Friday, August 13, 2010

2. & 3. அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை (2010) பயண அனுபவங்கள்...





பகுதி: 1 
பகுதி: 2 


நான் சென்ற யாத்திரையின் போது நிகழ்ந்த எல்லா அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைதான்.ஆனால் எல்லாவற்றையுமே எழுத நேரம் இல்லைஅதற்கேற்ற சக்தியும் இல்லை.அன்பர்கள் அனைவருமே ஆக்ரா (தாஜ்மஹால்ஆக்ரா கோட்டை)மதுராபுதுதில்லியில் உள்ள அக்ஷர்தாம்,  ஹரித்வார்,  ரிஷிகேஷ் போன்ற இடங்களை பற்றி நிறைய படித்தோ அல்லது பயணம் செய்து இருப்பார்கள் என்பதினால் இந்த இடங்களை பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்கிட விரும்பவில்லை. 

எனவே அடுத்து வரும் தொடர்களில்  வைஷ்ணோதேவிஅமர்நாத் இரு பயணங்களை பற்றி மட்டுமே எழுத உள்ளேன்.

காரணம் தமிழில் அதற்கான பதிவுகள் இல்லை என்பதே. பயணம் துவங்குமுன்னர் கூகிளாரிடம் தமிழில் அமர்நாத் மற்றும் வைஷ்நோதேவி புனிதயாத்திரை குறித்த  பதிவுகளை தரச் சொல்லி உசாவிய போதுவைஷ்நோதேவியைப் பற்றிய ஓரிரு பதிவுகள் தவிரஅமர்நாத் பற்றி சைவம் டாட் ஆர்க் வலைதளத்தில் ஆங்கிலத்தில் இருந்த சில விவரங்களைத் தவிர தாய்த் தமிழில் எனக்கு அதிக செய்திகள் கிடைக்கவில்லை. 

பயணக் கட்டுரைகளை எழுதுவதில் பிதாமஹியாக விளங்கும் கீதாஜி போன்றோரின் எழுத்துத் திறமைபொறுமை போன்றவை எனக்கு இல்லை. எனினும்எதிர்காலத்தில் அமர்நாத்வைஷ்ணோதேவி செல்ல விரும்பும் அன்பர்களுக்கான ஒரு எளிய குறிப்பாக இதனை வெளியிடலாமே என்று எண்ணியே எழுத துணிந்தேன்.

தொடர்ந்து வரப் போகும் அடுத்த மூன்று பதிவுகளில் ஜம்மு & காஷ்மீர் பற்றிய (ஆன்மிகம் தொடர்பான) சுவாரசியமான சில செய்திகளையும்வைஷ்ணோதேவி யாத்திரை அனுபவங்கள் குறித்தும் எழுதிவிட்டு மீண்டும் அமர்நாத் பற்றி எழுதலாம் என இருக்கிறேன். 

நான் என்னுடன் காமிரா கொண்டு செல்லவில்லை.எனினும் யாத்திரையில் கலந்து கொண்ட பெருவாரியான எனது நண்பர்கள் நிறைய புகைப்படங்களையும்காணொளிகளையும் எடுத்துள்ளார்கள்

இனி வரும் தொடர்களில் தேர்ந்தெடுத்த புகைப்படங்கள்காணொளிகள் பதிவிற்குத் தகுந்த இடங்களில் வெளியிடுவேன். புகைப்படங்களையும், காணொளிகளையும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அனுமதித்த நண்பர்கள் திருவாளர்கள், கோவிந்த் மனோகர், ஜீகேசுவாமி, உஷாஜி, கண்ணன், மகேஷ் கொண்டல், சுதர்ஷன் பிரசாத், பாண்டியன், ரமேஷ் ஆகிய அனைவருக்கும் எனது இனிய இதய நன்றிகளைப் பாராட்டி மகிழ்கிறேன்.

உங்கள் எல்லோரது பொறுமையைச் சோதிக்க என்னை தொடர்ந்து அனுமதிப்பதற்கு மீண்டும் உங்களை பணிந்து வணங்குகிறேன். இந்த அனுபவப் பகிர்வுகள் பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன்.குறைகளை தயங்காது சுட்டிக் காட்டினால் அவைகளை நிவர்த்தி செய்யலாம். 

ஓ. தொடருக்கான முன்னுரையே தொடரை விட நீண்டு விட்டது :))) வாருங்கள். 

தொடருக்குள் செல்லுவோம். 

ஓம் நமசிவாய.


அமர்நாத்வைஷ்ணோதேவி யாத்திரை (2010) 
பயண அனுபவங்கள்...

பகுதி மூன்று

அங்கிங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் 
ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்த சிவமே....
                                                                       (தாயுமானவர்)

பயணத்துக்கு தயாராகுதல்: யாத்திரை செல்லுவோர் என்ன என்ன பொருட்களை தயாராக கைவசம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுவிரிவாக பார்க்கு முன்னர் அமர்நாத் குகைக்கு எந்தெந்த வழிகளில் செல்லலாம் என்பதை பார்த்து விடுவோம். பயணிக்கும் சூழ்நிலைகள் பற்றி அறிந்து கொண்டால் மனதும்உடலும் அதற்கேற்ற நிலையில் உள்ளதா என்று புரிந்து கொண்டு செயல்படலாம்.

கீழே தந்துள்ள வரைபடம் அமர்நாத் குகைக்கு செல்ல இரண்டு வழிகளை விவரிக்கிறது.

amarnath_route_map_phalgam_baltal.gif


முதலில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்றபின்னர் அங்கிருந்து அமர்நாத் குகைக்கு செல்ல இரு வழிகள் உள்ளன.
  • ஸ்ரீநகரில் இருந்து பெஹல்காம் சென்று அங்கிருந்துசந்தன்வாரி வழியாக 48 கி.மீ. பயணித்து புனித யாத்திரை துவங்குதல் ஒரு வழி.
  • மற்றொரு வழி ஸ்ரீநகரில் இருந்து சோனாமார்க் வழியாக பால்டால் சென்று அங்கிருந்து 14 கி.மீ பயணித்து அமர்நாத் செல்லுதல். 
அருள்மிகு அமரநாதன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பனி லிங்க வடிவில் காட்சி தந்து அருள் பாலிக்கும் குகையும்குகைக்கு செல்லும் பாதைகளும் ஜூலைஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே திறந்திருக்கும்.திறந்திருக்கும் என்ற சொல்லுக்கு வழிகளில், குகையில் கதவுகள்பூட்டுகள் போட்டு மூடியிருக்கும் என்று பொருள் கொள்ள வேண்டாம். 

இமயத்தின் இந்த பகுதிகளில் வருடத்தின் மற்ற எல்லா நாட்களிலும் உறைபனி மூடியிருக்கும். ஜூன்ஜூலை மாதங்களில் கோடைக் காலம் என்பதினால் இந்த இருமாதங்களில் மட்டுமே மனிதர்கள் சென்று வர ஏதுவாக இயற்கை அன்னை பாதைகளையும்குகையினையும் திறந்து வைத்திருக்கிறாள். 

இங்கிருந்து கார்கில்லேலடாக் பகுதிகள் மிகவும் பக்கம். இந்த இடங்கள்பாகிஸ்தான் நாட்டின் எல்லையோர பகுதி என்பதால் இந்திய ராணுவம் மிகவும் உன்னிப்பாகவும்,  பரபரப்பாகவும்யாத்ரீகர்களுக்கு எந்தவித தொல்லையும் தராமல் தேனீக்கள் போல சுறுசுறுப்புடன் இரவும்,  பகலும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாம். இவர்கள் வருடம் முன்னூற்று அறுபத்து நான்கு நாட்களும் எல்லைப் புறங்களில் காவல் இருந்து அந்நிய சக்திகள் ஊடுருவி நமது நாட்டுக்கு எந்த இடையூறும் விளைவிக்காத அளவுக்கு காவல் பணியை செம்மையாக செய்து வருகிறார்கள்.

நமது சௌகரியத்துக்காக பெஹல்காம் (Pehalgam) வழியை பெரிய பாதை,பால்டால் வழியை சிறிய பாதை என்றும் குறிப்பிடலாம். யாத்திரிகள் ஒரே நாளில் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பிட சிறிய பாதை ஏற்றது. பால்டால் (Baltal) அடிவார முகாமில் இருந்து அதிகாலை மூன்று மணிக்கு புறப்பட்டால்பரமன் அமரநாதனை கண்ணாரத் தரிசித்து விட்டு அன்றிரவே எட்டு மணிக்குள் பால்டால் முகாமுக்கு திரும்பி விடலாம்.

இந்த சிறிய பாதையில் மிகச் செங்குத்தானகரடு முரடானகுறுகலானபாதைகளின் வழியாக பயணித்தாக வேண்டும். நடந்து செல்வோர்குதிரை மேல் பயணிப்போர்பல்லக்கில் பயணிப்போர்இதே வகையில் இறங்கி வருவோர் எல்லோரும் ஒரே சமயத்தில் இந்த பாதையில் பயணித்தாக வேண்டும். இது கோடைக்காலம் என்பதினால் காஷ்மீரின் இந்த பகுதியில் மூன்று மணிக்கெல்லாம் பொழுது புலர்ந்து விடுகிறது. அந்தி மாலை பொழுது இரவு எட்டு மணிக்குத்தான்  துவங்குகிறது. கோடைக் காலமாக இருப்பினும் வெயில்திடீர் பனிக்கட்டி மழைபெருமழை போன்ற எதிர்பாராத பருவ மாற்றங்களை செல்லும் வழியில் சந்திக்க நேரிடும்.  

பெரிய பாதையான பெஹல்காமிலிருந்துசந்தன்வாரி (Chandanwari Base Camp)அடிவார முகாம் சென்று அங்கிருந்து பிஸுடாப்மகாகுனாஸ் சிகரம்,பஞ்சீதரணி வழியாக நடந்து செல்வோரும்குதிரையில் செல்வோரும்,பல்லக்கில் செல்வோரும் மூன்று நாட்கள் பயணித்து அமர்நாத் குகையை அடையலாம். இந்த வழியில் பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் அகலமாக இருக்கும்,  இரவு நேரங்களில் இடைவழியில் தங்கிக் கொள்ள முகாம்கள்உண்டு. 

பெரிய பாதை எனினும்சிறிய பாதை எனினும் எல்லா வழிகளிலும் அமைந்துள்ள அடிவார முகாம்களில் அமர்நாத் தேவஸ்தான நிர்வாகமும்,பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் யாத்ரீகர்கள் வசதிக்காக நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். தங்குவதற்கான டெண்டுகள்கம்பளி போர்வைகள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்துள்ள இறைபணித் தொண்டு நிறுவனத்தினர் தாங்கள் அமைத்துள்ள லங்கர்களில் (இலவச உணவகங்கள) தரமான... சுவையான.. மிகவும் அருமையான உணவுகளைச்  சுடச்சுடதயாரித்து  உடனுக்குடன் அவற்றை யாத்திரிக்ளை பயபக்தியுடன் பணிந்து வணங்கி வரவேற்று, இதய பூர்வமான விருந்தோம்பல் உணர்வுடனும் தாயன்புடனும் பரிமாறுகிறார்கள். மேலும்மருத்துவ உதவி மையங்கள்,கழிப்பிடம்குளியலறை போன்ற ஏற்பாடுகள் எல்லாமே மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன.

பெரிய பாதையாக இருப்பினும்சிறிய பாதையாக இருப்பினும்பயணம் செய்வோர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது என்ன என்ன பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்:-
  • முதுகுப் புறம் மாட்டிக் கொள்ள ஏற்ற வகையிலான (நீர் புக இயலாத) ஒரு பை (Waterproof  Backbag). 
  • இமயமலையின் இந்த பகுதியில் கோடைக்காலம் நிலவினாலும்வெப்பநிலை எதிர்பாராத விதமாக மைனஸ் ஐந்து டிகிரி வரை குறையலாம். எனவே அதை சமாளிக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். காதுகளில் பஞ்சு வைத்த பின்னர் கம்பளியில் ஆனமுகத்தை மூடும் (குரங்குக்) குல்லா அணிதல் சிறந்தது. நல்ல தரம் வாய்ந்த கம்பளி ஸ்வெட்டர் அணிந்து அதற்கு மேலே ஜெர்கின் (jerkins) அல்லது வின்ட்சீட்டர்(wind cheater)  அணிந்து கொள்ளுதல் மிகவும் பாதுகாப்பானது. காதுகள்கழுத்துமார்புப் பகுதிகளை குளிரில் இருந்து காத்துக் கொள்ள இது அவசியம். இல்லாவிடில் உறைபனிக் காற்றினால் பாதிக்கப் பட்டு முகவாதம் (Bells Palsi-Facial Paralysis) என்று அழைக்கப்படும் முகம்தாடை விறைத்து செயல் இழக்கும் நிலை ஏற்படலாம். 
  • பெண்களுக்கு ஏற்ற உடை சல்வார் கமீஸ் அல்லது ட்ராக்ஸ் சூட்ஸ்,பேன்ட்-ஷர்ட் போன்றவை தான். புடவை அணிந்து அமர்நாத பயணம் செய்வது பல வகைகளில் இடையூறாக இருக்கும். குதிரை மீது அமர்ந்து பயணிப்பவர்கள் குதிரை மேலே ஏறும் போதும்,இறங்கும் போதும் புடவை பயனுள்ளதாக இருக்காது. மேலும் பனிப்பாறைகளில் நடக்க நேரிடும் போது கால் தடுக்கி விழுந்து விடவும் நேரிடலாம் என்பதால் தாய்மார்கள் புடவை அணிந்து பயணிப்பதை தவிர்க்கலாம். அமர்நாத பயணம் பாதுகாப்பாக அமையவும்மனசுக்கு மலரும் நினைவுகளை தந்திடவும்சுயபாதுகாப்பிற்கு முதலிடம் தருதல் புத்திசாலித்தனமானது.
  • இடுப்புக்கு கீழே ட்ராக்ஸ் அணிந்துகம்பளி காலுறைகளை அணிந்த பின்னர் மலை ஏறுவோர் பயன்படுத்தும் தரமான முழுக்காலணிகளை(trekkers' shoes-spike shoes, etc.) அணியுங்கள். பாதை குண்டும் குழியுமாகஇருக்கும். மேலும் பனி படர்ந்த பாதைகளில் நடக்க வேண்டி வரும் போது சறுக்கிவிடாமல் இருக்க இவை பெரிதும் உதவும். பல ஆயிரம் அடி உயரத்துக்கு செங்குத்தாக நம்மை அழைத்துச் செல்லும் அமர்நாத் மலைப்பயணத்தில் சறுக்கி விழுதல்,  பல சமயங்களில் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • கம்பளி (அல்லது நீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்ட) கையுறைகள்.
  • கீழ்ப்பகுதியில் கூரான இரும்பு முனையுடன் கூடிய கைத்தடி.
  •  ஒரு பாட்டிலில் குடிக்க தேவையான தண்ணீர்.
  • பிஸ்கட்டுகள்உலர்ந்த பழங்கள் (திராட்சைஅத்தி போன்றவை),முந்திரிஅக்ரூட்பாதம்பிஸ்தா வகைகள்.
  • களைப்பு ஏற்படும் போது உடனடி புத்துணர்வு பெற குளூகோஸ் ஒரு பாக்கெட்.
  • எதிர்பாராத சமயத்தில் மழை வந்தால் எதிர் கொள்ள ஒரு சிறிய குடைமழைக் கோட்டுமழைக் குல்லா.
  • தலை வலிஜூரம்வயிற்றுப் போக்குஅஜீரணம்உடல் சோர்வு,வாந்திமயக்கம்உடல் நோவு போன்றவைகளை சமாளிக்க தகுந்த மாத்திரைகள்விக்ஸ்/அமிர்தாஞ்சன் தைலம் அல்லது மூவ் ஸ்ப்ரே (spray) போன்றவை. ஏற்கனவே ஏதேனும் குறிப்பிட்ட நோய்கள் பாதிப்பு இருப்பின்நாம் அமர்நாத் செல்லப்போவதை மருத்துவரிடம்தெரிவித்து அதற்கேற்ற மருந்துகள் வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
  • டிஸ்யூ காகிதங்கள், சிறிய டவல்கள், ஓரிரு கைக்குட்டைகள்,லைப்பாய் சானிடைசர் (lifebuoy sanitiser liquid) திரவம்போன்றவைகள் சொந்த சுகாதாரத்திற்காக வைத்திருத்தல் அவசியம். 
  • குளிர் காற்று மட்டுமின்றிகுதிரைகள் இடைவிட்டது நடப்பதால் கிளம்பும்தூசு மற்றும் மண்புழுதிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள மூக்கு கவசம் மிகவும் அவசியம்.
  • தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இரவு அமர்நாத் குகைப்பகுதியில் தங்க நேரிட்டால் அதற்கேற்ற மாற்றுடை ஒரு ஜோடி இருப்பது நல்லது. பயணத்தின் இடையில் பலத்த மழை பெய்து உடைகள் நனைந்து போனால் கடுங்குளிரில் நனைந்த உடையுடன் பயணத்தை தொடர இயலாமல் போகும். அப்போது மாற்றுடை ஆபத் பாந்தவனாய் காப்பாற்றும்.
  • விலையுயர்ந்த நகைகள்ஆடம்பரமான பொருட்கள், மலை மேல் சென்று திரும்பி வரத் தேவைக்கு மேல் அதிகமாக பணம்போன்றவைகளை அமர்நாத பயணத்தின் போது உடன் கொண்டு செல்ல வேண்டாம். பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பயணிக்கும் போது இந்த உடைமைகள் நமது உயிருக்கு ஆபத்து விளைவிப்பனவாக மாற்றி விடும். எனவே கவனம் தேவை.
  • பளிச் என்று ஒளிரக் கூடிய டார்ச் விளக்கு ஒன்றை தயாராகவைத்திருங்கள்பகல் வேலைகளில் கூட சில சமயங்களில் கருமேக மூட்டம் அல்லது பனிமூட்டம் ஏற்பட்டால் பாதை தெளிவாக தெரியாமல் போகும் போது கைவிளக்கு காப்பாற்றும். சில நேரம் திரும்பி வரும் போது சீக்கிரமாகவே இருட்டி விடக்கூடும். சார்ஜர் பாட்டரி கொண்ட டார்ச் லைட்டுகள் சமயத்தில் வேலை செய்யாது கழுத்தறுத்து விடும் என்பதினால் செல்கள் மூலம் இயங்கக் கூடிய டார்ச் விளக்குகளையே பயன் படுத்துங்கள். கைவசம் ஒரு செட் ஸ்பேர் பாட்டரி செல்களை வைத்திருங்கள்.
  • மிக முக்கியமான செய்தி: மலை மேல் பயணிக்க துவங்குமுன்மறக்காமல் உங்கள் சட்டை பாக்கெட்டில் யாத்திரை பெர்மிட்,குடியிருக்கும் வீட்டு முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்றவட்ட்ரை பத்திரப்படுத்தி வைக்கவும். மேலும் நமக்கு மிகவும் வேண்டிய குடும்ப அங்கத்தினர்உறவினர்,நண்பர்கள் போன்றவர்களில் போன் எண்கள்முகவரி அடங்கிய ஒரு காகிதமும் உங்கள் உடனே இருக்கட்டும். யாத்திரையின் போது உங்களோடு சேர்ந்து வந்து உடன் பயணிப்போரின் பெயர்முகவரி,போன் எண்கள் அடங்கிய காகிதமும் உடன் இருக்கட்டும். சிவன் அருளால் எல்லாம் நல்ல படியே நிகழும் எனினும்வினைப்பயன் காரணமாக நிகழும் அசம்பாவிதங்களின் போது இந்த முகவரிகள் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
  • இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரிகளின் வசதிக்காக ஒரு சேவையைJ&K BSNL அறிமுகப் படுத்தியுள்ளது. யாத்ரா பெர்மிட்மற்றும் இல்ல முகவரிஅடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒருமாதம் செல்லுபடியாகக் கூடிய ப்ரீ பைடு சிம் கார்டுகளை வழங்குகிறது. J&Kமாநிலம் முழுமையும் ப்ரீ பெய்டு சிம் கார்டுகளை அரசு செயல் இழக்கச் செய்துள்ளது. இந்த சூழ் நிலையில் போஸ்ட் பெய்டு சிம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இன்-கமிங்அவுட்-கோயிங் அழைப்பு வசதிகளை பெறமுடியும். இந்த சலுகையைப் பற்றி விரிவானவிளம்பரங்கள் இல்லாததினால் நாங்கள் இந்த சலுகையை பெற இயலாமல் போனது. வரும் ஆண்டுகளில் பயணம் செய்பவர்கள் இதற்கென தயாராக டாகுமெண்டுகளை கையோடு செல்லவும். யாத்த்ரிகளுக்கான சிறப்பு சிம் கார்டுகளை ஜம்மு ரயில் நிலைய வாசலில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினர் தருகிறார்கள். இந்த இணைப்பின் சிறப்பு அம்சம் ஒன்று என்ன எனில், அமர்நாத் குகைபகுதிகளில் போஸ்ட் பெய்டு இணைப்புகளும் கூட தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த இணைப்புகள் செயல்படும்.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல உடல்நல்ல மனம் இவைமிகவும் அவசியம். நீண்ட பயணம்வசதிக் குறைவுகளை அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கு கொண்டோருக்கு பயணம் இனிமையானதாக அமையும். நாம் பயணம் செய்யும் இடத்தின் சட்டதிட்டங்களை கடைப்பிடிக்க தயாராக இருக்க வேண்டும். அடுத்தஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு பயண ஏற்பாடுகளை  செய்ய நினைப்பவர்கள்இன்றிலிருந்தே தினமும் நடைப் பயிற்சிஉடல் எடை குறைப்புயோகாதியானம்பிராணாயாமம்இயற்கை உணவு முறைகளை கடைப் பிடித்தல் என்று உங்களை தயார் செய்து கொண்டால் பயணம் எளிதாகவும்மனமகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமையும்.
பெரியோர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஏற்பாடும் பயணத்தினை நிறைவாக்கும். இதில் சமாதானம் செய்து கொள்ள நேரிட்டால் ஏற்படும் துயரங்கள் சகிக்க இயலாதவையாக இருக்கும். பயண அனுபவங்கள் மலரும் நினைவுகளாக அமைய மேற்கண்ட குறிப்புகள் உதவும்.
உங்களுடன் எனது அனுபவங்களை  பகிர்ந்து கொள்ளக் கூடியதாக ஆக்கித் தந்த எம்பெருமான் இறையவன் சிவனவன் திருவடி பணிந்து வணங்குகிறேன்.