கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.
இடுகை ஆறு: மலையின் சேவையும், சமவெளியின் மதிப்பீடும்
குதிரைகள் நிற்குமிடம்.
குதிரைக்காரர்கள் எங்களது வலியை உணர்ந்தவர்களாக மெதுவாக பிடித்து இறக்கிவிட்டார்கள். இறங்க முடியாத சிலரை அழகாக தாங்கி பிடித்து இறக்கிவிட்டார்கள். பெண்களையும் அவ்வாறே பிடித்தது இறக்கினார்கள், ஆனால் விகல்பம் ஏதும் அவர் கண்களில் தென்படவில்லை. விகல்பத்தை தேடி கண்டுபிடிக்கும் சமவெளிக்கும் மலைவெளிக்கும் உண்டான சிந்தனை வித்யாசம் இது என இப்போது புரிகிறதா? எனக்கு திரும்பி வரும் பொழுது ஜம்முவில் இரயில் பயணத்தின் போது கிடைத்த சமயத்தில் இது புரிந்து உறுத்தியது.
குதிரையில் இருந்து ஐஸ்வெளியில் இறங்கியதுமே நியாயமேயில்லாமல் நீல் ஆம்ஸ்ட்ராங் போல் உணர்ந்தேன். நிலை கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அதற்குள் குதிரைக்காரர்கள் தங்களது சன்மானத்தை கேட்டு துளைத்தனர். (அவர்கள் வயிற்று பாடு என்ன செய்வது ?). பேசிய தொகைக்கு மேல் 'பக்ஷீஸ்' கேட்டு படுத்திவிட்டனர். அவர்கள் சேவைக்கு கேட்காமலேயே கொடுக்க வேண்டும். இருந்தாலும் சற்று பிகு பண்ணி விட்டு கொடுத்தோம்.
சேவைக்கு மதிப்பீடு செய்யும் கலை நிச்சயமாக சமவெளி மனிதர்களுக்கு தெரியவில்லை. மற்றொரு கிளைக்கதையாய் போய்விடும் அபாயம் இருப்பதினால் மிக சுருக்கமாக ஒன்றை சொல்கிறேன். இந்தி தெரிந்த எங்களுடன் வந்த ஒரு பெண்மணியை அவர் சகோதரர்கள் இருவரும் குதிரை பேசி பால்தாலிலிருந்து குகைக்கு அனுப்பி விட்டனர். அவரும் தன் உடமைகளை சரியாக பார்க்காததினாலோ அல்லது சகோதரர்களும் தன்னை குதிரையில் பின் தொடருவர் என்ற நினைப்பினாலோ குதிரையிலமர்ந்து கிளம்பி விடடார். வழியில் அவர் கண்ணேதிரே ஒரு பெண்மணி குதிரையோடு பாதாளத்தில் வீழ்ந்து இறந்து போன அதிர்ச்சிக்குரிய காட்சியை கண்டு நிலை குலைந்து போனார். குகை முன்னே இறங்கிய பின் தன் சகோதரர்கள் வருகைக்கு காத்திருப்பதிலே நிறைய நேரம் செலவழிந்து அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்ய தோன்றாமல் அழுது, அழுது மனம் வெதும்பி பின் அதே குதிரைக்காரரை தன்னைத் திரும்பி பால்தால் பேஸ் கேம்புக்கே அழைத்து செல்ல வேண்டிக்கொண்டார்.
அந்த நல்ல ஆத்மா அதற்கு சம்மதித்து திரும்பவும் கொண்டு வந்து பால்தாலில் எங்கள் டென்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது. அவருக்கு சேரவேண்டிய பணத்தை நாங்கள் தரவேண்டிய சந்தர்ப்பத்தில் அவருக்கு கொஞ்சம் அதிகமாக கொடுக்கலாமா? என்று கேட்டதற்கு இல்லையில்லை வெறும் 1500 (போகவர) தந்தால் போதும் என்று அந்த அம்மணி சொன்னபோது எனக்கு ........... தோன்றியதை நான் சொல்லப்போவதில்லை.
உண்மை இதுதான் - சேவைக்கு மதிப்பீடு செய்யும் தகுதி, திறமை, வெண்மனம் இந்திய வரைப்படம் போல மேலிருந்து கீழே குறுகி குறுகி ஒரு முனையாகி விடுகிறது. (சுய புலம்பலுக்கு, இதை வாசிக்கும் அன்பர்கள் மன்னிப்பார்களாக!)
இச்சம்பவத்தின் முடிவை அன்பர்கள் கவனிக்க. சிவதரிசனம் 3500 கி.மி. பிரயாணித்தும் கிடைக்க பெறாதவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கு எது குறைகிறது என்பதை தனியே நாம் சிந்தித்தே ஆகவேண்டும். இந்த இடத்தில் இத்தகைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் நல்கிய நண்பர் அஷ்வினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நவில்கிறேன்.
(கோவிந்த் மனோஹரின் அமர்நாத் அனுபவங்கள் தொடரும்)
4 comments:
மனோஹர்ஜி நிறுத்தி விடவில்லையே? மேலும் இடுகைகளைத் தொடருவீர்கள் தானே? - அஷ்வின்ஜி
உண்மைதான், தென்னிந்தியர்களை விடவும் வட இந்தியர்களுக்கு தாராள புத்தி அதிகமே. என்னையும் சேர்த்து! :(
தொடர
கீதாஜீ. தங்களின் பின்னூட்டங்களுக்கு என் இதய நன்றி.
நீங்கள் பெருவாரியான காலம் வட இந்தியாவில் வசித்ததினால் இந்த தாராள புத்தி உங்களுக்கு வந்திருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது. :))))
Post a Comment