Saturday, October 10, 2009

ஷ்யமந்தக மணி - 3

உண்மையை கண்டறிய ஸ்ரீகிருஷ்ணர் தானே முன்னின்று தனது மெயக்காவலர்களுடன், பிரசேணன் வேட்டையாடச் சென்ற கானகத்துக்குள் நுழைந்தார். வெகு நேரம் தேடிய பின்னர் பிரசேணன் உடலையும், சிங்கத்தின் உடலையும் கண்டனர். சிங்கத்தின் உடல் இருந்த இடத்திலிருந்து காலடி தடங்களையும் கண்டார்கள். காலடித் தடங்கள் ஒரு கரடியுடையது என்பதையும் அறிந்து கொண்டார்கள். காலடித் தடங்களை பின்பற்றிச் சென்ற போது, அவர்கள் ஒரு குகையை அடைந்தனர். 

ஸ்ரீகிருஷ்ணர், மெய்க்காவலர்களை குகைக்கு வெளியே காத்திருக்கும் படி சொல்லிவிட்டு, குகைக்குள் நுழைந்தார். குகைக்குள் ஒரு நீண்ட வழி தென்பட்டது. குகைக்குள் நல்ல வெளிச்சமும், காற்றும் இருந்தது. மேலும், இரு மருங்கிலும் குகைச் சுவர்களில் இராம காவியத்தின் காட்சிகள் அழகுற வண்ணம் தீட்டி சித்தரிக்கப் பட்டிருந்தது. நெடிய குகைப்பாதையின் முடிவில் ஒரு விஸ்தாரமான கூடம் இருந்தது. நாகரீகம் மிக்க மனிதர்களின் இருப்பிடம் போல அந்த இடம் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூடத்தின் நடுவே சிறிய கரடிக் குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் கையில் ஷ்யமந்தகமணி இருப்பதை ஸ்ரீகிருஷ்ணர் கண்டார். முன் பின் தெரியாத ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்ட கரடி குட்டிகள் பெருங்குரலெடுத்து கத்தின. 

உடனே சற்றும் எதிர்பாராத வண்ணம் ஒரு பெரிய கரடி ஸ்ரீகிருஷ்ணரைத் தாக்கத் துவங்கியது. இந்த திடீர்த் தாக்குதலை ஸ்ரீகிருஷ்ணர் லாவகமாகச் சமாளித்தார். வந்திருப்பது யார்? என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் நோக்கமே இன்றி கரடி தாக்க, தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொல்லவும் ஸ்ரீகிருஷ்ணருக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரும் தற்காப்பு கலைகளை கையாண்டார். சிறிது நேர போருக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணர், அந்தக் கரடியை தூக்கி சுழற்றி சுவரின் மேல் விழும்படியாக எறிந்தார். கரடிக்கு இந்த தாக்குதல் அதிர்ச்சியாய் இருந்தது. யார் நம்மை இவ்வளவு எளிதாக தூக்கி எறிவது? என்று பார்த்தது. 

ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரியும் தன்னை தாக்குவது இராமாவதாரத்தில் தனக்குப் பெரிதும் துணையாயிருந்த ஜாம்பவான் என்பது. அதனால் தான் அவர் பதிலுக்கு தாக்காமல் இருந்தார். ஜாம்பவான் இப்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தை பார்த்தார். தன்னை வெல்ல இராமன் தவிர யாராலும் முடியாத போது யார் இவர் என்று கூர்ந்து பார்த்தார். 

பார்த்த உடனே ஜாம்பவானுக்கு வந்திருப்பது இராமர் தான் என்று புரிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணரின் காலில் வீழ்ந்து பணிந்து கண்ணீர் பெருக்கி வரவேற்றார். சிறிது நேர அளவளாவல்கள், உபசாரங்கள், மற்றும் அறிமுகங்களுக்குப் பின்னர் தான் வந்த காரணத்தினை ஸ்ரீகிருஷ்ணர் தெரிவித்தார். ஜாம்பவான் அக மிக மகிழ்ந்து, ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணரிடம் தந்தார். 

விடைபெற்றுக் கொண்டு தன் மெயக்காவலர்களுடன் ஸ்ரீகிருஷ்ணர் நேராக நகரம் சென்றார். சத்ரஜித் வீட்டுக்குச் சென்று நடந்த செய்திகளை சத்ரஜித்துக்கு தெரிவித்து, ஷ்யமந்தகமணியை அவனிடம் கொடுத்தார். சத்ரஜித் தன் தம்பி இறந்து போனதை விட ஸ்ரீகிருஷ்ணர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியதை எண்ணி வருந்தி அவர் காலில் பணிந்து மன்னிப்புக் கேட்டான். ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணரே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டினான்.  ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ மறுத்து ஷ்யமந்தகமணியை அவனே வைத்துக் கொள்ளச் சொல்லி தன் அரண்மனைக்கு திரும்பினார். விஷயம் அறிந்த நகர மக்கள் வதந்தியைப் பரப்பிய தங்கள் அறியாமைக்கு ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்பு கோரினர்.

என் குறிப்பு:  இந்தக் கானகமும், வதந்தியும் பரந்தாமனுக்கு புதிதல்லவே! இராமாவதாரத்தில் மரவுரி தாங்கி கானகம் சென்றதும், பட்டாபிஷேகத்துக்குப் பின்னர் சலவைத் தொழிலாளி ஒருவன் சொன்ன அவச்சொல்லால் சீதாதேவியை மீண்டும் காட்டுக்கு அனுப்பியதும் அதற்கு காரணமாக அமைந்ததும் வதந்திதானே? அவதாரங்களையும் வதந்திகள் துரத்தும் என்பதை இக்கதை விளக்குகிறது. (ஸ்ரீமத்பாகவத புராணம் மற்றும் நாராயணீயம் நூல்களில் ஷ்யமந்தகமணி பற்றிய கதையை காணலாம்)
 
(முற்றும்)

ஷ்யமந்தக மணி - 2


வேட்டைக்கு நண்பர்களுடன் காட்டுக்குள் சென்ற பிரசேணன் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான். கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் அவனும் அவன் நண்பர்களும் வேட்டையாடினார்கள். போக்குக் காட்டிய ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திக் கொண்டு பிரசேணன் தனது நண்பர்களையெல்லாம் விட்டு விலகி காட்டுக்குள் வெகு தூரம் வந்து விட்டான். 


அப்போது திடீரென்று ஒரு சிங்கம் அவன் மேல பாய்ந்து தாக்கியது. பிரசேணனும் தனியாளாய் அந்த கொடிய விலங்குடன் வெகு நேரம் போராடினான். இறுதியில் சிங்கத்தின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் இறந்து போனான். அப்போது அங்கு வந்த மிகப் பெரிய கரடி ஒன்று சிங்கத்தைத் தாக்கிக் கொன்றது. பின்னர் பிரசேணன் அணிந்திருந்த ரத்தினக் கல்லினை எடுத்துக் கொண்டு தன் குகைக்குச் சென்றது. குகைக்குள் இருந்த கரடி குட்டிகள் ஆசையுடன் அந்த பிரகாசமான மணியை வாங்கி வைத்துக் கொண்டு விளையாடின. 


இது இவ்வாறிருக்க, மாலை வேலை வெகுநேரமாகியும் பிரசேணன் வீடு திரும்பாததைக் கண்டு சத்ரஜித் கவலையுற்றான். பிரசேனனோடு  வேட்டைக்கு சென்றிருந்தவர்கள் அனைவரும் எப்போதோ வீடு திரும்பி விட்டிருந்தார்கள். அவர்களால் பிரசேனனுக்கு என்ன நேர்ந்தது என்று சொல்ல இயலவில்லை. சத்ரஜித் தன் தம்பி வேறொரு நகருக்கு சென்றிருக்கலாம் என எண்ணினான். 


மறுநாளும் அவன் வராது போனதும் அவனுக்கு மிகுந்த சஞ்சலம் உண்டாயிற்று. கவலையுடன் அமர்ந்திருந்த சத்ரஜித்க்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை தன் தம்பியைக் கொன்று, ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணர் கவர்ந்து கொண்டிருப்பாரோ என்று எண்ணினான். எனினும் நாட்டை ஆளும் அரசனைப் பற்றி யாரிடம் குறை கூறுவது என்றும் பயந்தான். அதே சமயம் மன ஆறுதலுக்காக அவனை கண்டு செல்ல வந்த நண்பர்களுடன் இந்த ஐயத்தினை பகிர்ந்து கொண்டான். அவர்களை அவன் இந்த செய்தியினை யாரிடமும் சொல்லாமல் இரகசியம் காக்க வேண்டினான். சரி என்று தலையாட்டிச் சென்ற சத்ரஜித்தின் நண்பர்கள் அவர்களது நெருங்கிய நண்பர்களிடம் இந்த செய்தியை சொல்லி ரகசியம் காக்க வேண்டினார்கள். அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் இந்தச் செய்தியை பரம இரகசியமாகக் கூறி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்கள். அந்தப் பெண்மணிகளும் பக்கத்துக்கு வீட்டு பெண்மணிகளிடம் காதும் காதும் வைத்தாற் போல இந்த செய்தியை மெல்லிய குரலில் சொன்னார்கள். இவ்வாறாக ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய தவறான வதந்தி காட்டுத் தீயாய் நகருக்குள் பரவியது. 


ஸ்ரீகிருஷ்ணர் அடிக்கடி நகரத் தெருக்களில் வந்து குழந்தைகளிடம் பேசி மகிழ்ந்து அவர்களுக்குப் பரிசுப் பொருட்களை தருவது வழக்கம். இந்த வதந்தீ காரணமாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எச்சரித்திருந்தார்கள். ''குழந்தைகளே! ஸ்ரீகிருஷ்ணர் உங்களோடு நெருங்கி வரவோ பழகவோ இடம் கொடுக்காதீர்கள். உங்கள் காது, மூக்கில் உள்ள நகைகளை திருடி கொள்ளலாம். ஏன்? உங்களை கொலை செய்யக் கூட தயங்க மாட்டான் அந்த திருட்டு கிருஷ்ணன்!" என்று எச்சரித்து வைத்திருந்தார்கள். அன்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் நகரத் தெருக்களில் வந்து குழந்தைகளை அருகில் வரச்சொல்லி அழைத்தார். வழக்கமாக அவரைக் கண்டாலே உற்சாகமாய் ஓடி வரும் அந்தக் குழந்தைகள் பதறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர். ஸ்ரீகிருஷ்ணருக்கோ ஆச்சர்யம்! மேலும் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், "எல்லாரும் ஓடிடுங்க. நம்ப நகைகளை எடுத்துக் கொள்ள நம்மை கொலை கூட செய்வான் இந்த கண்ணன். ஓடுங்க. ஓடுங்க." என்று கத்திக்கொண்டே ஓடினான். மற்ற குழந்தைகளும், 'ஆமாம், ஆமாம், எல்லாரும் ஓடுங்க' என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடின. இதைக் கண்ணுற்ற ஸ்ரீகிருஷ்ணர் துணுக்குற்றார். 


அன்று மாலையே உண்மை நிலவரம் அறிந்து கொள்ள மாறு வேடத்துடன் ஸ்ரீகிருஷ்ணர் கடை வீதிக்கு சென்றார். அங்கு வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த அதே நேரம் வதந்திக்கு கண், காது, மூக்கு வைத்து பலபல விதமாக, சத்ரஜித், ஷ்யமந்தகமணி, பிரசேணன் என்று விவரங்களை விதவிதமாய்க் கதை அளந்து கொண்டிருந்தார்கள். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் மறு நாளே தன் நெருக்கமான சேவகர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.                                                                                 (தொடரும் )






ஷ்யமந்தக மணி -1


துவாபர யுகத்தில், துவாரகாபுரியில் ஸ்ரீகிருஷ்ண பகவான் நல்லாட்சி புரிந்து வந்த நேரத்தில், அந்த பட்டணத்தில் சத்ரஜித் என்பவன் இருந்தான்.  அவன் பரம ஏழை. ஆனால் சூரிய பகவான் மேல் சிரத்தையுடன் கூடிய பக்தி கொண்டவனாக அவன் இருந்தான். தினமும் சூரிய பகவானை த்யானித்து பின்னர் தனது வாழ்க்கை நடைமுறைகளை பின் பற்றி வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த சூரிய பகவான் ஒரு நாள் அவன் எதிரே பிரத்யட்சமாகி அருள் புரிந்தார். அதைக் கண்டு பெரும் இன்பம் அடைந்தான் சத்ரஜித்.  
சூரிய பகவான் அவனுக்கு வேண்டிய வரம் தர சித்தமானார். 'சத்ரஜித், உனக்கு என்ன வரம் வேண்டுமோ, தயங்காமல் கேள். நான் அதை உனக்குக் கொடுப்பேன்', என்றார். சத்ரஜித் சூரியனிடம் தன ஏழ்மையைப் போக்க வரம் வேண்டினான். அதை கேட்ட சூரிய பகவானும், அவனிடம் ஒப்பற்ற ரத்தினக்கல் ஒன்றைத் தந்தருளினார். 'சத்ரஜித், இந்த மணிக்கு 'ஷ்யமந்தக மணி' என்று பெயர். தினமும் காலையில் உன் பூசனைகள் முடிந்ததும், இந்த மணி உனக்கு தங்கக் காசுகளை வழங்கும். நீ அதைக் கொண்டு வளமுடனும், நலமுடனும் உன் குடும்பத்தாரோடு நீண்ட நாட்கள் ஆனந்தமாய் வாழ்ந்திருப்பாயாக" என்று கூறி மறைந்தார்.  
ஷ்யமந்தகமணி சூரியன் போல பிரகாசித்தது. அதை கண்டு மகிழ்ச்சி அடைந்த சத்ரஜித் அதை வீட்டுக்குக் கொண்டு சென்றான். விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கம் உள்ளோர் கூட்டம் கூட்டமாக் வந்து ஷ்யமந்தக மணியைப் பார்த்து வியந்து பாராட்டிச் சென்றனர். சிலர் சாட்சாத் சூரிய பகவானே ஷ்யமந்தகமணி வடிவில் வந்திருப்பதாக பாராட்டினர். வேறு சிலர், இந்தக் கல்லின் மூலம் ஏதோ தீங்கு விளையப்போவதாக அச்சம் தெரிவித்தனர். "சூரியனே பூமிக்கு வந்து விட்டால் பூமி என்னாவது?" என்றார்கள்.  
மக்களில் சிலர் துவாரகாபுரி அரசனான ஸ்ரீகிருஷ்ணரிடம் சென்று விஷயத்தை தெரிவித்தனர். தமது அச்சத்தையும் கூறி நேரக்கூடிய ஆபத்திலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் மக்களைப் பார்த்து, "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். நான் என்னவென்று விசாரிக்கிறேன், நீங்கள் தைரியமாக வீடு செல்லுங்கள்," என்று அவர்களை தேற்றி அனுப்பினார்.  
நாட்டின் குடிமகன் என்ற வகையில் சத்ரஜித் ஷ்யமந்தகமணியை எடுத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணரிடம் காட்டினான். அது அவன் கையில் வந்த விவரத்தினைச் சொன்னான். ஷ்யமந்தகமணியை கையில் வாங்கிப் பார்த்த ஸ்ரீ கிருஷ்ணர், 'அற்புதம்! என்ன ஒரு பிரகாசம்? என்று சொல்லி புகழ்ந்தார். பின்னர், சத்ரஜித்தை பார்த்து, "சூரியனை போன்று பிரகாசிக்கும் இந்த ஷ்யமந்தகமணி உனக்கு தினமும் பொன்னை வாரி வழங்கக் கூடிய வல்லமை படைத்தது. ஏற்கனவே மக்கள் இது பற்றி வியந்து பேசுவதால் கொள்ளையர் வந்து உன்னிடமிருந்து இதனை களவாடிச் செல்கின்ற வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த மணி என் அரண்மனையிலேயே பாதுகாப்பாக இருக்கட்டும். நீ தினமும் காலையில் வந்து உனக்கு சேர வேண்டிய பொன்னை வாங்கி கொண்டு செல்வாயாக. கிடைத்தற்கரிய இந்த பொக்கிஷம் என் பாதுகாவலில் இருப்பதே நல்லது," என்று கூறினார். 
ஸத்ரஜித் ஸ்ரீகிருஷ்ணர் மேல் மதிப்பு வைத்திருந்தான். ஆனால், தவமாய்த் தவமிருந்து பெற்ற இந்த ஷ்யமந்தகமணியை இழக்கத் தயாராக இல்லை. மேலும் ஸ்ரீகிருஷ்ணர் நைச்சியமாகப் பேசி இந்த மணியைக் கவர நினைப்பதாக எண்ணினான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  'அரசே, நீண்ட நாட்கள் தவமிருந்து இந்த மணியை நான் சூரியனிடமிருந்து பெற்றேன். மேலும் இதை பத்திரமாக் வைத்துக் கொள்ளும்படி அவரது ஆணை. இதற்கு மாறாக நான் இதை ஒருவேளை உங்களிடம் தந்து விட்டால், சூரிய பகவான் என்னை கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? நீங்களோ அரசர், நீங்கள் கேட்டு கொடுக்கவிட்டாலோ தண்டித்து விடுவீர்கள். அதே சமயம் சூரிய பகவான் என்னை சபித்துவிட்டால் நான் என்ன செய்வது" என்று கேட்டான். ஸ்ரீக்ருஷ்ணருக்கா தெரியாது சத்ரஜித் உள்ளத்தில் என்ன எண்ணம் உள்ளது என்று? அவர் உடனே, அவன் கையில் ஷ்யமந்தக மணியைக் கொடுத்து, 'சத்ரஜித் பயப்படாதே. உன் நன்மையைக் கருதி தான் நான் அப்படி சொன்னேன். இந்த மணி எனக்கு வேண்டாம். இது உனக்குச் சொந்தமான பொருள். எனவே நீ இதைக் கொண்டு உன் இல்லம் செல்வாயாக," என்றார். 
இதை கேட்ட சத்ரஜித் மகிழ்ச்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி விடை பெற்று வீடு ஷ்யமந்தகமணியுடன் வீடு வந்து சேர்ந்தான். மணியை பாதுகாப்பான இடத்தில் வைத்தான். தினமும் அதற்கு பூசைகள் செய்ததும், அது அவனுக்கு பொன்னைத் தந்தது. அவன் வேண்டிய துணி மணிகள் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருந்தான். மிக பெரிய தனவந்தனாகவும் மாறினான். சத்ரஜித்துக்கு பிரசேணன் என்ற தம்பி ஒருவன் இருந்தான். தம்பி மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். அவன் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்தான். பிரசேணனும் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தான். பகட்டாக உடை அணிந்து நண்பர்களுடன் வீணே பொழுது போக்கிக் கொண்டிருந்தான். ஒரு நாள் பிரசேணன் தன நண்பர்களுடன் காட்டுக்குச் சென்று வேட்டையாட விரும்பினான். அப்போது ஷ்யமந்தகமணியை தன் மார்பில் அணிந்து கொண்டு போய்வர ஆசைப் பட்டான். அண்ணனிடம் சென்று தன் விருப்பத்தினை தெரிவித்தான். சத்ரஜித்தும் மறுப்பேதும் சொல்லாமல் ஷ்யமந்தக மணியை தம்பியிடம் கொடுத்தான்.  'ஜாக்கிரதையாய் போய் வா', என்று கூறி பிரசேணனை, சத்ரஜித் வழியனுப்பி வைத்தான். பிரசேணனும் பகட்டான உடை பூண்டு, ஷ்யமந்தக மணியை அணிந்து கொண்டு தன் நண்பர்கள் புடை சூழ காட்டுக்குள் வேட்டையாட சென்றான்.  

(தொடரும்)





Monday, October 5, 2009

அந்திமக் காலத்து உரையாடல்...

அவன் மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.  

சாகும் தருவாயில் இருக்கும் போது தெரிந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்து விட்டு போவது வழக்கமான ஒன்று.  

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், என்றோ ஓர் நாள் மரணிக்கப் போகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகின்றவனை பார்த்து விட்டுச் சென்றார்கள்.  

அப்போது அவனைக் காண அவனது கனவு வந்தது. 

அவன் வாழ்நாளில் ஒருமுறை கூட கனவைக் கண்டதில்லை. அதனால் கனவு அவனைக் காண வந்தது. உள்ளே கனவு நுழைந்ததை அவன் ஓரக்கண்ணால் பார்த்தான். கொஞ்சம் அவமானமாய் உணர்ந்ததினால் தன பார்வையை கீழே தாழ்த்திக் கொண்டான். 

அவன் அருகே சென்ற கனவு அவனை பார்த்து, "ஏன் நீ என்னை ஒரு முறை கூட உணரவில்லை?" என்று கேட்டது.  

அவன் சுருதி அற்ற மெல்லிய குரலில், "உன்னைக் காண எனக்கு பயமாய் இருந்தது" என்றான்.  

"எதற்குப் பயந்தாய்?" அவனிடம் கேட்டது கனவு. 

"தோற்று விடுவேனோ என்ற பயம்", என்றான் அவன்.  

கனவு கேட்டது. "ஆனால் என்னைக் காண மறுத்ததிலேயே நீ தோற்று விட்டாயே! அதை உணரவில்லையா நீ?"  

"ஆமாம்", அவன் குரலில் விரக்தி தெரிந்தது, "நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்"  

இந்த பதிலைக் கேட்ட கனவுக்கு கோபம் வந்தது, 

"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?" கனவின் குரலில் கோபத்தை விட பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.  

அவன் கன்னத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின, "புரிந்து கொண்டேன், நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போட முடியாது"  

கனவுக்கு அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. அதற்கு தெரியும். வலிகள் இரு வகையானவை. ஒழுக்கம் தரும் வலி. ஆனால் ஒழுக்கம் தரும் வெற்றி கனியில் வலி மறந்து போய் விடும். மற்றொன்று, தோல்வியும் விரக்தியும் தருகின்ற வலி. அதன் வேதனை அதிகமாயிருக்கும். 

இதற்கும் மேல அவனிடம் பேச என்ன இருக்கின்றது? கனவு குனிந்து அவனை ஆறுதலாகப் பார்த்து, அவன் விழி நீரை துடைத்து விட்டு சொல்லியது, "நீ ஒரு அடி முன் எடுத்து வைத்திருந்தாய் எனில் என்னை பார்த்திருக்கலாம். உனக்கும் எனக்கும் இடைவெளியை உருவாக்கியது உன் அடிமனத்தில் இருந்த நம்பிக்கையின்மை"  

சில கணங்கள் மௌனமாய்க் கரைந்தன. வாழ்க்கை உணர்த்தாததை மரணத்தின் கடைசி பொழுதுகள் உணர்த்தி விடும். அவன் முகத்தில் வேதனை மறைந்து ஓர் மலர்ச்சி பூத்தது. சில நொடிகளில் இருவரும் பார்வையாலேயே விடை பெற்றுக் கொண்டார்கள். 

அவனோடு சேர்ந்து அந்தக் கனவும் இறந்து போயிற்று.

இளங்காற்று வீசுதே..

இறைவனின் கருணை
இளங்காற்று போன்றது.
அந்தக் காற்று எப்போதும்
வீசிக் கொண்டேயிருக்கும்.
உங்கள் பாய்மரத்தை விரித்து
அதை பற்றிக் கொள்ளுங்கள்
- பகவான் இராமகிருஷ்ணர்