அவன் மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
சாகும் தருவாயில் இருக்கும் போது தெரிந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்து விட்டு போவது வழக்கமான ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், என்றோ ஓர் நாள் மரணிக்கப் போகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகின்றவனை பார்த்து விட்டுச் சென்றார்கள்.
அப்போது அவனைக் காண அவனது கனவு வந்தது.
அவன் வாழ்நாளில் ஒருமுறை கூட கனவைக் கண்டதில்லை. அதனால் கனவு அவனைக் காண வந்தது. உள்ளே கனவு நுழைந்ததை அவன் ஓரக்கண்ணால் பார்த்தான். கொஞ்சம் அவமானமாய் உணர்ந்ததினால் தன பார்வையை கீழே தாழ்த்திக் கொண்டான்.
அவன் அருகே சென்ற கனவு அவனை பார்த்து, "ஏன் நீ என்னை ஒரு முறை கூட உணரவில்லை?" என்று கேட்டது.
அவன் சுருதி அற்ற மெல்லிய குரலில், "உன்னைக் காண எனக்கு பயமாய் இருந்தது" என்றான்.
"எதற்குப் பயந்தாய்?" அவனிடம் கேட்டது கனவு.
"தோற்று விடுவேனோ என்ற பயம்", என்றான் அவன்.
கனவு கேட்டது. "ஆனால் என்னைக் காண மறுத்ததிலேயே நீ தோற்று விட்டாயே! அதை உணரவில்லையா நீ?"
"ஆமாம்", அவன் குரலில் விரக்தி தெரிந்தது, "நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்"
இந்த பதிலைக் கேட்ட கனவுக்கு கோபம் வந்தது,
"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?" கனவின் குரலில் கோபத்தை விட பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.
"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?" கனவின் குரலில் கோபத்தை விட பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.
அவன் கன்னத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின, "புரிந்து கொண்டேன், நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போட முடியாது"
கனவுக்கு அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. அதற்கு தெரியும். வலிகள் இரு வகையானவை. ஒழுக்கம் தரும் வலி. ஆனால் ஒழுக்கம் தரும் வெற்றி கனியில் வலி மறந்து போய் விடும். மற்றொன்று, தோல்வியும் விரக்தியும் தருகின்ற வலி. அதன் வேதனை அதிகமாயிருக்கும்.
இதற்கும் மேல அவனிடம் பேச என்ன இருக்கின்றது? கனவு குனிந்து அவனை ஆறுதலாகப் பார்த்து, அவன் விழி நீரை துடைத்து விட்டு சொல்லியது, "நீ ஒரு அடி முன் எடுத்து வைத்திருந்தாய் எனில் என்னை பார்த்திருக்கலாம். உனக்கும் எனக்கும் இடைவெளியை உருவாக்கியது உன் அடிமனத்தில் இருந்த நம்பிக்கையின்மை"
சில கணங்கள் மௌனமாய்க் கரைந்தன. வாழ்க்கை உணர்த்தாததை மரணத்தின் கடைசி பொழுதுகள் உணர்த்தி விடும். அவன் முகத்தில் வேதனை மறைந்து ஓர் மலர்ச்சி பூத்தது. சில நொடிகளில் இருவரும் பார்வையாலேயே விடை பெற்றுக் கொண்டார்கள்.
அவனோடு சேர்ந்து அந்தக் கனவும் இறந்து போயிற்று.
7 comments:
நல்ல கருத்துக்கள், நல்ல பதிவு, ஆனா கனவு சொன்னது கொஞ்சம் இடிக்குது, ஏன்னா கனவு நம்ம கையில் இல்லை. கற்பனைதான் நம் கையில் உள்ளது. இந்த பதிவில் வெற்றி அல்லது கடவுள் மாதிரி கனவுக்கு பதிலாக பயன்படுத்தியிருக்கலாம். அல்லது நான் கதையை புரிந்துகொண்ட விதம் தவறாக இருக்கலாம். நன்றி.
நன்றி , எங்கள் குருநாதர் கிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் இந்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. தங்களின் யோசனையினை சிரமேற்கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கிறேன். தங்கள் நல்வரவுக்கு மீண்டும் நன்றி.
உதயகுமார்
செய்தி வெளியீட்டாளர்
பதஞ்சலி யோக கேந்த்ரம்.
உங்கள் அன்புக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி பித்தன் சார்,
//ஆனா கனவு சொன்னது கொஞ்சம் இடிக்குது, ஏன்னா கனவு நம்ம கையில் இல்லை. கற்பனைதான் நம் கையில் உள்ளது. இந்த பதிவில் வெற்றி அல்லது கடவுள் மாதிரி கனவுக்கு பதிலாக பயன்படுத்தியிருக்கலாம்.//
நம்ம ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் சொல்வாரே! கனவு காணுங்கள் என்று. அந்தக் கனவை காண பயந்த ஒருவனைப் பற்றிய கதை அது. கனவு என்பதை ஆங்கிலத்தில் vision என்று கூட பொருள் கொள்ளலாம். சற்று ஆன்மீகமாக சிந்தனை செய்தால், சாக்கிரம், ஸ்வப்னம், சுழுத்தி என்ற நிலைகளில் ஒன்றான ஸ்வப்னம் தான் நான் கதைப் பொருளாகக் கொண்டது. Vision இல்லாதவருக்கு mission இருக்காது. தோல்வி கண்டுவிடுவோமோ என்று பயந்து கொண்டே கனவு காண மறுத்தவனின் அந்திமக் காலத்தில் கனவு அவனிடம் உரையாடுவது போல அமைத்தேன். சிவபெருமான் பாண்டிய மன்னனின் கனவுகளில் வந்து பேசியதாகவும், தனது பக்தர்களின் கனவில் வந்து பேசியதாக பல வேறு சைவ இலக்கியங்கள் பேசுகின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் கடவுள் தன் பக்தனிடம் பேச கனவை ஒரு மீடியம் போல் பயன்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். உங்களுக்கு இது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தயை கூர்ந்து எனக்கு தெரிவியுங்கள். மறுபடியும் நன்றி.
அஷ்வின்ஜி
வருக. வணக்கம், திரு உதயகுமார். கேந்திரம் வெளியிடும் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.படிப்போருக்கு வசதியாக சில சிறிய மாற்றங்கள் மட்டுமே தேவை.நன்றி.
எதிர்பார்ப்புகளுடன்
அஷ்வின் ஜி
//"முட்டாள்! நாளை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என்று உனக்கு தெரியாதா? இந்தக் கணத்தை விட்டால் வேறு எதுவும் நித்தியம் இல்லை என்று தெரியாதா உனக்கு? நாளை என்ற ஒன்று இருப்பதாக இப்போதும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே! மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த கணத்தில் கூட உனக்குத் தெரியாதா, மரணத்தை நாளைக்குத் தள்ளி போட முடியாது என்பது?"//
`எந்த அகவையிலும் எந்த நாளிலும் எந்த வேளையிலும் இறப்பு வரக்கூடும் என்பது அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை. `நூறாண்டு நிலையாக வாழ்வேன்' என்னும் எண்ணத்தால்தான் மனிதன் நல்லவை செய்ய விரைவு காட்டாமல் அல்லவை பல செய்கின்றான்.
`வாழ்வாவது மாயம்இது மண்ணாவது திண்ணம் தாழாது அறம்செய்மின்'என அருளிச்செய்வார் சுந்தரமூர்த்தி நாயனார்.
நல்ல சிந்தனை; நல்ல கட்டுரை; வாழ்த்துகள்.
திருத்தம்:
அறம்செய்மின் - அறம்செய்ம்மின்
தகைமை சால் நம்பி அய்யா
தங்கள் வாழ்த்தும், பாராட்டும் எனக்கும்
மேலும் நம்பிக்கை அளிக்கிறது.
இதய நன்றி.
அஷ்வின் ஜி
Post a Comment