மனம் நினைத்தால் நெடும் தூரம் கூட பக்கமாகத் தோன்றும். ஓர் நிமிடம் ஒரு யுகமாய்த் தோன்றும். ஓர் யுகம் ஒரு நிமிடமாகவும் தோன்றும். உலகம் எப்படி மாயமானது, ஜாலவித்தை போன்றது என்பதை யோகவாசிஷ்டத்தில் வரும் ஒரு கதை மிக அழகாக விளக்குகிறது.
இந்தப் பரந்த உலகில் நல்ல வளமிக்க, 'உத்திர பாண்டவம்' என்ற நாடு உள்ளது. அந்த நாட்டை 'லவணன்' என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் ராஜா ஹரிச்சந்திரன் பரம்பரையைச் சேர்ந்தவர். சூரியன் போன்ற ஒளி மிக்கவர். எப்படி பூவின் வாசனை எங்கும் பரவுமோ அது போல அவரது புகழும் எங்கும் பரவி இருந்தது. சொல்லிலும் செயலிலும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருந்தார்.
ஒரு நாள், அவர் அரச சபையிலிருந்த போது சம்பரிகன் என்ற ஓர் மாயாஜாலக்காரன் உள்ளே நுழைந்து, மன்னனைப் பார்த்து, இந்த ஜால வித்தையைக் காணுங்கள் என்று கூறி, மன்னரின் முன் மயில் இறகுகளை ஆட்டினான். மன்னர் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்.
அதே நேரத்தில் சிந்து நாட்டு மன்னர் அரச மண்டபத்துக்குள் நுழைவதைக் கண்டார். அந்த மன்னருடன் வேகமாக ஓடக் கூடிய ஒரு குதிரையும் வந்தது. வந்த மன்னர் லவணனைப் பார்த்து, 'இந்தக் குதிரை மிகவும் சிறந்தது. இந்திரனின் குதிரையான 'உச்சைசிரவஸ்' போன்றது. உங்களுக்கு இதை அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். இது உங்களிடமிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்' என்று கூறினார். மாயஜாலக்காரன், 'மன்னரே, குதிரையின் மீது ஏறி சவாரி செய்யுங்கள்', என்று கூறினான்.
குதிரையைப் பார்த்த மன்னர் அப்படியே அசைவற்று சுவரில் வரைந்த சித்திரம் போல ஆகி விட்டார். அரசர் அந்த நிலையில் நீண்ட நேரம் தன்னை மறந்த நிலையில் இருந்தார். மந்திரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அரசரின் நிலை கண்டு ஒருவித பயத்திலிருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து மன்னர் தன் சுயநினைவுக்கு வந்தார்.
மந்திரிகளும், ஆலோசகர்களும் மன்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆவலோடு இருந்தார்கள். மன்னரை வணங்கி, 'மனவலிமையுடைய நீங்கள் எப்படி மயங்கினீர்கள்? திடமனதுடையவர்கள் சாதாரணமாக ஏமாற்றம் அடைய மாட்டார்களே' என்று வினவினார்கள்.
மன்னர் கூறினார், 'மதிப்புக்குரிய மந்திரிகளே! நான் கண்ட காட்சியைப் பற்றிக் கேளுங்கள். ஜால வித்தைக்காரன் மயில் தோகையை வீசியதை அடுத்து நான் அந்தக் குதிரையின் மீதேறி சவாரி செய்தேன். குதிரை பல காதங்கள் ஓடி ஒரு காட்டை அடைந்தது. அந்தக் காடு தீயால் எரிக்கப்பட்டிருந்ததைப் போன்று காணப்பட்டது. பறவைகள், மரங்கள், நீர் போன்ற எதுவுமே காணப்படவில்லை.
அந்தக் காட்டில் மனவருத்தத்துடன் சூரிய அஸ்தமனம் ஆகும் வரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு சிறிய காட்டை அடைந்தேன். அங்கு நரிகளும் பறவைகளும் காணப்பட்டன. பின்பு, குதிரையின் மீது சவாரி செய்து 'தம்பிரா' மரங்கள் அடர்ந்த காட்டை அடைந்தேன். அப்போது மரத்தில் தொங்கிய கொடியைப் பிடித்துக் கொண்டேன். உடனே குதிரை என்னை விட்டு ஓடி விட்டது'. நான் களைப்படைந்து மரத்தின் அடியின் தூங்கினேன். அது ஒரு யுகம் போலிருந்தது. குளிரால் பற்கள் கிட்டித்து போயின. இருட்டான இரவு நீண்ட இரவானதாகவும் இருந்தது.
பொழுது விடிந்ததும் அந்தக் காட்டின் வெகு தூரம் நடந்தேன். நண்பகலில் ஒரு கருமையான் நிறமுடைய மிகவும் அழுக்கடைந்த உடைகளை அணிந்த பெண் உணவுடன் செல்வதைக் கண்டேன். நான் அந்தப் பெண்ணிடம், 'எனக்கு உணவு கொடு. பசித்தவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உணவு கொடுத்தவர்கள் பின்பு செல்வச் செழிப்பில் வாழ்வார்கள். எனக்கு பசி அதிகமாக உள்ளது' என்று வேண்டினேன். நான் பலமுறை வேண்டியும் அவள் எனக்கு உணவு தராமல் நடந்தாள். நான் அவளைப் பின் தொடர்ந்து வெகு தூரம் நடந்தேன். பிறகு அவள் கூறினாள்:'நான் கீழ்குடியினைச் சேர்ந்தவள். எனது பெயர் ஹரகேயூரி, அரசனே, என்னோடு நடந்து வந்ததால் மட்டுமே உனக்கு உணவு தர முடியாது' என்று கூறி மேலும் வெகு தூரம் நடந்தாள். நானும் தொடர்ந்து உணவு கிடைக்காதா என்ற ஆவலுடன் நடந்தேன்.
பின்பு அவள் என்னிடம் கூறினாள்: 'நீ எனக்கு கணவனாயிருந்தால் மட்டுமே நான் உனக்கு உணவு கொடுப்பேன். எனது தகப்பனாருக்கு இந்த உணவை எடுத்துச் செல்கிறேன். அவர் அருகாமையிலுள்ள நிலத்தை உழுது கொண்டிருக்கிறார். அவருக்கு உண்டான உணவை உனக்குத் தர எனக்கு உரிமையில்லை. ஆனால், நீ என் கணவனாக ஒப்புக் கொண்டால், ஒரு நல்ல கணவனை உணவளித்துக் காப்பாற்றவேண்டிய கடமை எனக்கு வந்து விடும். அப்போது உனக்கு நான் உணவளிப்பேன்.'
நான் உடனே 'பெண்ணே! நான் உனக்குக் கணவனாகச் சம்மதிக்கிறேன்' என்றேன். நான் சொன்னதைக் கேட்ட அவளும் 'கணவனாக வரப் போகும் ஒருவனின் உயிர் ஆபத்திலிருக்கும் பொது, தகுதி, ஜாதி, பிறந்த வம்சம் இவற்றையெல்லாம் கவனிக்கக் கூடாது' என்று கூறி இருந்த உணவில் பாதியைக் கொடுத்தாள். நாவல் பழங்களைக் கொடுத்தாள்.' இவ்வாறாக நான் என்னிலும் கீழான குடியில் சென்று உணவுண்டேன். பசியாறி ஓய்வு எடுத்த பின்னர் அவள் என் கையைப் பற்றி தன தந்தையிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தாள்: 'தந்தையே, இவர் தான் என் கணவர். நீங்கள் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று சொன்னாள்'
அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். எப்படி எஜமானரிடம் இருந்து விடுபட்ட வேலையாட்கள் மன மகிழ்வுடன் செல்வார்களோ அது போல நாங்கள் இருவரும் அந்தக் காட்டுப் பகுதியில் உல்லாசமாய்த் திரிந்தோம். பின்பு மாலையில் மிருகங்களின் மாமிசங்களும் பறவைகளும் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.
அந்தப் பெண்ணின் தந்தையாரும் என்னை அன்புடன் மருமகனே என்று கூப்பிட்டார். பின்னர் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கருமையான நிறம் கொண்ட அவளுடன் சேர்ந்து நாயின் மாமிசத்தையும், மதுபானங்களையும் அருந்தினேன். திருவிழாப் போல எங்கள் மணநாளின் முதலிரவைக் கொண்டாடினோம். நானும் அவர்களில் ஒருவனாய் ஆனேன். இது போல ஏழு நாட்கள் கொண்டாட்டத்திலேயே கழிந்தன. இவ்வகையில் மேலும் எட்டு மாதங்கள் கழிந்தன.
அவளும் கருவுற்று ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மூன்று வருடத்தில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மற்றொரு குழந்தையை பெற்றெடுத்தாள். இவ்வாறு அந்தக் காட்டுவாசிப் பெண்ணுடன் பல வருடங்கள் குளிரிலும், வெயிலிலும், வெப்பமான கோடை காலங்களிலும் வாழ்ந்தேன். எனக்கும் வயதாகியது.
பின்பு ஓர் பஞ்சம் உண்டாகியது. மழையில்லாததால் செடிகளெல்லாம் கருகியது. இறப்பும், மரணமும் எங்கும் கோர தாண்டவம் ஆடியது. புற்களும், செடிகளும் காய்ந்து காட்டில் தீப்பற்றியது. துன்பமும் விதியும் சேர்ந்து வாழ்க்கை மிகவும் கொடியதாகியது. பலர் அப்பகுதியை விட்டு விந்திய மலைப் பகுதிக்குச் சென்றார்கள்.
'நானும் என் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேற்றிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பல காத தூரம் நடந்து ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தோம். வேறு இரு காட்டு வாசி பெண்களுடன் என் மனைவி மரத்தடியில் உறங்கினாள். 'பிரிச்சகா' என்ற என் மகன், தனக்கும் மாமிசமும், இரத்தமும் வேண்டும் என்று உயிரிழக்கும் நிலையில் வேண்டினான். என் வருத்தம் அதிகமாகி, அந்தத் துன்பத்திலிருந்து விடுபட நான் என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினேன். அப்படியாவது என் மகன், எனது வெந்த உடலை தின்று உயிர் வாழட்டுமே என்று காட்டுத்தீயில் புகுந்தேன். அப்போது என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. கண் விழித்துப் பார்த்தால் இதோ இந்த சிம்மாசனத்தில் உங்களுடன் அமர்ந்திருக்கிறேன். சம்பரிகா என்ற ஜாலவித்தைக்காரனின் மாயாஜாலத்தால், நான் மாயமான சூழ்நிலையில் வாழ்ந்தேன். இது போன்றே ஜீவனின் அறியாமையினால் தான் மக்கள் அவதிப படுகிறார்கள்' இவ்வாறு கூறி முடித்தார் லவணன். எல்லாவற்றுக்கும் மூல காரணம் மனமே. (ஆதாரம்: யோகவாசிஷ்டம்)
4 comments:
நல்ல கருத்துக்கள். மிக்க நன்றி. ஆனாலும் மனதை அடக்குவதும், புலன் நுகர்வுப் பொருட்களின் மீது இச்சை தவிர்ப்பதும் சிரமமான ஒன்று.
வருகைக்கு நன்றி
ஆம் அய்யா
சொல்லுதல் யார்க்கும் எளிய. அதே சமயம் முயற்சிகள் திருவினையாகாதா என்ற நம்பிக்கை கொண்டு முயலாம் என எண்ணுகிறேன்.
கொஞ்சம் ரிசல்ட் கிடைத்தால் கூட நல்லது அல்லவா?
மிகவும் அருமை....நண்பா...உணராத வரை எல்லாம் .....மாயை தான்..
சந்நியாசி
Thank you, kumar@sanyasi.
Post a Comment