பாகம் இரண்டு:
வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்
அமர்நாத் புனித யாத்திரை.
முந்தைய பகுதிகளைக் காண கீழே சொடுக்குங்கள்:
பகுதி 12.- 2. சங்கம் டாப் (மரண பயத்தை கடக்க வைக்கும் பாதை)
பகுதி 12
5. அமரநாதம் - தொடரும் புனித பாரம்பரியம்.
எதிர் வரும் நாட்களில் அமர்நாத் புனித பயணம் மேற்கொள்ளுபவருக்கு எல்லாச் செய்திகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் பல இடங்களில் அமர்நாத் பற்றி படித்து சேகரித்த செய்திகளை இங்கே பதிவிடுகிறேன்.
கூகிள் தேடுதளம் மூலமாக படித்த தமிழ்ஹிண்டு டாட் காம் உள்ளிட்ட பல இணையப் பக்கங்கள், இராமகிருஷ்ணர் மடத்து நூலகத்தில் உள்ள பழைய நூல்களில் எடுத்த குறிப்புகள் போன்றவற்றில் இருந்து தொகுக்கப்பட்டவை இவை. இந்தப் பதிவில் நான் ஒரு தகவல் திரட்டும் வேலையை மட்டும் செய்திருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அமர்நாத் பனி லிங்கம் அமைந்துள்ள குகை நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய ஆடு மேய்க்கும் சிறுவனால் கண்டு பிடிக்கப் பட்டதாகவும் அதன் பின்னரே பிரபலம் ஆனதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் உண்மை நிலவரம் வேறு. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமர்நாத் குகையில் பனி லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை மக்கள் தரிசித்து வழிபட்டதாக பல சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பல வேறு புத்தகங்களிலும், இணையத்திலும் இது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மை பின்னணியை நாமும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதினால் கீழே வரும் குறிப்புகளை இங்கே பதிவாக தருகிறேன்.
அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸமஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது.
மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.
வரலாற்றுக் குறிப்பு நூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தைப் பற்றி மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது.
இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. ராஜதரங்கிணி காஷ்மீரைச் சேர்ந்த பிரபல வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார்.
அதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.
“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).
ராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) ''மிக இனிமையான காஷ்மீர கோடைநாட்களை'' ''காட்டிற்கு மேல் அமைந்த பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார்'' என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.
அந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.
பிராக்ஞபட்டர் மற்றும் சுகா என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).
முகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது.
“தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.
பிரான்ஸ் தேசத்து மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியே (Francois Bernier) ஔரங்கசீப்புடன் காஷ்மீரத்துக்கு 1663ல் வந்த குறிப்புகள் அந்த மருத்துவரின் “முகலாய அரசில் சுற்றுலா” என்கிற நூலில் கிடைக்கின்றன. ஔரங்கசீப் “ஸங்ஸஃபேத் என்ற இடத்திலிருந்து உறைந்த பனிபிம்பங்கள் நிறைந்த குகையை நோக்கித் தொடர்ந்து இரு நாட்கள் பயணித்தார்” என்கிறார். அவர் குறிப்பிடும் “குகை” (grotto) என்பது அமர்நாத் குகையே என்று இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வின்சென்ட் ஸ்மித் எழுதுகிறார்.
வின்சென்ட் எழுதிய முகவுரையில் “அற்புதமான பனி பிம்பங்களால் நிறைந்த அமர்நாத் குகையில் உருகும் பனிநீரில் எழும்பிய பனிப்பாளங்கள் (stalagmites) பல இந்துக்களால் சிவ ரூபமாக பூஜிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.
வைக்ன் (Vigne) என்னும் இன்னொரு பிரயாண வரலாற்றாளரின் “காஷ்மீர், லடாக், இஸ்கார்த் பிரயாணங்கள்” என்ற நூலில் இந்தப் புனித தலத்தைப்பற்றி விவரமான பல குறிப்புகள் உள்ளன. இந்த யாத்திரை “இந்துக்களின் சிராவண மாதத்தின் 15ஆம் நாளில் நிகழ்கிறது”
என்றும் “எல்லா நிலையிலுள்ள மற்றும் எல்லா சாதி இந்துக்களும் ஒன்று சேர்ந்து லத்தார் (Lidder) பள்ளத்தாக்கின் இந்த புகழ்வாய்ந்த குகை”க்குப் போவதாக அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. வைக்ன் லடாக்கிலிருந்து திரும்பும் வழியில் 1840-41ல் காஷ்மீரத்துக்கு விஜயம் செய்து இந்த நூலை 1842ல் வெளியிட்டார். இவரது நூல் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பெரும் உற்சாகத்துடன் இந்த யாத்திரைக்கு மக்கள் திரண்டதாகச் சொல்கிறது.
புகழ்பெற்ற சீக்கிய குரு அர்ஜூன்தேவ் இந்த அமர்நாத் குகைக்கோயிலுக்கு நிலம் வழங்கியுள்ளார். “சரி” எனப்படும் சிவபெருமானின் புனித வாள் அமர்நாத் குகைக்கு கொண்டுசெல்லப்படும் திருவிழாவிற்காக இந்த நிலம் வழங்கப்பட்டது.
காஷ்மீரத்தில் 1819ல் ஆப்கன் இனத்தவர் ஆட்சி ஒழிந்ததும், ஹர்தாஸ் டிகு என்கிற காஷ்மீர பண்டிதரால் ஸ்ரீநகரில் “சாவ்னி அமர்நாத்” அமைக்கப்பட்டு, அங்கு திரளும் ஏராளமான பக்தர்களுக்கு யாத்திரையின் போகவர இரு பிரயாணத்திலும் இலவச உணவு அவரின் தனி நிதியால் வழங்கப்பட்டது என்று வரலாற்று ஆவணங்கள் குறிக்கின்றன.
அமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.
ஆப்கன் இன ஆட்சியின்போது காஷ்மீரத்து இந்துக்கள் மீதான இன ரீதியான கொடுமைகள் பெருகி இந்தப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்யும் உரிமை இந்துக்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர், அந்த ஆட்சி மறைந்ததும் கடந்த 150 வருடமாக இது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.
இது வெறும் 150 வருட காலக் கதை அல்ல. காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம்.
மேலும் சுவாமி விவேகானந்தர் தம் சீடர்களுடன் அமர்நாத் குகைக்கு சென்று தரிசித்ததாக சகோதரி நிவேதிதா குறிப்பிடுகிறார்.