித யாத்திரை (ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக பால்டால் அடிவார முகாமுக்கு)

பாகம் இரண்டு - பகுதி 2:  அமர்நாத் புனித யாத்திரை (காத்திருத்தல் ஒரு தொடர்கதையானது)

பாகம் இரண்டு - பகுதி 3. அமர்நாத் புனித யாத்திரை: பத்து மணி நேரப் பயணம் முப்பது மணி நேரமானது:
 
பாகம் இரண்டு: பகுதி-4பயணத்தில் கொஞ்சம் முன்னேற்றம். (நாள்:10, ஜூலை, 2010 -அதிகாலை- Srinagar to Baltal basecamp)  
 
பயணம் தொடர்கிறது....

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள். 

பாகம் இரண்டு: அமர்நாத் புனித யாத்திரை..
 
5. இறைவன் அருளிய ஆன்மீகப் பயிற்சி.
பயண நாள்: 10, ஜூலை, 2010 (நண்பகல் மணி பன்னிரண்டு) 

பால்டால் முகாமை நோக்கி நாங்கள் பயணிக்கும் போது, இடையில் வந்த சோனாமார்க் (Sonamarg) ஒரு சிறந்த சுற்றுலா தலம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனி மூடிக் கிடக்கும் சோனாமார்கைக் காணக் கண் கோடி வேண்டும் என்கிறார்கள். இப்போதும் அங்கே அழகு கொட்டிக் கிடந்ததைக் கண்டோம். சோனாமார்கில் நிறைய பயணியர் தங்குமிடங்கள் உள்ளன.

முற்பகல் சுமார் பதினொரு மணியளவில் பால்டால் முகாமுக்கு போய் விடலாம் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நேற்று காலையில் காத்ராவில் இருந்து புறப்பட்டது முதல் எல்லோரும் சோர்வாக இருந்தோம்.

அனைவரும் குளித்தாக வேண்டும். அதற்கான வசதி பால்டாலில் உள்ள முகாமில் தான் கிடைக்கும். ஆனால் நாங்கள் பால்டால் முகாமுக்குள் செல்லும் நேரம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. வழிதோறும் நாங்கள் செல்லும் வண்டிகள் காக்க வைக்கப்பட்டன.

எதிர்சாரி வண்டிகள் போன பிறகே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். அவந்திபோராவில் இருந்து புறப்படும் சமயம் மதிய உணவுக்கு பால்டாலில் உள்ள லங்கர்களில் (இங்கே அமர்நாத் யாத்ரிகளுக்கு இலவசமாக உணவு கிடைக்கும்) உணவருந்திக் கொள்ளலாம் என்று கணக்கிட்டிருந்த எங்களுக்கு பால்டால் சென்று சேரும் நேரம் கணக்கின்றி நீண்டு கொண்டே போனது.

இப்படியே மாலை ஐந்து மணிவரை பால்டால் எங்கள் கண்ணுக்கு தென்படவே இல்லை. வைஷ்ணோதேவி அனுபவங்களைப் போல அமர்நாத் பயண அனுபவம் அமையாது என்பது அப்போதுதான் எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. ஆக பத்து மணி நேரத்தில் முகாமுக்கு வந்து குளித்து, உணவுண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் யாத்திரைக்குப் புறப்படலாம் என்று திட்டமிட்ட எங்கள் பயணம் முப்பது மணி நேரம்எடுத்துக் கொண்டது.

நீண்ட நேரம் பஸ்ஸில் அமர்ந்து கொண்டு வந்ததில் கால்கள் வீங்கி இருந்தன. ஏற்கனவே வைஷ்ணோதேவி மலையில் ஏறி இறங்கியதில் கால்கள் கொஞ்சம் ஸ்டிஃப்பாக (stiff) இருந்தன. இதோடு பஸ் பயணம் நெடும்பயணம் ஆனதும சேர்ந்து கொண்டது.

இனிமேல் திட்டமிடுதலும், செயல்படுத்துதலும் எங்கள் கையில் இல்லை என்பதை உணர்ந்தோம். ஆன்மீக சாதனைகளில் அர்ப்பணிப்பு மனப்பான்மையைப் பற்றி தானே ஞானிகள் சிலாக்கியமாக பேசுகிறார்கள்? சிவன் எங்களுக்கு நாங்கள் அறியாமலேயே அந்த பயிற்சியை அன்போடு அளித்துக் கொண்டிருந்தார். இன்றைய தினம் நமது நம்பிக்கையில் உள்ளது. நாளை நடப்பதோ நாம் நம்பும் இறைவனிடம் உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

(தொடரும்)